பிரியாணி விமர்சனம்

எடுத்த எடுப்பிலேயே பிரேம்ஜியின் கைபர் போலன் கண‘வாய்’க்குள்ளிருந்துதான் துவங்குகிறது படம். அவ்வளவு பெரிய வாயை அவர் திறக்காவிட்டால் கூட திறந்தது போலதான் இருக்கும். இந்த லட்சணத்தில் இவ்வளவு பெரிசாக திறக்க வைத்து, அதையும் குளோஸ் அப்பில் காண்பித்து…. ‘ஹையோ… பிரேம்ஜி இல்லாத காட்சிகளாக பொறுக்கியெடுத்து தா கடவுளே…’ என்று வேற்று கிரகத்திலிருக்கும் வெங்கடாஜலபதிகளை கூட வேண்டிக்கொண்டு உட்கார்ந்தால்,

அடக்கடவுளே! இந்த படம் பிலிம் இல்லாமல் கூட நகரும் போலிருக்கிறது. பிரேம்ஜி இல்லாமல் நகர்வதாக இல்லை.

பின்னால் துரத்திக் கொண்டேவரும் போலீஸ் வேன்களுக்கு தப்ப முயன்று கட்டி முடிக்கப்படாத பாலத்திலிருந்து காரோடு கீழே விழுகிறார்கள் பிரேம்ஜியும் கார்த்தியும். அதற்கப்புறமும் கார் ஓடி மறைய, பிளாஷ்பேக் விரிகிறது. படம் ஸ்டார்ட்! செய்யாத கொலைக்கு பயந்து ஓடுகிறார்களாம் இருவரும். எப்படி கொலை பழியிலிருந்து தப்பித்தார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

ஸ்திரீலோலன் கேரக்டரில் கார்த்தி. இவருக்கு ஹன்சிகா என்கிற அழகு தேவதை லவ்வராக இருந்தும், வேறு பெண்களை மடக்குவதை ஒரு வேலையாகவே செய்கிறார். இதற்கிடையில் சொந்தவேலையாக ஆம்பூருக்கு செல்லும் கார்த்தியும் (இனி கார்த்தி பெயர் எங்கெல்லாம் வருகிறதோ, அங்கெல்லாம் பிரேம்ஜியும் என்று சேர்த்து படித்துக் கொள்ளுங்கள் ரீடர்ஸ்) மேற்படி ———-ம் அங்கிருந்து திரும்பும்போது ஒரு பிரியாணி கடையில் வண்டியை நிறுத்துகிறார்கள். சாப்பிட வரும் அழகி மாண்டிதாக்கரை மடக்கிவிட்டதாக இவர்கள் நினைக்க, மடக்கியது இவர்கள் அல்ல, மாண்டிதான் என்பது பிற்பாடு தெரியவருகிறது. ஒரு தனி காட்டேஜில் ஒதுங்குகிறார்கள் மூவரும். சரக்கு, போதை, பாட்டு என்று இன்பமாய் கழிகிறது நேரம். நள்ளிரவில் அந்த அழகியை தேடிவரும் தொழிலதிபர் நாசர் கொல்லப்பட்டு இவர்கள் கார் டிக்கியிலேயே கிடக்க, கொன்றதே கார்த்தியும் ———ம்தான் என்று துரத்துகிறது போலீஸ்.

ஐயா நாங்க கொல்லலே என்று நிரூபிப்பதை விட, யார் கொன்றார்களோ, அவர்களையும் கண்டுபிடிக்க வேண்டிய வேலை இருவருக்கும். அது நினைத்தபடி நடந்ததா என்பது பிற்பாதி. வெங்கட்பிரபுவின் சிந்திக்கும் திறனுக்கான பேட்டரி காலாவதியாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த படத்தில் வரிசைகட்டி நிற்கும் லாஜிக் மிஸ்டேக்குகளே உதாரணம். இருந்தாலும், கமர்ஷியல் மசாலா படத்தில் லாஜிக் பார்ப்பது தவறு என்பதால் கோ அஹெட்!

கார்த்தி வழக்கம்போல ‘என்னா சித்தப்பு’ ரகம். அரை மயக்கத்தில் லேசான போதையுடன் அவர் சிரிக்கிற காட்சிகளில் கிளாசையே டச் பண்ணாத மனுஷனா தெரியலையே? (எதுக்கும் செக் பண்ணுங்க ஃபாதர்) மாண்டி தாக்கரை இவர் மடக்கிய சம்பவத்தை அப்படியே பிரேம்ஜியை வைத்து கதையளக்கும் காட்சி செம. அதையும் அந்த அப்பாவி ஹன்சிகா கேட்டு, ‘அட பொறுக்கியே’ என்பதுபோல பிரேம்ஜியை பார்ப்பதும் லகலகப்பு. என்னதான் செகன்ட் ஹீரோவாக இருந்தாலும், ஹன்சிகா- கார்த்தி லவ் புட்டுக்கொண்டதாக நினைத்து பிரேம்ஜியே அவரை மடக்க முயல்கிற காட்சியெல்லாம் , ஹன்சிகாவுக்கு கொழுத்த கெட்ட நேரமாக இருக்குமோ என்று எண்ண வைக்கிறது.

அழகான சேனல் ரிப்போர்ட்டராக ஹன்சிகா. படத்தின் ஹீரோயின் இவராச்சே, மூணு டூயட்டுக்கு உத்தரவாதம் என்று நினைத்தால், ஒரு பாட்டோடு முடித்து வைத்து அவரையும் சீரியசாக அலைய விடுகிறார்கள். வேறொன்றுமில்லை, காதலர் கார்த்தியை காப்பாற்றும் குழுவில் இவர்தான் சீஃப். அதற்காக ஒரு பிணத்தை ஃபிரிட்ஜுக்குள் வைத்துவிட்டு, ஏதோ ஆப்பிளை கட் பண்ணி வைத்த ரேஞ்சில் ஆளாளுக்கு ரிலாக்ஸ் ஆகி திரிவதெல்லாம் கொடுமைடா சரவணா.

எவ்ளோ செலவு பண்ணியிருக்காங்க. ஆனால்…மாண்டிதாக்கருக்கு தரப்பட்ட சம்பளம் இருக்கே, அதுமட்டும் செமத்தியாக செரிமாணம் ஆகியிருக்கிறது. பொண்ணு என்னமா இருக்கு!

இந்த படத்தில் வாய்விட்டு சிரிக்க நிறைய காட்சிகள் இருந்தாலும், நடிகர் ஜெய்யை காண்பிக்கும்போது அவருக்கு ஒரு சிறுகுறிப்பு வரைகிறாரே, அங்கு கலகலக்க வைக்கிறார் வெங்கட்பிரபு. படத்தில் முக்கியமான வில்லியாக உமா ரியாஸ்கான். அவர் செய்கிற சாகசங்கள் பிரமிக்க வைத்தாலும், ‘குளோஸ் அப் மட்டும் வேணாம்யா…’ என்று சண்முகசுந்தரம் டோனில் கெஞ்ச வைக்கிறது அந்த டெரர் ஃபேஸ்.

நாசர்தான் அந்த கொல்லப்படுகிற தொழிலதிபர். அவர் தருகிற பேட்டியை விட, பேட்டியில் கார்த்தியின் கேள்விகளுக்கு மெல்ட் ஆகி சொந்தப் பெண்ணையே அவருக்கு கட்டிக் கொடுக்கிற அளவுக்கு அவர் போகும்போதுதான் இது காமெடி படம்ல என்கிற நினைப்பு வருகிறது. அதற்கப்புறம் பிரேம்ஜியே நாசரை போல வேஷம் போட்டுக் கொண்டு வருகிற காட்சி! அவ்வளவு தத்ரூபமாக முகத்தை ஒட்டிக் கொண்டு வர முடிந்தால், அவரே ‘நான் சாவலைப்பா. எல்லாம் போயி அவங்கவங்க வேலைய பாருங்க’ என்று எல்லாரையும் விரட்டி அனுப்பிவிட்டு கம்பெனியையும் மெயின்டெயின் பண்ணலாமேப்பா….

முதுகெலும்பு தேய வேலை பார்த்திருக்கிறார் ஃபைட் மாஸ்டர் செல்வா. அந்த சேசிங் காட்சிகளில் ரசிகர்களின் ரத்த ஓட்டமே தாறுமாறாகிறது. சக்தி சரவணனின் ஒளிப்பதிவும் அதற்கு ஓடி ஓடி உதவியிருக்கிறது.

இது யுவன்சங்கர்ராஜாவுக்கு 100 வது படமாம். விடிய விடிய படிச்சுட்டு பரீட்சை ஹாலில் குறட்டை விட்ட கதையாகிவிட்டது அவருடைய இந்த 100.

க்ரைம் கதைக்கு முடிச்சு ரொம்ப முக்கியம்தான். ஆனால் அதுவே படத்திற்கு சுருக்கு கயிறாக அமையக் கூடாதல்லவா? ஹோல்சேல்ல ஆணி வாங்கி, அதை பொட்லமா கட்டிக் கொடுத்தா பிரியாணி ஆகிருமா? சொல்லுங்க பிரேம்ஜியோட பிக் பிரதர்….?

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
திடீர் கோபம்… கோபத்தில் கதவை சாத்திக் கொண்ட தமன்னா… உதவி இயக்குனர்கள் அலறல்!

சினிமாவில் உதவி இயக்குனர்களை போல சர்வ புலன்களையும் அடக்க வேண்டிய ஜாதி வேறொன்று இல்லை. அவர்கள் சிரித்தாலும் தப்பு. சிரிக்காவிட்டாலும் தப்பு என்பது போல சுள்ளென்று விழுவார்கள்...

Close