பாலுமகேந்திராவின் பிள்ளைகள்… -தேனி கண்ணன்

அப்போது ராமாவரத்தில் ஒரு வீட்டில் மவுனிகாவோடு தங்கியிருந்தார் பாலுமகேந்திரா. அவர் என்னை பார்க்க விரும்புவதாக மவுனிகா எனக்கு போனில் தெரிவித்திருந்தார் மவுனிகா. காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருந்தேன். “இதோ கண்ணன் வந்தாச்சு.” என்று பாலு சார் இருந்த அறையை எட்டிப் பார்த்து சொல்லி விட்டு சிரித்துக் கொண்டே வந்து கேட்டை திறந்தார்.

“நீங்க பேசிகிட்டிருங்க நான் சாப்பிட எதாச்சும் கொண்டுவரேன்” என்று மவுனிகா உள்ளே போக , “வா கண்ணன் உட்கார்” என்று மெதுவாக கையை காட்ட அமர்ந்தேன். ”எனக்கு ஒரு உதவி பண்ணனும் கண்ணன்” என்று என்னைப் பார்த்தார். “என்ன இப்படி கேக்குறீங்க. என்ன செய்யனும் சொல்லுங்க. செய்றேன். “மவுனியோட வீட்ல ஒரு திருமணம் அவளுக்கு உதவி செய்ய யாருமில்ல. நீ கூட இருந்து உதவி செய்ய முடியுமா.” என்று சொல்லிவிட்டு அமைதியாக என்னைப் பார்த்தார். “என் வேலைகளுக்கிடையில் கண்டிப்பா இதை நான் செய்து கொடுக்கிறேன் சார்.” என்றதும்தான் அவர் முகத்தில் சிரிப்பை பார்க்க முடிந்ததது. “நன்றியப்பா” என்று சொல்லிவிட்டு காபியோடு வந்த மவுனிகாவிடம் “கண்ணனிடம் சொல்லிட்டேன் சந்தோஷம்தானே” என்று சிரிக்க, தேங்க்ஸ் என்றபடி எனக்கு காபியை கொடுத்தார். அந்த காலகட்டத்தில் பாலு சாருக்கு நிறைய கடன்கள் இருந்ததாக கேள்விப்பட்டிருந்தேன். மேலும் மருத்துவச் செலவு ஒருபக்கம் திணறடித்துக் கொண்டிருந்தது. இதனால் மவுனிகா அப்போது நிறைய சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

குறும்படங்கள் குறித்து அவரோடு பேச ஆரம்பித்தேன். பரபரப்பான இயக்குனராக இருந்தபோதும் குறும்படங்கள் எடுப்பதை பாலுமகேந்திரா எப்போதும் கைவிட்டதில்லை. இது பற்றி அவரிடம் கேட்டபோது, “குறும்படங்கள் எடுப்பது ஒரு சுகானுபவம்.” என்றார். நான் அவர் எப்போதோ எடுத்த ஒரு குறும்படத்தைப் பற்றி என் உணர்வுகளை பகிர்ந்து கொண்டேன். அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அது குமுதத்தில் ஒரு பக்க கதையாக வந்திருந்தது. அது ஏற்படுத்திய பாதிப்பால் அந்த கதையை படமாக்கியிருந்தார் பாலு சார். “அந்த கதையை எழுதியவர் பெயர் எனக்கு மறந்து விட்டது கண்ணன். உனக்கு நினைவிருக்கா.” என்றார் “இருக்கு சார் சூரியசந்திரன்.” என்றேன். “ஆமாம்ப்பா. அவரை கண்டுபிடிக்க முடியுமா கண்ணன்.” என்று குழந்தைபோல் கெஞ்சினார். காரணம் அந்த கதையின் மேல் அவர் வைத்திருந்த காதல். கண்ணுக்குத் தெரியாத ஒரு அறிமுக எழுத்தாளர் எழுதிய படைப்புதானே என்று அலட்சியப்படுத்தாமல் அந்த படைப்பை மதித்து அவரை சந்திக்க துடிக்கும் அந்த படைப்புள்ளம் யாருக்கு வரும்?. அவர் உதவியாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இயக்குனர்களுக்கு கூட வராது.

பாலு சாரை கிறங்கடித்த அந்தக் கதை இதுதான். ஊரில் பெரிய நிலசுவான்தாராக இருக்கும் ஒரு பெரியவர் தெரு நாய்குட்டி ஒன்றை கண்டெடுத்து வளர்த்து வருவார். அவர் வீட்டில் யாரும் அவரை மதிப்பதில்லை. இந்த நாய்தான் அவருக்கு துணை.. குட்டிநாய் வளர்ந்து பெரிதாகிவிடும். திடீரென்று ஒரு நாள் அந்த பெரியவர் இறந்துவிடுவார். பெரும் சொத்து வைத்திருப்பவர் என்பதால் சொந்தங்கள் திரண்டு வந்தது. பெரியவர் உடலை நாற்காலியில் வைத்து அழும். அப்போது ஒரு புகைப்படக்காரர் பெரியவரை சுற்றியழும் கூட்டத்தை போட்டோ எடுப்பார். அங்கு அழுதுகொண்டிருந்த அத்தனைபேரும் உடனே முகத்தை துடைத்து, தலையை சரிசெய்து போட்டோவிற்கு போஸ் கொடுப்பார்கள். ஆனால் அந்த பெரியவர் வளர்த்த நாய் மட்டும் ”நம்ம ஃப்ரண்டுக்கு என்னாச்சு” என்கிற மாதிரி உயிரற்ற அவரின் உடலை வெறித்து பார்த்தபடி நிற்கும். இதுதான் அந்த கதை. இதை உயிரோட்டமாக படம்பிடித்திருப்பார் பாலுமகேந்திரா. ஒரு படைப்பிற்கு மரியாதை செய்யும் அந்த பேரன்பும் பெருங்கருணையும் பாலுமகேந்திராவிற்கு மட்டுமே உண்டு. அவரோடு பேசி முடித்து கிளம்பும் போது, “இரு என் பிள்ளைகளை உனக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்.” என்று மாடிக்கு அழைத்துப்போனார். எனக்கு யாராக் இருக்கும் என்று ச்ர்ப்பரைஸ். மாடிக்கு போனால் மாடி முழுதும் வண்ண வண்ண பூக்களோடு செடிகள் நிறைய இருந்தன. ஒவ்வொரு செடியாக எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். ‘இவன் பேரு வித்தியாசமானது. இவன் என்ன செய்வான் தெரியுமா இலைகளையே பூக்களோட நிறத்துல முளைக்க வைப்பான். மூணு மாசம் இலைகளை உதிர்த்து விட்டு நிற்பான். அப்புறம் தளைப்பான்.” என்று நிஜக் குழந்தைகளை போல வாஞ்சையோடு செடிகளை தடவிக்கொடுத்தார்.

இந்த நேரத்தில் தான் ஒரு தலைசிறந்த கேமராமேன், இயக்குனர் என்ற எந்த கிரீடமும் அவர் தலையில் இருந்ததில்லை. இந்த எளிமையை பல்வேறு இடங்களில் அவரிடம் காணலாம்.. நான் அப்படி பலமுறை பார்த்த இடங்கள் புத்தக வெளியீட்டுவிழா, இலக்கிய கூட்டங்கள்,. பத்து பேர் கூடியிருக்கும் கூட்டமென்றால்கூட பின் வரிசையில் அமைதியாக அமர்ந்து கூட்டத்தை ரசிப்பார். யாராவது வற்புறுத்தி அழைத்தால் மட்டுமே முன்னால் போய் உட்காருவார். பேசச்சொன்னால் மறுத்து விடுவார். இப்படி ஒரு இயக்குனருக்கு படம் எடுப்பது மட்டுமே வேலையில்லை. அவன் இலக்கிய உலகத்தினரோடும், சாமான்ய மக்களொடும் இணைந்திருக்கவும் வேண்டும் என்ற பண்பு அவரிடம் இருந்தது.. ஆனால் அந்த மனிதனின் பெருங்கருணைக்காகவே என் வேலைகளுக்கிடையே மௌனிகா அவர்களுக்கு திருமண ஏற்பாடுகளில் உதவியாக இருந்தேன்.

அதற்கு பிறகு வேறொரு சந்தர்ப்பத்தில் பாலு சாரை பேட்டி எடுக்க போயிருந்தேன். இப்போது அவர் சிங்கப்பூர் ப்ளாஸா பக்கத்தில் இருந்தார். நான் போனபோது அவர் அலுவலக சுவரில் ’நடிக்க ஆட்கள் தேவை’ என்று எழுதியிருந்தது. அது பற்றி பாலு சாரிடம் கேட்டேன்,. ”நம்ம கதைக்கு ஏற்ற ஆட்கள்தான் தேவை.” என்று மட்டும் சொல்லிவிட்டு மௌனமானார். ‘அனல் காற்று’ என்ற படம் பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். “ஹீரோ யார் சார்” என்றதும், ”நமக்கு பெரிய ஹீரோவெல்லாம் ஒத்துவராது. என்ஹீரோ லயோலா கல்லூரியில் படிக்கிறார்.” என்று மட்டும் சொன்னார். ”இங்க காடு பற்றி ஒரு படம் எடுக்க வேண்டுமென்றாலும் காதல்வேணும், கடல் பற்றி ஒரு படம் எடுக்கனும்னாலும் காதல் வேணும். அதை இந்த ’அனல் காற்று’ வித்தியாசப்படுத்திக்காட்டும் தேனி.” என்றார்.

அப்போது எனக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது. வேலை நேரத்திலேயே தெரிந்தவர்களுக்கு அழைப்பிதழ் வைத்துக்கொண்டிருந்தேன். நேரம் போதமலிருந்தது. இந்த நேரத்தில் பாலு சார் வரச்சொல்லி விட்டார். பரபரப்பாக அவர் முன் அமர்ந்தேன். பேட்டியை ஆரம்பிக்கலாமா சார். என்றதும், ”நான் சொல்றது முழுமையாக வரமாட்டேன்கிறது தேனி அதனால் நான் எழுதிக்கொடுத்திடுறேன் ரெண்டு நாளில் சந்திப்போம்.” என்றார். எனக்கு அழைப்பிதழ் வைக்க நேரம் கிடைத்ததே என்று குஷி. “சார் உங்களோடு போட்டோ எடுத்துக்கனும்.” என்றேன் ’வா’ என்று அழைத்துக் கொண்டுபோய் அங்கிருந்த ஜன்னலை திறந்து விட்டு சுவரில் ஸ்டைலாக கை வைத்து கொண்டு நின்றார். போட்டோகிராபருக்கு எந்த ஆங்கிளில் எடுக்க வேண்டும். லைட்டிங் எப்படி வரணும் என்று முன்பே சொல்லி விட்டார். அப்படி ஒரு அக்கறை. இது தன்னை சந்திக்க வரும் அத்தனை பேரிடமும் இருக்கும். ’நான் கிளம்பிறேன் சார்.” என்றதும். ”இரு அதென்ன கையிலே.” என்றார். “எனக்கு திருமணம் அதான் பத்திரிகை நண்பர்களுக்கு சந்திக்கும் இடத்தில் அழைப்பிதழ் வைக்க ஏதுவாய் கையிலேயே வெச்சிருக்கேன்.” என்றேன். “ஏன்ப்பா எனக்கெல்லாம் அழைப்பு இல்லையா நான் வரக்கூடாதா” என்று கை விரல்களை விரித்து கேட்கவும் நான் பதறிப்போனேன். வெட்கமாகவும் போனது. அவசரமாக ஒரு அழைப்பிதழை எடுத்து பேரெழுதிக் கொடுத்தேன். பிரித்துப் பார்த்துவிட்டு என் மனைவி பேரை ஒருமுறை உச்சரிக்கிறார். “இங்க வா” என்று மறுபடியும் அறைக்குள் செல்கிறார். ஒரு ப்ரவுன் கவரை எடுத்து என் பெயரையும் என் மனைவி பெயரையும் எழுதி வாழ்க மணமக்கள் என்று எழுதி “இந்தா முதல் மொய் என்னுடையதுதான் என்று சிரித்துக் கொண்டே கொடுத்தார். “மவுனி வீட்டு திருமணத்தில் அவ்வளவு உதவியா இருந்த உன் திருமணத்துக்கு நானே வரணும். ஆனால் வேலைகள் இருப்பதால வர முடியல.” என்று என் கைகளை பற்றிக் கொண்டார்.

இதன் பிறகு பல வருடங்கள் கழித்து அவரின் பட்டறையில் சந்திக்க சென்றேன். ராஜா சாரின் புகைப்படக் கண்காட்சிக்காக அழைக்க சென்றிருந்தேன். “வா தேனி எங்கப்பா இருக்கே காணோம். ஆமா ராஜா போட்டோ கண்காட்சி நடக்கப்போறதா கேள்விபட்டேன். நீதான் அந்த ஏற்பாட்டை செய்யிறயா. ரொம்ப சந்தோசமா இருக்கு தேனி. நானும் கமலும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம் ராஜா அப்பலாம் கேட்கல. நாங்க செய்யாததை நீ செய்து சாதிச்சிட்ட. நான் கண்டிப்பா வரேன். அன்னிக்கு காலையில மட்டும் எனக்கு போன் பண்ணிடு.” என்று பக்கத்திலிருந்த டைரியை எடுத்து தன் கைப்படவே குறித்து வைத்துக் கொண்டார். அதன் பிறகு அவர் கேட்டதுதான் அவரின் படைப்புப் பாசம். “தேனி அந்த சூரியசந்திரனை கண்டுபிடிச்சிட்டியா.” என்றதும் நான் ஆடிப்போய் விட்டேன். கடைசிவரைக்கும் கதையும் கருணையுமாக வாழ்ந்து விட்டுப் போன பாலு சாரை இப்போது நினைத்தாலும் மனம் கலங்குகிறது. யாரோ முகம் தெரியாத ஒரு எழுத்தாளனை பார்க்க, இந்திய சினிமாவின் முகமாக இருந்த ஒரு இயக்குனர் ஆசைப்படுகிறார் என்றால் அந்த எளிமையை என்னவென்று சொல்வது. ஆனால் அவரின் உதவியாளர்களாக இருந்தவர்களோ எழுத்தாளர்களோ எளிதில் சந்திக்க முடியாத சந்திரகுப்த மௌரியர்களாகவே வலம் வருகிறார்கள்.

பாலு சார் நீங்கள் பிள்ளைகளாக நினைத்து வளர்த்து, உருவாக்கிய பிரமாண்ட இயக்குனர்கள் செய்யப்போகும் காரியம் என்ன தெரியுமா? காதலோடு கட்டி வளர்த்த உங்களின் நடிப்புப் பயிற்சி பட்டரையை இடித்து விட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்போகிறார்களாம். இந்த தகவல் உங்கள் ஆன்மாவிற்கு தெரிந்து விடக்கூடாது என்பதுதான் எனக்கு கவலையாக இருக்கிறது

-தேனி கண்ணன்.
அலைபேசி எண் – 09962015216

3 Comments
 1. Sridhar says

  Very Nice kanna. Excellent

 2. saravana kumar g says

  BALLU SIR -N

  oli velichathil

  Iraivelicham …

  Inivarum padaippaligalukku …

 3. Anantharaman says

  Nandri thiru Kannan sir…….Balu saarin pillaigal endru sollikolum andha Directors gonjam idhai padithupaarthal nandraga irukkum

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
MARUMUGAM

[nggallery id=241]

Close