பிரம்மன் / விமர்சனம்

கட்சிக்காரன் கையில் கிடைத்த காலி சுவர் மாதிரி, சாக்ரடீஸ் கையில் சிக்கியிருக்கிறார் சசிகுமார். உலக சினிமாவையெல்லாம் கவனிக்கிற சசிக்கு உள்ளூர் சினிமாவை கண்டுகொள்ள நேரமில்லாமல் போனதுதான் இந்த சறுக்கலுக்கு காரணம். ஏனென்றால், பிரம்மனின் கதையோட்டம், வெயில், குசேலன், போன்ற படங்களின் பின்னோட்டம்தான்! அப்படியிருந்தும் இதை புதுக்கதை என்று நம்பி கால்ஷீட் கொடுத்த சசியின் அறியாமைக்கு இந்த படத்தின் சறுக்கலே சமர்ப்பணம். ஒருவேளை நட்பு குறித்து வரும் நாலே நாலு வசனங்களில் விழுந்திருப்பாரோ மனுஷன்?

சிறு வயதிலிருந்தே சினிமாவை நேசிக்கும் நண்பர்களில் ஒருவர் பெரிய இயக்குனர் ஆகிவிடுகிறார். மற்றவருக்கு ஊரிலிருக்கும் தியேட்டர் ஒன்றை லீசுக்கு நடத்துகிற பொறுப்பு. இத்தனைக்கும் வளர்ந்த பின்பு இருவரும் சந்தித்ததும் இல்லை. நட்பை வளர்த்துக் கொள்ளவும் இல்லை. ஒரு கட்டத்தில் தியேட்டருக்கு வரி கட்டாமல் இழுத்து மூட வேண்டிய நிலை. டைரக்டராகிவிட்ட நண்பனை பார்த்து பண உதவி பெறுவதற்காக சென்னைக்கு வருகிறார் தியேட்டர் சசிகுமார். வந்த இடத்தில் நான்தான் உன் பால்ய நண்பன் என்று சொல்ல முடியாமல் இக்கட்டில் நிறுத்துகிறது நண்பனின் உயரம். நடுவில் சசிகுமாருக்கே ஒரு படத்தை இயக்குகிற அதிர்ஷ்டமும் வாய்க்க, அந்த வாய்ப்பையும் நண்பனே தட்டிப்பறிக்கிறார். இயக்குவதற்காக வைத்திருந்த கதையை நண்பனுக்காக தாரை வார்த்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் சசிகுமாருக்கு மேலும் அதிர்ச்சி. அதே நண்பன், இவரது காதலியை கல்யாணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் நடக்கிறது. நண்பனுக்காக அவளையும் இழக்க தயாராகிற போதுதான், டைரக்டருக்கு உண்மை தெரிகிறது. கண்ணீரோடு கட்டி அணைத்துக் கொள்ள… சுபம்! ஓடு…ஓடு…ஓடு என்று ஒரு பாடலை படம் முடிகிற நேரத்தில் போடுகிறார்கள். (சுச்சுவேஷன் சாங்?)

அதென்ன தரித்திரமோ தெரியவில்லை. சினிமாவை பற்றியே சினிமா எடுத்தால் ஜனங்கள் ‘ஹுக்கும்’ என்கிறார்கள்.

நெற்றியில் புரள்கிற முடியும், வெள்ளந்தி சிரிப்புமாக நாம் பார்த்த சசிகுமார் இதில் மிஸ்சிங். ஒட்ட வெட்டிய முடியே ஒரு வித உறுத்தலுக்கு ஆளாக்குகிறது. அதிலும் ஒரு பாசக்கார அண்ணன், தங்கச்சி கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை கேட்டு சந்தோஷப்படுவதுதானே இயல்பு? இவரோ நாட்டு மக்கள் தொகையை பற்றியெல்லாம் பேசி ‘எங்கண்ணன் சசி’ என்று இவரை கொண்டாடிய தங்கச்சிகளுக்கெல்லாம் அதிர்ச்சியை கொடுக்கிறார். ஆனால் ‘நட்புக்காக எதையும் இழப்பேன்’ சென்ட்டிமென்ட் தப்பிக்க வைக்கிறது சசியை. சென்னைக்கு வந்து நண்பனை பார்க்க முடியாமல் திரும்புகிற போது, ‘ஃபிரண்டை பார்க்க விடலையேன்னு வருத்தமா?’ என்று சூரி கேட்க, ‘இல்ல… நண்பன் பார்க்க முடியாத உயரத்திலிருக்கானேன்னு சந்தோஷமா இருக்கு’ என்று சசி சொல்லும்போது கைதட்டதாத கரங்கள் இல்லை. ‘நண்பனுக்காக கட்டை விரலையே கொடுப்பேன். கதையை கொடுக்க மாட்டேனா?’ என்பதெல்லாம் சசி பிராண்ட் வசனங்கள். சரியான இடங்களில் பொருத்தி அழகு படுத்தியிருக்கிறார் டைரக்டர் சாக்ரடீஸ். ஆக்ஷனில் புரட்டி எடுக்கிறவர்தான் சசி. சந்தேகமில்லை. இந்த படத்தில் டான்சிலும் ஒரு ஸ்டெப் மேலேறி இருக்கிறார். பாராட்டுகள்.

முதல்பாதி சந்தானத்திற்கும் இரண்டாம் பாதி சூரிக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டாலும், இருவருமே மனசை நிறைக்கிறார்கள். நானும் உன் நண்பன்தான். உனக்கெப்படி அதெல்லாம் தெரியும்? என்று சந்தானத்தை உருக்கமாகவும் பேச வைத்திருக்கிறார் சாக்ரடீஸ். இந்த பக்கம் சூரியின் கேரக்டர் அற்புதம். கிளாப் கூட அடிக்கத் தெரியாத உனக்கு சினிமா வாய்ப்பு வந்திருக்கு. அதுக்காக விட்ற கூடாது. வா கத்துக்கோ… என்று சசியை உசுப்பேற்றுகிறாரே, பாசிட்டிவ் சூரியாக பண்பட்டிருக்கிறது அந்த கேரக்டர். வழக்கமான வாய் சவடால்களையும் குறைத்துக் கொண்டிருப்பதால் சூரியை வாரியணைத்துக் கொள்கிறார்கள் ரசிகர்கள்.

ஹீரோயின் லாவண்யா திரிவேதிக்கு படபடவென கண்கள் பேசுகிற அளவுக்கு வாய் பேசவில்லை. டயலாக்குகள் அவ்வளவு குறைச்சல். அதனாலென்ன? டான்ஸ் காட்சிகளில் ‘சில குறைச்சல்கள்’ ரசிக்க வைக்கின்றன. அந்த வழுக்கை தலை ஆசாமி யாரோ? பளிங்கு கண்களும், வெள்ள வெளேர் நிறமும் ஆள் சோளக்கொல்லை பொம்மை மாதிரி. இவர் சம்பந்தப்பட்ட டயலாக்குகளில் வழுக்கை தலையர்களையின் வாழ்க்கையோடு விளையாடியிருக்கிறார்கள். இவருக்கு வாழ்க்கைப்படும் சசிகுமாரின் தங்கச்சி, மாளவிகாமேனன். தன் லவ்வை ஒரு தங்க நெக்லசுக்காக இழப்பதெல்லாம் பெண்ணியத்தின் மீது வீசப்பட்டிருக்கும் கல்வீச்சு.

மொன்னையும் மொக்கையுமாக படம் நெடுகிலும் காட்சியமைப்புகள். கதையை கேட்டதும் செக்கை கிழித்துக் கொடுக்கிற ஜெயப்பிரகாஷ்கள் கோடம்பாக்கத்தில் இருந்தால், கோயம்பேடு மார்க்கெட்டே இருக்காது. கேரட் வியாபாரிகளையும் சாரட்டில் ஏற்றியிருக்கும் சினிமா. அதே நேரத்தில் நண்பன் படத்திற்கு பதிலாக ஃபிரண்ட்ஸ் படம், சிவாஜிக்கு பதிலாக படையப்பா என்று தியேட்டர் சமாளிபிகேஷன்கள் ரசிக்க வைக்கின்றன. ஒரு தியேட்டர் கொஞ்சம் கொஞ்சமாக ‘பரங்கிமலை ஜோதி’யாகும் ரகசியத்தை வலிக்கும்படி சொல்கிறார் இயக்குனர். சற்றே நெகிழ்வான தருணம்தான் அது.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை மாஸ் ரகம். இதில் சில மெலடிகளும் போட்டிருக்கிறார். படமாக்கப்பட்ட விதமும் பாடலும் ரசிக்கும்படி இருக்கிறது.

படத்தில் வரும் இயக்குனர், ‘என்னை உருவாக்குன பிரம்மனே நீதான்’ என்று தன் பால்ய நண்பனை பார்த்து சொல்வதுதான் தலைப்பாக வந்திருக்கிறது. நல்லவேளை… இந்த படம் சிறப்பாக வந்திருந்தால், ‘தமிழ் திரைப்பட பிரம்மன்கள் சங்கம்’ என்று மாற்றும்படி அவர்களுக்கே குடைச்சல் கொடுத்திருப்பார் டைரக்டர் சாக்ரடீஸ்.

அந்தவகையில் தப்பித்தது நாம் மட்டுமல்ல, அவர்களும்தான்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Anchor Ramya & Aparajith Wedding Photos

[nggallery id=123]

Close