பிரதமரை மட்டம் தட்டும் நோக்கம் இல்லை – ராகுல் காந்தி
தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் அவசர சட்டம் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமரை விமர்சித்ததற்காக ராகுல் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்,.பி, எம்.எல்.ஏக்கள் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆனால் இதை செயல்படுத்தாமல் இருப்பதற்காக மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்து அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியோ, முட்டாள்தனமான அவசர சட்டம் என்றார். அத்துடன் இந்த சட்டத்தை கிழித்து எறிய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ஐ.நா. பொதுசபை கூட்டத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மன்மோகன்சிங் நேற்று நாடு திரும்பினார். ராகுல் காந்தியின் விமர்சனத்தால் தாம் ராஜினாமா செய்யமாட்டேன் என்றும் ராகுலை சந்திப்பேன் என்றும் அவர் நேற்று தெரிவித்திருந்தார். இதனிடையே இன்று காலை பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் ராகுல் காந்தி இன்று காலை சந்தித்து அவசர சட்டம் தொடர்பாக தாம் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார்.
தாம் தெரிவித்த கருத்துகள், பிரதமரையோ அமைச்சரவையையோ மட்டம்தட்டும் நோக்கில் தெரிவிக்கப்படவில்லை என்றும் ராகுல் விளக்கம் அளித்தார்.