புற்று நோய் சிறுவன்: போலீஸ் கமிஷனாராக்கி கனவை நிறைவேற்றிய போலீஸ் அதிகாரிகள்
ஹைதராபாத்தில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த 10 வயது சிறுவன் சாதிக் ஒருநாள் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். மரணத்தில் வாசலில் உள்ள அந்த சிறுவனின் கனவை ஹைதராபாத் காவல்துறை ஆணையர் மகேந்தர் ரெட்டி நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஹைத்ராபாத்தில் சாதிக் என்ற சிறுவன் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, வாழ்நாளை எண்ணிக்கொண்டு வருகிறான். இந்த சிறுவனுக்கு காவல்துறை ஆணையராக வரவேண்டும் என்பது கனவாகும்..
சாதிக்கின் ஆசையை நிறைவேற்ற “ஆசையை நிறைவேற்றும் அறக்கட்டளை” முன் வந்தது. இதையடுத்து சிறுவனின் நிலை குறித்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த கனவை மாநகர காவல்துறை ஆணையர் மகேந்திர ரெட்டி நிறைவேற்றி வைத்தார். இதனையடுத்து நேற்று ஒரு நாள் மட்டும் சாதிக் காவல்துறை ஆணையராக காவல்துறை உடை அணிந்து கொண்டு, அதற்கான தொப்பியையும் அணிந்து கொண்டு காவல்துறை ஆணையர் நாற்காலியில் அமரச் செய்தார். அப்போது சிறுவனை ஏராளமானோர் புகைப்படம் எடுத்தனர். அப்போது, சிறுவனுக்கு காவல்துறை ஆணையர் உட்பட அனைத்து உயர் அதிகாரிகளும் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர்.
சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றியிருப்பது தனக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக காவல்துறை ஆணையர் மகேந்திர ரெட்டி கூறினார். காவல்துறை ஆணையராக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, ரவுடிகளைப் பிடிக்க வேண்டும் என்று மகிழ்ச்சியோடு பதிலளித்தான். நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சிறுவனின் விருப்பம் நிறைவேறியிருப்பதன் மூலம், அவனது வாழ்நாட்கள் சற்று அதிகரிக்கும் என்று அறக்கட்டளை நிர்வாகி கூறியுள்ளார்.