சிவாஜி சிலையை அகற்றினால் என்ன தப்பு?

எதையும் உணர்ச்சிப் பெருக்கோடு அணுகுவதில் தமிழனுக்கு நிகர் அவனே. சாம்பார்ல உப்பு கொஞ்சம் அதிகம் போட்டுவிட்டதை சுட்டிக்காட்டிய முதலாளி முன்பு ‘ஐயா… இந்த பாவியோட கையை வெட்டுங்கய்யா… வெட்டுங்க’ என்று கதறுகிற நடிகர் எஸ்.வி.சுப்பையாவில் தொடங்கி, அப்படிப்பட்ட காட்சிகளை தொடர்ந்து வடிவமைத்து தரும் அத்தனை தமிழனுக்கும் மூக்குக்கு முன் தொங்கிக் கொண்டேயிருக்கிறது உணர்ச்சி எனும் அபாய சங்கு. சமயம் கிடைக்கும்போதெல்லாம் அதை எடுத்து ஊதி ஊரையே உறங்கவிடாமல் பண்ணுவதில் அவனுக்கு நிகர் அவனே.

பல வருடங்களுக்கு முன் ‘மூன்றாம் பிறை’ படத்தை பார்த்த ஞாபகம் இந்த நேரத்தில் வந்து போகிறது. க்ளைமாக்சில் கமல் ஸ்ரீதேவியின் கவனத்தை கவர குரங்கு சேஷ்டைகள் எல்லாம் செய்து கொண்டிருந்தார். அந்த ரயில்வே நிலையத்தில் அவர் குட்டிக்கரணம் அடிப்பதை பார்க்கையில் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. சட்டென ஒரு பெருங்குரல். நாலு சீட் தள்ளி அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர், ‘ஏய் முட்டா பயலே…. இந்த ரயிலு போனா என்ன? அடுத்த ரயிலை பிடிச்சு அவங்க வீட்டுக்கு போக வேண்டியதுதானே? அட்ரசு தேடுறது அவ்ளோ கஷ்டமா’ன்னாரு. கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த அத்தனை பேரும் படம் பார்ப்பதை விட்டு விட்டு பெரியவரை பார்த்தார்கள். உணர்ச்சி பெருக்கான ஒரு க்ளைமாக்சையே புரட்டிப் போட்ட கமெண்ட் அது.

ஆனால் பெரியவர் பேச்சு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டியதோடு நின்று போனது. சில வருடங்களுக்கு பின் இன்னொரு க்ளைமாக்ஸ். இதுவும் அதே தியேட்டரில்தான். ‘இதயம்’ படம் பார்த்துக் கொண்டிருந்தேன். காதலை கடைசி வரை சொல்லவே திராணியில்லாத முரளி, தோற்றுப்போய் ஊருக்கு கிளம்ப, அதே ரயில்வே ஸ்டெஷன். ஏதோ இந்த ரயில்தான் ஸதர்ன் ரயில்வேயின் கடைசி ட்ரிப் என்பது போலவும் அதற்கப்புறம் இந்தியாவில் எங்கும் ரயிலே ஓடாது போலவும் அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறது கதாநாயகி பேமிலி. பெரியவர் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. ரயிலு போனா போவட்டுமே, அடுத்த ரயிலை பிடிச்சு முரளி வீட்டுக்கு போய் சம்பந்தம் பேசிட வேண்டியதுதானே என்று. இதுபோன்ற க்ளைமாக்சுடன் ஓராயிரம் படங்கள் வந்துவிட்டன தமிழிலும் இன்னும் பல மொழிப் படங்களிலும். ஆனால் எல்லா க்ளைமாக்சுக்கும் அழுது புலம்புவதுதான் நமது பலவீனம்.

சிவாஜி சிலையை மெரீனாவிலிருந்து அகற்றுகிற விஷயத்திலும் அதுதான் நடக்கிறது. நமது அரசியல் தலைவர்களும் சிவாஜி ரசிகர்களும் நடிப்பிலும் உணர்ச்சி கொந்தளிப்பிலும் எஸ்.வி.சுப்பையாவை மிஞ்சுகிறார்கள்.

நடிகர் திலகம் சிவாஜி கலையுலகின் ஒப்பற்ற மனிதர் என்பதிலும், நடிப்பின் சிகரம் என்பதிலும் யாருக்கும் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. இருக்கவும் முடியாது. ஆனால் அவரது உருவச்சிலை விஷயத்தில் நடந்தது என்ன, நடக்கப் போவது என்ன என்பதை அறிந்து கொண்டு அமைதி காக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். 2006 ஆம் ஆண்டில் தியாகி பி.என்.சீனிவாசன் என்பவர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்கிறார். அதில் போக்குவரத்து குறித்து பல்வேறு கவலைகள் தெரிவித்திருக்கும் அவர், காந்தி சிலைக்கு முன்பாக இந்த சிலை இருப்பதாகவும் வருந்துகிறார். அவர் காந்தி மீது கொண்டிருக்கும் பற்றின் காரணமாகவும் இந்த சிலையை அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருப்பது அப்பட்டமாக புலப்படுகிறது. வழக்கை தொடுத்த அவர் தற்போது உயிரோடு இல்லை.

பொதுவாகவே இந்தியாவில் வழக்கு போட்டவரும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும் ‘போய் சேர்ந்த பின்பு’தான் வழக்கே விசாரணைக்கு வரும் என்பதெல்லாம் சாபக்கேடு. விரைவு நீதிமன்றங்கள் ஒரு வரப்பிரசாதம். அதுவும் எல்லா வழக்குகளுக்கும் சாத்தியப்படுவதில்லை. சரி, விஷயத்துக்கு வருவோம். தற்போது விசாரணைக்கு வந்திருக்கும் அந்த வழக்கில் பதில் மனுவை தாக்கல் செய்த காவல்துறை என்ன சொல்கிறது என்பதை மீண்டும் ஒரு முறை சிவாஜி சிலைக்காக எகிறிக் குதிப்போர் சங்கம் புரிந்து கொள்வது நல்லது. அல்லது அதை படித்து பார்ப்பது இன்னும் நல்லது. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

இந்த சிலை சாந்தோம் நெடுஞ்சாலையிலிருந்து ராதாகிருஷ்ணன் சாலைக்கு வலது புறமாக திரும்பும் வாகன ஓட்டிகளுக்கும், ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து சாந்தோம் நெடுஞ்சாலைக்கு இடது புறமாக திரும்பும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அதற்கப்புறம் சொல்லப்பட்டிருப்பதுதான் மிகவும் கவனிக்க வேண்டிய வரிகள். சிவாஜி சிலையை தற்போது இருக்கும் இடத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டு அதை மற்ற தலைவர்கள் இருக்கும் சிலையுடன் அதே மெரீனா கடற்கரையில் வைக்கவும் உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை கேட்கிறது.

இந்த சிவாஜி சிலையை பெயர்த்து எடுத்துக் கொண்டுபோய் அன்னை இல்லத்தின் வாசலில் வைக்கும்படியோ, மியூசியத்தில் சாக்குமூட்டைக்குள் கட்டி வைக்கும்படியோ அதில் சொல்லப்படவில்லை. நிஜம் அப்படியிருக்கும்போது ஏன் தலைவர்களும், சினிமாவுலகமும், சிவாஜி ரசிகர்களும் கொந்தளிக்கிறார்கள் என்பதுதான் என்னை போன்ற சிவாஜி மீது மிகுந்த பற்று வைத்திருக்கும் சிலருக்கு புரியவேயில்லை. இன்னும் சொல்லப்போனால் இப்போதிருக்கும் இடத்தைவிட, காமராஜ் சிலைக்கு அருகில் அந்த சிலை அமைந்தால் இன்னும் அழகாக இருக்கும் என்பது என் கருத்து. அதிலும் மருத்துவர் ராமதாஸ் கூறியிருக்கும் கருத்தை படித்தால் எங்கு போய் முட்டிக் கொள்வது என்றே தெரியவில்லை. அந்த சிலையால் அந்த பகுதியில் சொல்லும்படியான முக்கிய விபத்துகள் ஏதும் நிகழவில்லையே என்று ஆதங்கப்பட்டிருக்கிறார் அவர். விபத்துகளில் எது முக்கியமான விபத்து, எது முக்கியமில்லாத விபத்து? (இதுவரை 20 விபத்துகள் அந்த இடத்தில் நிகழ்ந்திருப்பதாக ஆதாரத்தோடு கூறுகிறது காவல்துறை)

நயன்தாராக்களுக்கும் ஹன்சிகா மோத்வானிகளுக்கும் சிலை வைக்கிற அளவுக்கு ரசிகர்கள் போய் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில காலம் கழித்து சிலை வைப்பதே பெருத்த அவமானம் என்கிற அபாய கட்டத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறது மலிவான விளம்பரங்களும் விடலை பசங்களின் மன நிலையும். பவர் ஸ்டார் மாதிரி ஆட்கள், சொத்து வழக்கு வில்லங்கங்களை மேற்பார்வையிடும் கோர்ட் முன்பாக தனது சிலையை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாலும் ஆச்சர்யமில்லை. இந்த நேரத்தில் சிவாஜி போன்ற மாமேதைகளை தெருவில் வைத்து வேடிக்கை பார்க்க முயல்வதை விட, வருங்கால சந்ததிகளின் உள்ளங்களில் வைக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்வதுதான் புத்திசாலித்தனம்.

சிவாஜி வரிகளில் பாடினால் ‘உள்ளம் என்பது ஆமை. அதில் உண்மை என்பது ஊமை! ’ எல்லாரும் உணர்ச்சிகளை அடக்கி வச்சுட்டு கொஞ்சம் ஊமையை பேச வைக்கிறீங்களா, ப்ளீஸ்!

 

Removing of Sivaji statue – a synopsis

Sivaji Statue was put on the junction of Dr. Radhakrishnan Salai and Santhome High Road. A case which was filed in 2006 asking the court not to grant permission for Sivaji statue as it will hide Gandhi statue. The court has now found time to look into the case, after the person who filed the case was deceased. The court asked Traffic police if the statue obstruct the vision of motorists. The Police department after taking out a survey has formed the opinion that the statue is indeed obstruct the vision and should be removed.

Everyone including politicians, film industry and all and sundry have raised the voice expressing concern. If the statue is obstructing the vision of motorists there is nothing wrong in removing the statue to a better place. If Sivaji were to be alive, he would not insist that the statue should be kept there.

Sivaji’s credentials and popularity is not seen in his statue but in the industry he had thrived. It will only be apt if the statue is kept in Nadigar Sangam complex.

-www.newtamilcinema.in க்காக ஆர்.எஸ்.அந்தணன்

7 Comments
 1. Shankar says

  Good one Anthanan!

  1. M. Thanu says

   நல்ல கட்டுரை
   சிவாஜி போன்ற மாமேதைகளை தெருவில் வைத்து வேடிக்கை பார்க்க முயல்வதை விட, வருங்கால சந்ததிகளின் உள்ளங்களில் வைக்க என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்வதுதான் புத்திசாலித்தனம் என்பது எல்லோரும் வரவேற்கும்படியான ஒன்றாகும்
   அருமையான கட்டுரை எழுதிய உங்களுக்க வாழத்துக்கள்

 2. Ghazali says

  உங்க வீட்டு அட்ரஸ் என்ன? நாலு ஆட்டோ உங்களைத் தேடிக்கிட்டிருக்கு!

 3. Murugan Manthiram says

  Supero Super.

 4. anbumathi says

  super…super

 5. vedagiri says

  well thought and written article.

 6. bharath says

  Only Anthanan anna possible. But seriously well-written piece!!!!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வீரம்- புத்தம் புதிய ஸ்டில்கள்

[nggallery id=95]

Close