தலைவா விமர்சனம்

‘அவுட் பாஸ்’ போட்டு அவசரமாக வெளியேற்ற வேண்டிய ஒரு படத்தை எதற்காக பாஸ்போர்ட்டில் பச்சை கலரில்லை, விசாவில் வெள்ளை கலரில்லை என்று சொத்தை காரணங்களை சொல்லி முடக்கி வைத்தார்களோ, அவர்களுக்கே வெளிச்சம்! மும்பையில் தமிழர்கள் தாக்கப்படுவதையும், அவர்களுக்காக ஒரு வரதராஜ முதலியார் கிளம்பி வந்து தமிழ்சினிமா ஹீரோக்களின் அவதாரம் எடுத்து பந்தாடுவதையும் இனிமேலும் பார்த்துக் கொண்டிருக்க நேர்ந்தால், தாதர் எக்ஸ்பிரஸ்சில் தலைகீழாக தொங்கிக் கொண்டு போயாவது வரதராஜ முதலியார் தொடர்பான ஆவணங்களை அழித்துவிட்டு திரும்பலாம். நல்லவேளை… ‘தாத்தா நீங்க நல்லவரா, கெட்டவரா?’ சீன் மட்டும்தான் இல்லை. மற்றபடி பக்கா ‘நாயகன்’, ‘தேவர் மகன்’தான் இந்த தலைவா.

மும்பைக்கே ஒரே ஒரு அண்ணாவாக வலம் வருகிறார் சத்யராஜ். தமிழர்களை காப்பதுதான் அவரது ஒரே கவலை, கண்ணீர், வெட்டுக்குத்து இத்யாதி இத்யாதி…என்று நகர்கிறது அவரது எபிசோட். ‘நேத்து எங்கிட்ட ஒரு கேஸ் வந்துச்சு’ என்று அவ்வப்போது வந்து ஆளை சீண்டிவிட்டு சில பல கொலைகளை செய்ய துண்டுகிறார் ஒய்.ஜி.மகேந்திரன். கோர்ட்ல ஒழுங்கா வாதாடாமல் குற்றவாளியை தப்பவிட்டு விட்டு வரும் இந்த ஓட்டை லாயருக்கு ஆதரவாக கொலைகளை செய்து வைக்கிறது சத்யராஜ் குரூப். (ஐ மீன் அண்ணா குரூப்)

இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் தண்ணீர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் விஜய், அமலாபாலின் கடைக்கண் பார்வையில் இதயம் தொலைக்கிறார். லவ்…! ‘வாங்க, உங்கப்பாவை சந்திச்சு பேசலாம்’ என்று கிளம்பி மும்பைக்கு வருகிறார்கள் அமலா, அவரது அப்பா சுரேஷும். வந்த இடத்தில் ஒரு ட்விஸ்ட். அமலா மும்பையின் உயர் போலீஸ் அதிகாரிகளில் ஒருவர். நமக்கு ஷாக் அடிக்கிற மாதிரியே விஜய்க்கும் அடிக்கிறது. இந்த குழப்பத்தில் அண்ணாவை ஒரு கும்பல் போட்டுத்தள்ள, குட்டி அண்ணாவாகிறார் விஜய். அப்புறம் காதல் என்னாச்சு? அமலாவை மன்னித்து விஜய் ஏற்றுக் கொள்வதையெல்லாம் இரண்டே முக்கால் சொச்சம் மணி நேரம் வரைக்கும் பொறுமையாக இருந்து பார்ப்பவர்களுக்கு கிடைக்கிற பிரசாதம்.

மிக சரியாக வளைக்கப்பட்ட வில்லில் தோரணையாக பூட்டப்பட்ட ‘நாண்’ போல அவ்வளவு கம்பீரமாக இருக்கிறார் விஜய். அந்த அலட்சிய முறைப்பும், அதிகார பார்வையும், காதலையும், அன்பையும் குழைத்து குழைத்து அடிக்கும் அவரது கண்களும் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தரும். ஆனால் எதை நினைத்து இதை கதை என்று ஒப்புக் கொண்டாரோ… உங்களுக்கே நியாயமா படுதா பாஸ்? படத்தில் இவரே பாடி ஆடும் வாங்கண்ணா வணங்கங்ணா… பாடலும் ஆடலும் ஒரு பெரிய உற்சாக திருவிழா. படத்தில் வரும் எல்லா காட்சிகளும் பார்த்து சலித்த ரகமாக இருந்தாலும், ஒரு பிக்பாக்கெட் திருடனை இவரும் வில்லனும் துரத்துகிற அந்த நிமிடங்கள் பரபரப்பு. ‘போனை கட் பண்ண விடாதே, பேசிகிட்டே இரு’
என்கிற டெக்னிக் வியப்பு. இதில் லாஜிக் பார்க்க நேர்ந்தால் மொத்த படத்தையும் மைனஸ்சில் தள்ள வேண்டியிருக்கும் என்பதால் கப்சிப்.

ப்ரோ… ப்ரோ என்று இவரையே சுற்றி சுற்றி வரும் சந்தானத்தின் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் படு சொதப்பல். ப்ரோ… கொஞ்சம் ஸ்டைலை மாற்றுவது உங்க பேட்டரிக்கு நல்லது.

அமலா பால் போலீஸ் அதிகாரியாம். இவருக்கு போலீஸ் உடுப்பு வேறு போட்டுவிட்டிருக்கிறார்கள். க்ரீரீச்ச்ச்ச்ச்ச்… வேறொன்னுமில்ல. சிரிப்புதான். அவ்வளவு பெரிய ஆக்ஷன் ஹீரோவை ஒரு கதாநாயகி சாதுர்யமாக காப்பாற்றுகிறார் என்று கூறிவிட்ட பிறகு, விஜய்யின் சவால்கள் எடுபடாமல் போகிறதே, கவனிச்சீங்களா டைரக்டர் சார்?

சத்யராஜின் வாய்க்கு ஒரு ஸ்பெஷல் பூட்டு போட்டிருக்கிறார் டைரக்டர் விஜய். அதனால் ஒரு புது சத்யராஜை பார்க்க முடிகிறது. அவரும் கம்பீர லுக். கலவரப்பட வைக்கும் நடையோடு ஸ்டாப் பண்ணிக் கொள்கிறார். நல்லது… தொடரட்டும்.

படத்தில் ஆங்காங்கே வரும் வசனங்கள் பெரிய பிரச்சனைக்கு வழி வகுத்திருக்கும் என்று நம்ப முடியவில்லை. இதற்கு முன்பும் விஜய் படங்களில் அரசல் புரசலாக இடம் பெற்ற வாசகங்கள்தானே அவையெல்லாம்…

ஜி.வி.பிரகாஷ் இசையில் வாங்கண்ணா… பாடல் அசத்தல். அந்த முதல் டூயட்டும் அழகு. தமிழா பாடலில் காட்டப்படும் அந்த பிரமாண்டம் அழகு என்றால், அதற்கு நடனம் அமைத்த தினேஷும் கவனிக்க வைக்கிறார். விஜய் அமலாவை மட்டுமல்ல, சத்யராஜையும் அவ்வளவு அழகோடும் கம்பீரத்தோடும் காட்டியிருக்கிறது நீரவ்ஷாவின் கேமிரா.

விஜய் என்கிற பந்தயக்குதிரை மீது கம்பீரமாக பயணம் செய்திருக்க வேண்டிய டைரக்டர், தானும் தவறி விழுந்து குதிரையையும் குப்புற தள்ளிய சோகத்தை என்னவென உரைப்பது?

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Vidiyum Mun Movie Stills

[nggallery id=2]

Close