ஜெயில்ல எனக்கு கருப்பு பூனை வேணும்…-லாலு அடம்
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் சிறையிலும் தனக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு கோரியதை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், முன்னாள் பீகார் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதையடுத்து லாலு ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினரான லாலுவுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள் அவருக்கு பாதுகாப்பு அளித்து வந்தனர். இந்நிலையில் சிறையிலும் தனக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அவர் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.
ஆனால் சிபிஐ நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது. தீவன ஊழல் வழக்கில் அவருக்கு தண்டனை உறுதியானவுடன் அவருடைய லோக்சபா எம்.பி. பதவி பறிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரது இசட் ப்ளஸ் பாதுகாப்பும் வாபஸ் பெறப்படும் என்று கூறப்படுகிறது. லாலுவுக்கு நாளை மறுநாள் தண்டனையை வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நீதிமன்றம் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.