தீயா வேலை செய்யணும் குமாரு – விமர்சனம்

எடை மிஷின்ல ஏறி நின்றால், ‘தயவு செஞ்சு கூட்டமா நிக்காதீங்க’ என்று சீட்டு வருகிற அளவுக்கு, அவனவனுக்கு கவலைகளும், கஷ்டங்களும்! தியேட்டருக்குள் நுழையும்போது கவலையையும் சேர்த்துக் கொண்டு வெயிட்டாக நுழையும் யாரும், சுந்தர்சி படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது ‘மைனஸ் வெயிட்டில்’ இருப்பது நிச்சயம்! இந்த படத்தில் தீயா வேலை செஞ்சு மக்களை மறுபடியும் சிரிக்க வைத்திருக்கிறார் சு.சி. அதுவும் சித்தார்த் மாதிரி தொம்மைகளை வைத்துக்கொண்டு!

கதையே ஐ.டி கம்பெனியை சுற்றிதான். அதில் பாதி பேர் ஹன்சிகாவை சுற்றி வருகிறார்கள். மெழுகு, ப்ளஸ் அழகு, எப்படியாவது என்னோட பழகு என்று சித்தார்த்தும் கூட்டத்தோடு கூட்டமாக தள்ளுமுள்ளுவில் ஈடுபட, யாருக்கு ஹன்சிகா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

அந்த கம்பெனியிலேயே ஆணழகன் என்று சிலுப்பிக் கொண்டு திரியும் கணேஷ் வெங்கட்ராமுடன் போட்டிப் போட வேண்டிய அவல நிலைக்கு ஆளாகிறார் சித்தார்த். உயரமா இருக்கறதெல்லாம் ஒட்டக சிவிங்கி ஆகிவிட முடியுமா? கணேஷ் வெங்கட்ராமின் கம்பீரமும் அந்த ரகம்தான். இருந்தாலும் கதை அப்படிதானே சொல்கிறது. விடுங்கள்… இந்த ஒட்டக சிவிங்கியிடம் அந்த ஐ.டி கம்பெனி மொத்தமும் ஜொள் விட்டு திரிவதையெல்லாம் சகித்துக் கொண்டு படம் பார்ப்பவர்களுக்கு சந்தானம் என்கிற சர்வரோக நிவாரணியே பரிசாக கிடைப்பதால். விட்டு தள்ளுக!

பரம்பரையே லவ் மேரேஜ் பண்ணியிருந்தாலும், சொந்த லவ்வுக்காக சோக ராமாயணமே எழுத வேண்டிய அளவுக்கு தவிக்கிறார் சித்தார்த். ஹன்சிகாவிடம் லவ்வை சொல்ல இவர் படும் அவஸ்தைகள் மற்றும் தயக்கங்கள் எல்லாமே ஒருவித செயற்கை தனம் நிரம்பிய பாடி லாங்குவேஜ். இருந்தாலும் நடிப்புக்கு துளியும் சம்பந்தமில்லாத பவர் ஸ்டாரையே வேறு படத்தில் கரையேற்றிவிட்ட சந்தானம் இருப்பதால், பிழைத்தார் சித்தார்த்.

படம் துவங்கி சற்று நேரம் வரைக்கும் சந்தானத்தை காணவில்லை. அதுவரைக்கும் பாப்கார்னும் பல்லுமாக காத்திருக்கும் வெகுஜனங்களுக்கு சந்தானம் வந்ததும்தான் உசிரே வருகிறது. மோக்கியா என்றொரு ‘கனெக்ஷன் டூ த பீப்பிள்’ பெயருடன் வரும் இவர் கொடுக்கும் காதல் ஐடியாக்கள் இக்கால இளசுகளுக்கு இன்ப திறவுகோல். ‘இந்த ஆர்யா இருக்கானே, மாசா மாசம் ஆறு லட்ச ரூபாய் பில் கட்ற அளவுக்கு எங்கிட்ட வந்து ஐடியா கேப்பான்’ என்கிற சந்தானத்தின் டயலாக்கிற்கு ஆர்யாவின் வயிற்றெரிச்சலை பொருட்படுத்தாது சிரிக்கிறார்கள் ஜனங்கள்.

சித்தார்த்துக்கு சந்தானம் கொடுக்கும் ஐடியாக்கள் அத்தனையும் செம லைவ். அதுவும் ரயில்வே ஸ்டேஷனில் மெனக்கட்டு கருத்து சொல்லும் டெல்லி கணேஷ் என்ட்ரி, கலக்கல்!

ஹன்சிகாவை வைத்து படமெடுக்கிற அத்தனை பேருமே பஞ்சுமிட்டாய் யாவாரி ஆகிவிடுகிறார்கள். சுந்தர்சியும் அந்த இலக்கணத்திற்கு தப்பவில்லை. அந்த கால ரம்பா, குஷ்புவையெல்லாம் தன் லெப்ஃப்ட் கண்ணால் அசால்ட்டாக கிராஸ் பண்ணிவிடுகிறார் இந்த குயின். சிரிக்கும்போது மட்டும், ‘யாராவது நல்ல டென்டல் டாக்டரா பாருங்க’ என்று சொல்லத் தோன்றுகிறது.

பாஸ்கியும், எப்.எம்.பாலாஜியும் நடித்திருக்கிறார்கள். பெரும் சினிமா விமர்சகர்களான இவர்களில் பாஸ்கியை மௌன குருவாகவே நடமாட விட்டிருக்கிறார் சுந்தர்சி. (அடங்குறீயா… என்று அர்த்தமோ?) ஒரு காட்சியில் இவர் ஓட்டும் ஸ்கூட்டரை விட காட்சிகள் முன்னோக்கி ஓடுவது நைஸ் கற்பனை! சிரிக்க வைக்க ட்ரை பண்ணியிருக்கிறார் பாலாஜியும். பட்…?

திவ்யதர்ஷினி, சித்ரா லட்சுமணன் என்று அடிஷனல் அராத்துகள் இருந்தாலும் முழுக்க முழுக்க சந்தானமே அடித்துக் கொண்டு போவதால் நோ காமெண்ட்.

படத்தில் சரியான ட்விஸ்ட் ஒன்று இருக்கிறது. அதில் பாதி மட்டும் இங்கே ஓப்பன். சித்தார்த்தின் காதலுக்கு படுபயங்கர ஐடியாக்கள் கொடுத்து ஹெல்ப் செய்யும் சந்தானம், அதற்கப்புறம் எப்படியாவது அந்த காதலை பிரித்துவிட துடிக்கிறார். அது ஏன்? வெள்ளித்திரையில் காண்க!

பீட்சா பட ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் இதில் சுந்தர்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார். பாட்டனி போல பசுமைதான் திரும்புகிற இடமெல்லாம். பாடல் காட்சிகளை கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். தொடரட்டும் அலையன்ஸ்…

சத்யாவின் இசையில் சில பாடல்கள் அழகு.

நகைச்சுவை படங்களின் ஒரே லட்சியம் சிரிப்பு மட்டுமே என்பதால் அதை தோண்டி துருவி குற்றம் சொல்வது திமிரிலும் கொடியது. என்பதால்,

தீயா வேலை செஞ்சுருக்காங்க, சூப்பரு…!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தில்லுமுல்லு – விமர்சனம்

நன்றாக இருக்கிற கண்ணாடிகளையெல்லாம் துடைக்கிறேன் பேர்வழி என்று உடைக்கிற -ஆசாமிகள் கோடம்பாக்கத்தில் பெருத்துப் போய்விட்டார்கள். இந்த ரீமேக் ரிவிட்டுக்கெல்லாம் ஒரு முடிவு வராதா என்று கூட்டமாக நின்று...

Close