பாங்காக் பயண அனுபவங்கள் – 1 -ஆர்.எஸ்.அந்தணன்

‘பாங்காக் அனுபவத்தை எப்ப எழுதப்போறீங்க?’ என்று நேரிலும் போனிலும் ஃபேஸ்புக்கிலும் கேட்ட நண்பர்களுக்காகதான் இந்த நீண்ட கட்டுரை. ஏதோ அஞ்சு நாளு ஊரு சுத்திட்டு அப்படியே அஞ்சாறு வருஷம் பிளாட் வாங்கி அங்கேயே குடியிருந்தவன் மாதிரி எழுதியிருக்காண்டா என்று யாராவது என் போஸ்டரில் சாணியடித்தால் அதையும் பொறுத்துக் கொள்வேன். ஏனென்றால் பயணக்கட்டுரை எழுதுகிற அளவுக்கு நான் ஒன்றும் மணியனும் அல்ல. வெட்டியாக ஊரை சுற்றுகிற அளவுக்கு money வீங்கிப் போனவனும் அல்ல.

திடீரென நண்பர் சதீஷ் அழைத்தார். ‘சார் சொந்த வேலையா கோலாலம்பூர் போறேன். அப்படியே பாங்காக் வழியா போவலாம்னு ஒரு ஐடியா. வர்றீங்களா? ஏர் ஏஷியாவுல போனா கொஞ்சம் சீப்’ என்றார். ‘கூடவே இன்னொரு நண்பரும் வர்றாரு. அவர் அப்படியே லண்டன் போயிடுவார். நீங்க மட்டும் பாங்காக்லே இருந்து ரிட்டர்ன் ஆகிடலாம். விரும்புனா எங்கூட கோலாலம்பூர் கூட வாங்க. ஒண்ணா போவலாம்’ என்று அழைக்க, இடது மூளையின் ஓரத்தில் எலக்ட்ரிக் பல்பு மின்னியது. ‘அங்க நாம பார்க்க வேண்டிய ஏராளமான புத்தர் கோவில்கள் இருக்கு. சைட் சீயிங் அமர்க்களமா இருக்கும். போட்ல போகலாம். பாரசூட்ல பறக்கலாம். ஒரு இடத்தில் கடல்ல இறக்கிவிடுவாங்க. இறங்கி ஆழமா போய் பார்த்திங்கன்னா அங்க கூட நீங்க கண்ணாடி பார்த்து தலை சீவலாம். அப்படியிருக்கும் வாட்டர்’னாரு சதீஷ்.

‘அவ்ளோதானா சதீஷ்?’ என்று நான் கேட்டதை, வடிவேலு போல ‘ஹைய்யோ ஹைய்யோ’ என்று அவர் சிரித்து மழுப்ப, அஞ்சுநாள் துணியை வாஷிங் மிஷினுக்குள் திணிக்க சொல்லிவிட்டு, பயணத்திற்கு தயாரானேன். என்னை மாதிரிதான் ரொம்ப பேர் தாய்லாந்தை நினைத்து வைத்திருக்கிறார்கள். அங்கே திரும்பிய இடமெல்லாம் ‘தில்லாலங்கடி’ என்பதுதான் அவர்களின் கற்பனையாகவும் இருக்கிறது. நிஜம் அதுவல்ல என்பது போன பிற்பாடுதான் தெரிகிறது.

அங்கே விவசாயமும், வியாபாரமும்தான் அவர்களுக்கு முழுநேர தொழில். கண்ணுக்கு அழகான ஊர் என்பதால் டூரிசத்தையும் உரம் போட்டு வளர்க்கிறார்கள். ஓட்டல்கள் நிரம்பி வழிகின்றன. உலகத்தின் எல்லா மூலைகளில் இருந்தும் மக்கள் வந்து போகிறார்கள். போகிற போக்கில் நம் கண்களில் புடவை வேட்டியெல்லாம் தென்படுகிற அளவுக்கு தமிழர்களும் அலைந்து திரிகிறார்கள். இதில் பாதிபேர் புத்தனை தரிசிக்க வந்தவர்கள்தான். புத்தி தடுமாறிய கொஞ்ச பேர்தான் ‘அது எங்க இருக்கு’ என்று ஆவலோடு ஃபிளைட் இறங்கும்வரை காத்திருக்கிறார்கள்.

மூணு மாசத்துக்கு முன்னாடி புக் பண்ணினா ஏர் ஏசியாவுல வெறும் எட்டாயிரம் ரூபாய்தான். போக வரவே இவ்வளவு சீப். ஆனால் முதல் நாள்தான் டிக்கெட் புக் பண்ணினார் சதீஷ். துட்டு? ஒரு ஆளுக்கு பத்தொன்பது ஆயிரத்து எண்ணுத்தி சொச்சம். ஏர்போர்ட்டில், ‘சாப்பிடுறீங்களா?’ என்று கேட்ட சதீஷிடம், ‘ம்ம்ம்… பிளைட்ல சாப்டுக்கலாம்’ என்றேன் நான். ஒருமுறை நான் துபாய் போயிருந்தபோது ’எமிரேட்ஸ்‘சில் பிரியாணி தின்ன புத்தி. விடுமா? ஆனால் சதீஷ் சொன்னதை கேட்டதும் ‘அடப்பாவிகளா’ என்றிருந்தது. ‘நாம போறது ஏர் ஏசியா. கோயம்பேடு ஆம்னி பஸ்சை அப்படியே றெக்கை கட்டி பறக்கவிட்டா எப்படியிருக்கும்? அதுதான் இந்த பிளைட். நம்ம கோயம்பேட்லயாவது குடிக்க தண்ணி குடுப்பான். இங்க அதுக்கும் காசு’ என்றார் சதீஷ்.

அங்க கொடுக்கிற காசை இங்கேயே கொடுப்போமே என்று சென்னை விமான நிலையத்தில் தோசைக்கு ஆர்டர் பண்ணினோம். சரக்கு மாஸ்டர் கையில விரல் சுத்தி வரக்கடவது என்று சாபம் கொடுத்துவிட்டு கிளம்புகிற அளவுக்கு அப்படியொரு ருசியான தோசை அது. விலை 120 ரூபாய். ‘போங்கடா போங்க… எனக்கு விரல் சுத்தின்னா எல்லாத்துக்கும் பன்றி கறியை சல்லிசா சீவி சாப்பாட்டுல போட்டுக் கொடுப்பானே தாய்லாந்துக்காரன்? அவனுக்கு என்ன சாபம் கொடுப்பே என்று சரக்கு மாஸ்டர் மனசுக்குள் ஆவேசப்பட்டிருப்பார். அதை நான் போயிறங்கிய எட்டாவது மணி நேரத்தில் ப்யூராக அனுபவித்தேன். எல்லா ஃபுட்டுமே குடலை புடுங்குகிற நாற்றத்தோடுதான் தயாரிக்கிறார்கள் அங்கே.

அவனவன் ஊரில் அவனவன் நளமகராஜா. நம்ம ஊர் கொத்துமல்லி சட்னியை கூட குடலை புடுங்குது என்பான் அவன். இதுதானே ஊருக்கு ஊர் நிலவி வருகிற யதார்த்தம்? இரவு 9.30 க்கு ஷார்ப்பாக கிளம்பிய ஃபிளைட் மூன்றரை மணி நேரம் வானில் பறந்து விடியற்காலை அங்கே போயிறங்கியது.

தாய்லாந்தில் கால் வைக்கும் முன், ராம் பற்றி சொல்லியாக வேண்டும். அவர் தாய்லாந்தில் இயங்கி வரும் தனியார் டூரிசம் ஒன்றின் அதிகாரி. சதீஷின் நண்பர். ஃபிளைட் இறங்கும்போது எங்கள் நபர் உங்களுக்காக ஏர்போர்ட்டில் நிற்பார் என்று கூறியிருந்தார். ஆனால் நமது பெயரை தவிர வேறு பெயர்களை தாங்கிய தாய்லாந்து அன்பர்கள் அவ்வளவு நள்ளிரவிலும் சிரித்த முகத்துடன் காத்திருக்க நம்ம ஆளை காணோமே என்று தேடிக் கொண்டிருந்தோம்.

‘ராமுக்கு போன் அடிக்கலாம். ஆனால் உறங்கிக் கொண்டிருப்பாரே’ என்றார் சதீஷ். ‘அதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க. விடாம போன் அடிங்க… தமிழனோட கால் தாய்லாந்துல பட்டுடுச்சுன்னு அவருக்கு உணர வைப்போம்’ என்றேன் நான்.

நம்மெல்லாம் நாகரீகம் பார்த்தா நாடு தாங்குமா?

(சுற்றுலா தொடரும்…)

3 Comments
  1. Sridhar says

    சொல்லவே இல்லையே.தெரிஞ்சா நானும் வந்து இருப்பேன்.

  2. Raghu says

    தலைவரே Super. next episode எழுதுங்கோ…waiting for the next one…

  3. geo.fernando says

    switzerland eppo varinga?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இடி நின்றாலும் இரைச்சல் குறையலையே… -அஞ்சலி அதிர்ச்சி

இடி நின்றாலும் இரைச்சல் குறையவில்லை கதையாகிவிட்டது அஞ்சலியின் நிலைமை. கடந்த சில தினங்களுக்கு முன் வார இதழ் ஒன்றில் இவருக்கும் அரசியல்வாதி ஒருவரின் மருமகனுக்கும் கல்யாணம் ஆகிவிட்டதாகவும்...

Close