சிலைக்கு பிரியாவிடை அளித்த மர்லின் மன்றோ ரசிகர்கள்
உலகப்புகழ் பெற்ற ஆலிவுட் நடிகை ”மர்லின் மன்றோ” ஏராளமான ஆங்கிலப் படங்களில் நடித்தவர். அவரது நடையழகும், உடையழகும் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஹாலிவுட் சினிமா உலகின் ராணியாக விளங்கியவர், நடிகை மர்லின் மன்றோ. அவருக்கு இணையாக அகில உலகப் புகழ் பெற்ற நடிகை வேறு எவரும் இல்லை. செல்வத்தில் புரண்டு செருக்கோடு வாழ்ந்தவர், மர்லின் மன்றோவின் கடைக்கண் பார்வைக்காக எத்தனையோ கோடீசுவரர்கள் தவம் கிடந்தார்கள்.
அவரது வாழ்க்கையின் பிற்பகுதியே இப்படி அமைந்திருந்தது. ஆனால், இளம் பருவ வாழ்க்கையோ வறுமையும், சோதனைகளும் நிறைந்ததாக இருந்தது. மன்றோவைப்பற்றி வர்ணிப்பது என்றால் தங்க நிற தலைமுடி, எப்போதும் புன்னகை பூத்த முகம், தங்கச் சிலை போன்ற உடல் என்பார்கள். மர்லின் மன்றோ 1926-ம் ஆண்டு ஜுன் மாதம் 1-ந்தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகர ஆஸ்பத்திரியில் பிறந்தார்.
அவர் பிறக்கும் முன்பே மர்லின் மன்றோவின் தந்தை ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார். அவர் பிறந்தபோது அம்மாவுக்கும் உடல் நிலை சரியில்லை. எனவே அனாதை விடுதியில் சேர்க்கப்பட்டார். வீட்டு வேலைகள் செய்யும் பருவம் வந்ததும் அனாதை விடுதியை விட்டு வெளியேறினார். பல வீடுகளில் பாத்திரம் துலக்குவது போன்ற சிறிய வேலைகளை பார்த்து வந்தார்.
ஒவ்வொரு வீட்டிலும் இருந்து பந்துபோல் அங்கும் இங்கும் அடித்து விரட்டப்பட்டார். திருமணம் ஆன பிறகாவது வாழ்க்கையில் நிம்மதி ஏற்படுமா என்ற ஆசையில் 16-வது வயதில் ஜேம்ஸ் என்ற வாலிபரை மணந்தார். ஆனால் அவரும் ஒழுங்கானபடி வேலை செய்து பிழைக்காததால் தகராறு ஏற்பட்டது.
1 வருடத்தில் விவாகரத்து செய்தார். அதன்பின்பு விமான கம்பெனியில் `பாரசூட்’ ரிப்பேர் பார்க்கும் வேலை செய்தார். அதன் பின் படம் வரைவதற்கு மாதிரி (மாடல்) பெண்ணாக நிற்க முயற்சித்தார். ஆனால் அதற்குகூட லாயக்கு இல்லை என்று அவரை எல்லோரும் விரட்டினார்கள். எனவே கையில் பணம் இல்லாமல் பல நாட்கள் பட்டினி கிடந்தார். விளம்பரங்களுக்கு நீச்சல் உடையில் தோன்றுவது மூலம் காலம் தள்ளினார்.
அதன் பிறகு நடிப்பு ஆசையால் ஆலிவுட் நகரில் உள்ள சினிமா பள்ளிக் கூடத்தில் சேர்ந்தார். வாடகை பணம் கொடுக்காததால் தங்கி இருந்த வீட்டை விட்டு துரத்தினார்கள். இருக்க இடமின்றி நடு ரோட்டில் நிற்கவேண்டியது ஆயிற்று. எனவே ஒரு காலண்டருக்காக நிர்வாணமாக “போஸ்” கொடுத்தார். இதில் மிக சொற்ப வருமானமே வந்தது. அதை வைத்துக்கொண்டு மீண்டும் சினிமா உலகில் புக முயற்சி செய்தார்.
பத்திரிகையில் வந்த மன்றோவின் படத்தைப் பார்த்துவிட்டு 2 படக்கம்பெனிக்காரர்கள் அவரை ஒப்பந்தம் செய்ய அழைத்தார்கள். முதல் படத்தில் பேசக் கிடைத்த வசனம் ஒரு ஒரே வார்த்தை. அதுவும் படம் வெளிவரும்போது வெட்டப்பட்டுவிட்டது. ஆனால், படங்களில் ஒரு நிமிடம் வந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார், மர்லின். படம் வரையக்கூட லாயக்கு இல்லை என்று வர்ணிக்கப்பட்ட மர்லின் மன்றோ ரசிகர்களால் சினிமா உலக தேவதையாக வர்ணிக்கப்பட்டார்.
மர்லின் மன்றோவின் கவர்ச்சியான உடல் அழகில், நடை அழகில் ரசிகர்கள் மயங்கினார்கள். பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். அவரது அழகையும் நடிப்புத் திறனையும் வைத்து பணம் சம்பாதிக்க நினைத்த பல பெரிய படக்கம்பெனிகள் ஏராளமான பணத்தை தந்து அவரை ஒப்பந்தம் செய்தது. நார்மாஜின் டென்சன் என்ற மர்லின் மன்றோ 3 முறை திருமணம் செய்து, மூவரையும் விவாகரத்து செய்துவிட்டார்.
முதல் கணவர் ஜேம்ஸ், போலீஸ்காரர். 2-வது கணவர் கால்பந்து வீரர். பெயர் ஜேர்டிமாக்கியா. 3-வது கணவர் சினிமா படத்தயாரிப்பாளர் ஆர்தர்மில்லர். மர்லின் மன்றோவுக்கு பிடித்தமான நடிகர் மார்லன் பிராண்டோ. 3-வது கணவரான மில்லருடன் வாழ்க்கை நடத்தும் போது மர்லின் மன்றோவுக்கு 2 தடவை கருச்சிதைவு ஏற்பட்டது. குழந்தை பிறக்கவேண்டும் என்று அவர் மிகவும் விரும்பினார்.
ஆனால் கடைசிவரை அவருக்கு குழந்தை இல்லை. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கென்னடிக்கும், மன்றோவுக்கும் காதல் இருந்தது என்று, இருவருடைய மறைவுக்குப்பிறகு பத்திரிகைகளில் இந்த ஜோடியைப் பற்றி பரபரப்பான செய்திகள் வெளிவந்தன.
கென்னடியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மர்லின் மன்றோ தவறாமல் அவரை சந்தித்து வாழ்த்துக் கூறுவது வழக்கம் என்றும், இவர்களுடைய காதல் விவகாரம் கென்னடியின் மனைவி ஜாக்குலினுக்குத் தெரிந்து அவர் கென்னடியுடன் ஆத்திரத்துடன் சண்டை போட்டார் என்றும் பத்திரிகைகள் எழுதின.
இப்படி, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் “கனவுக்கன்னி”யாக விளங்கி, ஆங்கிலப் பட உலக புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த மர்லின் மன்றோவுக்கு திடீரென்று மன நிலை பாதிக்கப்பட்டது. பேய் பிடித்தவர் போல இருந்து வந்தார். பெரிய டாக்டர்கள் சிகிச்சை அளித்து, அவரை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தார்கள். அதன் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்தார்.
மர்லின் மன்றோ கடைசியாக நடித்துக்கொண்டு இருந்த படத்தின் பெயர் “நான் கொடுப்பதற்கு இன்னும் சில உண்டு” என்பதாகும். அந்த படத்தில்தான் குளிக்கும் காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்தார். ஆனால், படப்பிடிப்புக்கு மர்லின் மன்றோ ஒழுங்காக வருவது இல்லை என்று கூறி அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்.
சரிவர நடிக்கத் தவறியதற்காக ஒரு பெரிய தொகையை நஷ்டஈடு தரவேண்டும் என்று மர்லின் மன்றோ மீது வழக்குத் தொடரப்பட்டது. இச்சம்பவத்துகு பின்னர், மர்லின் மன்றோ உற்சாகம் குன்றி இருந்தார். ஆனால், அதன் பிறகு அவரையே தொடர்ந்து நடிக்க வைக்க ஏற்பாடு நடந்தது. மர்லின் மன்றோவுக்கும், படத்தயாரிப்பாளருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருந்தார்கள்.
இந்த நிலையில் 5-8-1962-ல் மர்லின் மன்றோ தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி, உலகம் முழுவதும் இருந்த சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. மர்லின் மன்றோ திராவகம் (ஆசிட்) குடித்து தற்கொலை செய்து கொண்டதாக முதலில் செய்தி பரவியது.
அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் ஏற்பட்டதாக அறிவித்தனர். அமெரிக்காவில் சினிமா நகரமான ஆலிவுட்டில் ஒரு மாளிகையில் மர்லின் மன்றோ வசித்து வந்தார். அதிகாலை 3 மணிக்கு மர்லின் மன்றோ கட்டிலில் மயங்கிக் கிடந்ததை வீட்டு வேலைக்காரர் பார்த்து விட்டு டாக்டர்களுக்கு தகவல் கொடுத்தார்.
டாக்டர்கள் விரைந்து சென்றார்கள். மன்றோவின் படுக்கை அறைக் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது. டாக்டர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்கள். ஒரு கையில் டெலிபோனுடன் மன்றோ படுக்கையில் கிடந்தார். உடலில் ஆடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாகக் கிடந்தார். டாக்டர்கள் சோதித்துப் பார்த்ததில் அவர் இறந்து வெகு நேரம் ஆகி இருப்பது தெரிந்தது.
அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோ, கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது புரியாத புதிராக இருந்தது. இதுபற்றி விசாரணை நடத்தி மர்மத்தை கண்டுபிடிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டி மர்லின் மன்றோவின் கடைசி கால வாழ்க்கை பற்றி துருவி ஆராய்ந்தது. இருப்பினும் கிணற்றில் போடப்பட்ட கல் போல அது அமிழ்ந்து போனது. தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோவுக்கு வயது 36. சினிமா உலகத்திலேயே அதிக பணம் சம்பாதித்த நடிகையாக திகழ்ந்தார். மர்லின் மன்றோவின் மறைவு ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, பிரபல நடிகைகளுக்கும் கூட பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
50 ஆண்டுகளுக்கு மேலாகியும் மர்லின் மன்றோவின் புகழ் மங்கவில்லை என்பதை அமெரிக்க சிற்பி ஒருவர் வடித்துள்ள ’ஃபாரெவர் மர்லின்’ என்ற சிலை இன்னமும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
1955-ம் ஆண்டில் வெளியான ‘தி செவன் இயர் இட்ச்’ என்ற படத்தில் குட்டைப் பாவாடை பறக்கும்படி அவர் நடந்து வருவதைப் போன்ற அமைப்பில் 34 ஆயிரம் பவுண்ட் எடையில் 26 அடி உயரம் கொண்ட மர்லின் மன்றோவின் சிலையை செவார்ட் ஜான்சன் என்ற சிற்பி வடித்துள்ளார்.
உலகின் பல நாடுகளை சுற்றி வந்த இந்த சிலை, ரசிகர்களின் பார்வைக்காக ஆங்காங்கே சில நாட்கள் வைக்கப்படும். பின்னர், அங்கிருந்து பிரித்து வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்படும். அவ்வகையில், மர்லின் மன்றோ பிறந்த இடமான அமெரிக்காவின் பாம் ஸ்பிரிங் பகுதியில் இந்த சிலை தற்போது வைக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில், நியூ ஜெர்சி நகருக்கு இந்த சிலை 6 பகுதிகளாக பிரித்து எடுத்து செல்லப்பட உள்ளது. அங்கு 42 ஏக்கர் நிலபரப்பு கொண்ட பூங்காவில் வரும் செப்டம்பர் மாதம் இது அமைக்கப்படும். தங்கள் மண்ணுக்கு பெருமை சேர்த்த நடிகையின் சிலையை பிரியப் போகும் சோகத்தில் பாம் ஸ்பிரிங் மக்கள் மூழ்கிப் போய் உள்ளனர்.
அவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். வயதான சில ஆண் ரசிகர்கள் அவரை கட்டியணைப்பது போலவும், முத்தம் கொடுப்பது போலவும் ’போஸ்’ கொடுப்பது மர்லின் மன்றோவுக்கு எவ்வளவு வெறித்தனமான ரசிகர் பட்டாளம் இருந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்த சிலைக்கு பிரியாவிடை அளிப்பதைப் போன்று நேற்று புகைப்படம் எடுத்துக் கொண்ட சிலர், ‘இந்த சிலையை பிரிவது, எங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினரை பிரிவது போன்ற சோகத்தை ஏற்படுத்துகிறது’ என்று தெரிவித்தனர்.
கோல்டன் குளோப் விருது மற்றும் அனைத்து காலப்பகுதிக்குமான சிறந்த நடிகை என அமெரிக்க திரைப்படக் கழகத்தினால் பாராட்டும் பெற்றவர். நடிகையாக மட்டுமின்றி பாடகி, இயக்குனர் என பல்வேறு முகங்களும் இவருக்கு உண்டு.
இவரது ஒரேயொரு புகைப்படம் ஒன்றேமுக்கால் கோடி ரூபாய்க்கு ஏலம் போனது நினைவிருக்கலாம்.