கழுத்தை சுற்றி மூக்கை தொடுகிறாரா கமல்?

மலையாளத்தில் மாபெரும் ஹிட்டடித்த திரிஷ்யம் படத்தை தமிழில் தயாரிக்கவிருக்கிறார்கள். அதில் கமல்தான் ஹீரோ என்கிறது ஒரு அதிகாரபூர்வமற்ற செய்தி. வேடிக்கை என்னவென்றால் இதே கதையை சுமார் முப்பதாண்டுகளுக்கு முன் ஒரு பத்திரிகையாளர் எழுதி, அதை கமலின் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். அப்போது அதை கவனிக்கக் கூட நேரமில்லாமல் இருந்த கமலுக்கு இப்போது அதே கதையை இரவல் வாங்கி நடிக்க வேண்டிய நிலைமை.

த்ரிஷ்யம் கதை எங்கிருந்தும் சுடப்பட்டது அல்லதான். ஆனால் இதே கதையை தமிழ்நாட்டில் ஒருவர் யோசித்திருக்கிறார். அதை கதையாகவும் எழுதி கமலிடம் கொடுத்திருக்கிறார் என்பதுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். இப்போதும் கூட, என் கதையை அவர்கள் காப்பி அடித்துவிட்டார்கள் என்றெல்லாம் ‘அளந்துவிட’ தயாராக இல்லை அந்த எழுத்தாளர். நம்ம சிந்தனை இத்தனை வருஷம் கழித்து எங்கேயோ மரமாக முளைத்திருக்கிறதே என்ற ஆச்சர்யம்தான் அவருக்கு. 1993 ல் கமலிடம் கதையை கொடுத்த நினைவுகளை மீண்டும் அவருக்கு நினைவு படுத்தி கமல்ஹாசனுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான டி.அருள்செழியன். அந்த கடிதம் அப்படியே உங்கள் பார்வைக்கு –

பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு,

வணக்கம்.

1984-ல் ஆனந்த விகடன் துவங்கி இன்றுவரை ஓரளவிற்கு நேர்மையான பத்திரிகையாளாளராக வாழ்ந்துவரும் நான் தற்போது சினிமா முயற்சிகளிலும் ஈடு பட்டுவருகிறேன். கடந்தவாரம் கேரளாவின் கொல்லம் நகரில் ‘திரிஷ்யம்’ திரைப்படத்தை பார்த்தேன்.

1993 ஆண்டில் தங்கள் அலுவலகத்தில் நான் சமர்பித்த பூக்களின்பாடல் என்ற கதைச்சுருக்கத்துக்கும் திரிஷ்யம் திரைப்படத்திற்கும் பல ஒற்றுமைகளைக் கண்டேன். அதைப்பற்றி நான் தங்களுடன் மேலும் சில விபரங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1989 வாக்கில் ஆனந்த விகடனில் பணிபுரிந்து வந்த நான் அப்போது லோகிததாஸ் திரைக்கதையில் ஐ வி சசி இயக்கிய (மம்முட்டி ஊர்வசி நடிப்பில் வெளியான ) ’மிருகயா’ என்ற திரைப்படத்தைப் பார்த்தேன்.அந்த படம் எனக்குள் சில அதிர்வுகளை ஏற்படுத்தியது.

அந்த கதை நிகழும் லொகேஷனும் அந்தப் படத்தின் கிளைமாக்ஸூம் என் மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தன. அதே பின்ணணியில் நானும் ஒரு கதையை யோசித்தேன்.

மூணாறு தோட்டப் பின்னணியில் நான் யோசித்த அந்தக் கதை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் எனக் கருதியதால் மறைந்த நண்பர் திருப்பதிசாமி உதவியுடன் தங்கள் அலுவலகத்தில் இருந்த குணாவை தொடர்புகொண்டேன்.(தங்கள் நற்பணி மன்றம் சார்பில் கவித்தைதொகுப்பு ஒன்று வெளியிட்டபோது திருப்பதிசாமி என் கவிதை ஒன்றையும் அதற்காக வாங்கி தந்திருந்ததால் குணா எனக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்தார்). அவர் தங்கள் அலுவலகத்தில் உதவியாளராக இருந்த சக்திவேல் என்பவரை எனக்கு அறிமுகப்படுத்த, அவர் மூலம் தங்களை சந்திக்க முயற்சித்தேன்.

அதன்படி 1993 ஆம் ஆண்டு ஒரு நாள் தங்களை சந்திக்க வந்தேன். அலுவலக வாசலிலேயே என்னையையும் அங்கிருந்த வேறு இரு நபர்களையும் சந்தித்த நீங்கள் அப்போது என்னிடம் நான் சொல்ல விரும்பும் கதையின் சுருக்கத்தை எழுதித் தருமாறு கேட்டீர்கள்.

நான் உடனே எல்டாம்ஸ் ரோட்டில் இருந்த ஒரு டைப்பிங் இன்ஸ்டிட்யூட்டிற்கு போய் பூக்களின் பாடல் என்ற அந்த கதை சுருக்கத்தை தட்டச்சு செய்து ஒரு காப்பியை திரு. சக்திவேலிடம் கொடுத்து தங்களிடம் சேர்த்துவிடும்படி சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.அது உங்கள் கைக்கு கிடைத்திருக்குமா படித்திருப்பீர்களா என்று எதைப்பற்றியும் நான் அதன்பிறகு யோசிக்கவில்லை.

தங்கள் அலுவலகத்தில் நான் தட்டச்சு செய்த கொடுத்ததுபோக அதன் இன்னொரு பிரதி என்னிடம் பத்திரமாக இருந்தது

இந்த நிலமையில்தான் திரிஷ்யம் படத்தைப் பற்றி கேள்விப்பட்டு சமிபத்தில் கேரளா சென்ற நான் அங்கு திரிஷ்யம் படத்தை பார்த்தேன். அது ரசிகர்களின் உணர்வுகளுடன் interact பண்ணக்கூடிய ஒரு திரைக்கதையுடன் அற்புதமாக படைக்கப்பட்டிருந்தது.

அதேசமயம் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் அலுவலகத்தில் நான் சமர்பித்த பூக்களின் பாடல்’ திரைக்கதைக்கும் திரிஷ்யம் திரைக்கதைக்கும் பல அடிப்படை ஒற்றுமைகள் இருப்பதையும் இரண்டும் ஒரே skeletonல் பின்னப் பட்டிருந்ததையும் கண்டேன்.

DrishyamMovie1 300×149 திரிஷ்யம் ’சுட்ட’ கதை?! எனது கதையை தழுவி திரிஷ்யம் எழுதப்பட்டது என்றோ எனது கதையை மலையாளத்தில் திருடிவிட்டார்கள் என்றோ ‘அந்த ஏழு நாட்கள்’ பாலக்காடு மாதவன் போல நான் காமெடி பண்ண விரும்பவில்லை.

1993ல் நான் எழுதியது போன்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு திரைக்கதை 2013ல் ல் அபாரமான வெற்றியை பெற்றிருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியைதான் தருகிறது.

எனது கதைகளுக்கு இன்னமும் உயிர் இருக்கிறது நானும் ஒருநாள் வெற்றி பெறுவேன் என்ற அளவில்தான் இதை நான் பார்க்கிறேன். மகிழ்கிறேன்.

1993 ல் தங்களை சந்தித்த காலகட்டத்தைவிட நான் இப்போது இன்னமும் பக்குவம் பெற்றிருக்கிறேன். உயிரோட்டமான பல திரைக்கதைகள் என்னிடம் இருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக தங்களை சந்திக்க நான் எடுத்த முயற்சிகள் வீணாயின. எனது ஆங்கில திரைக்கதை ஒன்று பாலிவுதிரைக்கதை போட்டி ஒன்றில் இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறது.என்கதையை தேர்ந்தெடுத்த கமலேஷ் பாண்டே, ’இதைத் தான் முதல் கதையாய் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் .. ஆனால் உங்கள் கதை ஆங்கிலத்தில் இருக்கிறது.. இது இந்திப் போட்டி’ என்றார்.

நீங்கள் விஸ்வரூபம் ஆரம்பிக்குமுன் அந்த கதையை தங்களிடம் சமர்பிக்க விரும்பினேன், சந்திப்பு சாத்தியமில்லாததாகி விட்டது.

கமல் சார் நீங்கள் என்னை சந்தித்தாலும் இல்லை என்றாலும் உங்கள்மீது எனக்கு மிகவும் மதிப்பு. உண்டு.
நான் தங்களை சந்திக்க விரும்புகிறேன்.

நான் 1993ல் தங்கள் அலுவலகத்தில் சமர்பித்த பூக்களின்பாடல் கதை சுருக்கத்தின் போட்டோ காப்பியையும் பாலிவுட் திரைக்கதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற ‘ BREAKING NEWS’ என்ற திரைக்கதையின் சுருக்கத்தையும் இத்துடன் தங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன்.

இப்போது உள்ள சூழலில் தங்களை சந்திக்க தகுதியானவன் என்று நீங்கள் கருதினால் எனக்கு தங்கள் அலுவலகத்திலிருந்து அழைப்பு வரும் என்று கருதுகிறேன்.

தங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்

நன்றி

டி.அருள்செழியன்
06-02-2014
சென்னை

அவர் எழுதிய கதை சுருக்கம் வாசகர்களின் பார்வைக்காக-

பூக்களின்பாடல்

பச்சைப்பசேலென்ற மலைச்சரிவுகளும் காஃபி எஸ்டேட்களுமாய் நிறைந்திருக்கும் மூணாறு மாதிரியான ஒரு இடம். அங்குள்ள ஒதுக்குப்புறமான குடியிருப்பொன்றில் நான்கே நான்கு வீடுகள். அதில் சற்று உயரமான இடத்திலுள்ள வீட்டில் அந்த பகுதியிலுள்ள பிரைமரி ஹெல்த் சென்டரின் லேடி டாக்டர் மீனா குடியிருக்கிறாள்.

அவள் வசிக்கும் வீடு உயரமான பகுதியில் இருப்பதால் அங்கிருந்து அக்கம் பக்கம் நடப்பவைகளை அவளால் எளிதில் கவனிக்க முடியும்.அந்த டாக்டர் ஒரு இயற்கையின் ரசிகை அவளுக்கு இசை பிடிக்கும் சங்கீதமும் தெரியும்.

மற்ற மூன்று வீடுகளில் இரண்டு அடைத்துக் கிடக்கிறது ஒரு வீட்டில் ஃபாரஸ்ட் டிபாட்ர்மென்டில் வேலைபார்க்கும் ஒருவன் இருக்கிறான். சதா சரவமும் போதையில் ததும்பும் அவனது செயல்களில் நகைச்சுவை வெளிப்படும்.

போஸ்டல் டிபார்ட்மெண்டில் வேலைபார்த்த அப்பா இறந்துபோன பிறகு கஷ்டப்பட்டு படிப்பை முடிக்கும் ஜீவா வேலை தேடி அலைகிறான்.

எல்லா இன்டர்விகளிலும் தோற்றுப்போய் திரும்பும் அவன் ஒருநாள் தன் பெயருக்கு வரும் தபால் ஒன்றை வழக்கமான இன்டர்வியூ கார்டு என நினைத்து அலட்சியமாகப் போட்டுவிடுகிறான்.

பின்பு தற்செயலாய் அதை எடுத்துப்பார்க்க அது இண்டர்வியு கார்டாக இல்லாமல் அப்பாயிண்ட் மென்ட் ஆர்டராக இருக்கிறது.

போஸ்டல் டிபார்ட்மென்ட் அவனை கருணை அடிப்படையில் போஸ்ட் மேனாக அப்பாயின்ட்மென்ட் செய்து மூணாறுக்கு போய் டூட்டியில் சேருமாறு பணிந்திருக்கிறது.

இப்போது தங்கை அகிலா மற்றும் வயதான தாயாருடன் மூணாறுக்கு வரும் ஜீவா அந்த நான்காவது வீட்டிற்கு குடி வருகிறான்.

ஜீவா போஸ்ட்மேன் வேலையை துவங்கிவிட்டான் இடமும் தொழிலும் புதிதாகையால் வழக்கமான சில தடுமாற்றங்கள் எல்லாமே தர்ம சங்கடங்களிலும் நகைச்சுவையிலும் முடிகிறது.

இடங்கள் வேறு தெரியாததால் ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்து வந்த கடிதங்களையும் பார்சல்களையும் டெலிவரி செய்துவிட்டு திரும்பும்போது பனிமூட்டம் இறங்கி இருட்டிப்போயிருக்கும்.

போஸ்ட்மேன்களுக்கே உரித்தான சாக்குப்பையை குளிருக்கு இதமாக தலையிலிருந்து போர்த்தியபடி சைக்கிளில் மிதித்துவரும் அவனுக்கு அம்மா வெந்நீர் போட்டு ஆவி பிடித்து நடுக்கம் போக்குவாள்.

தங்கை அகிலாவும் அன்பாய் கைகால் பிடித்து விடுவாள்.
அவனுக்கு அகிலா மேல் கொள்ளை பிரியம்.அவனது பிரதான பொழுது போக்குகளில் ஒன்று அவளும் ஒன்று.

சற்று தொலைவில் உள்ள பள்ளியொன்றில் அவளை பிளஸ் டூ சேர்த்து விடுகிறான்.அகிலா பள்ளிக்கு போய் வருகிறாள்
ஜீவா பார்ப்பது போஸ்ட்மேன் வேலை என்றாலும் அவனுக்கு பல பரிணாமங்கள் உண்டு.

கவிதை எழுதுவான் இசையில் லயிப்பான்.லயிக்கவும் வைப்பான்.அந்த மலை முகடுகளில் அவனது பாடல் அடிக்கடி எதிரொலிக்கும்.

லெட்டர் டெலிவரிக்காக போகும்போது ஒருநாள் அவன் அந்த லேடி டாக்டர் மீனாவை சந்திக்கிறான் ஜீவா.ஒரு முறை அவந்து இசையை ரசித்த அவள் அவனுடன் அன்போடு பேசுகிறாள்.இருவரும் நண்பர்களாகிறார்கள்.

ஒருநாள் பாதையெங்கும் பனிமூட்டம் இறங்கிக் கொண்டிருக்கும் மாலை வேளையில் அகிலா பள்ளியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறாள்.

அப்போது மிகவும் அழகான கருப்பு நாயொன்று அவளை பின் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

மிரண்டுபோன அகிலா பயத்துடன் திரும்பிப்பார்க்கிறாள்.

மாருதி ஜிப்சி ஒன்று அவளை பின் தொடர்ந்து வந்து கொண்டிருக்க நாய் இப்போது அவள் பக்கத்தில்,பீதியில் அகிலா ஓட ஆரம்பிக்க வேகமாய் அவளைக்கடந்துவந்த நாய் அவளை வழிமறித்து நிற்க,அகிலா செய்வதறியாது திகைத்து நிற்கும்போது அந்த நாய் வாயால் கவ்விவந்த ஒரு கடிதத்தை அவள் முன்போட்டு விட்டு வந்த திசையிலேயே திரும்பி ஓடுகிறது.

அகிலா மிரட்சியுடன் திரும்பிப் பார்க்கிறாள்.மஞ்சள் விளக்குள் எரியும் எரியும் ஜிப்சியின் முன் ராக்கி சாய்ந்தபடி நின்று கொண்டிருக்கிறான்.அகிலா வீட்டுக்கு ஓடி வந்து விடுகிறாள்.

இதற்கிடையில் ஜீவாவின் வாழ்க்கையில் ஒரு துயரம். அவனது தாய் ஒரு நாள் இறந்து போகிறாள்.

இப்போது அந்த வீட்டில் அகிலாவும் ஜீவாவும் மட்டுமே.

ஒருநாள் வீட்டின் முன் ஜீவா அகிலாவுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது தற்செயலாய் சற்று தொலைவிலுள்ள மேடான பகுதியை ஏறிட்டு பார்க்க இவ்வளவு நேரமும் அகிலாவை திருட்டுத்தனமாக ரசித்துக்கொண்டிருந்த ராக்கி ஜீவாவின் பார்வையை சற்றும் எதிர்பாராது மிகுந்த அதிர்ச்சியுடன் நாயோடு பின் வாங்குகிறான்.

ஜீவாவின் முகத்தில் ஒரு சிறு சலனம் தோன்றி மறைகிறது.
நாட்கள் நகர்கின்றன லேடி டாக்டர் மீனா ஜீவா மீது காதல் கொள்கிறாள்.

ஜீவாவுக்குள்ளோ தாழ்வு மனப்பான்மை அதுவே அவர்களுக்கிடையே ஒரு இடைவெளியாகிறது. ஜீவா மீனாவிடமிருந்து ஒதுங்கி இருக்கவே விரும்புகிறான்.

அன்று விடுமுறை நாள். வீட்டின் முன் நின்று அகிலாவுடன் விளையாடிக்கொண்டிருந்த ஜீவா ஒரு பாடலை பாடிய‌படியே இசையில் லயித்தப்டி தன்னை மறந்தபடி சொல்லாமல் கொள்ளாமல் முன்பக்காமாய் நடக்க ஆரம்பிக்கிறான்.

வீட்டின் முன்புறம் கூண்டில் கிடக்கும் கிளிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள் அகிலா.

ஜீவா முன்பக்க வாசல் வழியே இறங்கிப்போவதை அந்த திட்டான பகுதியிலிருந்து பார்த்துவிட்ட ராக்கி தன் நாயுடன் அந்த வீட்டின் முன் பக்கத்திற்கு வருகிறான்.

கூண்டுக்கிளியுடன் விளையாடிக்கொண்டிருந்த அகிலா ராக்கியின் வருகையால் திகைத்துப் போய் அண்ணா என்று கத்தியபடி பீதியுடன் வீட்டிற்குள் ஓடுகிறாள். நாய் வெளியே காவலிருக்க ராக்கியும் அகிலாவை தொடர்ந்து அந்த வீட்டிற்குள் நுழைகிறான். ராக்கியிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள அகிலா போராடும் ஓசையும் அவளது அலறல் சத்தமும் அடுத்தடுத்துக் கேட்கின்றன.

அகிலாவின் அலறல், தூரத்தில் இசையிலும் இயற்கையிலுமாய் கலந்து நின்ற ஜீவாவின் காதுகளுக்கு கேட்க பதட்டத்துடன் வீட்டிற்குள் ஓடி வந்த அவன் அதிர்ச்சி அடைகிறான். அங்கே ராக்கி செத்துக்கிடக்க ஒரு மூலையில் அகிலா பிரம்மை பிடித்தவளாக இருக்கிறாள். அவளை சகஜ நிலமைக்கு கொண்டுவர ஜீவா செய்யும் முயற்சிகள் வீணாகின்றன. வீட்டின் உள்ளேயும் வெளியேயும் அவசர கதியில் நோட்டம் விடுகிறான் ஜீவா. அவனது பதட்டம் தணியவில்லை.

இருட்டி விடுகிறது.

இவ்வளவு நேரமும் அதற்காகவே காத்திருந்த ஜீவா பரபரப்பாகிறான். அவசர அவசரமாக கையில் கிடைத்த சாக்குப்பை ஒன்றில் ராக்கியின் சடலத்தை எடுத்து திணித்து அதை துக்கி சுமந்தவாறு வந்து அருகேயுள்ள பள்ளத்தாக்கில் உருட்டி விடுகிறான். அந்தக் குளிரிலும் அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. அப்படா என்று கைவிரல்களால் நெற்ரி வியர்வையை வழித்து விட்டு ஒருவித நிம்மதியுடன அவன் திரும்பிய போது ஓங்கிக் குரைத்தபடி அவன் மேல் ஏறிப்பாய்ந்தது அதுவரை பொறுமையாய் இருந்த ராக்கியின் நாய் அவன் அந்த நாயை தள்ளிவிட்டான்.

ஆனால் அதுவோ அவன்மேல் ஆவேசத்துடன் சீறிப்பாய்ந்தது.

நாயின் குரல் கேட்டு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த லேடி டாக்டர் மீனா ஜன்னலை திறந்து அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை ஒருவித வினாக் குறிகளுடன் கவனிக்க ஆரம்பிக்கிறாள்.

அந்த நாயுடன் திணறிக்கொண்டிருந்த‌ ஜீவா சற்று நேரப் போராட்டத்திற்கு பிறகு ஆவேசமாய் குரைத்தப‌டி பாய்ந்து வந்த அந்த நாயின் கால்களைப் பற்றி சுழற்றி அதையும் அந்த பள்ளத்தில் வீசி எறிய – ஒரு பெரும் மரண‌ ஓலத்துடன் மறைந்தது அந்த நாய்.

அக்கம் பக்கம் பார்த்தப‌டி இறுக்கமான முகத்துடன் திரும்பிக் கொண்டிருக்கும் ஜீவாவை வைத்தகண் வாங்காது கவனிக்கிறாள் டாக்டர் மீனா. அவளுக்கு எல்லாமே மர்மமாக உள்ளது. மறுநாள் ஜீவா வேலைக்கு போகவில்லை. பிரம்மை பிடித்தாற்போல இருக்கும் அகிலாவுக்கு சிகிர்ச்சை அளிக்க லேடி டாக்டர் மீனாவை அழைத்து வருகிறான்.

அவன் பேச்சும் அகிலாவின் நிலமையும் அவளுக்கு குழப்பமாய் உள்ளது. நள்ளிரவில் நாயோடு போராடிய ஜீவா வேறு அவளது நினைவிற்கு வருகிறான். அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அகிலா தூங்குவதற்காக ஊசி போட்டு விட்டு, ‘நேத்து ராத்திரி ஏதோ ஒரு நாய் குரைக்கிர சத்தம் கேட்டது ஏதும் தெரியுமா? என்று மீனா கேட்க ஜீவா அதற்கு மழுப்பலாக பதில் சொல்கிறான். மீனாவின் சந்தேகம் வலுக்கிறது.

ராக்கி ஒரு எஸ்டேட் முதலாளியின் பையன் என்பதால் எஸ்டேட் ஆட்கள் அவனை தேடி அலைந்தவண்ணம் இருக்கிறார்கள். ஜீவா வேலைக்கு வராததால் போஸ்ட் அபீசில் இருந்து ஆட்கள் வருகிறார்கள். தங்கைக்கு உடல் நிலை சரியில்லை என்கிறான் ஜீவா போஸ்ட் ஆபீசில் தபால்கள் குவிந்து தபால் பையை கேட்கிறார்கள். அப்போதுதான் தான் ராக்கியின் சடலத்தை தான் தபால் பையில் வைத்து கட்டிப் போட்டது ஜீவாவின் நினைவிற்கு வருகிறது.

ராக்கியையும் நாயையும் காணவில்லை என்ற செய்தியை கேட்டதும், மீனாவின் குழப்பம் அதிகரிக்கிறது. ஜீவா நாயுடன் போராடியது நினைவுக்கு வந்து போகிறது. ஆனால் அவளால் தெளிவான எந்த முடிவிற்கும் வர முடியவில்லை.

இரண்டு நாள் கழித்து காட்டில் தேனெடுக்கப் போனவர்கள் கீழே பிணவாடை வீசுவதாக வந்து சொல்ல ராக்கியின் சடலம் அழுகிய நிலையில் கிடைக்கிறது. நாய் வேறு அழுகிப் போய் கிடப்பதாக சொல்கிறார்கள்.

சாக்கில் கட்டப்பட்டு பள்ளத்தாக்கில் வீசப்பட்ட ராக்கியின் சடலத்தை மீட்டு வருகிறார்கள். போலீஸ் விசாரணை நடக்கிறது. விசாரணையில், ராக்கியின் சடலம் இருந்த சாக்குப்பை போஸ்ட்மேன் ஆன ஜீவாவினுடையது என்று தெரிய வருகிறது. ஜீவாவை விசாரிக்கின்றனர். ஜீவா நடந்ததைச் சொல்கிறான். தான் ராக்கியை கொலை செய்யவில்லை என்ற ஜீவாவின் வாதத்தை நம்ப மறுக்கும் போலீஸ் அவனை கைது செய்து, ஜீப்பில் ஏற்ற போகிறது.

அப்போது அங்கு வரும் டாக்டர் மீனா, ஜீவா இந்த கொலையைச் செய்யவில்லை என்றும், தான்தான் ராக்கியை கொன்றதாகவும் கூறுகிறாள்.இதைகேட்டு அனைவரும் அதிர்கின்றனர்.

டாக்டர் மீனா பேசுகிறாள் – தான் அரசு மருத்துவராக வேலை பார்க்கும் பிரைமரி ஹெல்த் சென்டருக்கு பல சிறுமிகளை பெற்றோர் அபார்ஷனுக்காக அழைத்து வந்ததைக் கண்டு தான் அதிர்ந்ததாக‌வும்!

விசாரித்த போது, அதிகாரமும் பணமும் மிக்க எஸ்டேட் முதலாளியின் மகன்தான் இப்படி வக்கிரமாக நடந்து கொண்டதாக‌வும் இதேபோல பல பெண்களின் வாழ்க்கையில் அவன் விளையாடிவிட்டதாக‌வும் அவள் கூறுகிறாள். ஒரு நாள் மீனாவிடமே ராக்கி தவறாக நடக்க முயற்சிக்கிறான்.

இந்த நிலையில்தான் சம்பவம் நடந்த தினத்தன்று மீனா புறப்ப‌ட்டுக்கொண்டிருக்கும் போது தற்செயலாய் ஜீவா வெளியே போவதையும் அதை மேட்டிலிருந்து பார்த்தப‌டி ராக்கி இறங்கி வந்து கொண்டிருப்பதையும் அகிலா பயந்து வீட்டுக்குள் ஓடுவதையும், ராக்கி வீட்டிற்குள் நுழைவதையும் பார்த்து திடுக்குற்றவாறு வேகமாக ஜீவாவின் வீட்டை நோக்கி ஓடி பின்புற வாசல் வழியே வீட்டுக்குள் நுழைந்த மீனா அங்கு அகிலாவை பலாத்காரம் செய்ய முயற்சித்த ராக்கியின் தலையில் கையில் கிடைத்த இரும்புக் கம்பியால் ஓங்கி அடித்துவிட அவன் முனங்கலுடன் கீழே சரிகிறான்.அகிலா அலறுகிறாள்.

மீனா தான் கொலை செய்தேன் என்பதற்கு சாட்சியாக மறைத்து வைத்திருந்த இரும்புக்கம்பியை எடுத்துத் த‌ருகிறாள்.
இப்போது அனைவரும் திகைத்து நிற்கிறார்கள். அருகில் நிற்கும் போலிஸ் ஜீப்பில் மீனா தானாகவே ஏறி உட்கார்ந்துகொள்ள ,ஜீவா அகிலாவை இடதுகையால் அணைத்தபடி ஜீப்பை நோக்கி அடிகள் எடுத்து வைக்க அதற்குள் ஜீப் ஸ்டார்ட் ஆகி நகர ஆரம்பிக்கிறது. மேட்டிலிருந்து பார்த்தால் ஜீப் போய்க்கொண்டிருக்கிறது .

ஜீவாவும் அகிலாவும் மீனாவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

(இந்த திரைக்கதை சுருக்கம் பத்திரிகையாளர் டி.அருள்செழியனால் நடிகர் கமல்ஹாசனுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது)

Will Kamal invite journalist and novelist Arul Chezhiyan for a meet?

Kamal Hassan has reportedly agreed to play the lead in the remake of Malayalam starrer Dhrishyam (Mohanlal and Meena star in Malayalam), to be produced by Suresh Balaji. However there has been no official announcement or confirmation from both sides.

However interestingly a journalist cum novelist has sent a letter to Kamal Hassan inviting his attention to the script he had handed over to Kamal, way back in 1993, at his office. He has pointed out in his letter that the short story he had handed over is very similar to the Malayalam film Dhrishyam. He also pointed out that while he has no grouse or intend to publicise that Malayalam film was in fact his story, he felt happy that his thoughts have been given life in the film.

Arul Chezhian in his letter to Kamal narrated how he came to his office to meet him through the help of his friend Thiruppathisamy (now deceased), when Kamal had asked him to write his story on a paper and hand over to him. Arul immediately got the story typed and handed over the original and retained the copy with him. That copy he had enclosed along with his letter to Kamal, for his immediate reference.

He further informed in his letter that he was awarded 2nd prize in the Bollywood story writing competition. He sent that story too along with his letter while informing Kamal that he has few more storylines too to offer.

He has requested Kamal for an audience and awaiting the call from Kamal’s office. It remains to be seen if Kamal would give Arul an audience.

4 Comments
 1. rajini says

  waste fello kamal…over smart

 2. ஜெஸ்ஸி says

  சத்தியமா இது திரிஷ்யம் மாதிரி இல்ல…!!!
  மேல சொல்லியிருக்கிறது கேரளா பின்னணியில ஒரு த்ரில்லர். இதில் கதை நாயகனுக்கு என்ன பங்கு…? தங்கை மேலே விழ இருக்கும் பழியை தான் ஏற்றுகொள்ளவிருக்கிறார் அல்லது தங்கை செய்யும் கொலை தவறுதலாக அவர் மேல் விழும். அவ்ளோதான். பின்னர் திடீர் ட்விஸ்ட் – காலம் காலமாக இருந்து வரும் – கதாநாயகன் நல்லவன் முடிவு. இதில் கதை நடைபெறும் இடம் கேரளா என்பதை தவிர வேறு எந்த ஒற்றுமையும் பார்க்க முடியவில்லை. இதே கதை பின்னணியில் எவ்வளவோ திரைப்படங்கள் அதன் பின்னர் பல்வேறு காலகட்டங்களில் வந்து விட்டன.

  மேலே சொன்ன கதைக்கு திரைக்கதை அமைத்திருந்தால் கண்டிப்பாக த்ரிஷ்யம் பாணியில் எல்லாம் வந்திருக்காது.

  ஆனா, திரிஷ்யம் – இது சத்தியமாக வேறு விதம்…!!!! சும்மா அடிச்சி விடறதை நிறுத்துங்கப்பா…!!!!!!!!!!!!!!

  1. அருள்செழியன் says

   த்ருஷ்யம் திரைக்கதைக்கும் நான் எழுதிய பூக்களின் பாடல் கதைக்கும் அடிப்டையில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. கதை நடைபெறும் லொகேஷன் துவங்கி கதா பாத்திரங்கள் மற்றும் கதையின் அடிப்படை சம்பவங்கள் வரை.. எனது கதையில் கதாநாயகன் போஸ்ட்மேன், வறுமையை கடந்து வந்தவன் அம்மா தங்கை தவிர வேறு யாருமற்றவன். த்ரிஷ்யம் கதையின் ஹீரோ கேபிள் டிவி ஆபரேட்டர், யாருமற்றவனாக இருந்து, திருமணமானத்திற்கு பின்பும் பெரிய குடும்ப பலம் இல்லாதவன். என்கதையில் மலை கிராமத்தில் வசிக்கும் ஹீரோ தங்கையை +2 படிக்கவைக்கிறான் த்ரிஷ்யத்திலும் அதே லொகேஷனில் வசிக்கும் ஹீரோவின் மகள் +2 படிக்கிறாள், என கதையில் பணமும் அதிகாரமும் மிக்க எஸ்டேட் அதிபரின் மகன் ஹீரோவின் தங்கையை தொடர்ந்து வருகிறான் .அவளை அவளது வீட்டிலேயே பலாத்காரம் செய்ய முயற்சிக்கும்போது இரும்பு கம்பியினால் தாக்கப்பட்டு கொல்லப்படுகிறான். த்ருஷ்யம் படத்திலும் ஹீரொவின் மகளை தொடர்ந்துவரும் அதிகாரமும் செல்வாக்கும் மிக்க ஐஜியின் மகன் ப்லாத்காரம் செய்ய முயற்சிக்கும் போது இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கொல்லப்படுகிறான் .. என் கதையில் அவனை கொன்றது பிரம்மை பிடித்தது போல இருக்கும் அந்த +2 மாணவி என்றுதான் அனைவரும் நினைத்திருக்கும்போது அவனை கொன்றது ஒரு மூன்றாவது நபரான லேடி டாகடர் என்பது க்ளைமாக்சில் வெளிவரும் ரும் ஆனால் த்ருஷ்யம் படத்தில் அந்த + 2 மாணவியே கொலை செயதது போல அமைக்கப்பட்டிருக்கிறது. த்ரிஷய்ம் திரைக்கதையில் 45% போலிஸ் புலன் விசாறணைக்குள் போகிறது. மற்றபடி அடிப்படையில் கூர்ந்து பார்த்தால் இரண்டும் ஒரே கதைதான். இவை இரண்டுக்கும் இன்னமும் பல ஒற்றுமைகள் தென்படும் ஆனால் அதே சமயம் ஜீத்து ஜோசப்போ, கமலஹாசனொ என் கதையை உருவி விட்டாட்கள் என்றோ காப்பியடித்து விட்டார்கள் என்றோ நான் கதைவிட தயாராக இல்லை. எனக்கு துளியும் அப்படி ஒரு எண்ணம் இல்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் போனோ இண்டர் நெட்டோ எனக்கு பரிச்சயமாகாத ஒரு காலத்தில் நான் கிட்டத்தட்ட அதே போன்று ஒரு விஷயத்தை யோசித்தேன் என்பதைததான் நான் சொல்ல வருகிறேன் .

 3. thennavan, chennai says

  kavalaipadathey nanbaa,neeyum thirai vaanil valam varum

  kaalam neringivittadhu.

  vaazhthugal.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
த்ரிஷா இப்பல்லாம் ஏன் இப்படி?

காதலே ஒரு கண்ணாமூச்சி விளையாட்டுதான். கண்ணை கட்டிக் கொண்டிருந்தாலும், கனவுலகத்தில் தள்ளுகிற இந்த காதல் கொஞ்ச நாட்களாக த்ரிஷாவை எங்கே தள்ளிக் கொண்டிருக்கிறது என்பதுதான் விடை தெரியாத...

Close