நய்யாண்டி – விமர்சனம்

மேயுற ஆட்டை நக்குற ஆடு ‘நய்யாண்டி’ பண்ணிய மாதிரி நல்லாயிருந்த சற்குணத்தை… கடந்த ஏழெட்டு தமிழ் படங்களாகவே ‘அவ்வளவு நல்லாயில்லாத’ தனுஷ் மொக்கையாத்தா கோவிலுக்கு நேர்ந்து விட்டிருக்கிறார். மே.. மே…ன்னு கத்துனாலும் சரி, மேல கீழே தவ்வுனாலும் சரி, கழுத்துக்கு மேல தொங்குற கத்தியிலேர்ந்து இனிமே சாப விமோசனம் பெறுவது அவ்வளவு சாதாரணமில்ல சற்குணம் சார். எதிர்காலத்தில் பத்து களவாணியும், இருபது வாகை சூடவாவும் பண்ணிதான் நீங்க மறுபிறவி எடுக்கணும்.

தனுஷின் அறிமுகக் காட்சியை சொல்வதற்கு முன்னால், சற்குணத்தின் அறிமுக காட்சியை சொல்ல வேண்டும். ‘என்னது? அவரும் நடிக்க வந்துட்டாரா?’ என்று அதிர்கிற ரசிகர்களுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை. கதை மாந்தர்களை அறிமுகப்படுத்தும் ஒரே ஒரு வேலையைதான் அவர் செய்திருக்கிறார். அதற்கே பயங்கர எபெக்ட் தியேட்டரில். பஞ்சரான சரக்கு லாரியை ஏழெட்டு பேர் தள்ளிக் கொண்டே வருவது போல சிக்கலும் பிக்கலுமாக அவர் நடந்து கொண்டே சொல்லும் கதை எதுவும் நமது காதில் கேட்டால்தானே, ஒரே கைதட்டல்! (ரசிக்கிறாங்களாமா)

சரி… நகைச்சுவை படத்தில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று அடுத்த கட்டத்திற்கு தாவி விடலாம். தனுஷ் நஸ்ரியாவை லவ் பண்ண ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதில் ஒன்று அவர் ஓடி வந்து தனுஷ் சாய்ந்து கொண்டிருக்கும் ஒரு பனை மரத்தை தொட்டுவிட்டு மின்னலாய் ஓடி விடுகிறார். இவருக்காவது இவ்வளவு காரணம் போதும். இப்படத்தில் வருகிற வில்லன் இருக்கிறாரே, அவர் இன்னும் பெரிய பம்மாத்து. ரயிலடியில் ஓரமாக நிற்கிற போஸ்ட் மரங்களை எண்ணிக் கொண்டே வரும் நஸ்ரியா, ம்… போ.. போ… என்று ரயிலை சொல்கிறார். ம்… நில்லு… நில்லு… என்று ரயிலை சொல்கிறார். இந்த வில்ல அசமஞ்சம் அவர் தன்னைதான் சொல்வதாக நினைத்து சிலாகித்து நஸ்ரியாவை இந்த இடத்தில் வைத்தே மனசில் பூட்டி வைத்துக் கொள்ள, இன்டர்வெல் நேரத்தில் இவருக்கும் அவருக்கும் நிச்சயம் நடக்கிறது. அதற்கு முந்தைய ரீல்களில் நஸ்ரியாவை தனுஷ் எவ்வாறு கரெக்ட் பண்ணுகிறார் என்பது முன்னுரை.

நிச்சயதார்த்த வீட்டிலிருந்தே நஸ்ரியாவை தனுஷ் அழைத்துக் கொண்டு ஒட, வில்லன் கூட்டம் ஆளூக்கொரு டார்ச் லைட் சகிதம் நள்ளிரவில் விரட்டி விரட்டி தேடுகிறார்கள். (அந்த ராத்திரியிலேயும் அவசரத்துக்கு அள்ளிட்டு வர்ற அளவுக்கு அத்தனை லைட்டுகள் எப்படி? சொந்தமா எலக்ரிக் ஷாப் வச்சுருப்பாய்ங்களோ என்னவோ!) தன்னுடன் வந்துவிடும் நஸ்ரியாவை, நண்பன் சூரியின் உதவியுடன் தன் வீட்டுக்கே அனுப்பி வைக்கிறார் தனுஷ். அநாதை என்று சொல்லி அவரை இவர் வீட்டிலேயே வேலைக்கும் சேர்த்துவிடுகிறார் சூரியும். அங்கே தனுஷின் அண்ணன்களான ஸ்ரீமன், சத்யன் இருவரும் நஸ்ரியாவை லவ் பண்ண அலைய, அவரோ உங்க தம்பிதான் என் புருஷன் என்று சொல்ல முடியாமல் திணற, எப்படியோ படம் சில காட்சிகளில் சுவாரஸ்யமாகவும், சில காட்சிகளில் அசுவாரஸ்யமாகவும் ஓடி முடிகிறது.

‘சண்டக்கோழி மாதிரி ஒரு ஃபைட் வச்சு முடிச்சுராலாம் சார்’ என்று விஷால் கால்ஷீட் கிடைக்காத யாரோ ஒரு அசிஸ்டென்ட் புண்ணியவான் டிஸ்கஷனில் மங்களம் பாடியிருப்பார் போலும். அதையே க்ளைமாக்சாக வைத்து வில்லனை புரட்டியெடுத்து நஸ்ரியாவை கைப்பிடிக்கிறார் தனுஷ்.

ராஞ்சனா என்ற படத்தில் தனுஷின் நுணுக்கமான நடிப்பை பார்த்து வியந்தவர்கள் இந்த படத்தையும் ஒரு முறை பார்த்துவிடுவது நல்லது. நடிப்பை பொருத்தவரை எல்லா நேரங்களிலும் ரம்மியடிக்கும் தனுஷே இந்த படத்தில் ஒன்றும் முடியாமல் கும்மியடிக்கிறார். அர்ஜுனன் வில்லுல அம்பு முறிஞ்சுட்டா அவ்ளோதான் வாத்யாரே… புரிஞ்சுக்குங்க! அதிலும் நடன காட்சிகளில் ஒரு டைப்பான ஹேர் ஸ்டைலோடும், சில பல காஸ்ட்யூம்களை அணிந்து கொண்டும் வர்றாரு பாருங்க…. இதற்கெல்லாம் பொறுப்பேற்றுக் கொண்ட புண்ணியவான்களைதான் நொந்து கொள்ளணும். டான்ஸ் கோரியோ கிராபி இதையெல்லாம் துக்கி சாப்பிடுகிறது.

வேகாத உப்புமாவுக்கா இவ்வளவு வெங்காயம் அறிஞ்சீங்க நஸ்ரியா? பட்… துறுதுறுப்பான உங்க பாவங்களும், ஆழாக்கு சைசில் இருந்தாலும் லோலாக்கு பாட வைக்கும் உங்கள் அழகும்தான் இந்த படத்தின் ஒரே ஆறுதல்.

கையில் குத்து விளக்கை வைத்து கொண்டு மாடு மாதிரி வளர்ந்திருக்கும் மகன்களை சாத்தும் பிரமிட் நடராஜன் கலக்கியிருக்கிறார். ‘அவன் பச்ச மண்ணுடா’ என்று அவர் டயலாக் விடும்போது, அரங்கு நிறைகிறது விசில்களாலும் கைதட்டல்களாலும். வழக்கமாக எல்லா படங்களிலும் ஓவர் ஆக்ட் செய்தே உபத்திரவப்படுத்தும் ஸ்ரீமன் அளவாக நடித்து அடடா… என்று பாராட்ட வைக்கிறார்.

சத்யன்…? ம்ஹும், உங்களுக்கும் மற்றவங்களுக்காக வாங்கி வைத்திருக்கிற அதே ‘ஸாரி’ பார்சல்தான்.

இசை – ஜிப்ரான். பாடல்களை தனியாக கேட்டுக் கொள்வது புண்ணியம்.

‘கசாப்பு கடையில் கத்தி மட்டும் அழகு’ என்பது போல வேல்ராஜின் ஒளிப்பதிவு இந்தப்படத்திலும் அழகு.

நய்யாண்டி- பண்ணியவர்களும் பாவம், சிக்கியவர்களும் பாவம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

4 Comments
 1. suprajaa says

  It seems like I have already seen this movie with few changes in Malayalam and another foreign language.

  1. Murali says

   Yeah, Movie melepparambil aanveedu by Jayaram. Shobhana

 2. ஆர். ஆனந்தம் says

  உங்கள் விமர்சனம் அருமை, இப்படி ஒரு நய்யாண்டியான விமர்சனத்தை நான் படித்ததில்லை,

 3. rrmercy says

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடிகர் பிரபு

  The IV Annual Convocation of Vels University was held on 12.10.2013 at 11.00 a.m. at the Vels University Campus. Dr.Vishwa Mohan...

Close