தேவதைப்பாட்டு உயிர் இசை, மெய் இசை, உயிர் மெய் இசை – 5 முருகன் மந்திரம்
இதயம் ஒரு அதிசய வீடு. அதற்குள் பூட்டிக்கிடக்கும் அறைகளின் கதவுகள் கணக்கில்லாதது. அன்பின் உரசலில் உண்டாகிவிட்ட எல்லைக்கோடுகளை கடக்க முடியாமல்… உயிரின் உள்ளே ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கிறது பல கண்ணீர் நதிகள். சிந்து நதிகளையும் நைல் நதிகளையும் பின் தள்ளி விடுகிறது அந்த கண்ணீர் நதிகளின் நீளம்.
கண்களின் அணைக்கட்டுகள் நிரம்பி வழிய எப்போதும் தயாராக இருக்கும்… அந்த உறவுப் பிரிவின் நதிகளை ராசாவின் ஏதோ ஒரு பாட்டு ஒரு நொடியில் உசுப்பி விடும். உடைத்து விடும்.
அவள் இல்லாமல் நீர்த்துப்போன உயிருக்கு, சற்றே ஆறுதலாக இருக்கட்டும் என்று,
“மானே மரகதமே,
நல்ல திருநாளிது, தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலமிது, இதமான நேரமிது
பனி தூவும் மாலை வேளை தான்…”
மனதிற்கு இதமாக ஒரு ராசா பாட்டை கேட்கத் தொடங்குவோம். ராசா, தன் இசையால் அவளாக மாறி, நம்மை உயிர்ப்பிப்பதோடு நில்லாமல் உலுப்பி விட்டு விடுவார். மனோவும் ஜானகியும் மனசுப்புண்ணுக்கு லேசாக மருந்து தடவுவார்கள். பாழாப்போன பாட்டு பாதியில் வரும்போது…
“மனசுக்குள் கோயில் கட்டி
மகராசி ஒன்னை வச்சி
பொழுதான பூசை பண்ணி வாழுறேன்…” ன்னு
ஜானகிக்கு போட்டியாக மனோ உருகும்போது… சுவாசத்தின் வழியில் அவள் நினைவுகள் நிற்பது போல தோன்றும். கண்கள் முழுதும் அவள் முகம் விஸ்வரூபமாய் நிற்கும். முழுப்பாட்டையும் கேட்க திராணி இல்லாமல் பாதியிலேயே அந்த பாட்டை நிறுத்திவிட்டு நெஞ்சு விம்மி நிற்போம்.
இசையால் நம்மை வாழ்த்தவும், வளர்த்தவும், ஏன் சில நேரங்களில் வீழ்த்தவும் கூட ராசாவிற்கு ரகசிய அனுமதி கொடுத்திருக்கிறாள் கலைத்தாய். இசைத்தாய்.
அப்படி என்னை வாழ்த்திய, வளர்த்திய… மென்மையாய் வீழ்த்திய ஒருத்திக்கும் எனக்குமான கதையில் இதயத்துக்கு நெருக்கமாக ராசா வந்து இசைத்து விட்டுப்போன ஒரு மெட்டு… ஒரு பாட்டு பற்றிய கதை இது.
அந்த மெட்டுக்கும் அந்த பாட்டுக்கும் வாழ்நாள் குத்தகைக்காரி, ரேகா…
சில வருடங்களுக்கு முன்… மிக மிக சாதாரணமான ஒரு நாளில் ரேகாவை சந்தித்தேன் நான்.
மிக மிக சாதாரணமான அந்த நாளையும் அந்த சந்திப்பையும், இதயம் பின்னோக்கி நகர்ந்து சென்று இன்னும் எத்தனை கோடி தடவை எட்டிப்பார்க்கும் என்று தெரியவில்லை. எனில், சாதாரணமாக நிகழ்ந்த அந்த சந்திப்பின் ஜன்னல் கதவுகளை என்னால் இன்னும் மூட முடியவில்லை என்பதே நிஜம்.
நான் ஆசைப்பட்ட வேலைக்கு போகிற பாதையில், வழிச்செலவுக்காக செய்த வேலையின் போது அவளைச் சந்தித்தேன்.
அவள், அப்போதே நான் ஆசைப்பட்ட துறையில் வேலை செய்து கொண்டிருந்தாள்.
ஊர்ப்பாசம், மொழிப்பாசம், மதப்பாசம், ஜாதிப்பாசம் மாதிரி, அவளோடு எனக்கு உண்டானது, வேலைப்பாசம். ஆசைப்பட்ட துறையில் வேலை செய்ததால் ஏற்பட்ட தனிப்பாசம்.
மழைக்கான எந்த முன்னேற்பாடும் இல்லாத தூறலாய் தொடங்கிய எங்கள் நட்பு, “வங்கக் கடலில் மையம் கொண்ட காற்றழுத்தங்கள்” உண்டாக்கிய மழைகளை விட பெருமழையாய் கொட்டித் தீர்த்தது. கொட்டித் தீர்ந்தது.
பெயரில்லாத ஒரு விசையின் போக்கில், நான் இழுக்கப்பட்டேன். என்னை இழுத்த அந்த விசைக்கு எதிர் விசையாய் என்னிடம் எந்த நிகழ்வும் இல்லை. நிகழ்த்த நான் விரும்பவில்லை. ஆனால், என்னை முழுவதுமாய் அவள் பக்கம் இழுத்துக்கொள்ள முடிந்தமட்டும் அந்த விசைக்கு வசதிகள் செய்து கொடுப்பதிலேயே நான் குறியாய் இருந்தேன்.
தொலைபேசி அழைப்புக்களில் எங்கள் தூரம் குறைந்தது. நட்பு தினசரி தன்னை நீட்டித்துக்கொண்டது. என் நாட்கள் அவசரங்களுக்குள் சிக்கிக்கொள்ளாத காலம் அது. ஆனால், அவளின் நிமிடங்கள் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். அந்த பரபரப்பிலும் எந்தவேளையும் அவள் என்னை அழைப்பாள் என்பது எழுதப்படாத விதியானது.
அழைப்பாள். பேசுவாள். என்னவோ கேட்பாள். அவள் கேட்டவை என் பக்க அழைப்பில் தரப்படும். அந்த அழைப்பின் நீளத்தை அவளின் நேரங்களே முடிவு செய்யும். அவள் வேலையில் இருந்தால், அரை நொடியாகச் சுருங்கி…. வேலை முடிந்து அவள் ஓய்வாய் இருந்தால் அரை மணி நேரம் தாண்டியும் விரிந்தது.
பின்னும் அழைப்பாள். பேசுவாள். என்னவோ கேட்பாள். கேட்டுக்கொண்டே இருப்பாள். கேட்டு கேட்டு தரப்பட்ட தகவல்கள் பல நேரங்களில் கேட்காமலே தரப்பட்டது. அவள் அழைக்கும் வரை காத்திருக்க விரும்பாத என் தகவல்கள்… அவளின் அழைப்புக்களை மிச்சப்படுத்தியது.
அவளோடு எனக்கு ஏற்பட்டிருந்த அந்த உறவுக்கு நட்பென்று தற்காலிகமாக பெயர் வைத்துக்கொண்டேன் என்றாலும், என்ன பெயர் வைப்பது என்று தெரியாமலே தொடர்ந்து கொண்டிருந்தேன்.
இரு பறவைகள்
மலை முழுவதும்
இங்கே இங்கே பறந்தன
………………………………………..
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்
என்று கண்ணதாசனின் வார்த்தைகளை ராசாவின் இசையில் ஜென்சி பாடுகையில் எனக்குள் அவள், பல்லாயிரம் பட்டாம்பூச்சிகளாய் சிறகுகள் விரித்தாள். தெய்வம் தந்த அதிசயமாய் சிரித்தாள்.
அவள் வருகையால் எனக்குள் பறந்த பட்டாம்பூச்சிகளை விட, அவளே பலகோடி வண்ணத்தில் பட்டாம்பூச்சிகளாய் எனக்குள் பறந்தாள், என் ஆசையும் அதுவாகவே இருந்தது.
உலகம் இன்னும் பார்க்காத வண்ணங்களில், அந்த பட்டாம்பூச்சிக்கு சிறகுகள் செய்ய ஆசைகொண்டேன். அந்தப் பட்டாம்பூச்சியோடு நடப்பதைக் கூட, பறப்பதைப்போல உணர்ந்தேன்.
சாரல் தூவும் முகில்களும் சந்தம் பாடும் மலர்களும்
ஆனந்த புது வெள்ள நீரோட்டமும்
ஆகாயப் பூப்பந்தல் தேரோட்டமும்
மானோடு
கலை மானாக
பார்த்தன ரசித்தன ஓராயிரமே
ஜென்சியின் குரலின் வழியாக ராகதேவன் காட்சிப்படுத்தும் அந்த ஏகாந்த வெளிக்கு அவள் உறவு என்னை அழைத்துச்சென்றது.
கட்டுப்பாடுகளும் கவலைகளும் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் எங்கள் முகவரி தெரியாமல் தேடி அலைந்தன. எதுவும் எங்கள் இடைப்படக் கூடாது என்பதில்… எப்போதும் தெளிவாய் இருந்தேன். மழை நீரை விட என் மனதை சுத்தமாக வைத்திருந்தேன் நான்.
ஒரே வேலை செய்தோம் என்பதால், எங்களுக்குள் பேசிக்கொள்ள நிறைய விஷயங்கள் வரிசைக்கட்டி நின்றது. என்னிடம் மௌனமாய் கதை கேட்பாள். அவ்வப்போது கருத்துகள் கேட்பாள். வேடிக்கை பார்க்கவென்றே முரண் படுவாள். அவள் முரண் படும்போது நான் முகம் கோணினால், நகைப்பாள். என்னை வேடிக்கை பார்ப்பதற்கு என்றே, என்னிடம் முரண் படுவது அவளுக்கு பிடித்த பொழுதுபோக்கு.
நான் பேசும்போதெல்லாம் அவளின் சிறகுகளுக்கு ஓய்வு அறிவித்துவிட்டு என்னை மிக கூர்மையாக கவனிப்பாள். என்னை நான் மெச்சிக்கொள்ள அவள் என்னோடு கொண்டிருந்த மரியாதை கூடுதல் காரணமாய் ஆனது.
என்னிடம் ஏதோ இருக்கிறது என்று என்னை நம்பவைத்து என் திமிரை, என் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியதில்…. அவள் கண்களுக்கு கணிசமான பங்கு உண்டு. அவள் உறவிற்கு உன்னதமான உரிமை உண்டு.
சின்னச்சின்ன உதவிகள்… முடியுமா… என்று தயக்கத்தோடு கேட்பாள். தயங்காமல் செய்து கொடுப்பதே என் கடமையாய் இருந்தது. தொடர்ந்தது.
எந்த திட்டமிடலும் இல்லாமல், திடீர் திடீரென நிகழ்ந்து விடும் எங்கள் சந்திப்பில் நான் நெகிழ்ந்தேன். அதுவரை எனக்குள் வந்திருந்த பெண்களுக்கெல்லாம் எல்லைக்கோடுகள் போட்டிருந்த நான்… என் பூமியின் பெரும்பகுதியை அவளின் தேசமாய் அறிவித்தேன். என் உலகத்தில் அவளைக் கட்டுப்படுத்தும் உரிமையை என் இதயம் இழந்தது.
எங்கள் சந்திப்புகளில் வேடிக்கைகள் கும்மாளமடித்தது. எப்படியும் ஒரு சந்திப்பில் நாலைந்து முறையாவது என்னை சீண்டி வேடிக்கை பார்க்காவிட்டால் அவளுக்கு தூக்கம் வராது. என்னை ஓட்டோ ஓட்டேன்று ஓட்டிவிட்டு உதடுகளுக்குள் குறுநகை புரியும் அவளை ரசிப்பதற்காக பலமுறை நானாகவே மொக்கை வாங்கியிருக்கிறேன்.
ஒருமுறை அவளை அவசரமாக சந்திக்கவேண்டும் என்று கேட்டேன், நான் வேலையாக இருக்கிறேன், நாளை சந்திக்கலாம் என்றாள். இல்லை, இன்றே எப்படியாவது உன்னை சந்திக்கவேண்டும்… நாளை வரை நமக்கு தாங்காது.. எங்கே இருக்கிறாய் நான் வருகிறேன் என்றேன்.
இப்போது தி.நகரில் இருக்கிறேன். ஆனால் இங்கிருந்து எக்மோர் கிளம்புகிறேன் என்றாள். மாலை 5 மணி இருக்கும். சரி நானும் எக்மோர் வருகிறேன் என்றேன். சரி வாங்க என்றாள்.
வடபழனி வசந்தபவன் ஓரமாக என் இரு சக்கர இயந்திரக்குதிரையை நிறுத்திவிட்டு பஸ்ஸில் சென்றேன். திரும்பும்போது அவள் காரில் என்னை கொண்டு விடுவதாக பேசிக்கொண்டதில் வசந்தபவன் வாடை பிடித்தபடி இளைப்பாறியது என் குதிரை.
திட்டமிட்ட படி… திட்டமிட்ட நேரத்தில் திட்டமிட்ட இடத்தில் நாங்கள் சந்தித்தோம். இல்லை நாங்கள் இருந்தோம். ஆனால் அதே இடத்தில் அவளுக்கு வேறு ஒரு வேலை இருந்தது.
அவளைப்பார்த்தபோது என்னிடம் அவள் எதுவும் கேட்கவில்லை அவள். கேட்கமாட்டாள் என்பது எனக்கும் தெரியும்.
பிறர் முன்னிலையில் எங்களுக்குள்ள நெருக்கத்தை நாங்கள் எப்போதும் காட்டிக்கொண்டதில்லை. அப்படி ஒரு எழுதப்படாத விதியில் நாங்கள் இதயங்களால் கையெழுத்திட்டிருந்தோம்.
கொஞ்ச நேரம் அவளுக்காக காத்திருந்தேன், புத்தகம் வாசித்தேன். ஆனாலும் என்னவோ போலிருந்தது. சரி… வந்த வேலையை முடி. நான் அதற்குள் வந்துவிடுவேன் என்று கிளம்பிவிட்டேன். சரியாக ஒரு மணி நேரம், பத்து நிமிடங்கள் கழித்து திரும்பி வந்தேன்.
நான் திரும்பி வந்த சில நிமிடங்களில் அவள் வேலையும் முடிந்தது. காரை எடுத்தாள். பின்னிருக்கையில் நான். காரை மெதுவாக ஓட்டியபடி அவள். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பயணம். இரவு 10 மணி தாண்டிய சாலை.
நான் நல்லவனாக இருக்க நினைத்தேன் அல்லது காட்டிக்கொள்ள நினைத்தேன். உனக்காக காத்திருந்த வேளையில் நான் ஒரு பாட்டில் “உற்சாகபானம்” அருந்திவிட்டு வந்தேன் என்றேன்.
“ம்” என்ற ஒற்றை வார்த்தையில் பதிலும் லேசான தலையாட்டலும் அவளிடமிருந்து வந்தது. பின்னிருக்கையில் இருந்த என்னை திரும்பிக்கூட பார்த்தாளில்லை அவள். இப்படி எல்லாம் என்னோடு வராதீர்கள் என்று கோபித்து பாதி வழியில் இறக்கிவிடுவாள் என நினைத்தேன்.
ஆனால் அவளின் நடவடிக்கைகள் “அதனால் என்ன?” என்று ஆமோதிப்பதாய் இருந்தது எனக்குத்தான் அதிர்ச்சியாகிப்போனது.
அவள் அப்படித்தான். என் மீதான நம்பிக்கையை எப்போதும் அவள் உரசிப்பார்த்ததில்லை. என்னென்னவோ பேசினோம். பேசினேன். காரோட்டியபடி கேட்டுக்கொண்டே வந்தாள்.
“இந்த உலகில் என்னை விட அதிகமாக உன்னை நேசிப்பவர்கள் யாரும் இருக்கமுடியாது” என்றேன். மௌனமாகவே அதையும் கேட்டுக்கொண்டாள் அவள். மறுக்கவேண்டிய அவசியம் அவளுக்கு இருக்கவில்லை.
என்னைப்பற்றி, அவளைப்பற்றி, எங்களைப்பற்றி நான் நிறைய வார்த்தைகள் உதிர்த்தேன். சில வார்த்தைகள் உளறினேன்.
அதற்குள் வடபழனி வந்திருந்தது. எங்களுக்கு எதிரே வசந்தபவன் நின்றிருந்தது. எனக்கு விடை தருவதற்காக காரின் வேகம் குறைத்து நிறுத்தி இருந்தாள் அவள்.
நான் இறங்கவில்லை “போ… இன்னும் கொஞ்ச தூரம் உன்னோடு நான் வருகிறேன்” என்றேன். ஷேர் ஆட்டோவில் திரும்பி வந்துவிடுவேன் என்றேன்.
கார் நகர்ந்தது. விருகம்பாக்கம் தாண்டியது. ஆழ்வார் திருநகர் கடந்து வளசரவாக்கம் வந்தபோது,
“சரி நான் இறங்கிக்கொள்கிறேன்” என்றேன்.
அவள் எதுவும் என்னிடம் சொல்லாமல் காரை வளசரவாக்கம் சிக்னலில் “யூ” டர்ன் செய்தாள். மீண்டும் வடபழனி நோக்கி பயணம். விடாமல் தொடர்ந்தது உரையாடல். “ஒரு பக்க” உரையாடல்.
மீண்டும் வடபழனி வந்தோம். வசந்தபவன் முன் நின்றோம். ஆனால் இந்தமுறை இந்தப்பக்கம் நின்றது கார். ஏனோ தெரியவில்லை நான் அப்போதும் இறங்கவில்லை. “மீண்டும் சுற்றி வா” அப்போது இறங்கிக்கொள்கிறேன் என்றேன். மறுபடியும் அவள் க்ரீன் பார்க் அருகில் யூ டர்ன் செய்து திரும்பி வந்தாள்.
மூன்றாவது முறையாக வசந்தபவன் முன் அந்த இரவில் நின்றோம் நாங்கள். வேறு வழியின்றி நான் இறங்கினேன்.
“பாத்து போங்க, போயிட்டு மெசேஜ் பண்ணுங்க” என்றாள். மெல்லிய போதை தாண்டி எனக்குள் சிலிர்த்தேன். இதயத்தில் வேர்த்தேன்.
அவள் நாள்காட்டியின் தேதிகளின் பக்கங்களில் இணைந்துகொண்ட என் நட்பின் நிமிடங்களுக்கு அவள் செய்த மரியாதை… “முதல் மரியாதை”,
எங்களுக்குள் இப்படி நிறைய வேடிக்கை சந்திப்புகளும் உண்டு. சந்திப்புகளில் எல்லாம் வேடிக்கைகளும் உண்டு.
வேடிக்கைக்காரி, என்னைக் கட்டுப்படுத்தும் உரிமையை அவள் கேட்காமல் அவளுக்கு வழங்கினேன். எதையும் வேடிக்கையாக்கி சிரிக்கிற அவளின் மழலை மனதிற்கு முன்னால்… அடிக்கடி தோற்றேன். அவள் யாராய் எனக்குள் விழுந்தாள் என்பதும், யாராய் எனக்குள் வளர்ந்தாள் என்பதும்… என் வாழ்வின் பக்கங்களில் அபூர்வம் ஆனது.
என் இதய ராசா, அவளுக்கென பிரத்யேகமாக இசைத்த அந்த மெட்டு, அந்த பாட்டு, இப்போதும் எப்போதும் அவள் எனக்குள் இருக்கிறாள் என்பதற்கும் இருப்பாள் என்பதற்கும் நிரந்தர சாட்சி.
அந்த “தேவதைப்பாட்டு”, அடுத்த பகுதியில் உங்கள் கண்களுக்கும், காதுகளுக்கும்.
– முருகன் மந்திரம்
Mobile: 98418 69379 / 9444332810′