போலியோ இல்லாத நாடு இந்தியா: சான்றிதழ் வழங்கியது உலக சுகாதார கழகம்
ஐந்து வருடங்களுக்கு முன்னால் உலகளவில் பாதி சதவிகித நோய்த்தாக்கம் இந்தியாவில் இருந்ததாகக் கூறப்பட்டது. சுகாதார சவால்களும், அடர்த்தியான மக்கள் தொகையும் இருந்த இங்கு போலியோவை ஒழிப்பது என்பது சவாலான காரியமாகக் கருதப்பட்டது. இங்கு குடியேறுபவர்கள், எளிதில் அடைய முடியாத கடினமான இடங்களில் வசிப்பவர்கள் போன்றோரின் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்துகள் முறையாக அளிக்கப்படுவதில்லை என்பதனை சுகாதார ஊழியர்கள் கண்டறிந்தனர்.
எனவே, அதற்கென சிறப்பு நோய்த்தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் மிகப்பெரிய கண்காணிப்பு வலையமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு 2.3 மில்லியன் நிர்வாகிகள் இதற்கென செயல்பட்டு அனைத்து சமூகங்களுக்கும் இந்த சேவைகள் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டதாக யூனிசெப் அமைப்பு கூறுகின்றது.
தடுப்பூசி பற்றிய சந்தேகங்கள், தவறான வதந்திகள் போன்றவை சமூக சேவகர்கள், மதத் தலைவர்கள், பெற்றோர்கள் கொண்ட அமைப்பினை ஏற்பாடு செய்ததன்மூலம் அனைவருக்கும் தெளிவுபடுத்தப்பட்டது. சிகிச்சை எதுவும் இல்லாத இந்த நோயினை தடுப்பு மருந்து மூலம் வராமல் காக்க முடியும் என்பது இவர்களால் அனைவருக்கும் எடுத்துரைக்கப்பட்டது.
திரைத்துறை பிரபலங்கள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் போன்றோரின் பிரச்சாரங்களும் இதில் பெருமளவு உதவி புரிந்தன. அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் முகவர்கள் மற்றும் மனித நேய அமைப்புகள் போன்றவையும் இதில் பெருமுயற்சி எடுத்துக்கொண்டன.
இந்தத் தொடர் முயற்சிகளின் விளைவால், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் கண்டறியப்பட்ட இரண்டரை வயது பெண் குழந்தையே இந்தியாவில் கடைசி போலியோ நோயாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.