சிறையில் படுக்கை வசதி இல்லாததால் குண்டு வாலிபர் விடுதலை
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஜுட் மெட்கால்ப் (23). இவர் ‘கிளின்பெல்டார்’ என்ற உடல் பருமன் நோயால் அவதிப்படுகிறார். இந்த நிலையில் இவர் ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்க முயன்றார்.
அப்போது பிடிபட்ட இவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனையும், 12 மாதம் சமூக சேவையும் செய்ய வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து அவர் லண்டனில் உள்ள ஒரு சிறையில் அடைக்கப்பட்டார். மிக குண்டு மனிதரான அவர் 7 அடி 2 இஞ்ச் உயரம் இருக்கிறார்.
இதனால் அவருக்கு சிறையில் போதிய வசதி செய்து தர முடியவில்லை. மிக உயரமான அவரது அளவுக்கு படுக்கை வசதி இல்லை. சிறை அறையும் மிக குறுகலாக உள்ளது.
இதனால் சிறை அதிகாரிகள் அவரை பராமரிக்க மிகவும் கஷ்டப்பட்டனர். இதுகுறித்து கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. அவரது உயரத்துக்கு கைதிகளுக்கான சீருடை வழங்க முடியவில்லை. படுக்கை வசதி இல்லை.
மேலும், உடல் பருமன் நோயினால் அவதிப்படுகிறார். எனவே அவரை விடுதலை செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடப்பட்டது.
ஜூட் மெட்கால்ப் பின் கோரிக்கைகளை பரிசீலித்த நீதிபதி அவரை விடுதலை செய்தார். இவர் ஏற்கனவே 75 நாட்கள் சிறையில் தண்டனை அனுபவித்துள்ளார்.