குக்கூ / விமர்சனம்

கண்ணில்லாதவர்களின் உலகம் எப்படியிருக்கும் என்பதை ஒருமுறை கூட யோசித்து பார்க்காத, அல்லது அதற்கெல்லாம் நேரமில்லாத நமக்கெல்லாம் ராஜுமுருகன் கொடுத்திருக்கும் ‘பளார்’தான் இந்த படம். இதற்கப்புறமாவது சாலையோரத்தில் வரிசை கோர்த்தார் போல கடந்து போகும் அவர்களின் கதையை கேட்க ஒருவராவது உட்காருவார்கள் எனில், அதுதான் இந்த படத்திற்காக நாம் அடிக்கும் சல்யூட். பொதுவாகவே இப்படி பார்வையற்றவர்களின் கதையை படமாக்குவதென்றால் அதிலிருக்கும் சவால்களில் ஒன்று ‘நம்ம பிரச்சனையே பெரும் பிரச்சனையாயிருக்கு. இதுல இவங்க சோகத்தை வேற பார்த்து தொலையணுமா?’ என்கிற விமர்சனம். ஆனால் அதற்கெல்லாம் இடம் தராமல் குக்கூவை நிரப்பியிருக்கிறார் ராஜுமுருகன்.

படத்தில் இவரது வசனங்கள் ஒரு சுவாரஸ்யம் என்றால் பொருத்தமான இடத்தில் சடக்கென பொழியும் மழைத்துளிகளாக இருக்கிறது இசைஞானி இளையராஜாவின் பாடல்கள். ராஜாவை அணு அணுவாக நேசிக்கும் இந்த படமும், கதையும், முருகனும் ‘ஏன் ராஜாவையே இசையமைப்பாளராக்கியிருக்கக் கூடாது? என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

ஆனந்தவிகடனின் நிருபரான ராஜுமுருகனின் பார்வையிலிருந்தே துவங்குகிறது படம். ‘காணவில்லை’ போஸ்டரில் தமிழ் என்பவனின் படம். அந்த தமிழ் யார்? அவனது காதல் என்னாச்சு? என்பதாக கதையை ஆரம்பிக்கிறார் அவர். கல்லுரியில் படிக்கும் சுதந்திரக் கொடிக்கும், ரயிலில் வியாபாரம் செய்யும் தமிழுக்கும் மோதல் வருகிறது. பின்பு அது காதலாகிறது. ஆனால் இது ஒருதலை காதல். தமிழின் காதல் தெரியாமலே வேறொரு பார்வையுள்ள இளைஞன் மீது காதல் வயப்படுகிறாள் தமிழ். ‘நமக்கு வாய்ச்சது அவ்வளவுதான்’ என்று மனதை தேற்றிக் கொள்ளும் தமிழ், ராஜாவின் சோக பாடலோடு ஐக்கியமாகிவிட, சுதந்திரக்கொடிக்கும் காதல் தோல்வி. எப்படியோ ‘தமிழின்’ காதலுக்கு ‘சுதந்திரம்’ கிடைக்கிற நேரத்தில் வந்து தொலைக்கிறது வேறொரு வம்பு. அண்ணனின் எதிர்ப்பு, கூட்டாளிக்கு தங்கையை தாரை வார்த்தல் போன்ற வெகு இயல்பான படமாக திரும்புகிறது கடைசி நேரங்கள். இருந்தாலும் பார்வையற்றவர்கள் பற்றிய ராஜுமுருகனின் ஆராய்ச்சியும் நுணுக்கமும் ‘இவன்தாண்டா டைரக்டர்’ என்ற உணர்வுக்குள் தள்ளுகிறது ஒவ்வொரு ரசிகனையும்.

‘கோவில் அழகா?, கோபுரம் அழகா?’ என்கிற தவிப்பை தருகிற மாதிரியே, முதலில் ராஜூமுருகனை பாராட்டுவதா, இல்லை… இவ்வளவு கனமான கேரக்டரை வெகு அசால்ட்டாக உள்வாங்கி உயிர் கொடுத்திருக்கும் தமிழ் மற்றும் சுதந்திரக் கொடியை பாராட்டுவதா என்பதே பெரும் தவிப்பாக இருக்கிறது. அதுவும் தமிழாக நடித்திருக்கும் தினேஷ் பார்வையற்றவரின் உடல்மொழியை எவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார், ஆச்சர்யம்! கண்களை உயர்த்தி, கழுத்தை கோணலாக்கி அவர் பேசுகிறபோது அசலா, நகலா என்கிற குழப்பமே வந்துவிடுகிறது நமக்கு.

பத்து விரல்களையும் பார்வையாக்கி நடக்கும் மாளவிகா மேனனும் நடிப்பால் அசரடிக்கிறார். அண்ணனிடம் அறைவாங்கிக் கொண்டு செல்போனை தவற விட்டுவிட்டு தேடுகிற அந்த காட்சி பெரும் கவலைக்குள் தள்ளுகிறது நம்மை. ஆனாலும் படத்தில் வரும் பிற கேரக்டர்கள் சோகமான நேரத்திலும் வயிற்றை ஒரு கிள்ளு கிள்ளிவிட்டு போகிறார்களா…? ரிலாக்ஸ்! படத்தில் வரும் அந்த நாடகக் குழுவும் கலகலப்புக்கு உத்தரவாதம் கொடுக்கிறது. இரண்டு பெண்டாட்டிக்காரரான சந்திரபாபு பெண் சைக்காலஜியின் நெளிவு சுளிவுகளை சொல்லும்போது ரகளையாகிறது தியேட்டர். ‘வொண்டர் வொண்டர்’ பாதிரியாராகட்டும்… ‘எமோஷனல் ஆகிருவேண்டா…’ குடிகாரனாகட்டும்… எல்லாருமே ராஜுமுருகன் டச்.

இப்படி நகைச்சுவையால் மட்டுமல்ல, ஒரு அழகான சிறுகதையின் கடைசி வரிகளை போலவும் சில இடங்களை சிறப்பாக்குகிறார் அவர். ஒரு காட்சியில் ‘பிங்க் கலர் எப்படியிருக்கும் தெரியுமா?’ என்று கேட்டுவிட்டு சட்டென்று இளையராஜாவின் ‘இதயம் ஒரு கோயில்…’ பாடலை பாட விட்டிருப்பது ஒரு சாம்பிள்.

பார்வையற்றவர்களின் உலகம், பெரும்பாலும் ரயிலோடு தொடர்புடையதாக இருக்கிறது. இந்த படத்திலும் ரயில் ஒரு கேரக்டராகவே வந்து போகிறது. என்ன பேசினாலும் திரும்பி பார்க்காத ஒரு பெரியவர், அரவாணிகள், பிச்சைக்காரர்கள் என்று மிகமிக சாமானியர்களையும் அவர்களின் வாழ்வையும் சுமந்து கொண்டு ஓடுகிற அந்த ரயிலில்தான் பெரும்பகுதி படத்தை நடத்துகிறார் ராஜுமுருகன். மிச்சசொச்ச பகுதிகளும் பிளாட்பாரங்களில் நடக்கிறது. பார்வையற்றவர்களின் புலன்கள் செய்யும் அற்புதத்தை இந்த இரைச்சலுக்கு நடுவில் சொல்வதுதான் இன்னமும் சிறப்பு என்று கருதியிருக்கிறார் அவர். அதை மிக எளிதாக புரிந்து கொள்கிறான் ரசிகனும்.

இளையராஜாவை தவிர்த்து பிற பாடல்களில் சந்தோஷ் நாராயணன் ராஜாவின் பாணியையே பின்பற்றியிருக்கிறார். அதுவே படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. பி.கே வர்மாவின் ஒளிப்பதிவு சற்றே டல். கோணங்களில் இருந்த அழகு, வண்ணங்களில் இல்லையே, ஏன்?

எல்லாம் சரி. க்ளைமாக்சுக்கு முந்தைய அரை மணி நேரத்திலிருந்து வண்டி ‘மக்கர்’ ஆகிவிடுகிறது.

பார்வையுள்ளவர்களின் காதலை பிரித்தாலே ‘பப்பரப்பா’வாகிவிடுவார்கள் அவர்கள். இங்கே இவர்களை பிரித்துவிட்டு, ‘எங்கே… முடிஞ்சா சேரு பார்க்கலாம்?’ என்று முடிச்சை போட்டு, அதை பிரிப்பதற்குள் தவியாய் தவித்திருக்கிறார் ராஜுமுருகன். இதற்காக பின்னப்பட்ட வலையில் படமும் சிக்கிக் கொண்டுவிட்டதே என்ற வருத்தம் மேலிடுகிறது. படம் பார்க்கும் போதே பல கேள்விகளை எழுப்ப வைக்கிறார் முருகன். ‘எல்லாம் சரி. கமர்ஷியல்னு ஒண்ணு இருக்கே?’ என்று டைரக்டரை குழப்பிவிட்டிருப்பார்கள் போலிருக்கிறது.

அத்தனை நண்பர்கள் இருக்கும் போது தனியாக அதுவும் நள்ளிரவில் மூன்று லட்ச ரூபாய் பணத்துடன் தினேஷ் ஏன் காதலி வீட்டுக்கு கிளம்ப வேண்டும்? இப்படி ஆரம்பிக்கும் கேள்வி தினேஷின் நீண்ட போராட்டம் முடிவுக்கு வரும் வரை கேள்விகளாகவே நீண்டு கொண்டிருப்பதை தவிர்த்திருந்தால் இந்த படத்தின் முதல் பாதி அழகெல்லாம் கெட்டுப் போகாமல் இருந்திருக்கும்.

நெஞ்சில் ஒரு திடீர் குத்துவிட்டு முடிக்க வேண்டிய படத்தை, கேரள ஆயுர்வேத மசாஜ் போல காலிலிருந்து தலை வரைக்கும் இழுத்து இழுத்து முடிக்கிறார் ராஜுமுருகன்.

அந்த ஒரு குறைதான் குயிலின் குரலில் ரயிலின் ஒலியை மிக்ஸ் பண்ணிய ‘குக்கூ’வாக்கிவிட்டது!

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மலேசிய விமானத்தின் பாகங்கள் காணப்படுவதாக ஆஸ்திரேலியா மீண்டும் உறுதி

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலிய விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன. இரு தினங்களுக்கு முன் 24 மீட்டர் நீளம் மற்றும் 5 மீட்டர் நீளமுள்ள...

Close