ஜெருசலேமில் உலகின் பழமையான முகமூடிகள் கண்காட்சி
இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் உலகின் பழமையான முகமூடிகள் கண்காட்சி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில் உலகில் நாகரீகம் தொடங்கிய ஆதிகாலத்திய முகமூடிகள் இடம் பெற்றுள்ளன. 9000 வருடங்கள் கொண்ட இந்தக் கல் முகமூடிகள் இறந்த முன்னோர்களின் ஆவியை ஒத்திருக்கும் விதத்தில் செய்யப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது. இந்த முகமூடிகளில் கண்களுக்கான ஓட்டைகள், சிறிய மூக்கு மற்றும் பற்களின்
அமைப்பு ஆகியவை தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஜெருசலத்திலிருந்து 20 மைல் சுற்றளவிற்குள்ளேயே இந்த முகமூடிகள் கண்டெடுக்கப்பட்டன. அந்தப் பகுதியே யூத மலைகள் நிரம்பிய யூத பாலைவனப்பகுதியாக அந்நாளில் இருந்துள்ளது என்று அருங்காட்சியகத்தின் இயக்குனர் ஜேம்ஸ் ஸ்னிடர் குறிப்பிடுகின்றார். மட்பாண்ட காலத்திற்கும் முந்தைய கற்காலத்தில் இந்த முகமூடிகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறும் கண்காட்சி மேற்பார்வையாளர் டெப்பி ஹெர்ஷ்மேன், நாகரீகத்தின் முதல் படைப்பாளிகள் காலத்தைச் சேர்ந்தவை இவை என்றும் குறிப்பிட்டார்.
ஆதிகாலத்திய இனவாத சடங்குகளின் சில அரிய காட்சிகளாகக் கூட இந்த முகமூடிகள் இருக்கக்கூடும் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். மனிதன் காட்டுவாசி வாழ்க்கையைக் கைவிட்டு விவசாயம் போன்ற தொழில்களைத் தொடங்குவதற்கான ஒரு திருப்புமுனையாக இந்த படைப்புகள் செய்யப்பட்டிருக்கக்கூடும் என்ற கருத்தும் அவர்களிடத்தில் நிலவுகின்றது.