செல்வமணியின் நாய் பேச்சுக்கு முற்றுப்புள்ளி… அவர் சொன்னது பிரஸ்சை இல்லையாம்!

யானை சைஸ் பலுனை ஒரு சின்ன குண்டூசியால் கீறிய மாதிரி டொப்பென்று முடிந்துவிட்டது அத்தனை சர்ச்சையும். நேற்று முழுவதும், ‘ஆர்.கே.செல்வமணி இப்படி சொல்லிட்டாரே…’ என்று கண்களை ‘கோவப்’பழமாக்கிய நிருபர்களுக்கு இன்று கொய்யாப்பழ ஜுஸ் கொடுத்த மாதிரி ஒரு விளக்கத்தை கொடுத்து அவர்களை நிம்மதியாக அனுப்பி வைத்தார் செல்வமணி.

‘தமிழ்’ என்ற குறும்படத்தின் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு வந்திருந்த செல்வமணி, பத்திரிகையாளர்கள் பற்றி பேசும்போது ‘ஒரு நாயும் இங்க வரல’ என்று குறிப்பிட்டதாக காற்று வாக்கில் ஒரு தகவல் வந்து, நிருபர்களின் மனசில் சூறா‘வலியை’ கிளப்பிவிட்டு போனது. உடனடியாக இந்த விஷயத்தை இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், பிலிம்சேம்பர் தலைவர் கல்யாண் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு போனார்கள் சில நிருபர்கள். பதறிப்போன விக்ரமன், ‘என்னுடைய 22 வருஷ நண்பர் செல்வமணி. அப்படி சொல்லியிருக்க மாட்டார்னு நம்புறேன். அப்படி சொல்லியிருந்தா அவரை மன்னிப்பு கேட்க சொல்கிறேன்’ என்று கூறி, ஒரு டெம்ப்ரவரி ஐயோடக்ஸ் தடவி அனுப்பினார் நிருபர்களை.

விக்ரமன் புரோகிராம்படி இன்று இயக்குனர் சங்கத்தில் செல்வமணி எல்லா பத்திரிகையாளர் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்பதாக ஏற்பாடு. குறித்த நேரத்திற்கு அனைவரும் ஆஜர். முதல்ல என்னோட விளக்கத்தை சொல்லிடுறேன் என்று பேச ஆரம்பித்தார் ஆர்.கே.செல்வமணி. அந்த படத்தை இயக்கிய மகேந்திர வர்மன் என்னோட அசிஸ்டென்ட் டைரக்டர். இந்த நிகழ்ச்சிக்கு என்னை கட்டாயம் வரணும்னு கூப்பிட்டார். அந்த குறும்படத்தை பார்த்த நான் சில வசனங்கள் ஆட்சேபகரமா இருக்கு. சென்சார் வாங்கிட்டு ரிலீஸ் பண்ணுங்க என்றேன். இல்ல சார். முதல்ல ரிலீஸ் பண்ணிடுவோம். அப்புறம் சென்சார் அனுமதி வாங்கிக்கலாம்னு சொன்னார். இந்த விழாவுக்கு பிரஸ் வரல. அதனால் சென்சார் வாங்காமல் வெளியிடுவதில் தப்பில்லே என்றும் சொன்னார்.

அதனால் இந்த நிகழ்ச்சிக்கு பிரஸ் யாரும் வரப்போவதில்லை என்பது எனக்கு முன் கூட்டியே தெரியும். அப்படியிருக்க, நான் பிரஸ் நண்பர்களை நாய்னு திட்டியிருக்கப் போவதில்லை. நான் சொன்னது இதுதான். பொதுவாக எந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டாலும் சிலர் வருவதில்லை. பத்திரிகையாளர்கள் இருக்காங்க. டிவியில் நம்ம முகம் வரும்னு நினைக்கிறவங்க மட்டும் வர்றாங்க. இங்க பிரஸ் யாரும் வரல. அதனால் ஒரு நாயும் வரலே என்றுதான் நான் குறிப்பிட்டேன். இந்த நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்த திரைத்துறையை சேர்ந்தவர்களைதான் நான் அப்படி குறிப்பிட்டேனே தவிர, பிரஸ்சை அப்படி குறிப்பிடவே இல்லை என்றார் ஆர்.கே.செல்வமணி.

இதில் ஓரளவு சமாதானம் அடைந்த பத்திரிகையாளர்கள் அங்கிருந்து கிளம்ப… நிலைமை முற்றிலும் சுபம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
டூர் அடித்த அனிருத் ஆன்ட்ரியா…! -யாரு சொன்னது லவ் இல்லேன்னு?

முள்ளங்கியோடு முருங்கைக்காய் சம்பந்தம் வைத்துக் கொண்டது போல பொருந்தா காதலாகதான் இருக்கிறது அனிருத் ஆன்ட்ரியா காதல். வயசால் வேறுபட்டிருந்தாலும் மனசால் மையல் கொண்டிருக்கிறார்கள் இருவரும். நாங்க ஒண்ணா...

Close