திருச்சி வரும் நரேந்திரமோடி முன்பு பி.ஜே.பி யில் இணைகிறார் கருணாஸ்! -www.newtamilcinema ன் exclusive தகவல்….
சினிமாவில் நடிகர் கருணாசின் வெற்றி தோல்விகள் எப்படியோ? அரசியலில் ‘பிரைட்டாக’ ஒரு விடிவெள்ளி முளைக்க ஆரம்பித்திருக்கிறது இவரது தலைக்கு மேல். அண்மைக்காலமாக தென்மாவட்டங்களில் விஐபி யாக வலம் வர ஆரம்பித்துவிட்டார் கருணாஸ். முக்குலத்தோர் இளைஞர்கள் இவர் பின்னால் அணிவகுத்துக் கொண்டிருக்கிறார்கள். தேவர் ஜெயந்தியின் போதெல்லாம் கருணாசின் பின்னால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புடைசூழ அவர் நடமாடி வருவதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன சக அரசியல் கட்சிகள். இந்த நேரத்தில்தான் இப்படியொரு அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறது அவருக்கு. பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் நட்சத்திரங்களை வளைத்துப்போட துடித்துக் கொண்டிருக்கிறது பிஜேபி.
யாரோ நந்தனாவாம். அவர் எந்த படத்தில் நடித்தார் என்றும் தெரியவில்லை. அவரை வைத்து பிரச்சார பாடல்களை வெளியிடுகிற அளவுக்கு தமிழக பிஜேபியில் நட்சத்திர பஞ்சம். (ஒருபுறம் சூப்பர் ஸ்டார் ரஜினியையும் விடாமல் நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்) உண்மை நிலைமை இப்படியிருக்க, மேலிடத்திலிருந்து ‘கருணாசை வளைச்சு பாருங்களேன்’ என்றொரு சமிக்ஞை வந்தால் சும்மாயிருப்பார்களா? அடித்துப்பிடித்துக் கொண்டு கருணாசிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.
திருச்சி வரும் நரேந்திர மோடியின் முன்பாக கருணாஸ் தன்னை பிஜேபி யில் இணைத்துக் கொள்வார் போல தெரிகிறது. அதற்கு முன்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கருணாசை எம்.பி யாக்குவதாகவும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கிறதாம்.
‘வருங்கால எம்.பி கருணாஸ் வாழ்க….’ கூவுறதுக்கு நல்லாதான் இருக்கு!