கிரானைட் கொள்ளை விவகாரத்தில் சகாயம் குழு நியமனத்திற்கு எதிரான மனு தள்ளுபடி! தமிழக அரசுக்கு ரூ.10,000 அபராதம்

கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட சகாயம் குழு நியமனத்திற்கு எதிரான தமிழக அரசின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, 10,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. தமிழகத்தில் நடந்த கிரானைட் மற்றும் கனிம மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கிரானைட் முறைகேடுகளை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்ததோடு, விசாரணை அறிக்கையை அக்டோபர் 28ம் தேதிக்குள் (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியாகிவிட்டது. இந் நிலையில் சகாயம் குழுவை அமைக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்திலேயே அதை எதிர்த்து தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. தமிழக அரசு சார்பில் தொழிற்துறை செயலாளர் இந்த மனுவை தாக்கல் செய்தார். அதில், கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட சகாயம் குழு நியமனத்தை ஏற்க முடியாது, அந்த நியமனத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 கிரானைட் குவாரிகளில் நேரில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது, இந்த விவகாரத்தில் போதுமான நடவடிக்கை எடுத்துள்ளதால் சகாயம் குழு விசாரிக்க தேவையில்லை, சகாயம் குழு நியமனத்தை ஏற்க முடியாது, இந்த நியமனத்தை உயர் நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த பின்னரும், உயர் நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

சகாயம் குழுவின் விசாரணைக்கு தமிழக அரசு ஏன் அச்சப்படுகிறது? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குழுவை நியமித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏன் அரசு அமல்படுத்தவில்லை என்று கேட்டதோடு இதில் தமிழக அரசின் வாதத்தை ஏற்க முடியாது எனக் கூறி மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் மறு ஆய்வு மனு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு ரூ. 10,000 அபராதமும் விதித்தனர்.

உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மனு தள்ளுபடியான பின்னர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்ய ஏன் காலதாமதம் ஆனது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஜோதிகா படம் நடக்குமா? திக் திக் திகிலில் படக்குழு?

வெகு காலம் கழித்து ஜோதிகா ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். இந்த நல்லசெய்தியை நாட்டுக்கு அறிவித்து புண்ணியம் கட்டிக் கொண்ட அந்த கலைஞர்களுக்கு இப்போது கம்பி மேல்...

Close