குரான், பைபிள், கீதை போல மதிக்கப்பட வேண்டிய நூல் வைரமுத்துவின் ‘மூன்றாம் உலகப் போர்’ – சுவிஸ் தமிழர் டாக்டர் கல்லாறு சதீஷ்

சுவிட்சர்லாந்தில் ஆயுள்காப்பீட்டு நிறுவனம், வங்கிக் கடன் வசதிகள் மற்றும் நிதி ஆலோசனை போன்றவற்றிற்கு சேவைகள் செய்யும் நிறுவனங்கள் நடத்திவருபவர் டாக்டர் கல்லாறு சதீஷ். இவர் தொழிலதிபர்,எழுத்தாளர், கவிஞர்,சமூக ஆர்வலர், திரைப்படத் தயாரிப்பாளர், சுவிஸ் தமிழர்களின் நம்பிக்கை,அடையாளம் என பல்வேறு முகங்கள் கொண்டவர். கோவை செம்மொழி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய வெளிநாட்டு அறிஞர்கள் 10பேரில் இவரும் ஒருவர். சுவிஸ் தமிழர்களின் அடையாளமாகக் கருதப்பட்டுக் கொண்டாடப்படுபவர்.சுவிஸ்ஸில் நடைபெறும் தமிழர் விழாக்களில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுபவர். தன்னம்பிக்கை பேச்சாளர். வெளிநாடு வாழ் தமிழர்களை தொழில்களில் ஊக்குவிக்கும் பொருட்டு ஆலோசனை தரவும் பெறவும் இந்தியா வந்திருந்தார். அவரைச் சந்தித்தோம்.

வணிக வெற்றிகள் மூலம் இலங்கைத் தமிழர் நிலையில் மாற்றம் வருமென்று நம்புகிறீர்களா?

நிச்சயமாக நம்புகிறேன். கிராமத்தில் சொல்வார்கள் ‘ஏழையின் சொல் அம்பலம் ஏறாது’ என்று. வசதியானவன் வார்த்தைக்குத்தான் மதிப்பு உண்டு. நல்லவனாக இருக்க வேண்டும் தான். நல்லவனாக மட்டுமே இருப்பது தமிழரின் பலவீனமாகக் கருத இடம்தரக் கூடாது. வணிகத்தில் வல்லவனாகவும் வியாபாரத்தில் விற்பன்னராகவும் தொழிலில் தோல்வி காணாதவராகவும் வளர வேண்டும். இதற்குத் தமிழர்கள் உலகத் தொழில்மய நீரோட்டத்தில் கலக்க வேண்டும். ஒரு மனிதனின் சுதந்திரத்தில் பொருளாதார சுதந்திரம் முக்கியமானது. தொழிலில் ஈடுபடுவது மூலமே இந்த விடுதலையை உணரமுடியும். என்னைக் கேட்டால் தமிழர்கள் நிறைய முயல வேண்டும். பொருளீட்ட வேண்டும். தேவைக்கு அதிகமாக ஈட்டி நம்மக்களுக்கு உதவ வேண்டும். அதற்குத் தொழில் ஒன்றுதான் வழி. வியாபாரம் என்பதை ஏதோ தவறாகப் பார்க்கிற மனோபாவம் நம் தமிழ்ச் சமூகத்தில் உள்ளது.உலகில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கிறது.

ஜெர்மனி , பிரான்ஸ்,இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தொழிலில் சிறப்பாக விளங்குகிறது. தொழில் முன்னேற்றம்தான் நாட்டு முன்னேற்றம். வியாபாரம் தமிழர்களுக்குத் தேவை. வியாபாரம் பண நிர்வாகம், நேர நிர்வாகம், மனிதர்களை அணுகும் நிர்வாகம் என எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும். வணிகம் என்றால் பெரிய முதலீடு தேவை என்கிற கருத்து உள்ளது. அவரவர் தகுதிக்கு ஏற்ப குறைந்த முதலீட்டிலும் வணிகம் தொடங்கலாம்.வணிகத்துக்கு மூலதனத்தைவிட மூளைதான் வெற்றியைத் தரும். வணிகத்துக்கு ‘மூளை’தனம்தான் மூலதனம்.

வணிகத்தில் ஈடுபட்டு பொருளாதரா விடுதலை பெற்று நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கை வாழ வேண்டும். பிறருக்கும் உதவவேண்டும், வணிக வளர்ச்சி சமூக மதிப்பும் அதிகாரத்தை நோக்கி நகரும் துணிவையும் நம்பிக்கையையும் தரும். உலகில் வணிகத்தில் வளர்ந்த நாடுகள்தான் அதிகாரபலம் கொண்ட நாடுகளாக உருவெடுத் துள்ளன. அதனால்தான் ‘எண்ணித் துணிக வணிகம்’ என்கிறேன்

சுவிஸ்ஸில் உள்ள உங்கள் நிறுவனம் பற்றி..?

சுவிஸ்ஸில் காப்பீடு என்பது சட்டபூர்வமாக கட்டாயமாக்கப் பட்டுள்ளது. காப்பீடுகளில் பலவகை உள்ளன. உடல் நலக் காப்பீடு, வாகனங்கள் காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்றவை உண்டு. உடல்நலம் சம்பந்தமானது என்றால் அதில் பலவித படிகள், அடுக்குகள் இருக்கின்றன. சாதாரண, நடுத்தர, உயர்தர மருத்துவ சிகிச்சைகளுக்கு என பல உண்டு. சாதாரண நோய்களில் தொடங்கி உயிராபத்து நோய்கள் வரை மருத்துவம் செய்ய சுகாதாரக்காப்புறுதிகள் உதவுபவை. உயர்தரம் என்கிற போது அந்தநாட்டு அதிபருக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவரின் நேரத்தைக் கூட கேட்டுப் பெற முடியும். சிகிச்சை செய்ய முடியும். அதே போல தரமான வாகன– ஆயுள் காப்பீட்டு சேவைகளும் உள்ளன.

வெளிநாடுகளில் வேலைக்கு வருகிறவர்கள் முதலில் செய்யவேண்டிய நடை முறைகளில் காப்பீடும் ஒன்று. அப்படி வேலைதரும் பல நிறுவனங்கள் காப்பீட்டுக்கு எங்களை அணுகுவார்கள். நாங்கள் பிரபல நிறுவனங்களிலிருந்து சில நிமிடங்களில் காப்பீடுச் சேவையைப் பெற்றுக் கொடுப்போம். அதுமட்டுமல்ல தனிநபர் கடன், தொழிற் கடன் என்று வங்கிகளில் கடன் பெற்றுத் தருகிறோம். அந்நாட்டில் நாங்கள் இந்தச் சேவையை முறையாகச் செய்து தருகிறோம். ‘இலாபமையம் ‘என்கிற எமது நிறுவனம் இப்போது ஐ.ஏ .க்ரெடிட் (பி).லிட் I.A.CREDIT (P)LTD என்று மாற்றப்பட்டு சேவை செய்ய ஆரம்பித்துள்ளோம். . இதற்கு அங்கு தேவையும் முக்கியத்துவமும் அதிகரித்து வருகிறது. புலம் பெயர்ந்து வருபவர்களுக்கு இந்தச் சேவை மிகவும் தேவையாக உள்ளது. ஆங்கிலம் இல்லாத அந்த நாட்டில் எல்லாமே பிறமாழிகளில்தான் இருக்கும். ஒரு படிவம் நிரப்பக் கூட நம்மவர்களில் பலர் சிரமப்பட வேண்டி உள்ளது. நாங்கள் இந்தச் சேவையை அவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். இந்த சேவையை சுவிஸ் நாடெங்கும் 26 மாநிலங்களிலும் விரிவுபடுத்திஇருக்கிறோம். அதற்கு வேலை வாய்ப்புகளும் பெருகிவருகின்றன எங்கள் நிறுவனத்தில் புதியவர்களை வேலைக்காக இணைத்துக் கொள்ள இருக்கிறோம்

சுவிஸ்ஸில் தமிழர்கள் நிலை எப்படி உள்ளது?

சுவிஸ்ஸில் ஜெர்மானியர், பிரஞ்சுக்காரர், இத்தாலியர், ரெத்தோ ரோமானியர் என நான்கு இன மக்கள் வசிக்கிறார்கள்.ஒருவரை ஒருவர் சமமாக மதித்து வாழ்கிறார்கள். நம் தமிழர்களை மதிக்கிறார்கள். அவர்களின் ஒழுக்கத்தையும் உழைப்பையும் போராடி கல்வியில் உயரம் தொடுவதையும் கண்டு வியக்கிறார்கள். தமிழர்கள் அறிவில் சிறந்திருப்பதை அங்கீகரிக்கிறார்கள். அங்கு பேதமில்லை. எங்கும் போகலாம். வரலாம் எதுவும் வாங்கலாம் உரிமை உண்டு.சுவிஸ் ப்ராங்கின் மதிப்பு இந்திய 70 ரூபாய். சுவிஸில் பூர்வ குடி என்று யாருமில்லை. எல்லாரும் வந்தவர்கள்தான். காலகட்டம் மட்டும் முன்னே பின்னே இருக்கலாம். அங்கு தமிழர்கள் 50 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். நான் பிற்காலத்தில் வந்த சுவிஸ் குடிமகன் என்றால் அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். செம்மொழி மாநாட்டில் நான் பேசியபடிஅங்குள்ள தமிழர்கள் 50 ஆயிரம் என்பது அவர்கள்2லட்சம் ஆக வேண்டும் என்பது என் அவா.அது உறுதியாகச் சாத்தியப்படும். நான் பிறந்து வளர்ந்த கோட்டைக்கல்லாறு பல தனித்துவ அடையாளங்கள் கொண்டது .உலகநாடுகள் எங்கு சென்றாலும்அந்த ஊர்,. மக்கள், குளம், ஏரிகள் பால்ய பருவம் எல்லாம் என் நினைவில் வந்து வாட்டும். அவை இழந்த சொர்க்கங்கள்.

எழுத்து,திரைப்படம் சார்ந்து உங்கள் ஆர்வம் ஈடுபாடு குறித்து..?

நான் அடிப்படையில் ஒரு நல்ல ரசிகன். யாருடைய கதை கவிதை படைப்புகள் நன்றாக இருந்தாலும் ரசிப்பேன். அப்படிப்பட்ட நான் என் நாட்டு மக்களின் கதையை எழுதினேன் ‘பனிப்பாறைகளும் சுடுகின்றன’.,’சொர்க்கங்களும் தண்டிக்கின்றன’என நான் இரண்டு சிறுகதை தொகுப்புகள் கொண்டு வந்துள்னேன்.அவற்றை என் மன பாரத்தை இறக்கிவைத்த உணர்விலான அனுபவங்கள் என்பேன். இரண்டு தொகுப்புகளுக்கும் சுவிஸ் அரசின் விருது ஊக்கம் கிடைத்தது. அப்படி நான் எழுதிய .’பனிப்பாறைகளும் சுடுகின்றன’. நூலுக்கு இங்கே லில்லி தெய்வசிகாமணி விருதுகிடைத்தது.மதிப்பிற்குரியதி.க.சி,வல்லிக்கண்ணன் ,ராஜம் கிருஷ்ணன் ஆகியோரால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பாராட்டும் பெற்றேன்

இதைத் தேர்ந்தெடுத்த தி.க.சி,வல்லிக்கண்ணன் ,ராஜம் கிருஷ்ணன் ஆகியோரது பாராட்டுகளைத்தான் நான் எழுத்தாளர் ஆனதற்கான அங்கீகாரமாக கருதுகிறேன். எனக்குள் இருந்த எழுத்தாளரை எனக்கு அடையாளம் காட்டியவர்கள் அவர்கள்தான் என்பேன். இப்போது வடிகால் என்கிற ரீதியில் கதை,கவிதை என்று என் எழுத்துப் பயணம் தொடர்ந்த வண்ணம்உள்ளது.

திரைப்படம் என்று எடுத்துக் கொண்டால் நான் நல்ல திரைப்படங்களின் ரசிகன். சிறுவயதிலிருந்து எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் பார்த்தபோது இந்தியா போனால் எம்.ஜி.ஆரை நேரில் பார்க்க வேண்டும் என்ற கனவு இருந்தது. என் துரதிர்ஷ்டம் நான் இந்தியா வந்தபோது அவர் உயிருடன் இல்லை. எம்.ஜி.ஆருக்குப் பிறகு ரஜினி ,கமல் எனக்குப் பிடிக்கும். இப்போது அஜீத், விஜய், மட்டுமல்ல சிம்பு, ஆர்யா, விஷாலையும் ரசிக்கிறேன்.

இயக்குநர் ஷங்கரின் இணை இயக்குநர் மதிவாணன் ‘அரிது’ அரிது’ என்றொரு படம் இயக்கினார். இது முழுக்க ஆஸ்திரேலியாவில் படமாக்கப் பட்டது- படக்குழு மெல்போர்ன் நகரில் முகாமிட்டு எடுக்கப்பட்டது. அந்த திரைப்படத்தில் எனக்கு முக்கியமான வேடம் என்று அழைத்திருந்தார். மெல் போர்னில் வாழும் பச்சைத் தமிழன் பாத்திரம். அதில் நடிக்க மீசை வளர்த்திருக்க வேண்டும். வேட்டி கட்டி நடிக்க வேண்டும். நான் மீசையும் வளர்க்க வில்லை. அதுமட்டுமல்ல நடிப்பு சாதாரணமல்ல என்பது புரிந்தது. எனவே நான் நடிக்கவில்லை. வேறு ஒரு சிறு பாத்திரத்தில் நடித்திருப்பேன். இதுபற்றி நண்பர் பாரதிராஜாவிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘நீ நடிப்பியா.. ஏன் என்னிடம் முதலிலேயே சொல்ல வில்லை? என்று வியப்பாகக் கேட்டார்.

சினிமாவில் ஈடுபடும் அளவுக்கு எனக்கு நேரமும் வாய்ப்பும் அமைந்திடவில்லை. எனக்கென்று வேறு துறையும் தொழிலும் உள்ளன.2013 ல் சுவிஸ்ஸில் ‘மாறுதடம்’ என்றொரு தமிழ்ப்படம் எடுத்தார்கள். வணிக வெற்றியை விட மக்களின் வரவேற்பைப் பெற்றது அப்படம்.காரணம் அதன் வியாபார வெளி சிறியது. எனவே நான் கூறுவது என்ன வென்றால் தமிழ்நாட்டு திறமைசாலிகளுடன் இணைந்து செய்தால் தமிழக பரந்த வணிக வெளிகளில் பிரவேசிக்க முடியும் வெற்றியும் பெற முடியும். இப்படிப்பட்ட கூட்டு முயற்சிதான் வணிக வெற்றியைத் தேடித் தரும். ‘மதுரை டு தேனி வழி ஆண்டிப்பட்டி’ படம் ஒருஸ்விஸ் தமிழர் தயாரித்த படம்தான். சிறிய முதலீட்டில் தயாரிக்கப்பட்ட அப்படம் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.அந்த தயாரிப்பாளரைப் பாராட்டுகிறேன். நானும் என் மனைவியும் ஒருங்கிணைப்பு செய்து ‘மேட்லி இன் லவ்’ என்கிற ஜெர்மன்– தமிழ்ப்படம் எடுத்தோம் அதில் நான் பாடல் எழுதியுள்ளேன். இது ஓர் அனுபவம்.இப்போதும் சிலர் படமெடுத்து வருகிறார்கள். அவர்கள் தமிழக திறமைசாலிகளுடன் இணைந்தால் வெற்றிபெற முடியும் என்பது என் கருத்து..

நாங்கள் புலம்பெயர்ந்து சென்ற போது பல துயரங்களையும் வலிகளையும் சந்தித்தோம். எமக்கு என்று ஒரு நாடு இல்லை என்கிற வலியும் அந்த ஆத்மாவின் தவிப்பும் சொல்லி விளக்க முடியாத துயரங்கள். அந்த வலியைப் பதிவு செய்ய விரும்பினோம். அப்படித்தான் சுவிஸ் போய் இரண்டாவது ஆண்டில்’என்ன தேசமோ’ என்று ஒரு திரைப்படத்தை தொடங்கினேன். தயாரித்தேன்.அந்தப்படம் எமது நாட்டு மக்களின் வாழ்க்கையைச் சொன்ன படம். படம் 75 வீதம் முடிந்து விட்ட நிலையில் படத்தின் கதாநாயகி நாடுகடத்தப்பட்டார்.பொறுமையுடன் காத்திருந்த கதாநாயக நடிகரும் கனடா போய்விட்டார். என் பட இயக்குநர் உடல் நலமில்லாமல் இருந்தார். கோமாவில் இருந்து சிறிதுநாட்களில் இறந்து விட்டார். அப்புறம் எப்படி படம் முடிக்க முடியும்? இப்படி முக்கால் பாகம் எடுக்கப்பட்ட அந்தப்படம் முடிந்து விட்டது. திரைப்படமுயற்சியின் தோல்வி என்னை வேறு திசைக்குத் தள்ளியது. அதனால்தான் எழுத்தின் மீது என் கவனம் சென்றது. திரைப்படம் என்பது கூட்டு முயற்சி. எழுத்து என்பது தனிநபர் முயற்சி எனவே எழுதுவது எனக்கு இலகுவாக இருந்தது.அந்தப் படத்துக்கு பாடல் எழுத கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை அணுகினேன்.அவரும் எழுதச் சம்மதித்தார். ஆனால் படம் நின்று போனதால் எழுத முடியாமல் போய்விட்டது..

படத்துக்குப் பாட்டெழுதாத போதும் அவருடனான உங்கள் நட்பு தொடர்கிறதா?

நான் திரைப்பட முயற்சியில் ஈடுபட்டது 1992ல். ஆனால் அவரால் பாட்டெழுதும் வாய்ப்பு அமையா விட்டாலும் பழகிடும் வாய்ப்பு கிடைத்தது. அன்று ஆரம்பித்த நட்பு, அன்பு இன்றும் தொடர்கிறது. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் அன்பு நான் பெற்ற பேறு. ஒரு சாதாரண ஊழியனாக இருந்த என்னை இன்று ஒரு தொழிலதிபராக மாற்றியது அவர் கொடுத்த ஊக்கம்தான். என் அழைப்பை ஏற்று சென்னையில் நடந்த என் திருமணத்துக்கு வந்து வாழ்த்தினார். இந்த நட்பு இன்று வளர்ந்து பெருமைக்குரிய ஒன்றாக விரிந்திருக்கிறது. வைரமுத்து என்கிற ஆளுமை எனக்கு நண்பராக, சகோதரராக, வழிகாட்டியாக, முன்னோடியாக, ஆலோசனை கூறுபவராக, ஆற்றுப்படுத்துபவராக, ஊக்க மூட்டுபவராக எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். அவர் கவிஞராக கவிதைகள் திரைப்படப் பாடல்கள் மூலம் சாதித்தவை பல. இன்றும் தன் தமிழ் மூலம். கவிதைகள் மூலம், பாடல்கள் மூலம் தமிழ் இளைஞர்களுக்கு ஊக்க சக்தியாக இருந்து வருகிறார். ஒரு தனி மனிதராக நெறிபிறழாத நெறியாளராக, ஒழுக்கமுள்ளவராக, நேர்த்தியான செயல்கள் செய்பவராக, நேரம், வாக்கு தவறாதவராக ,உறவை, நட்பை மதிப்பவராக அவர் விளங்கி வருகிறார்.

‘மூன்றாம் உலகப்போர்நூல் ‘வெளியீட்டுவிழாவை சுவிஸில் உங்கள் தலைமையில் நடத்திய அனுபவம் பற்றி..?

இது சற்று மிகையாத் தோன்றலாம் ஆனால் உண்மை. உலகில் வேதங்கள் என்று மதிக்கப்படுபவை குரான், பைபிள், கீதை ஆகியவை. அதே போல மதிக்கப்பட வேண்டிய நூல் ‘மூன்றாம் உலகப் போர்’என்பேன் . அந்த நூலைப் படித்தால் நாளைய சமுதாயம் பச்சைப் பசேல் என்று இருக்கும். எல்லாரும் ஐ போனுடன் இருந்தால் யார் சாப்பாட்டைச் செய்வது?எல்லாரும் கணினியுடன் இருந்தால் யார் அரிசியை உற்பத்தி செய்வது? இப்படிக் கேள்வி எழுப்புகிறது அந்தநூல் பல விருதுகளுக்குத் தகுதியானது எனவே அந்த நூலுக்கான 3 விழாக்களை சிறப்பாக மக்கள் ஆதரவுடன் முன்னின்று நடத்தினோம். விழாவை சுவிட்சர்லாந்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பிரமாண்டமாக நடத்தினோம். நெதர்லாந்தில் பிரமாதமாக நடத்தினோம்.பிரான்சில் சிறப்பாக நடத்தினோம்.

கவிஞருடன் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணம் செய்த அனுபவங்கள் எனக்குண்டு. பிரான்சிலிருந்து தரை மார்க்கமாக பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி என்று போய் லட்சம்பர்க் அடைந்தோம். பிறகு மீண்டும் பிரான்ஸ் வந்து விமானம் வழியாக ஸ்விஸ் அடைந்தோம். அதுமட்டுமல்ல சிங்கப்பூர், இந்தியா என பல நாடுகளில் அவரைச் சந்தித்திருக்கிறேன். பயணம் செய்திருக்கிறேன். இந்த ஆண்டு அமெரிக்கா,கனடா என மேலும் 2 புதிய நாடுகளுக்குச் செல்ல வாய்ப்புகள் உள்ளன.இந்தப் பயணங்களில் பொருளாதார ரீதியில் நான் பாதிக்கப்படாதபடி பார்த்துக் கொள்வது அவரது பண்பு.

இப்போதைய தமிழ்த்திரையுலகம் பற்றி,தமிழ்த்திரைப்படங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நான் எப்போதாவதுதான் படங்கள் பார்ப்பேன். அதையும் திரையரங்கு சென்றுதான் பார்ப்பேன். அண்மையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடன் ‘த்ரிஷ்யம்’ என்கிற மலையாளப் படம் பார்த்தேன். விளங்காத மொழியில் பார்க்கிறோமே என்று தொடக்கத்தில் நினைத்தேன். ஆனால் போகப் போக அந்தப்படம் என்னை ஆச்சரியத்தில் தள்ளியது. பிரமாண்டமாகத் தெரிந்தது. நாயகன்மீது ஈர்ப்பு வந்தது.காதல் இல்லை.குடும்பக்கதைதான். எளிமையான பாத்திரங்கள். 2 வது முறை பார்த்தேன். 3 வது முறையும் பார்க்கத் தூண்டுகிறது. ஒரு நல்ல படமாக இருந்ததால்தான் தமிழ்நாட்டிலேயே 3,4வாரம் ஒடுகிறது.இதுபோல எல்லாம் தமிழில் படங்கள் வரவில்லையே என்கிற ஆதங்கம் எனக்குள் வந்தது. இந்தப் படத்தை தமிழில் எடுக்க கமல் ஹாசன் உரிமை. வாங்கியிருப்பதாக அறிகிறேன்.’குக்கூ’ என்றொரு படம் பற்றி நிறைய சொன்னார்கள். போய்ப் பார்த்த போது சொன்னமாதிரி அந்த அளவுக்கு பிரமாதமாக இல்லை. தமிழ் நாட்டில் 90 சதவிகிதத்துக்கு மேல் காதல் கதைகளாகவே வருகின்றன. அதை மீறி சிந்திக்க முடிவதில்லை. ‘குக்கூ’ வில் கண் தெரியாதவர்கள் பற்றி எடுக்கும் போது கூட காதலைத்தான் சொல்கிறார்கள். கண் தெரியாதவர் வாழ்க்கையில் சொல்லப்பட வேண்டிய வேறு பல பாகங்கள் இருக்கின்றன. அந்த வலிகள், துயரங்கள் சொல்லப் பட்டிருக்கலாம். இருந்தாலும் இந்த முயற்சியை நான் பாராட்டுகிறேன். காதல் என்கிற பெயரில் தவறான சமூக சித்தரிப்புகள் தமிழ்ப் படங்களில் வருவது வேதனை. நான் தமிழில் பார்த்து வியந்த படம் ‘விஸ்வரூபம்’ கமல்ஹாசன் சர்வதேச தரத்துக்கு அந்த படத்தை உருவாக்கியிருந்தார். தமிழ்ப் படங்களில் தொழில்நுட்ப அசத்தல்கள் இருக்கின்றஅளவுக்கு உள்ளடக்கத்திலும் கலாச்சார சித்தரிப்பிலும் தமிழ் மக்கள் மண்சார்ந்த தன்மையிலும் கவனம் செலுத்தி எடுத்தால் நம்மை வெல்ல யாருமில்லை என்கிற அளவுக்கு உயரலாம்.

சந்திப்பு – அருள்செல்வன் 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சாணை பிடிச்ச கத்தரிதான்… ஆனால் சரக்குன்னு வெட்டல!

எவ்வளவு பரிசுத்தமான படமாக இருந்தாலும், லேசான கீறல் போடாமல் அனுப்புவதில்லை சென்சார் அமைப்பு. கடந்த சில மாதங்களாகவே ‘உங்க கத்தரிக்கு சாணை பிடிக்கணுமப்பா...’ போன்ற விமர்சனங்கள் சென்சாரை...

Close