நிமிர்ந்து நில் / விமர்சனம்

குழம்பு ஊற்றுவார் என்று நினைத்தால் எரிமலை குழம்பை ஊற்றியிருக்கிறார் சமுத்திரக்கனி. அந்நியன் ரமணா டைப் கதைதான் என்றாலும், முக்காலத்திற்கும் தேவையான வெக்காள சூப்தான் இது!

ஆசிரமத்தில் தங்கி படிக்கும் ஜெயம் ரவிக்கு படிப்பு முடிந்து வெளியே வந்தால் எங்கு நோக்கிணும் சட்ட மீறல்கள், சவடால் கூச்சல்கள்தான் தெரிகிறது. ஒருத்தர் கூட சட்டத்தை மதிக்கலையே என்று அந்நியன் அம்பி போல கவலைப்படுகிறார். எதற்கெடுத்தாலும் நேர்மை பேசும் இவரை இழுத்துக் கொண்டு போய் நைய புடைக்கிறது போலீஸ். நிஜத்தை பேசுனா அடிக்கிறாங்களே என்று கதறும் அவர், அதே நிஜத்தின் உதவியோடு நேர்மையற்றவர்களை பந்தாடுவதுதான் ‘நிமிர்ந்து நில்’. நடுநடுவே காதல், டூயட் என்று கமர்ஷியல் சமாளிப்ஸ்! நல்லவேளையாக நண்பேன்டா பாலிஸியிலிருந்து சமுத்திரக்கனி விலகி வெளியே வந்ததற்காகவே இன்னும் ஒரு கரண்டி எரிமலைய ஊத்துங்கப்பா தியேட்டர்ல…

இயக்குனர் சமுத்திரக்கனியை கடைசியில் வைத்துக் கொள்வோம். முதலில் வசனகர்த்தா சமுத்திரக்கனிக்கு வாய் நிறைய பாராட்டுகள். முதல் பாதியில் ஜெயம் ரவி கேட்கும் எல்லா கேள்விகளும், டீக்கடை, மரநிழல், கடலோரம், கடையோரம் என்று விவாதிக்கப்பட்டு விட்டேத்தியாக கிடக்கிற குமுறல்கள். அனுபவித்து எழுதியிருக்கிறார். முதல் பாதி படம் முடியும்போது கைதட்டுகிறார்கள் ரசிகர்கள். அப்புறம்? அவர் கண்ணே அவர் மீது பட்டிருக்கும் போலிருக்கிறது. செகன்ட் ஹாஃப் பக்கா சினிமாடிக் காமெடி.

ட்ரெய்லரை பார்க்கும்போது, அந்த ரேணிகுண்டா ரவிதான் படத்தின் முதுகெலும்பு என்று நினைத்திருந்தோமல்லவா? அந்த ரேணிகுண்டா பார்ட்டிதான் நம்பிக்கையின் முதுகெலும்பை உடைக்கிறார். க்ளைமாக்சில் ‘நான் நடத்துறது எல்லாமே அநாதை ஆசிரமம்’ என்கிறாரே, அதற்காகவே ரூம் போட்டு சிரிக்கலாம். அப்பாவி ரவிக்கும் அமலாபாலுக்குமான லவ் எபிசோட் பிரமாதம். ‘உன்னை மாதிரி யாரும் வாழ முடியாது. அட்லீஸ்ட் உன்னோடவாவது வாழலாமேன்னுதான்’ என்று அமலா சொல்வது அக்மார்க் ரைட்.

ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைக்கும் ரவியின் தந்திரம் ஸ்மார்ட். 147 அரசு அதிகாரிகளின் உதவியுடன் இல்லாத ஒருவனுக்கு பாஸ்போர்ட் எடுக்கிறார்கள். அவன் மீது ஏதேதோ குற்றம் சுமத்தி அரெஸ்ட் வாரண்ட்டும் வாங்குகிறார்கள். நல்ல கற்பனை. மாட்டிக் கொள்ளும் அக்யூஸ்ட்கள் அத்தனை பேரும் சகட்டுமேனிக்கு காமெடி பண்ணி செகன்ட் ஹாஃபை நகர்த்துகிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் என்பதற்கு பதிலாக அரவிந்த் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் ரவிக்கு. விரைவில் ஆம் ஆத்மியில் சேருவார் போலிருக்கிறது சமுத்திரக்கனி?

நட்ட நடுரோட்டில் லவ்வில் விழுந்து ஜெயம் ரவியை ஃபாலோ பண்ணும் அமலாபால் கேரக்டர் அழகோ அழகு. அறிமுகமான அஞ்சாவது நிமிஷத்தில் மச்சி… என்று சூரியை கபளீகரம் செய்வதெல்லாம் அரங்கு நிறைந்த கைதட்டல்களுக்கு வழி ஏற்படுத்துகிறது. சூரி மட்டும் என்னவாம்? கொஞ்சமும் எக்ஸ்ட்ரா அலட்டல் இல்லாமல் இயல்பாக பொருந்திப் போகிறார். நண்பனுக்காக அவர் பதறுகிற காட்சிகளில் குணச்சித்திர சூரியும் தெரிகிறார். யாருங்க அந்த போலி டாகுமென்ட் பொண்ணு? விட்டால் விஜயசாந்திக்கு ரீப்ளேஸ் பண்ணலாம் போலிருக்கே?

பேராசிரியர் ஞானசம்பந்தம், தம்பி ராமய்யா, சித்ரா லட்சுமணன், ஹலோ கந்தசாமி, என்று கூட்டமே கவர்கிறார்கள். முதன் முறையாக பஞ்சு சுப்புவின் கேரக்டரும் பிடிக்கிறது. இவர் பிரபல வழக்கறிஞர் ராஜா செந்துர் பாண்டியாக நடித்திருக்கிறார். நீயா நானா கோபியை தவிர யார் நடித்திருந்தாலும் உப்பு சப்பு இல்லாமல் போயிருக்கும். மிக சரியான தேர்வு.

கொஞ்சூண்டுதான் வருகிறார் சரத்குமார். பிற்பாதியில் இவரது கேரக்டரை நீட்டித்திருந்தால் வேறொரு துல்லியமான திரைக்கதை கிடைத்திருக்கலாம். அவரது ரசிகர்களுக்கு இது ஏமாற்றம்தான்.

இன்னும் எத்தனை நாளைக்குதான் கானா பாலாவின் கரிச்சட்டி முகத்தை கண்டு எரிச்சலுருவது? பாடுகிறேன் பேர்வழி என்று அவரது சேஷ்டைகள் தாங்க முடியல பாஸ்… குரல் நன்றாக இருக்கிறது. தயவு செய்து பின்னணியோடு நிறுத்திக் கொள்ளுங்கள் சமுத்திரக்கனிகளே…

ஜி.வி.பிரகாஷ் இசையில் எல்லா பாடல்களும் இனிமை. நடிப்புக்கு குட்பை சொல்லிட்டு ஆர்மோனிய பொட்டிக்கு முன்னாடி உட்காருங்க பிரதர். ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே கச்சிதம். இன்டர்வெல்லை ஒட்டி வரும் அந்த ஹைவேஸ் ஃபைட்டுக்காகவே ஸ்டன்ட் சிவாவின் ஆக்ஷனுக்கு ஆஹா சொல்லலாம்.

திருப்பாச்சி அருவாளை தடை செய்தால் என்ன? சமுத்திரக்கனி இருக்கிறாரே!!!

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
MARUMUGAM MOVIE STILLS

[nggallery id=314]

Close