கேரள நாட்டிளம் பெண்களுடனே / விமர்சனம்
கேரளாவின் தலைநகரமாகிக் கிடக்கிறது கோடம்பாக்கம். நயன்தாராக்களையும், லட்சுமிமேனன்களையும் நமக்காகவே பெற்றுப் போட்ட அந்த புண்ணிய பூமியில் மேலும் கொஞ்சம் கங்கையை தெளித்து பம்பையில் நீராடியிருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.குமரன். தலைப்பே கொஞ்சம் சர்க்கரை துக்கலாக இருப்பதால் ஒருவித ஆர்வத்தோடு உள்ளே நுழைகிறோம். நுழைகிற நமக்கு கிடைப்பது கொஞ்சம் கிச்சு கிச்சு, கொஞ்சம் கிறுகிறு…
‘கட்டினால் ஒரு கேரள பெண் குட்டியைதான் கட்டணும்’ என்று குட்டியாக இருக்கும்போதே குழந்தையின் மனசில் ஊட்டி ஊட்டி வளர்க்கிற அப்பா. ‘அட சே… போயும் போயும் கேரள பெண் குட்டியா? உனக்கு ஒரு தமிழச்சிதான் மனைவியா வரணும்’. இது அம்மா. இப்படி இரண்டு வீட்டு விருந்தாளி கெண்டையேறி செத்தானாம் கதையாக நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கும் மகன். இம்மூவரின் ப்ளேதான் கதை. ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் டிராமா எபெஃக்ட்டை தவிர்த்துவிட்டு கவனித்தால் ‘நோட்’ பண்ணி வைக்க வேண்டிய ‘நாட்’தான். அப்பாவின் மதியூக திட்டத்தின்படி ரகசியமாக கேரளாவுக்கு கிளம்பும் மகன், அங்கேயே ஒரு ஃபிகரை தேற்றி மணம் முடிப்பதற்குள், சங்கு கிழிந்து சந்து வழியா எட்டிப்பார்க்குது முழி. அந்த அப்பாவி அப்பாவின் கேரளக் கனவு பலிச்சுருச்சே என்ற முடிவோடு எழுந்தால், அங்கே வைக்கிறாங்க ஒரு டவிஸ்ட். அட… மறுபடியும் மொதல்லேர்ந்தா?
புதுமுகம் அபி சரவணன் பார்க்க நிறைவாக இருக்கிறார். தமிழ்சினிமாவில் ஹீரோக்களுக்கு பஞ்சமேயில்லை. இருந்தாலும், இவருக்கு பஞ்சமில்லாமல் வாய்ப்புகள் கிடைக்கும் என்றே தோன்றுகிறது. வேறொன்றுமில்லை, பையன் அப்படியொரு ஸ்மார்ட். முதல் படமாச்சே என்கிற பதற்றம் இல்லாமல் நடித்திருக்கிறார். பொண்ணுங்க பேச்சை நம்புனா போலீஸ்ல தர்ம அடிதான் என்பதை ஆயிரமாவது அப்பாவி இளைஞனாக இவர் நிரூபிக்கும்போது ‘நம்மில் ஒருவன்ப்பா’ என்கிற எண்ணமும் வந்து சேரும் பலருக்கு. ஒன்றல்ல இரண்டல்ல… மூன்று பேர் இவருக்காக போட்டிப் போடுவது மச்சம்தான் என்றாலும், போட்டி போடுவதில் ஒருவர் சுமார் மூஞ்சு குமாரி என்பதுதான் ‘ஐயே’.
மூவரில் ஹீரோவுக்கு கழுத்தை நீட்டுவது காயத்ரிதான் என்பதால் அவரையே ஹீரோயின் என்று கொள்ள வேண்டும். கேரள பெண்களுக்கேயுரிய ஐட்டங்களில் இவர் ‘புவர்’. இருந்தாலும் கண்கள் ‘பெரிசாக’ இருப்பது ஆறுதல். ஸாரி ஸாரி ஸாரி… ஹன்ரண்ட் டைம் ஸாரி. தௌசன்ட் டைம் ஸாரி. என்று இவர் பதறுவதும் அழகுதான். அழகாக பைக் ஓட்டி அதில் ஹீரோவை டபுள்ஸ் அடித்து என்று ரொம்பவே கவர்கிறார். இருந்தாலும் தமிழ்சினிமாவின் நீண்ட பயணத்திற்கு இன்னும் கொஞ்சம் ஹோம் வொர்க் வேணும் பெண்ணே…
பேராசிரியர் ஞானசம்பந்தன் வாயை திறந்தாலே நமக்கு சிரிப்பு வந்துவிடுகிறது. அதிலும் கேரளாவுக்கு மகனை பஸ் ஏற்றிவிடும் அவர், ‘டேய்… இங்க என்ன பார்த்துட்டு இருக்கே. கேரளாவுக்கு போடா. சொர்க்கம் அங்கேயிருக்கு’ என்று அனுபவித்து சொல்கையில் அது இன்னும் பீறிட்டு வருகிறது. இவருக்கும் மனைவி ரேணுகாவுக்குமான கேரளா தமிழ்நாட்டு யுத்தம், இப்போது நடந்து வரும் நிஜ யுத்தத்தையே புஸ்சாக்கிவிடும் போல. அத்தனை சூடு. அதிலும் அந்த கல்யாண மாலை எபிசோட்? டைரக்டர் எஸ்.எஸ்.குமரனுக்கு தனியாக கைகுலுக்க வேண்டிய கலகலப்பு.
அபியின் நண்பராக நடித்திருக்கும் மறுமண பதிவு நிலைய உரிமையாளர் காளியும் தனது பங்கை குறையில்லாமல் நிறைவேற்றியிருக்கிறார். இவர் அந்த புதுமாப்பிள்ளை வேஷ ஆசாமியிடம் அடிக்கடி அடிவாங்குவதுதான் ஏனென்றே புரியவில்லை. டைரக்டர் அவரவர் யூகத்திற்கே விட்டுவிட்டார். காளி… நீங்களாவது ஒரு பிரஸ்மீட் வச்சு சொல்லிடுங்க. தலை வெடிச்சுரும் போலிருக்கு.
படத்தில் மிஸ் கேரளாவுக்கு ஆசைப்படுகிற மாடலாக நடித்திருக்கிறார் அபிராமி. பாடி ஸ்மார்ட், ஆனா ‘ஃபேஸ்’மென்ட்தான் ரொம்ப வீக். கேரள ஹீரோயின்கள் மீதிருக்கும் இமேஜின் மீது சூடு வைத்தால் கூட பரவாயில்லை, கொளுத்தியே விட்டு விட்டார் டைரக்டர். (நோ மன்னிப்பு ஸார்) மற்றொரு நாயகியான தீக்ஷிதாவும் ஓ.கே. அபியை ரவுண்டு கட்டும் இவ்விரு ஹீரோயின்களும், க்ளைமாக்சில் திடீரென விட்டுக் கொடுப்பதுதான் சற்றே நெருடல்.
வசனகர்த்தாவாக பல இடங்களில் ஆணியடிக்கிறார் எஸ்.எஸ்.குமரன். ‘வர்மக்கலை இங்கேயிருந்து போனதுதானேடா…’ என்று ஒருவர் கேட்க, ‘போச்சு. ஆனா திரும்பி வந்துச்சா?’ என்று கேள்வி எழுப்புகையில், அட ஆமாம்ல… என்கிற வருத்தம் தொற்றிக் கொள்கிறது நமக்கு. ‘எனக்கு நாலு லாங்குவேஜ் தெரியும். ஆனா உங்க ஊர்ல இதுதான் பிரச்சனை. நேஷனல் லாங்குவேஜை கூட தெரிஞ்சு வச்சுக்க மாட்டீங்க’ என்று கேரள சிறுமி சொல்லும்போது நமது தலைமுறை திட்டமிட்டே வஞ்சிக்கப்பட்ட வருத்தமும் வந்து தொலைக்கிறது.
பாடல் வரிகளை கேட்டு இன்புறுவதா, அதற்கான ட்யூனை கேட்டு சந்தோஷப்படுவதா? அற்புதமான கலவையாக இருக்கிறது இரண்டும். கேரளாவையும் தமிழ்நாட்டையும் வரிகளுக்குள் நுழைத்து வரலாறாக்கி மகிழ்ந்திருக்கிறார் வைரமுத்து. ஆனாலும் மிக நல்ல பாடல்களை கூட பாதியில் ‘நறுக்’ போட்ட இயக்குனர் மீது சற்றே வருத்தம்தான். கேரளாவின் அழகை சொல்லும் ஒரு பாடலில் வரிகளுக்கு நிகராக ஓடியாடி படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவா. அந்த திருவிழா காட்சிகளை இன்னும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.
கேரள நாட்டிளம் பெண்களுடனே, களம் புதிது. கதை புதிது. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் கட்டஞ் சாயாவில் பாயாசத்தின் ருசியே கிடைத்திருக்கும். ஹ்ம்ம்ம்…
-ஆர்.எஸ்.அந்தணன்
//நேஷனல் லாங்குவேஜை கூட தெரிஞ்சு வச்சுக்க மாட்டீங்க’ என்று கேரள சிறுமி சொல்லும்போது நமது தலைமுறை திட்டமிட்டே வஞ்சிக்கப்பட்ட வருத்தமும் வந்து தொலைக்கிறது.//
எவண்டா சொன்னது நேஷனல் லாங்குவேஜ்ஜுன்னு?
ஹிந்தி தேசிய மொழி கிடையாதுன்னு 2009 ஆம் ஆண்டு குஜராத் உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழின்னு இன்னும் எத்தனை நாளுக்கு தான் ஏமாத்த போறாங்களோ, இந்தியாவிற்கு தனியாக எந்த தேசிய மொழியும் கிடையாது, இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநில மொழிகளும் தேசிய மொழி தான், ஹிந்தி இந்தியாவின் அலுவலக மொழி அவ்வளவே…
இந்திக்காரங்கதான் தேசிய மொழி, தேசிய மொழின்னு சொல்லிக்கிட்டுத் திரியுறாங்கன்னா, நாமளும் அதை நம்பிக்கிட்டு இருக்கோம்.
அட! இந்தப் படத்துக்கு இப்படியெல்லாம் விமரிசனம் எழுத முடியுமா? நான் படத்தைப் பார்த்துவிட்டு என்னவெல்லாம் யோசித்தேனோ.. அப்படியே எழுதியிருந்தீர்கள். கை கொடுங்கள்!
படத்தின் மீது என்னோட குறை… கேரளாவுக்குப் போயிருக்கார் டைரக்டர். எவ்வளவு அழகான தேவதைகள் இருக்கிறார்கள்? அங்கே அவருக்கு நடிகைகளைக் காண்பித்த ஏஜண்ட்டைப் பிடித்து ரெண்டு மொத்து மொத்த வேண்டும். ஆனாலும் நிஷா கேரக்டரைத் தவிர மற்ற இருவர் ஓக்கே.
மொத்தத்தில் கலப்பு மாநில மணத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் படத்தின் டைரக்டர்.
‘நமது தலைமுறை திட்டமிட்டே வஞ்சிக்கப்பட்ட வருத்தமும் வந்து தொலைக்கிறது.’
இக்கருத்தை நீங்கள் திரும்பப் பெறுவதே சரியாக இருக்கும்.