சரின்னு சொன்னா சரி… இல்லேன்னு சொல்லிட்டா இல்லதான்!
அரசியலில் மட்டுமல்ல, சினிமாவிலும் சில கூட்டணிகளுக்கான வேல்யூ அபரிமிதமானது. சுமார் இருபது வருடங்களுக்கு பிறகு கைகோர்த்திருக்கும் இசைஞானி இளையராஜா உதிரிப்பூக்கள் மகேந்திரன் ஆகிய இருவரது கூட்டணி நல்ல சினிமா ரசிகர்களை கவனிக்க வைத்திருக்கிறது. இந்த படம் பற்றிய அறிவிப்பை பிரஸ் முன் அறிவிக்க வந்திருந்தார்கள் இவ்விரு ஜாம்பவான்களும். பல வருஷங்களுக்கு பிறகு இந்த கூட்டணி அமைஞ்சுருக்கு? இது பற்றி சொல்லுங்க என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு, ‘என்னது கூட்டணியா? அவர் இயக்குவதும், நான் இசையமைப்பதும் உங்களுக்கு கூட்டணியா தெரியுதா?’ என்றார் ராஜா சிரித்துக் கொண்டே.
புதுமைப்பித்தன் கதையில் வரும் ஒரு சிறு சம்பவத்தை சினிமா கதையாக உருவாக்கியிருக்கிறார் மகேந்திரன்.
பொதுவா நான் என்னுடைய படத்தின் கதையை முதலில் இளையராஜாவிடம்தான் சொல்வேன். அப்புறம் என்னோட கேமிராமேன், எடிட்டர், அதற்கப்புறம்தான் நடிகர்களுக்கு சொல்வேன். இந்த தடவையும் அந்த கதையை இளையராஜாவிடம் சொன்னேன். அவரு நல்லாயிருக்கு என்றார். படத்திற்கு தலைப்பையும் அவர்தான் வைக்கணும். ஏன்னா என்னுடைய படத்திற்கு தலைப்பையும் அவர்தான் வைக்கிற வழக்கம் இருக்கு. உதிரிப்பூக்கள் தலைப்பு கூட அவர் சொன்னதுதான். இந்த படத்திற்கு அவர் எப்போ தலைப்பு சொல்றாரோ, அப்போ நான் உங்களுக்கு சொல்வேன் என்றார் மகேந்திரன்.
தொடர்ந்து அவரது பேச்சில் அநியாயத்துக்கு தன்னடக்கம். நானெல்லாம் சினிமா இயக்க வந்ததே விபத்துதான். ஏதோவொரு கட்டாயத்தினால் படம் இயக்க வந்தேன். அதற்கு முன் நிறைய படிச்சு, படிச்சுதான் எனக்கு சினிமா மீது ஆர்வம் வந்துச்சு. ஆனால் இளையராஜாவெல்லாம் பிறவி மேதைகள் என்றவர், என்னுடைய படங்களுக்கு இளையராஜாதான் டயலாக்கும் எழுதுவார் என்று குறிப்பிட, நிருபர்கள் முகத்தில் ஈயாடவில்லை. ஆமாம்… சில இடங்களை நான் மவுனமாக விட்டுவிடுவேன். அங்கெல்லாம் இசையால் டயலாக் எழுதுவது அவர்தானே என்றார் சஸ்பென்சை விலக்கிய சந்தோஷத்தோடு.
இளையராஜா சார்… எத்தனையோ ஹிட் கொடுத்திருக்கீங்க? ஆனால் மகேந்திரன் சாருடன் இணையும்போது மட்டும் அந்த பாடல்கள் இன்னும் ஸ்பெஷலா இருக்கே எப்படி? என்றொரு கேள்வி எழுப்பப்பட, தனக்கேயுரிய பாணியில் பதில் சொன்னார் ராஜா. கேந்திரனுக்காக ட்யூன் போட்டா ஒரு மாதிரியும் மற்றவங்களுக்காக ட்யூன் போட்டா ஒரு மாதிரியுமெல்லாம் வராது. கதைக்கேற்ற ட்யூன்கள்தான் அது. இப்படியெல்லாம் யோசிக்காதீங்க’ என்றார்.
இப்படி ஒரு படம் இயக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து மகேந்திரனிடம் கேட்டபோது முதலில் இளையராஜாவிடம் கேளுங்க. அவர் சரின்னு சொன்னா நான் இந்த படத்தை இயக்குறேன். இல்லேன்னா இல்லே என்றாராம் அவர்.
கூட்டணி மீது ராஜாவுக்கு நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழ்நாடே நம்புது… சீக்கிரம் ஆரம்பிங்க மேதைகளே…!
Mahendran and Ilayaraja meet the press on their project
Uthiripookkal Mahendran and Maestro Ilayaraja who announced teaming up for a new project met the press to disclose more about their project. Speaking on the subject, Mahendran said that he followed this time too of narrating the story first to Ilayaraja and then to his technicians. As usual with his films, Ilayaraja would himself pick the title of the film, and would announce the same as and when he does it. He said while his cinema entry was accidental, he was effusive in his praise on Ilayaraja. He said he would fill the dialogues with his music which speak more than the words, in his films. When asked about how he agreed to do the project, the director said that he had asked the producer to find out if Ilayaraja will work in the project, and if Ilayaraja says yes, he would take up the project.
When quizzed about how his music was very successful with Mahendran, Ilayaraja said that he composes music basically on storylines and it happened in Mahendran’s case.
Tamil film industry will set yet another classic from the legends, yet again, for sure!