தமிழகத்தில் கைதிகள் நடத்தும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள்

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மறு வாழ்விற்காக, அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கைதிகள் சிறைகளில் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சிறை பஜார் அமைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது கைதிகள் நலன் கருதி, கைதிகள் நடத்தும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறக்க, அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம், இந்த பெட்ரோல் விற்பனை நிலையங்களை முழுக்க, முழுக்க மானியத்தில் நிறுவுகிறது.

சமீபத்தில் சிறைத்துறை இயக்குனர் திரிபாதி தலைமையில் இதுதொடர்பாக முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கள் துரைசாமி, மவுரியா, கோவிந்தராஜ், முகமதுஅனீபா மற்றும் 9 மத்திய சிறை சூப்பிரண்டுகள், இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கீழ்கண்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகள் சார்பில், சிறைகள் அருகில் உள்ள இடத்தில் மெயின் ரோட்டில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறக்கப்படும். கடலூர் தவிர, சென்னை புழல், கோவை, மதுரை, திருச்சி, சேலம், பாளையங்கோட்டை, வேலூர், புதுக்கோட்டை ஆகிய சிறைகள் அருகில், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறக்கப்படும்.

இந்த பெட்ரோல் விற்பனை நிலையங்களை கைதிகளே நடத்துவார்கள். ஒவ்வொன்றிலும் தலா 30 கைதிகளுக்கு வேலை கொடுக்கப்படும். 7 வருடங்கள் தண்டனையை நன்னடத்தையோடு முடித்துள்ள ஆயுள்தண்டனை கைதிகள், இந்த பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்.

சென்னை புழல் சிறை அருகில், அம்பத்தூர் ரோட்டில் கைதிகளின் பெட்ரோல் விற்பனை நிலையம் விரைவில் திறக்கப்படும். மற்ற 7 ஊர்களிலும் விரைவில் இடங்களை தேர்வு செய்து, கைதிகளின் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறக்கப்படும்.

இந்த பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வேலைபார்க்கும் கைதிகளுக்கு, நல்ல சம்பளம் வழங்கப்படும். இதற்காக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 2 ரூபாய் 9 காசுகளும், 1 லிட்டர் டீசலுக்கு 1 ரூபாய் 67 காசுகளும் கமிஷன் தொகையாக, இந்தியன் ஆயில் நிறுவனம் வழங்கும்.

இந்த கமிஷன் தொகையில் இருந்து, கைதிகளுக்கு சம்பளம் கொடுக்கப்படும். கைதிகள் நடத்தும் பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு வாகன ஓட்டிகளிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மீண்டும் நம்பர்–1 பணக்காரர் ஆனார் பில்கேட்ஸ்

கார்லோசை பின்னுக்கு தள்ளி மீண்டும் நம்பர்–1 பணக்காரர் என்ற அந்தஸ்தை பில்கேட்ஸ் பெற்றார். *உலகின் நம்பர்–1 பணக்காரர் என்ற அந்தஸ்தை அமெரிக்காவின் கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் பில்கேட்ஸ்...

Close