கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு: எழுதியவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் குறைவு
இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மின் பொறியியல் பிரிவில் அங்கிட் கோயல் என்ற மாணவரும், இயந்திர பொறியியல் பிரிவில் சுபம் சிங் என்ற மாணவரும் முதலிடம் பெற்றுள்ளதாக அவர்களின் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அகில இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி மற்றும் பல பொறியியல் கல்லூரிகளின் அனுமதி சேர்க்கைக்கு இந்த மதிப்பெண்கள் உதவுகின்றன. இந்த ஆண்டுதான் முதன்முதலாக இந்தத் தேர்விற்கான 22 பிரிவுகளிலும் கணினி முறையில் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்வெழுதியவர்களின் எண்ணிக்கை 10 சதவிகிதம் குறைவாக இருந்தது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு தேர்வெழுதிய பெண்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தது இதற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று கல்வி நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதுநாள்வரை பெண்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்ட நுழைவு விண்ணப்பங்களுக்கு இந்த ஆண்டு 750 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்ததுகூட இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.
இந்த ஆண்டு தேர்வெழுதியவர்களின் விருப்பத்தில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு, இயந்திர பொறியியல், கணினி பொறியியல், மின் பொறியியல் மற்றும் சிவில் போன்ற துறைகள் முறையே முன்னணியில் இருந்தன. கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாது பல பொதுத்துறை நிறுவனங்களும் இந்த மதிப்பெண்களை புதிய பட்டதாரிப் பொறியாளர்களின் வேலை நியமனத்திற்கான கூடுதல் தகுதியாக எடுத்துக்கொள்வதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.