கருப்பு பணத்தை தடுக்க 7 நாடுகளில் ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள்
வரி ஏய்ப்பு மூலம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு சட்ட விரோதமாக கருப்பு பணம் கொண்டு செல்லப்பட்டு பதுக்கப்படுகிறது. சில நாடுகள் சட்ட விரோதமாக கருப்பு பணத்தை பதுக்கி வைக்க புகலிடம் கொடுக்கின்றன. அந்த நாடுகளிடம் இருந்து கருப்பு பணத்தை மீட்பது தொடர்பான தகவல்களை பெறுவதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது.
மேலும், அந்த கருப்பு பணத்தை கண்டுபிடிப்பதிலும், முடக்குவதிலும், பறிமுதல் செய்வதிலும் சட்ட ரீதியான சவால்கள் உள்ளன. இதற்கு நிபுணத்துவமும், அரசியல் உறுதியும் தேவைப்படுகிறது.
இந்நிலையில், வரி ஏய்ப்பை தடுக்கவும், அன்னிய முதலீட்டை அதிகரிக்கவும் அயல்நாட்டு தூதரகங்களில், வருமான வரி பிரிவுகளை இந்தியா உருவாக்கி வருகிறது. முதற்கட்டமாக மொரீஷியஸ் மற்றும் சிங்கப்பூரில் சில ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த முயற்சி நல்ல பலனைக் கொடுத்தது.
இதனால், ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட 7 நாடுகளில் உள்ள தூதரகங்களிலும் வருமான வரி பிரிவுகளை உருவாக்கி, இதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் (ஐ.ஆர்.எஸ்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
1994ல் இந்தியாவும், சைப்ரஸ் நாடும் இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால், வரி தொடர்பான தகவல்களை அந்நாட்டு அரசு வழங்காததால், இந்தியா வரிச்சலுகையை நிறுத்தி வைத்தது. எனவே, அங்கு மட்டும் இந்த புதிய வருமான வரி அதிகாரி நியமிக்கப்படவில்லை.