கவிதாலயாவுக்கு கால்ஷீட்…. -விஜய் வளைந்து கொடுப்பது எதற்காக?
‘தலைவா’ பட விவகாரத்தில் விஜய்யை தலைகுப்புற தள்ளியது யார் என்பதை மிக நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். இந்த படத்தால் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு பத்து கோடிக்கும் மேல் நஷ்டமாம். இவ்வளவுக்கு பிறகும் விஜய், விழாக்களில் பேசும்போதும் அறிக்கைகள் வெளியிடும்போதும் முதல்வரையும், அவரது பெருமைகளையும் பற்றி பேசி வருவது ரசிகர்களுக்கு செம டென்ஷனை ஏற்படுத்தியிருக்கிறதாம். ‘தலைவா… பயப்படாதே, நாங்க இருக்கோம்’ என்றெல்லாம் விஜய்க்கு கடிதமாக எழுதிக் குவிக்கிறார்களாம்.
அதற்கப்புறமும் இவர் இந்திய சினிமாவின் நுற்றாண்டு விழாவில் அம்மா புகழ் பாடியதை அதிர்ச்சியோடு கவனித்த ரசிகர் மன்றத்தினர், ‘ஏன் தலைவா?’ என்று எரிச்சல் வழிய கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருக்கிறார்களாம். ‘கொஞ்ச நாளைக்கு எனக்கு யாரும் அட்வைஸ் செய்ய வேண்டாம். நானே என் முன்னேற்றத்தை தீர்மானிச்சுக்குறேன்’ என்று தனது அப்பாவிடம் கூறிவிட்டுதான் இப்படியெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறாராம் விஜய்.
நடுவில் பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்திற்காக கால்ஷீட் தரச்சொல்லியிருக்கிறாராம் எஸ்.ஏ.சி. அப்படி கால்ஷீட் கொடுக்கும் பட்சத்தில் இயக்குனர் சிகரமே முதல்வரை சந்தித்து விஜய் படங்களுக்கு சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வார் என்பது எஸ்.ஏ.சி யின் யோசனை. இதற்கு விஜய்யும் தலையசைத்திருப்பதாக கூறுகிறார்கள்.
எல்லாம் சரி, பாலசந்தராகவே இருந்தாலும் அம்மா சந்திக்கணுமே?