தேவதையின் இரவுப்பாட்டு உயிர் இசை, மெய் இசை, உயிர் மெய் இசை – 6 முருகன் மந்திரம்

என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில் இளையராசாவின் இசையால் அதிகமாக ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் கார்த்திக், ராமராஜன், மோகன்… இந்த 3 பேருமாகத்தான் இருக்கும்.

ஒரு பக்கம் “இந்த மானும் சொந்த மானும்” தென்றலுக்கு நடுவில் கூடினால், இன்னொரு பக்கம் “சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு 100 ஆசை“ வந்து இசையின் கிளைகளில் இங்கும் அங்கும் தாவும். இக்கரையில் மானும் குயிலும் மாரோடு மார் மோதி மோகித்திருக்க… அக்கரையில் “கூட்டத்தில கோயில் புறா” தன் இணையைத் தேட இசைத்துணையாய் வந்திருப்பார் ராசா.

தமிழ் ஒலிக்கும் திசையில் எல்லாம், காற்றிற்கு நிகராக எங்கும் நிறைந்து கிடக்கிறது, நம்மைக் கடக்கிறது ராசாவின் ராகங்கள்.

அந்த ராகத்தில் ஒன்று ரேகாவிற்கும் எனக்குமான நட்பு நாட்களின் நினைவுச்சின்னமாய் என்றென்றும் இதயத்தில் இசைத்துக் கொண்டிருக்கிறது.

ரேகா ஒருநாள் எங்கோ வெளியூர் செல்வதற்காக கிளம்பிக்கொண்டிருந்தாள். அடுத்த நாளில் அவளுக்காய் நான் செய்ய வேண்டிய வேலை ஒன்று எனக்காய் காத்திருந்தது. ஆனால் அடுத்த நாளில் அந்த வேலையை செய்வதற்கு இன்றே அவளை நான் சந்திக்க வேண்டிய கட்டாயம் கடவுளால் உருவாக்கப்பட்டிருந்தது.

இரவு பதினோரு மணிக்கு இருபத்தியொரு நிமிடங்கள் மிச்சமிருந்தது. வீட்டுக்கு வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று அழைத்தாள்.

எனக்கு அவள் குழந்தையா, அவளுக்கு நான் குழந்தையா என்பது எனக்கே வேடிக்கையான கேள்வி. நள்ளிரவிலும் அவள் வாசல் எனக்காக புன்னகை பூத்திருக்கும் அற்புதம், எங்கள் நட்பில் சாதாரணம்.

குறைந்த பட்சம் 45 நிமிடங்கள் பயணிக்காமல் அவள் வீட்டுக்கு போக முடியாது. ஆனால் போகாமல் இருந்தால் அடுத்த நாள் வேலை நடக்காது. யோசனைகளை நீள விடாமல் கிளம்பினேன். இரவின் வாடைக்காற்றில் எங்கள் அன்பின் வாசமும் நிறைந்திருந்தது.

அவள் வீட்டு வாசல் முன் நின்று, தொலைபேசியில் அழைத்தேன், எடுக்கவில்லை. எதிர்பார்த்து காத்திருந்தவளாய் வந்து வெளிக்கதவு திறந்தாள்.

சராசரி பெண்ணின் சம்பிரதாயங்கள் எதையும் எங்களுக்கு நடுவில் அவள் நிற்க விட்டதில்லை அவள். எனக்குள்ளும் அவள் சராசரிப் பெண்ணாய் என்றும் இருந்ததில்லை.

இயல்பாய் உள்ளே சென்று அமர்ந்தேன். எனக்குத் தெரியும், குறைந்தபட்சம் இன்னும் 1 மணி நேரம் அவள் அருகில் தான் நகரும் என்பது.

உள் அறை சென்று மடிக்கணினி கொண்டுவந்தாள். வந்த வேலையை விவரித்தாள். காகிதம் ஒன்றில் விவரங்கள் குறித்தாள். அது முடிந்த பின் அவளின் புகைப்படங்கள் காட்டினாள். வேறு வேறு ஆடைகள். வேறு வேறு பாவனைகள். ஒரு புகைப்படம் கூட விட்டு வைக்காமல் கருத்துக்களை குவித்தேன்.

அவளை, அவள் அழகை நான் ரசித்து வார்த்தைகளாய் மாற்றுவதை மௌனமாக கேட்டுக்கொண்டிருப்பாள் அவள்,

தொலைக்காட்சியில் கிரிக்கெட் ஓடிக்கொண்டிருந்தது. உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி அது…. பலப்பல வருடங்களுக்கு பின் இந்தியா கோப்பையை கைப்பற்றியது… படார் படாரென பட்டாசுகள் நகர் முழுவதிலும் இந்திய வெற்றியின் சாட்சிகளாய் ஒலித்தன.

எங்கள் கூட்டணி ராசிக்கூட்டணி என்று எனக்குள் ஒரு உற்சாக ஆறு, உயிர் நனைத்து ஓடியது. கிரிக்கெட் வெற்றி எங்களால் ஆனது என்று நினைத்தேன் நான்.

திடீரென மின்சாரம், காணாமல் போனது. ஒரு நிமிடம் இருங்க, வரேன் என்றாள்…

இருளின் ஆக்ரமிப்பிற்கு, நிசப்தம் காவல் செய்தது. ஒரே ஒரு நிமிடம் தான். அவள் அறையில் இருந்து அந்த நள்ளிரவில் ஒரு சூரியன் உதித்து நகர்ந்து வந்தது, கூடவே ஒரு நிலா நடந்து வந்தது.

கையில் மெழுகுவர்த்தியுடன் நடந்து வந்தாள் அவள். கண்ணுக்கு தெரியாமல் இளையராசா அவளோடு வந்தார் அங்கே. காதுக்கு கேளாமல் உயிருக்குள் இசைத்தார் ராசா அங்கே.

“ஒளியிலே தெரிவது தேவதையா…”
இந்த சந்திப்பும், இந்த இரவும், இந்த இருளும், இந்த ஒளியும்… எப்படி ராசாவிற்கு முன்பே தெரிந்தது, என் சந்தேகம் அதிசயித்தது. பாட்டு தொடர்ந்தது இதயத்தில்…

ஒளியிலே தெரிவது தேவதையா

உயிரிலே கலந்தது நீ இல்லையா
இது நெசமா நெசம் இல்லையா
உன் நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குதா கண்களும் காண்கிறதா காண்கிறதா
(ஒளியிலே..)

சின்ன மனசுக்கு வெளங்கவில்லையே நடப்பது என்னென்ன
என்ன எண்ணியும் புரியவில்லையே நடந்த்ச்து என்னென்ன
கோவில் மனியை யாரு அடிக்கிறா
தூங்கா விளக்கை யாரு ஏத்துறா
ஒரு போதும் அணையாம நின்று ஒளிரணும்
(ஒளியிலே..)

புத்தம் புதியதோர் பொண்ணு சிலையொண்ணு குளிக்குது மஞ்சளிலே
பூவ போல ஓர் சின்ன மேனியும் கலந்தது பூவுக்குள்ளே
அறியா வயசு கேள்வி எழுப்புது
நடந்தா தெரியும் எழுதி வச்சது
எழுதியதை படிச்சாலும் எதுவும் புரியல
(ஒளியிலே..)

படம்: அழகி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கார்த்திக், பவதாரினி
வரிகள்: பழனி பாரதி

அன்று ஒளியிலே தெரிந்த அந்த தேவதை, அந்த பாட்டுக்கே சொந்தக்காரி ஆகிவிட்டாள். தன் இசையால் அந்த தேவதையை என் சொந்தக்காரி ஆக்கிய இளையராசா, அவள் நினைவுகளையும் அந்த பாடலையும் அவளிடமே திருப்பித்தருகிற வித்தையை மட்டும் எனக்கு சொல்லித்தராமல் விட்டுவிட்டார்.

எதிர்பார்க்காத பல இரவுகளில் ஒளிகளுடன் வலம் வரும் அந்த தேவதையின் இரவுப்பாட்டு இதயத்தில் ஒளி தெளிக்கும். தெளித்துக்கொண்டே இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிம்புவின் ‘ராமாவரம்… ’ ஹ்ம்ம்ம், எம்.ஜி.ஆர் ஆகும் ஆசை யாரை விட்டது?

சிம்பு நயன்தாரா நடிக்கும் படத்திற்கு ‘இது நம்ம ஆளு’ என்று தலைப்பை முடிவு செய்துவிட்டார்கள். ஆனால் அந்த தலைப்பு நடந்து வந்த பாதை ரொம்பவே வேடிக்கையானதாக இருக்கிறது....

Close