ஜில்லா விமர்சனம்

‘நான் போலீஸ் இல்ல… பொறுக்கி’. ‘நான் பொறுக்கியில்ல… போலீஸ்!’ இப்படி போலீசை ‘பொறுக்லீஸ்’ ஆக்கிய படங்கள் தமிழில் சரமாரியாக வந்ததுண்டு. அப்படியொரு ஒரு துண்டுதான் இந்த ஜில்லாவும். முடிந்தவரை காக்கி சட்டை மீது காக்கா முட்டை வீசியிருக்கிறார் டைரக்டர் நேசன். பட்… இதே தமிழ்சினிமாவில் தங்க பதக்கம் சிவாஜிகளை ஏராளமாக பார்த்த நம் கண்களுக்கு விஜய்யின் இந்த போலீஸ் வேஷம் ஒரு வெண்கல பதக்கம் ரேஞ்சுக்குதான் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. இருந்தாலும், ஜில்லா இன்னும் ஒரு வாரத்திற்காவது ஃபுல்லா!

லோக்கல் தாதாவாக மதுரையை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் மோகன்லால்தான் விஜய்யின் வளர்ப்பு அப்பா. தன் சொந்த அப்பாவை கொன்றது ஒரு போலீஸ் என்பதால் காக்கி சட்டையை கண்டாலே ‘உவ்வே’ ஆகிறார் விஜய். மோகன்லாலுக்கு துணையாக அடிதடி, கட்டை பஞ்சாயத்து என்று போய் கொண்டிருக்கும் அவர் வாழ்வில், ஒரு போலீஸ்காரியே காதலியாக வர, அவளையே வேண்டாம் என்று நினைக்கிற அளவுக்கு போலீஸ் மீது அலர்ஜியாகிறார் விஜய். அதற்கப்புறம் அதே விஜய் சந்தர்ப்ப சூழ்நிலையால் போலீஸ் ஆவதுதான் ட்விஸ்ட்! படத்தில் வரும் மற்ற ட்விஸ்ட்டுகள் எல்லாமே ஆக்ஷன் படங்களுக்கென்றே நேர்ந்துவிடப்பட்ட காட்சிகள்.

மதுரையில் நடைபெறும் ஒரு துயர சம்பவத்தால் மனம் மாறுகிற விஜய், எல்லா ரவுடிகளையும் களையெடுக்க முயல, வளர்ப்பு அப்பாவுக்கும் இவருக்கும் முட்டிக் கொள்கிறது. யாரை யார் போட்டுத்தள்ளுகிறார்கள் என்பது மாதிரி கதையை கொண்டு போகும் நேசன், அப்பாவி ரசிகர்களையும் அவ்வப்போது போட்டுத்தள்ளுகிறார். முடிவு…? இரண்டு மெகா ஸ்டார் ரசிகர்களின் மனசும் புண்படாத ரகம்.

விஜய்யின் துள்ளலான நடனத்தை எப்பவுமே ரசிக்கலாம். விஜய்யின் பாய்ந்து தாக்கும் ஃபைட்டையும் எப்பவுமே ரசிக்கலாம். விஜய்யின் அலட்சியமான டயலாக் டெலிவரியையும் எப்பவுமே ரசிக்கலாம். ஆனால் இம்மூன்றுமே இப்படத்தில் இருந்தாலும், விஜய் வரும் காட்சிகள் பலவற்றில் ஒரு ஆயாசம் ஏற்படுகிறதே… அதுதான் ஏனென்றே புரியவில்லை. அதுவும் எல்லாவற்றையும் அலட்சியமாக எடுத்துக் கொள்வதாக நினைத்து அவர் செய்யும் சில மேனரிசங்களும், இழுத்துப் பேசும் ஸ்டைலும் ‘முடியல’ சாமி.

கதையில் இருக்கிற ஓட்டையில் கோடம்பாக்கத்தையே போட்டு மூடிவிடலாம். அது அந்தளவுக்கு…! போலீஸ் கமிஷனரின் கையையே வெட்டிவிட்டு, அதே அதிகாரியின் கீழ் ஏ.சி யாக முடிகிற வித்தை அஞ்சா நெஞ்சன் அரசாண்ட பூமியான அந்த ஒரிஜனல் மதுரைக்கே இல்லையேய்யா. ஆனால் போலீஸ் அதிகாரி விஜய்யை விசாரணைக்கு அழைக்கும் கமிஷனர், அவரை பதவியை விட்டு நீக்குவார் என்று நினைத்தால், டி.சியாக பிரமோஷன் கொடுத்து அனுப்புவது கைதட்டல் காட்சிதான், சந்தேகமேயில்லை. இது போல படத்தில் ஆங்காங்கே வரும் மானே… தேனே… பொன்மானேக்கள் சூப்பர்.

காஜலுக்கும் விஜய்க்குமான காதல் காட்சிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். காஜலை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக விஜய் வேறொரு போலீஸ் பெண்ணுக்கு தற்காப்பு கற்றுக் கொடுக்கும் காட்சி கலகல… அதே நேரத்தில் நினைத்தால் கனவில் விழுந்து காதலில் புரள்கிறார்கள் இருவரும். எண்ணிக்கை ஜாஸ்தியான அந்த டூயட்டுகளில் எதையாவது இரண்டை கூசாமல் வெட்டி கடாசலாம்.

கம்பீரமான தாதாவாக மோகன்லால். இந்த கேரக்டருக்கு இவர் எதற்கு? நம்ம பி.வாசுவே போதுமானவராக இருந்திருப்பாரே? இவரை கைது செய்து அழைத்துச்செல்லும் கமிஷனர், ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லாமல் மதுரை தாண்டி 30 கி.மீ தொலைவில் இறக்கிவிட்டு போகிற காட்சியும், கொடூர கோபத்தோடு அவர் அங்கிருக்கும் எல்லைக்கல்லில் அமர்ந்திருக்கிற காட்சியும் ஆக்ஷன் மூட் கலந்த ஒரு அழகான கற்பனை! மற்றபடி சேட்டனின் தமிழ், ஜில்லாவை ஒரு டப்பிங் பட ரேஞ்சுக்கு ஆக்கிவிடுவதை என்ன சொல்லி புலம்ப?

காமெடிக்கு சூரி. இவரது பாக்கெட்டிலிருக்கும் மிட்டாயையும் விஜய்யே எடுத்து சாப்பிட்டுவிடுவதால், பல நேரங்களில் தேமே என்று இலையில் ஆறிக்கிடக்கிறது பரோட்டா. வாயை திறந்து அலப்பறை செய்கிற காட்சிகளில் அப்படியே அண்ணன் வடிவேலுவை இமிடேட் செய்வதால் சூரியின் கிரவுண்ட் காலி.

சின்ன வயசு சம்பத்தும் விஜய்யும் ஒரே காலத்தில் வளர்கிறார்கள். சம்பத் மட்டும் எப்படி பெரியப்பா ரேஞ்சுக்கு இருக்கிறார். விஜய் இளைஞராக இருக்கிறார் என்றெல்லாம் கேள்வி கேட்டால், காஸ்ட்டிங் டைரக்டர் என்ற முறையில் நேசனே பதில் சொல்ல நேரிடும் என்பதால் விடு ஜுட். படத்தில் சம்பத்துக்கான ஸ்பேஸ் ரொம்பவே முக்கியமானது. அதை திறம்பட நடத்தியும் காட்டுகிறார் அவர். அதற்கப்புறம் விஜய்யின் தம்பியாக நடித்திருக்கும் மகத்துக்கு சுட்டு போட்டால் கூட டெரர் லுக் வரவில்லை. அவருக்கும் கொடூரமான ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது.

விஜய்யே தன் குரலில் பாடும் அந்த கண்டாங்கி கண்டாங்கி பாடலும் அதற்கு நடனம் அமைத்திருக்கும் விதமும் கொள்ளை அழகு. டி.இமானின் இசையில் எல்லா பாடல்களும் இனிமை என்றாலும், அடிக்கடி வந்து ஆக்ஸா பிளேடு போடுவதுதான் கொடுமை. கணேஷ் ராஜவேலுவின் ஒளிப்பதிவு ஒரு ஆக்ஷன் படத்திற்குரிய அத்தனை பரபரப்பையும் அதே வேகத்தில் வெளிப்படுத்துகிறது. எடிட்டிங் டான்மேக்ஸ். அவசரமான ட்விட்டர் உலகம் இது. 140 எழுத்துக்களில் கருத்து சொல்கிற காலத்தில் மூன்று மணி நேரம் படம் கொடுத்தால் எப்படி சார்? நறுக்கியிருக்க வேண்டாமா?

ஒரு போலீஸ் கதை எப்படியிருக்க வேண்டும் என்பதை சூர்யாவிடம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்திலிருக்கிறார் விஜய். இப்போது இதை அவர் உணராவிட்டாலும், இன்னும் ஒரு வாரத்தில் உணர வைத்துவிடும் நிஜம்.

எனிவே…. ஜில்லா, ஜில்லென இல்லா!

-ஆர்.எஸ்.அந்தணன்

 

9 Comments
 1. Ghazali says

  படம் பார்க்கலாமா வேண்டாமா? ‘தெளிவா’ அதைச் சொல்லுங்க.

 2. ismail says

  இப்போது இதை அவர் உணராவிட்டாலும், இன்னும் ஒரு வாரத்தில் உணர வைத்துவிடும் நிஜம்.ghazali 1 weak wait pannunga

 3. sekar says

  உங்கள் விமர்சனம் வர வர ஒரு’தலை’ பட்சமாகவே இருக்கிறது.

  1. sk says

   ithuku pathil solunga muthala….
   1.இந்த ஜில்லாவும். முடிந்தவரை காக்கி சட்டை மீது காக்கா முட்டை வீசியிருக்கிறார் டைரக்டர் நேசன்.
   2. அதே அதிகாரியின் கீழ் ஏ.சி யாக முடிகிற வித்தை அஞ்சா நெஞ்சன் அரசாண்ட பூமியான அந்த ஒரிஜனல் மதுரைக்கே இல்லையேய்யா.

 4. kanavuthirutan says
 5. rajesh says

  sir super sense of humor. my fav line
  1.இந்த ஜில்லாவும். முடிந்தவரை காக்கி சட்டை மீது காக்கா முட்டை வீசியிருக்கிறார் டைரக்டர் நேசன்.
  2. அதே அதிகாரியின் கீழ் ஏ.சி யாக முடிகிற வித்தை அஞ்சா நெஞ்சன் அரசாண்ட பூமியான அந்த ஒரிஜனல் மதுரைக்கே இல்லையேய்யா.

  then your depth of knowledge is amazing.

 6. KARTHIKEYA says

  ETTHNAI TIME THAN INTHA KATHAIYAI SOLLUVANGALO

 7. rafeek says

  உங்கள் விமர்சனம் வர வர ஒரு’தலை’ பட்சமாகவே இருக்கிறது

 8. jothi says

  kalla mulla palla nalla illa

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜய் புகைவிடும் காட்சிக்கு கட்! ஜில்லா விஷயத்தில் சென்சார் கெடுபிடி

படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் முன்னணி ஹீரோக்கள் நடிப்பதால் அவர்களது ரசிகர்களும் சிகரெட் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள் என்றொரு குற்றச்சாட்டு வெகு காலமாகவே உண்டு. சில ஹீரோக்கள் இது...

Close