கல்யாண சமையல் சாதம் விமர்சனம்
மடிசாரையும் ‘குடி‘சாரையும் மிக்ஸ் பண்ணி அடித்திருக்கிறார்கள். இது ‘அவாள்’ வீட்டு பந்தி வேறு. ஆரம்பத்தில் பரிமாறப்படும் எல்லாமே ஒரு வித அசுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. அதற்கப்புறம் இந்த கதை ‘பிராமணாள் வீட்டு பிரியாணிடோய்…’ என்று நாக்கை சப்புக் கொட்டவும் வைப்பதால், எதிர் விமர்சனங்களை இலையின் ஓரத்தில் வைத்துவிட்டு ஒருவித ஸ்டேண்டப் மைண்டுடன் செகன்ட் ஹாஃபுக்கு தயாராகிறது மனசு. கதை நாயகன் பிரசன்னாவுக்குதான் எவ்வளவு சங்கடம்?
லேகா வாஷிங்டனுக்கு மாப்பிள்ளை பார்க்கிறது அவரது குடும்பம். மேட்ரிமோனியலில் சிக்குகிறார் பிரசன்னா. எடுத்த எடுப்பிலேயே ‘நாங்க காபி ஷாப்புல பேசிக்கிறோம். பர்மிஷன் ப்ளீஸ்’ என்கிறார். சம்பந்திகள் சம்மதிக்க பேச்சு வார்த்தை வளர்ந்து கல்யாணம் வரைக்கும் போகிறது. நடுவில் ஒருநாள் பார்ட்டியில் இவரும் அவரும் லேசாக சரக்கடிக்கிறார்கள். ‘அச்சச்சோ… பொம்பள புள்ள சரக்கடிக்கலாமோ?’ என்றெல்லாம் கேட்கப்படாது. கதையின் முக்கியமான சரக்கே இந்த ‘சரக்கில்’தான் அடங்கியிருக்கிறது. நைசாக பெட்ரூமில் ஒதுங்குகிறார்கள் இருவரும். அங்கேதான் அந்த விபரீதம். பிரசன்னாவுக்கு ‘முடியல….(?)’ கூகுளில் இவர்கள் தேடுகிற வார்த்தைகளுக்கெல்லாம் குழந்தைகள் நம்மிடம் அர்த்தம் கேட்டால் கிழிஞ்சுது கிருஷ்ணகிரி.
‘கல்யாணத்துக்கு முன்னாடி சரி பண்ணிடுடா’ என்று கெஞ்சவே ஆரம்பித்துவிடுகிறார் லேகா. இவரும் மரத்தடி லேகிய பார்ட்டியிலிருந்து மல்டிபிளக்ஸ் ஹாஸ்பிடல் வரைக்கும் நாக்கை ‘தொங்க போட்டபடி’ அலைய, எந்த இடத்திலும் நிவாரணம் இல்லை. நீங்க சின்ன விஷயத்தை பெருசு படுத்தணும்னு நினைக்கிறீங்க என்று பிரசன்னாவின் பீதியை டாக்டர் வர்ணிக்க, சார் பிரச்சனையை அதுதான் சார் என்கிறார் பிரசன்னா. (வசனங்கள்தான் எவ்வளவு ஷார்ப்?)
இதையெல்லாம் படிக்கும்போது ஆபாசத்தை அள்ளி தெளித்திருப்பார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள்? அங்குதான் விசேஷம். ஒரு காட்சியில் கூட இயக்குனர் சதை வியாபாரம் செய்யவில்லை. மிக நாகரீமான போக்கு இருக்கிறது காட்சி விஷயத்தில். ஆனால் பேச்சு விஷயத்தில்தான் பெரும் அட்ராசிட்டி. நல்லவேளையாக அத்தனையும் ஆங்கிலத்தில் இருப்பதால் புன்முறுவலோடு கடக்கிறது நிமிஷங்கள். இப்படியே போகிற கதையில் எங்காவது ஓரிடத்தில் முடிச்சு விழ வேண்டுமே? விழுகிறது. பிரசன்னாவை உஸ் என்றே வர்ணிக்கிறார் லேகா. அவரும் கோபித்துக் கொண்டு கல்யாணம் நின்றுவிடும் என்று எதிர்பார்த்தால் ‘ஸாரி’ சொல்லி அணைத்துக் கொள்கிறார். கதையின் முடிச்சுதான் என்ன? பிரசன்னாவால் ‘முடியறதுதான்!’
க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் என்று பிரசன்னாவின் நண்பர்கள் செய்யும் அத்தனை விஷயமும் சரியான பேத்தல். ஏதோ… மேரேஜுக்கு முன்பே தான் உஸ் இல்லை என்பதை நிருபித்து சபதத்தை முடிக்க போகிறார் என்பது போல காண்பிக்கிறார்கள். கடைசியில் சப்!
ஜம்மென்று இருக்கிறார் பிரசன்னா. கல்யாண களை அப்படியே முகத்தில் சொட்டுகிறது. அதே நேரத்தில் அந்த கில்டியையும் அப்பட்டமாக ஒப்புக் கொள்கிறது அவரது ஃபேஸ்கட்டு. சுற்றியுள்ள நண்பர்கள் அவரது இயலாமையை போட்டு தாக்க, கோபிக்கவும் முடியாமல், அடங்கவும் முடியாமல் தவிக்கிற தவிப்பும் அழகு. லேகாவுக்கும் இவருக்குமான கெமிஸ்ட்ரியை இவர் முகத்தில் பார்க்க முடிவதைவிட சற்று அதிகமாகவே பார்க்க முடிகிறது லேகாவின் முகத்தில். சின்ன சின்ன உணர்வுகளை கூட கண்களில் கொட்டி வைக்கிறார் லேகா. ஆனாலும் அவரது முகத்தில் பொங்கி வழியும் அந்த முதிர்ச்சியை எப்படி பொறுத்துக் கொள்வது?
ஒரு அம்மா தன் மகளிடம் எப்படி ஒளிவு மறைவில்லாமல் எல்லா பிரச்சனைகளையும் விவாதிக்கிறார்? வருங்கால மாப்பிள்ளையிடம் மாமனார் காட்டும் அக்கறையின் எல்லை எந்தளவுக்கு என்பதெல்லாம் இந்த படத்தை பார்த்துதான் பெரிசுகள் கற்றுக் கொள்ள வேண்டும்!
சற்று மெத்தனம் காட்டியிருந்தால் சீரியல் வகையில் சேர்ந்திருக்குமோ என்று ஐயப்பட வைக்கிறது புறம்பேசும் மாமிகளின் காட்சி. ஒரு காட்சியில் வந்தாலும் தியேட்டரை அதிர வைக்கிறார் கிரேஸி மோகன். (இந்த காட்சியில் வெண்ணிறாடை மூர்த்தி நடித்திருந்தால் தியேட்டரே ஒரு வினாடி நிமிர்ந்து விழுந்திருக்கும்)
ஸ்ட்ரெஸ்தான் எல்லாத்துக்கும் காரணம் என்பதை அதிகம் ஸ்ட்ரெஸ் வரவழைக்காமல் சொன்னதற்காகவே டைரக்டர் பிரச்சன்னாவை பாராட்டலாம். இப்படி ஒரு கதையில் துணிச்சலாக நடிக்க ஒப்புக் கொண்ட நடிகர் பிரசன்னாவையும் பாராட்டலாம். முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லையே என்று பரிதவிக்கிற நேரத்தில் என்ட் கார்டு விழுகிறது.
எப்படியோ, சாதம் குழைவதற்கு முன்பே சட்டியை இறக்கி வைத்த டைரக்டருக்கு ஸ்பெஷல் நமஸ்காரத்தோடு விடை கொடுக்கலாம். முதலிரவுக்கு முந்தைய இரவை பற்றி படம் எடுத்தீங்க. முதலிரவை பற்றி இரண்டாம் பாகத்தில் எடுப்பீங்களோ?
-ஆர்.எஸ்.அந்தணன்
அந்தணன் sir sorry i couldn’t write in tamil. but your way writing and simple words and sense of humor is great. i am enjoying
another view described here http://kanavuthirutan.blogspot.in/2013/12/blog-post_7.html