“பெரியார் சொன்ன கருத்து வாழ்வின் முற்பகுதியில் விளங்காது. பிற் பகுதியில் விளங்கும்” -கவிப்பேரரசு வைரமுத்து EXCLUSIVE பேட்டி…
காகிதத் தமிழ் காலம் முதல், கணினித்தமிழ் காலம் வரை எழுதி வருபவர் கவிப் பேரரசு வைரமுத்து.
உலகத் தமிழர்கள் எண்ணங்களில் அலையடிக்கின்றன இவரது கவிதைகள். தமிழ் கூறும் நல்லுலகின் காற்று வெளிகளில் கலந்து வழிகின்றன இவரது பாடல்கள் .கவிதை,திரைப்பாடல் என இருவேறு ஆட்சிப்பிரதேசங்களிலும் சரியாசனமாய் இவருக்கு அரியாசனம் உண்டு.
நீ ஈ ஈ ண்ட இடைவெளிக்குப் பின் கவிஞரை சந்தித்தோம்.
முன்பெல்லாம் சில கேள்விகளை எதிர் கொள்ளும் போது சினம் காட்டுவார். சிலவற்றைத் தவிர்ப்பார்.இப்போது எந்தவித கேள்வியையும் இன் முறுவலுடன் எதிர்கொண்டு பதிலளிக்கிறார். கால மாற்றம் அவரைக் கனிய வைத்துள்ளதை அறிய முடிந்தது.
இனி கவிஞருடன் பேசுவோம்.
எப்போதும் உங்கள் இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள், எப்போதும் உங்களை நிரூபித்துக் கொண்டே இருக்கிறீர்கள்..இது திரையுலகம்–எழுத்துலகம் சார்ந்த நிர்ப்பந்தமா? சுய விழிப்புணர்ச்சியா?
வாழ்வே இயக்கத்துக்கு உட்பட்டதுதான். இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். ஓடிக் கொண்டே இருந்தால் நதி. ஒடாவிட்டால் அது குட்டை. உலவிக் கொண்டே இருந்தால்தான் காற்று. அது உலவா விட்டால் அதற்கு பயனில்லை. ‘இதுவரை நான்’ முன்னுரையில், ”என் தலைக்கு மேல் பருந்துகள் பறந்து கொண்டிருந்ததால் நான் செத்துவிட வில்லை என்று நித்தம் நித்தம் நிரூபிக்க வேண்டியதாயிற்று” என்று எழுதியிருப்பேன். இருப்பும் முக்கியம். இயங்கிக் கொண்டே இருப்பது என் இயல்பாக இருக்கிறது.எல்லாத் துறையிலும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
என்றும் 20 வயது மனமுள்ள இளைஞனாகவே எப்படி இருக்க முடிகிறது?
மனதுக்குள் ஒரு பாடும் பறவையின் கூட்டத்தை வைத்திருக்க வேண்டும். தன்னைச் சுற்றி நிகழ்கிற ஒவ்வொரு நிகழ்வையும் ரசிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்
வாழ்க்கையை நெறிப் படுத்திக் கொண்டால் உடம்பு தன்னைத் தானே நெறிப் படுத்திக் கொண்டு விடும். உடம்புக்கும் மனதுக்கும் சம்பந்த மிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதுவரை மனம் சொன்னதை உடல் கேட்கும். பிறகு இது மாறும். உடல் சொல்வதை மனம் கேட்கிற வயது இப்போது. இரண்டுக்கும் முரண்பாடு வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
மூத்த பெரிய படைப்பாளிகள் எல்லாருமே ஒரு கட்டத்தில் முனை மழுங்கி விடுகின்றனர், எழுத முடியவில்லை. ஏன் என்றால் படைத்தது போதும் என்கிறார்கள். இயலாமையை ஒப்புக்கொள்வதில்லை. நீங்கள் மட்டும் எப்படி காலம் காலமாக கூர்மையுடன் வீரியத்துடன் படைக்கிறீர்கள்?
வாழ்க்கை மீதுள்ள தாகமாக இருக்கலாம். நான் இன்னும் என் அதிக பட்சப் படைப்பை படைக்க வில்லை என்பதாக இருக்கலாம். காலம் எனக்கு அனுபவங்களைக் கொட்டிக் கொண்டே இருப்பது காரணமாக இருக்கலாம். ஆண்டு தோறும் என் ரசிகர்களும் வாசகர்களும் அதிகமாவது இருக்கலாம்.
அவர்கள் என்னிடம் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் என்ன எழுதும்படி நிர்ப்பந்திக்கிறார்கள். சமூக நிகழ்வு விழித்துக் கொண்டே இருக்கிற ஒருவனைத் தூங்க விடாது.
உங்கள் பாடல்களில் இசையால் செழுமைப் படுத்தப்பட்டவை அதிகமா?.காட்சிகளால் செழுமைப் படுத்தப்பட்டவை அதிகமா?
இசையால் செழுமைப் படுத்தப்பட்ட பாடல்கள்தான் அதிகம். காட்சிகளால் செழுமைப் படுத்தப்பட்ட பாடல்கள் குறைவு. என்ன இருந்தாலும் இசையோடு மொழி சேருகிறபோது மொழி சிறகு கட்டிப் பறக்கிறது. காட்சியுடன் இணைகிற போது மொழி தன் எல்லையை இழக்கிறது. இரண்டுமே சிறந்தவைதான். இருந்தாலும் இசையில் கேட்டு நான் மகிழ்கிற அளவுக்கு காட்சியில் நிறைவு பெறுகிறேனா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
உங்கள் பாடல் வரிகள் எப்போது உங்கள் குரலாக இருக்கும்? எப்போது பாத்திரத்தின் குரலாக ஒலிக்கிறது?
அவரவர் அனுபவத்தைப் பொறுத்தது. இயற்கையைப் பற்றி எழுதுகிறபோது எனது குரல். காதலைப் பற்றி எழுதுகிற போது எனது குரல். வாழ்க்கையின் தோல்விகளை, கண்ணீரைப் பற்றி எழுதும்போது நம்பிக்கையை பற்றி எழுதுகிற போது அந்தப் பாத்திரத்தில் எனது குரலும் இருக்கிறது. இதைத்தாண்டி உரிமையற்ற பெண்ணைக் கேலி செய்தல், முறையற்ற செயலை நியாயப் படுத்துதல் இவை எல்லாம் பாத்திரத்தின் குரலாகத்தான் இருக்க முடியும்.
உங்கள் வரிகளை உச்சத்தில் கௌரவப்படுத்திய படம் எது? இயக்குநர் யார்?
இது சிக்கலான கேள்வி. எல்லா இயக்குநர்களுக்கும் பங்கு இருக்கிறது. என் முதல் பாட்டுக்குப் பெருமை சேர்த்த பாரதிராஜா. சிந்துபைரவியில் பாலசந்தர். ரோஜா, பம்பாய் படங்களில் மணிரத்னம் அதிகமாக சிறப்பாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். நான் சென்னையில் உட்கார்ந்து எழுதிய ஒரு பாடலை உலகின் ஏழு அதிசயங்களில் ஒலிக்கச் செய்தவர் ஷங்கர். இந்த இயக்குநர்களின் தோள்களிள் மீது ஏறிப் பயணம் செய்திருக்க முடியாவிட்டால் இவ்வளவு தூரத்தை நான் அடைந்திருக்க முடியாது.
வாத்திய இரைச்சலில் தமிழ் சிக்கித் தவித்த போது தமிழைக் காப்பாற்றப் போராடிய அனுபவம் உண்டா?
இப்போது மெல்ல மெல்ல மாறி வருவதாக உணர்கிறேன். ஒரு இசையமைப்பாளர் வெற்றி பெறுவது எப்போதென்றால் மொழி காதில் வந்து விழும்போதுதான். இசையமைப் பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் மொழி காதில் விழுகிற மாதிரி இசையமைத்துப் பாருங்கள் உங்கள் பாடல் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
திரைப் பாடலா, கவிதையா, மேடைப் பேச்சா,விழாவா,நூல்வடிவமைப்பா,எதையும் நேர்த்தியாக செய்ய வேண்டும் என்கிற உங்கள் செய் நேர்த்திக்கு யார் முன்னோடி?
என் சிறுவயது முதலே என் குடும்பத்தாருக்கும் எனக்கும் முரண்பாடு உண்டு. இவன் மிகவும் சுத்தக்காரன். கழுவி வைக்கப்பட்ட தட்டைக் கூட இவன் மறுபடி கழுவியபின்புதான் சாப்பிட உட்கார்கிறான். அதிகம் சுத்தம் பார்க்கிறான் என்று கோபப்படுவார்கள். இது என் உதிரத்தில் ஊறி விட்டதாகவே நினைக்கிறேன். தூய்மை என்பது நாகரிகம். ஒழுங்கு என்பது பண்பாடு.நேர்த்தி என்பது வெளிப்பாடு.
எல்லாமே தொழில் நுட்பமாகப் பார்க்கப்படுகிற திரையுலகில் பாடல் எழுதுவதும் தொழில் நுட்பம்தானே?
மெட்டுக்கு எழுதுகிற போது தொழில் நுட்பம். எழுதிக் கொடுத்து இசை அமைக்கப்படுகிற போது அது கலை நுட்பம்.
திரையுலகில் அந்த 23 தொழில்களிலும் பெரும்பாலும் ஒருவரின் உதவியாளராக இருந்து தொழில் கற்று தனியே இயங்க முடியும். பாடலாசிரியர் துறையில் மட்டும் அப்படி யாரும் வரமுடியவில்லையே ஏன்?
கவித்துவம் என்பது பயிற்சியால் வருவதல்ல. ஓர் உள்ளுணர்வால் வருவதுதான் கவிதை. இப்படி உள்ளுணர்வுள்ளவன் யாரிடமும் பயிற்சியாளனாக சேர மாட்டான். அந்த உள்ளுணர்வை அவனே உணர்ந்து கொள்வான். இது உள்ளே எரிகிற நெருப்பு. வெளியே தெரியாத நெருப்பு. கவிதை என்பது பயிற்றுவித்து வருவதல்ல மரபு வழியே வருவதல்ல.உள்ளுணர்வு இருந்தால்தான் அது வரமுடியும் உள்ளே நெருப்பு இருக்கிறவன் யாரிடமும் சென்று யாசகம் கேட்க மாட்டான்
உங்களில் தனி மனிதன். குடும்ப மனிதன், சமூக மனிதன் இந்த 3பேரின் கடமைகளைச் சரிவர செய்ய முடிகிறதா? நீங்கள் நேசிக்கும் மனிதன் யார்?
நான் தனிமனிதனாக எவ்வளவு கட்டுப்பாட்டோடும், நெறியோடும் இருப்பதற்கு ஆசைப்படுகிறேனோ அதையே எல்லா இடங்களிலும்எதிர்பார்ப்பதுதான்என்பலமும்பலவீனமும். ஒரு சமூக மனிதனாக நான் எல்லாரையும் மதிப்பதற்கும் நேசிப்பதற்கும் ஆசைப் படுகிறேன். தனி மனிதனாக கர்மவீரனாக இருக்க ஆசைப் படுகிறேன். குடும்ப மனிதனாக அன்பு செலுத்துகிறவனாக இருக்க ஆசைப்படுகிறேன். ஆனால் இன்று தனி மனிதனாக இருந்த என்னை சமூக மனிதனாக செயல்படுவதற்குக் காலம் கட்டளை இட்டுவிட்டதனால் குடும்ப மனிதனாக பொறுப்புக்கு காலம் ஒதுக்க முடியாதவனாக ஆக்கப்பட்டேன். அதை என் குடும்பம் புரிந்து கொண்டது. இது நான் செய்த நற்பேறு.
திரையுலகில் நிலைத்திட வித்தை பாதி வினயம் பாதி என்ற இரண்டு இறக்கைகள் தேவை என்பார் எஸ்.பி.பி .திரைத்தொழில் சார்ந்து நீங்கள் விடாது கடைபிடிக்கும் நல்ல அணுகு முறைகள் என்னென்ன..?
ஒன்று நேரம் தவறாமை இன்னொன்று சொல்லிய வார்த்தை மாறாமை, மற்றொன்று உழைப்பதில் பாசாங்கு இல்லாமை. உண்மையாக உழைத்தல், நேர்மையாக இருத்தல், நேரம் தவறாமல் காத்தல் இந்த மூன்றையும் பின்பற்றுவது என் இயல்பு. இவற்றை என்றுமே நான் மாற்றிக் கொண்டதில்லை
அறுபதைக் கடந்த ஆன்றோர் நட்பும் உண்டு. இருபதுகளின் இளைஞர்கள் உறவும் உண்டு. தலைமுறை இடைவெளி தாண்டி எப்படி இணைகிறீர்கள்?
அந்தந்த வயதுக்கும் உரிய பெருமை இருப்பதை உணர்கிறேன். முதியவர்களிடத்தில் அனுபவம் இருப்பதைக் கற்றுக் கோள்கிறேன் இளைஞர்களிடத்தில் உற்சாகத்தை கற்றுக் கொள்கிறேன். எந்தத் தலைமுறையோடும் தலைமுறை இடைவெளி இல்லாமலிருக்க ஒரே வழிதான் இருக்கிறது. அந்தந்தத் தலைமுறையின் வாழ் முறையை மதிப்பது, அந்தந்தத் தலைமுறையின் கருத்தியலை ஏற்றுக் கொள்வது. இன்று இளைஞர்கள் பழைய விழுமியங்களில் மூழ்கிக் கிடக்க வில்லை. அவர்கள் சொந்தமாக ஒரு வாழ்க்கை முறையை வரித்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் புரிந்து கொள்வதுதான் முக்கியமே தவிர. ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்கிற பேச்சுக்கு இடமில்லை. இளைஞர்கள் வாழ்க்கையின் போக்குகளை எனக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். முதியவர்கள் வாழ்ந்த வாழ்வின் அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கிறார்கள். இரண்டுக்கும் இடையில் நின்று கொண்டு நான் இருவேறு அனுபவங்களையும் உள்வாங்கிக் கொள்கிறேன்.
‘எலந்தப் பயம்’ பாடலுக்கே, பாடல் எழுதியதற்காக கண்ணதாசன் வருத்தம் தெரிவித்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.இன்று கண்ணியக் குறைவான பாடல்கள்வெகு இயல்பாக வருகின்றனவே..?
அப்படி அவர் சொன்னாரா தெரியவில்லை. என் முன்னோடிக் கவிஞரைப்பற்றி தவறாகச் சொல்லக்கூடாது.. இன்றைய சூழலுக்குக் காலமாற்றமே காரணம். அன்றைக்கு நகைச்சுவை நடிகர்கள் பாடிக் கொண்டிருந்த குத்துப் பாடல்களை இன்று கதாநாயகர்களே பாடுகிற காலமாற்றம் வந்திருக்கிறது. அன்று கவர்ச்சி நடிகை ஆடிய ஆட்டத்தை இன்று கதாநாயகி ஆட வேண்டி வந்து விட்டது. அன்று சந்திரபாபு பாடிய பாட்டை இன்று கதாநாயகர்கள் பாடுகிறார்கள். அன்று விஜயலலிதா, ஜெயமாலினி, ஜோதிலட்சுமியும் தனியாக ஆடிய பாட்டை இன்று கதாநாயகிகள். பாடி ஆடுகிறார்கள். இது காலமாற்றம் தொடரும் என்று சொல்ல முடியாது: லட்சிய வீரர்கள் கதாநாயகர்களாகவும் லட்சியப் பெண்கள் கதாநாயகிகளாகவும் வருகிறபோது மீண்டும் இது மாறலாம்.
திரைப்பாடலாசிரியர்கள் இன்று ‘தமிழ் ஒழிக’ என்று கூட எழுதத் தயாராக இருக்கிறார்கள் என்று சொல்லப் படுவது பற்றி..?
இது மிகைப் படுத்திச் சொல்லப் படுகிற கருத்து. அப்படி யாரும் எழுதமாட்டார்கள். எழுதினால் அது மனப்பூர்வமாக இருக்காது. அப்படி எழுதினால் தமிழ் ஒழிக என்று படத்தில் ஒரு பாத்திரம் சொல்ல நேர்கிற போது அவர் அப்படி எழுதத் தள்ளப் பட்டிருக்கலாம்.
அன்பு உண்டு நட்பு உண்டு, காதல் என்று எதுவுமில்லை என்று பெரியார் கூறியுள்ளார். பெரியாரின் கடவுள் மறுப்பை ஏற்கும் கவிஞர்கள் காதல் மறுப்பை கை விட்டது ஏன்?
இது ஒரு நல்ல கேள்வி. இந்தக் கேள்வியை நான் நேசிக்கிறேன். பெரியார் சொன்னதைப் புரிந்து கொள்வதற்கு வயது வேண்டும். பெரியார் சொன்ன கருத்து வாழ்வின் முற்பகுதியில் விளங்காது. பிற் பகுதியில் விளங்கும்
ஐந்து நிமிடங்கள் பேசுவதாக இருந்தாலும் உங்கள் பேச்சில் முன்தயாரிப்பை உணர முடியும்.. முன்தயாரிப்பில் யார் உங்கள் முன்னோடி?
பயம்தான் காரணம். மேடையில் எதுவும் தவறாகிவிடக் கூடாது என்கிற பயமாக இருக்கலாம். அல்லது சமூகத்தை நான் மதிப்பதாக இருக்கலாம்.
கவிதை வாசகர்கள், பாடல் ரசிகர்கள் ஒப்பிடமுடியுமா?
காது மட்டும் போதும் ரசிகனுக்கு. கண்கள்தான் வேண்டும் வாசகனுக்கு. கண்களின் பயன் பாட்டை விட காதுகளின் பயன்பாடுதான் சமூகத்தில் அதிகமாக இருக்கிறது. கவிதை வாசகர்களைவிட பாடல் ரசிகர்கள்தான் எனக்கு அதிகம்.
இரண்டாம் உலகப் போருக்குக் காரணம் ஹிட்லர். மூன்றாம் உலகப் போருக்குக் காரணம் யார்? எழுதத் தூண்டிய உடனடிக் காரணம் எது?
புவி வெப்பமயமாதல்தான் காரணம்.அன்மையில் மலேசியாவில் ‘மூன்றாம் உலகப் போர்’ 11வது பதிப்பை வெளியிட்டுவிட்டு நான் சொன்னது இதுதான். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பிரச்சினை இருக்கிறது. ஆனால் எல்லா நாடுகளுக்கும் உள்ள பொதுப் பிரச்சினை தான் புவி வெப்பமாதல். அதிக வறட்சி மட்டுமல்ல அதிக வெள்ளம் வருவதும் புவி வெப்பமாதலின் எதிர் விளைவுதான்.
‘மூன்றாம் உலகப் போர்’ 11 பதிப்புகள் உலகப் பரப்பில் விழாக்கள். இந்த அனுபவம் எப்படி?
மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு படைப்பாளி தனது படைப்பின் 11 பதிப்புகளை உலகின் எல்லா நாடுகளுக்கும் தான் வாழும் காலத்திலேயே கொண்டு சேர்க்க முடிகிறது என்பதும் அதற்கு காலம் கை கொடுக்கிறது என்பதும் எனக்குப் பெருமை தருகிறது. இது நான் தனியாகப் பெற்ற பெருமை என்பதைவிட காலம் கொடுத்த தொழில்நுட்ப யுகத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதே உண்மை.
பிரமாண்ட திரைவடிவ சாத்தியமுள்ள படைப்பான ‘மூன்றாம்உலகப்போர்’ .படமாகுமா ?
ஆகலாம். ஆனால் நான்தயாரிப்பாளராக இருக்க மாட்டேன்.
இன்று பேஸ்புக், ட்விட்டர் போன்றவை நவீன தகவல் தொடர்பு சாத்தியங்கள், இவை மூலம் தமிழும் விரிகிறது,இவற்றை நீங்கள் எப்படிப் பயன்படுத்தப் போகிறீர்கள்?
நான் ட்விட்டர் கணக்கு வைத்திருக்கிறேன். இந்த விஞ்ஞான சாதனத்தின் பயன்பாடுகளை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. சொல்லப் போனால் ஒரு குறிப்பிட்ட தலைமுறையினர் காகிதக் கலாசாரத்தைத் தாண்டி இணையக் கலாச்சாரத்தில்தான் இருக்கிறார்கள். இன்னும் 25 ஆண்டுகளில் காதிதப் பயன்பாடு குறைந்து போய் ஒட்டு மொத்த மொழியையும் கலையையும் மின் சாதனங்கள் வழியாகக் கற்க வாய்ப்பு இருக்கிறது.
உங்களை ஆராதிக்க,கொண்டாட ஒரு பெருங்கூட்டம்இருக்கிறது. விமர்சிக்க ஒரு சிறு குழுவும்உள்ளதே..? உங்கள் மீதான விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன். என்னைத் திருத்தி மேம்படுத்திக் கொள்கிறேன். ஏனென்றால் எந்தப் படைப்பும் முழுமையாவதில்லை; எந்தப் படைப்பாளியும் முழுமையானவனும் இல்லை.
இலக்கிய வாதிகளின் குரல் தேசத்தின் குரலாக மாறும் சூழல் வருமா?
வரவேண்டும் என்பது எங்கள் விருப்பம். அது அவ்வளவு சுலபம் இல்லை என்பதே நடை முறை.
உங்களை விய(ர்)க்க வைத்த விசிறி யார்?
உலகம் முழுக்கப் பலபேர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் ஏடு போதாது. காலம் போதாது. எழுதி மாளாது. அவ்வளவு பேர் இருக்கிறார்கள்.
பேட்டி – அருள்செல்வன்
கருத்துக்களுக்கு- arulselvanakm4@gmail.com