சொன்னா புரியாது – விமர்சனம்

ஊர்ல இருக்கிற பார்ல எல்லாம், லேடீசுக்கும் சம அந்தஸ்து கொடுக்கிற காலம் இது. இந்த ஃபாஸ்ட்புட் உலகத்தில் காதல் மட்டும் நோஸ்கட் ஆகாமலிருக்குமா என்ன? காதலையும் கல்யாணத்தையும் இளசுகள் எப்படி டீல் பண்ணுகிறார்கள் என்பதை அவர்களை ‘பின் தொடர்ந்து’ படமாக்கினால் எப்படியிருக்கும்? அப்படியொரு உணர்வைதான் தருகிறது இந்த ‘சொன்னா புரியாது’.

நாளொரு ஃபிகரும் பொழுதொரு பிக்கப்புமாக இருக்கிறார் சிவா. கல்யாணமே வேண்டாம் என்பதுதான் இவரது கொள்கை. ஆனால் விடாப்பிடி அம்மா, சிவாவை நச்சரித்து பெண் பார்க்க அழைத்துச் செல்கிறார். மணப்பெண் வசுந்தரா. குடும்பத்திற்கேற்ற குத்துவிளக்கு என்று இவரை கருத வைக்கிறது வசுந்தராவை பற்றிய பில்டப். இப்படியொரு பெண்ணை நம் தலையில் கட்டி வைக்கிறார்களே என்று சிவா வருந்தி, இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த திட்டமிட, இதே திட்டத்தோடு காத்திருக்கிறார் வசுந்தரா. இதைவிட பெரிய ஷாக், இந்த குடும்ப குத்துவிளக்கு நிஜத்தில் ஒரு சரக்கேஸ்வரி!

ஒரு பாரில் இவர் மப்பேறி சரிந்து விழுகிற காட்சி ஃபேஸ்புக்கில் வெளிவர, அதை பார்த்து அதிர்ச்சியாகிறார் சிவா. இருவருமே சேர்ந்து பெற்றவர்களை ஏமாற்றிவிட்டு ‘பிரேக் அப்’ ஆகிறார்கள். அதையும் ஒரு பார்ட்டி வைத்து கொண்டாடுகிறது பிரண்ட்ஸ் வட்டாரம். அங்கே ஓவர் மப்பில் இருவரும் ஒரே படுக்கையறையில் ஒன்றாக இருக்க, எப்படி நடந்துச்சு இது என்கிற அதிர்ச்சியோடு… இன்டர்வெல்!

அடப்பாவிகளா, சரோஜாதேவி புத்தகமே தேவலாம் போலிருக்கே என்று கலாச்சார காவலர்கள் கையில் கல்லோடு திரிய வேண்டாம். கலாச்சார முறுக்கை கண்டபடி நொறுக்குகிற அளவுக்கு காட்சிகள் இருந்தாலும் எல்லாமே சிரிப்ஸ் சிப்ஸ் என்பதால் நோ அதிர்ச்சி.

இப்படி ஒருவரையொருவர் பிரிய துடித்தாலும், இருவருக்குள்ளும் ரகசியமாக முளைக்கிறது காதல். அதை வழக்கமான ஈகோ வந்து தடுக்க, மீண்டும் எப்படி இணைந்தார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

அலட்டலோ, மெனக்கெடலோ சிறிதும் இல்லை. ஆனால் சிவா வாயை திறந்தாலே தியேட்டர் ரணகளமாகிறது. படத்தில் டப்பிங் கலைஞராக வருகிறார். அது போதாதா? டிஸ்கவரி சேனலில் இருந்து சைனீஸ் படம் வரைக்கும் பிரித்து மேய்கிறது இவரது லொள்ளு தளும்பும் வசனங்கள். இருக்கிற மனநிலைக்கு ஏற்ப இவர் இஷ்டத்துக்கு அடித்துவிட்டாலும், அத்தனையும் நச்சென காட்சியோடு பொறுந்துவதுதான் கரைச்சலே! இந்தியிலேயே ஒரு பாடல் எழுதியிருக்கிறார் சிவா. காதுள்ளவர்கள் கேட்கக் கடவது!

வசுந்தராவின் அப்பா ஆர்.எஸ்.சிவாஜியை சமாளிப்பதாக நினைத்து இவர் அள்ளிவிடும் கப்சா காரணம் ஒன்று, பிற்பாடு இவரையே ‘குறி’ வைத்து தாக்குகிறது. (கொஞ்சம் லிமிட் ஓவர்தான்!) ‘அவன் சுவர் ஏறி என் பெட்ரூம் வரைக்கும் வந்திருக்கான். அதை கேட்க மாட்டேங்குறீங்க’ என்று வசுந்தரா பொருமும்போது, ‘அதை பற்றி நீ பயப்படாத’ என்று ஆர்.எஸ்.சிவாஜி ஓரிடத்தை உற்று நோக்கிக் கொண்டே பேசுகையில் திடுதிடுக்கிறது தியேட்டர்.

சற்றே ஆண் பிள்ளைத்தனம் நிரம்ப, நமது கண்களில் நிரம்பிக் கொள்கிறார் வசுந்தரா. போன படங்களில் இருந்த பொலிவு இந்த படத்தில் ‘பொலி’ போடப் பட்டிருக்கே, ஏங்க? பட்டுப்புடவை சரசரக்க கோயில் பேக் ரவுண்டில் இவர் அறிமுகமாகும்போது இந்த பூனையும் பீர் குடிக்குமா எபெஃக்ட்! அதற்கப்புறம்தான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. இப்படி நிறைய ட்விஸ்டுகள் இருக்கிறது படத்தில்.

சிவாவின் நண்பர்களாக நடித்திருக்கும் மூவருமே கவனிக்க வைக்கிறார்கள். கால்கட்டு,காம் ஓனராக மனோபாலா. ஜோடி இருவரும் ‘பிரேக் அப்’ ஆன விஷயமே தெரியாமல் இவர் என்ட்ரியாகி எரிச்சலாவதெல்லாம் கலகலப்பு.காம்.

ஆற்றில் விழுந்த அரச இலை போல, படத்தை பதமாக நகர்த்தி செல்வதே டயலாக்குகள்தான். வசன விஷயத்தில் ஹீரோ சிவாவும் கூட உதவியிருக்கலாம்! ஆனால் டைட்டிலில் கவுரவிக்கப்பட்ட சரவணன் சந்துருவை மனதார பாராட்டலாம்.

யத்தீஷ் மகாதேவ் என்கிற புதிய இசையமைப்பாளர் இசையில் எல்லா பாடல்களும் கேட்க வைக்கிற ரகம்.

லாஜிக் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல், அதே நேரத்தில் என் கடன் சிரிப்பு மூட்டுவதே என்று கிளம்பி வந்திருக்கிறார் புதுமுக இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ். இவருக்கு நல்ல ‘ஸ்மைலேஜ்’ தருவார்கள் ரசிகர்கள்!

சொல்லாமலே புரியுது… பெண்களும் ‘தண்ணி’றைவு அடைஞ்சுட்டாங்க என்று! இதை சொல்லி புரிய வைக்க நினைச்சிருக்காங்க. தப்புன்றீங்க?

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மரியான் – விமர்சனம்

கடலோர கதைகளை கண்டம் துண்டமாக சிதைக்கிற வியாதி அண்மைக்காலமாகவே பெருகி வருகிறது தமிழ்சினிமாவில். கடல், டேவிட் என்று மூச்சு வாங்கி உட்கார்ந்து மூணு மாசம் முடியல. அதற்குள்...

Close