“பூம் பூம்பும் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி…” பாங்காக் பயண அனுபவங்கள் -3 -ஆர்.எஸ்.அந்தணன்

வானை தொடும் ஓட்டல்களையெல்லாம் வரிசையாக தாண்டிக் கொண்டு சென்றது வேன். நம்ம வசதிக்கேற்ப ஒரு ஓட்டல்ல நமக்கு ரூம் சொல்லியிருக்கு என்றார் சதீஷ். ‘வசதிக்கேற்பன்னா எப்படி சதீஷ்?’ என்பதை அவ்வளவு அரையிருட்டில் அவர் ரசித்ததும் தெரியவில்லை. ரசித்ததாகவும் தெரியவில்லை. பாம்குரோவ் டைப்பான ஒரு ஓட்டலில் வண்டி நிற்க, அதே இட்லி ஈஸ்ட் புன்னகையோடு லக்கேஜை அள்ளிக் கொண்டான் ஓட்டல் ஊழியன். வாழ்நாளில் ஒரு முறை கூட அவன் கொட்டாவி விட்டதில்லை என்கிற அளவுக்கு மறுபடியும் பிரிஸ்க்கான ஒரு தாய் இளைஞன். முகத்தில் அவ்வளவு அதிகாலையிலும் பரவிக்கிடந்தது புன்னகை.

‘ஏன் ஜி… இங்க எவனுக்குமே எரிச்சல் வராதா?’ என்றேன்.

ரிசப்ஷன்…. ஊர் முழுக்க நம்ம ஊர் வணக்கத்தை சொல்லிக் கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. பொம்மைக்கு மிடி போட்ட மாதிரியிருந்த ரிசப்ஷனிஸ்ட், ‘வணக்கம்’ என்றாள் இரு கரம் கூப்பி. சாவியை ஒப்படைத்த கையோடு ‘பிரேக்ஃபாஸ்ட் ஃப்ரி உங்களுக்கு. ஃபிரஷ் பண்ணிட்டு எப்ப வேணா வரலாம்’ என்றவளின் ‘வாயில் சர்க்கரையைதான் போடணும்’ என்று சொல்லிக் கொண்டே ரூமிற்குள் தஞ்சமானோம்.

பாத்ரூமையே பங்களா மாதிரி வச்சுருக்கான். ஒரு ‘மக்’ வச்சுருக்கானுங்களா மக்குப் பயலுக? பக்கெட் இல்ல. மக் இல்ல. கொக்கோ கோலா ஒரு லிட்டர் பாட்டில் ஒண்ணுதான் உள்ள இருக்கு. அத எதுக்கு இங்க பாத்ரூம்ல கொண்டு வந்து வச்சானுங்க? போன்ற ‘டவுட்டு’களை கதவுக்குள்ளிருந்து கத்தியபடியே சதீஷிடம் பாஸ் பண்ணிக் கொண்டிருந்தேன். ஷவரை திறந்து குளித்துவிட்டு வெளியே வந்தபின் உள்ளே போன சதீஷ், ‘கோக் பாட்டில் இங்க இருக்கு. கோக் எங்க ஜி’ என்றார் அதே கூக்குரலோடு. பிதாமகன் அவுட்டோர் ஷுட்டிங்குக்கு தேனிக்கு போயிருந்தோம். பாதி வழியில் வேனை நிறுத்த சொல்லிவிட்டு கோக் பாட்டிலோடு குதித்தோடிய நிருபர் கார்த்திக் தேவையில்லாமல் நினைவுக்கு வர, ‘பாட்டில் இருக்கு, பைப் இருக்கு. அப்பறம் என்னவாம்’ என்றேன் நான்.

சரியாக ரெண்டு மணி நேரம் கழித்து பிரேக்ஃபாஸ்டுக்காக கீழேயிருக்கும் ஓட்டல் வளாகத்திற்கு வந்தோம். அப்படியே என்ன ஐட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்று மேய்ந்தன கண்கள். இதற்கு முன்னும் சரி, பின்னும் சரி, கண்களால் பார்த்திராத… கதைகளிலும் கேட்ராத வஸ்துகளை தட்டில் நிரப்பிக் கொண்டு வந்து டேபிளுக்கு முன் அமர்ந்து ஒரு வாய் அள்ளி வாயில் வைத்தேன். ‘எங்க அவ…? அவ வாயில வசம்ப வச்சு தேய்க்க…’ என்றபடி ரிசப்ஷன் பக்கம் திரும்பி பார்க்க, அந்த பொம்மை யாருக்கோ சிரத்தையாக பில் போட்டுக் கொண்டிருந்தது. பக்கத்து பக்கத்து டேபிள்களில் இதே ஐட்டத்தை ஏதோ சர்க்கரை பொங்கலை போல அள்ளி திணித்துக் கொண்டிருந்தார்கள் தாய் இனத்தை சேர்ந்த தண்டபாணிகள்.

‘ஜி… எனக்கிருக்கிற சந்தேகப்படி இதுல கரப்பான், பூரான், பல்லி போன்ற சகிக்க முடியாத ஜந்துகளை வறுத்துப் போட்டு வச்சுருப்பானுகன்னு தோணுது. ஏதோ முட்டைய அவிச்சு வச்ச மாதிரி ஒரு ஐட்டம் இருக்கு. இன்னைய சாப்பாடு அதுதான்னு நினைச்சு முழுங்கிக்கிறேன்’ என்றபடி நான் மேற்படி இடத்தை நோக்கி நகர, எனக்கு முன்னால் அதே முட்டை ஏரியாவில் நின்றார்கள் சதீஷும், லண்டன் நண்பரும். (ஏன் இந்த லண்டன் நண்பரின் பெயரை எழுதவில்லை என்கிறீர்களா? இவர் சொல்லப் போகும் பல விஷயங்கள் உங்களுக்கு அதிர்ச்சியை தரப்போகிறது. பல சீக்ரட்டான இடங்களை தேடித் தேடிப் போனவரும் இவர்தான். )

ஒருவழியாக ரூமிற்கு திரும்பிய எங்களுக்கு போன். எடுத்தால் ராம். ‘நீங்க ரெஸ்ட் எடுங்க. ஈவ்னிங் யாரையாவது பையன அனுப்புறேன். ஊர் சுற்றி பார்த்துருங்க’ என்றார் அவர். ம்… என்றபடி போனை வைத்துவிட்டு, ‘சாயங்காலம் ஊர சுத்தணும்னா, மதியம் எங்காவது நிம்மதியா நம்ம ஊரு சாப்பாடு சாப்பிடணும். இல்லேன்னா தம்பி காலை எடுத்து ஒரு ஸ்டெப் வைக்க மாட்டான்’ என்றேன் நான். வெண்ணிறாடை மூர்த்தி போல ஒரு சிரிப்பு சிரித்த சதீஷ், ‘தேடிப் போவலாம். ஆனா நம்ம ஊரு ரெஸ்ட்ராரெண்ட் எதுவும் இருக்குமான்னு தெரியல. இண்டியன் ஃபுட் கிடைக்கும். ஆனால் அது நார்த் இண்டியன் ஸ்டைலில் இருக்கும். அதுக்கு இந்த கருமமே தேவலாம்’ என்றார்.

இருந்தாலும், பிற்பகல் 12 மணிக்கே சாப்பாட்டு வேட்டையை ஆரம்பித்தோம். சாலையில் இறங்கி ஆட்டோவை மடக்கினோம். அந்த ஊரில் இந்த ஆட்டோவை ‘டுப் டுப் டுப்…’ என்கிறார்கள். அதன் சப்தம் அப்படியிருக்குமாம்… அதனால் அது டுப் டுப். இதுக்கே சிரிச்சா எப்படி? அதற்குள் ஏறி உட்கார்ந்தவுடன் அந்த ஆட்டோக்காரர் கேட்டாரே ஒரு கேள்வி. அதற்கல்லவா ரூம் போட்டு சிரிக்கணும்?

‘ஹேய்…. இண்டியன்ஸ். யூ வாண்ட் ‘பூம் பூம் பூம்…?’ என்றார் அந்த ஆட்டோக்காரர். நான் புரியாமல் முழிக்க, லண்டன் நண்பர்தான் முணுமுணுத்தார். ‘நாசமா பேச்சு. மத்தியான வெயில்லயேவா? வௌங்கிரும்’ என்று.

‘என்னது மத்தியான வெயில்ல?’

‘ என்ன சொல்றாரு அந்தாளு.?’

‘ பூம் பூம்னா?’

-இப்படி அடுக்கடுக்கான கேள்வியை நான் கேட்டுக் கொண்டேயிருக்க, வண்டியை ஒரு கையால் ஓட்டிக் கொண்டே மறு கையால் ஒரு ஆல்பத்தை எடுத்து எங்கள் பின் சீட்டில் போட்டான் அந்த ஆள்.

சதீஷ் அதை புரட்ட புரட்ட அவரது விரல்கள் நடுங்கின…

(சுற்றுலா தொடரும்)

2 Comments
  1. admin says

    Kubendiran Ganesan ஏற்றம் இறக்கமாய் வார்த்தைகள் வந்துவிழுகின்றன அந்தணனின் எழுத்தில். யார் யாரோ எழுதிய பழமொழிகளை வைத்து நய்யாண்டி செய்வது எம்.பி.மணியின்(இவரும் பிரபல சினிமா பத்திரிகையாளர் தான்) கைவந்த கலை. ஆனால், இவரே கண்டுபிடித்த புதுமொழியுடன் எழுதும் (போ)(பா)ங்கு இருக்கிறதே, அதுதான் அந்தணன் வாங்கி வந்த (வ)ரம்!!

  2. வாசகன் says

    //அந்த ஊரில் இந்த ஆட்டோவை ‘டுப் டுப் டுப்…’ என்கிறார்கள். //

    அது ‘டுக் டுக்’ அய்யா.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சினேகாவின் சிரிப்புக்கே சரியா போச்சு… மிச்சத்துக்கு?

கோன் ‘சினேகா ’ குரோர்பதியாகிக் கிடக்கிறது சின்னத்திரை வட்டாரம். பின்னே, யார் யாரோ அழைத்தும் சின்னத்திரை பக்கமே வராத சினேகா, வர்றேன்னு சொன்னா எப்படியிருக்குமாம்? லாட்டரி சீட்டு...

Close