மதயானை கூட்டம் விமர்சனம்
கறிக்கடை பாய்க்கே கத்தி பிடிக்க கற்றுக் கொடுப்பார் போலிருக்கிறது அறிமுக இயக்குனர் விக்ரம் சுகுமாரன். படத்தில் குறிப்பிடும் சாதியினர், இன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாகவும், அரசுத்துறையில் பலமானவர்களாகவும் ஏன்… ஆன்மீகத்தில் கரை கண்டவர்களாகவும் கூட இருக்கிறார்கள். இருந்தாலும் சுகுமாரன் ஒரு ‘ஹலால் வணக்கம்’ போட்டுவிட்டு கொலை பிரியாணி கிண்டியிருக்கிறார். இப்படி ஒரு படம் இந்த காலத்தில் தேவையா, இந்த இயக்குனரை கைது செய்தால்தான் என்ன என்கிற அளவுக்கு விமர்சனங்கள் இருந்தாலும் ஒரு இயக்குனராக முதல் படத்திலேயே வியக்க வைத்திருக்கிறார் இந்த விக்ரம் ‘பலே’குமாரன்.
கரணம் தப்பினால் மரணம் டைப் கதை. விட்டால் ஆவணப்பட லிஸ்ட்டில் சேர்ந்திருக்கும். அந்தளவுக்கு துல்லியமான பதிவு இது. அந்த சமூகம் இன்னும் ஐம்பது அறுபது வருஷங்கள் கழித்து தங்கள் வேர்களை தேடும்போது இந்த படமும் வந்து டேபிளில் விழும். அதற்கு தகுதியான நேர்த்தியும் முனைப்பும் இருக்கிறது படத்தில். அதே நேரத்தில் அதை கமர்ஷியலாக சொன்ன விதத்திலும் கவனம் ஈர்க்கிறார் இந்த அறிமுக இயக்குனர்.
கதை?
ஊரே கையெடுத்துக் கும்பிடுகிற ஜெயக்கொடி தேவர், தனது மனைவியை விட்டுவிட்டு வேற்று ஜாதி பெண்ணுடன் செட்டில் ஆகிவிடுகிறார். அவரது மனைவி செவனம்மா தன் அண்ணன் வீட்டிலேயே தங்கிவிடுகிறார். இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தைகள். அதில் ஒருவர்தான் ஹீரோ. திடீரென ஒருநாள் ஜெயக்கொடி தேவர் இறந்துவிட, பிணத்தை வலுக்கட்டாயமாக கொண்டு போகிறார்கள் முதல் மனைவி வீட்டுக்கு. இரண்டாவது மனைவி குடும்பம் தெருவிலேயே நின்று வேதனையோடு இறுதி சடங்குகளை கவனிக்கிறது. சடங்குகளின் போது நடக்கும் புறக்கணிப்புகள், வம்பளப்புகள் எல்லாம் ஹீரோவின் மனதை காயப்படுத்திக் கொண்டேயிருக்க, அடுத்தடுத்த நாளில் பெரியம்மாவான செவனம்மாவின் அண்ணன் மகனை யதேச்சையாக கொன்றுவிடுகிறார் ஹீரோ.
நான் வேணும்னு கொல்லல… என் அம்மாவை மட்டும் காப்பாத்துங்க என்று தன்னிடம் பேசவே விரும்பாத பெரியம்மாவிடம் கெஞ்சிவிட்டு எஸ்கேப் ஆகிறார் ஹீரோ. கொலைவெறியோடு துரத்துகிறது மதயானை கூட்டம். நம்பி அம்மாவை ஒப்படைத்தாரே… அந்த பெரியம்மா என்ன செய்தார்? துரத்தி வந்த கூட்டத்தின் கொலைவெறி தீர்ந்ததா? நடுவில் வந்த காதலின் கதி? இப்படி அடுக்கடுக்கான திருப்பங்களில் வழுக்கிக் கொண்டே செல்கிறது படம். சமீபத்தில் இப்படியொரு விறுவிறுப்பான திரைக்கதை வந்ததேயில்லை என்று கூட சொல்லலாம்.
முதலில் அந்த ஜெயக்கொடி தேவரை பாராட்டிவிட வேண்டும். நிஜமாகவே அந்த பகுதியின் ஃபார்வேட் பிளாக் கட்சி பிரமுகராம் இவர். இந்த முருகன்ஜி கூத்துப்பட்டறை நடிகர்களுக்கே சொல்லிக் கொடுப்பார் போலிருக்கிறது. அப்படியொரு அசத்தலான நடிப்பு. இந்த கேரக்டரை நீடிக்காமல் பொசுக்கென முடித்தது ஏமாற்றம்தான். இவரது மனைவியாக நடித்திருக்கும் விஜி சந்திரசேகர், ஒரு சிவப்பு சரிதாவாகியிருக்கிறார். அந்த பரந்து விரிந்த கண்கள், பக்கம் பக்கமாக பேச வேண்டிய டயலாக்குகளை கூட ஒரு லுக்கில் சொல்லிவிடுகிறது. பல வருடம் கழித்து கணவனின் பிணத்தை அருகில் பார்க்கும் ஒரு மனைவி கதறி விழுந்து புரளாமல் நடிக்க வேண்டும்… எப்படி என்பதை மதயானை கூட்டத்தில் பாருங்களேன்…
எழுத்தாளர் வேல ராமமூர்த்திக்கு இதுதான் முதல் படம். படத்தில் வீரத்தேவர்! தன் பாசத் தங்கைக்காக ஒவ்வொன்றாக விட்டுக் கொடுக்கிறவர், கடைசியில் தன் சொந்த மகனை போட்டுத் தள்ளியவனை காப்பாற்ற அந்த தங்கையே நினைப்பதை புரிந்து கொள்கிறார். இது தெரிந்தே அவர் ஆடும் கேம் திகில் ஆட்டம் என்றால், அந்த கருப்பு ஆடு யாருன்னு கண்டு பிடிக்கிறேன் என்று அரிவாளை தீட்டுகிறாரே… மனசே திக் திக்! செய்முறை விஷயத்தில் தங்கை மகனின் கேலிப்பேச்சுக்கு ஆளாகி இவர் தவிக்கிற காட்சிகளெல்லாம் ஆண்டு அனுபவித்த நடிகர்களுக்கு கூட அவ்வளவு எளிதில் வந்துவிடாது. பிரமாதப்படுத்துகிறார் வேல.ராமமூர்த்தி.
மதயானைகளின் கையில் சிக்காமல் தப்பி ஓடவேண்டிய நிலைமை ஹீரோ கதிருக்கு. கைக்கெட்டும் தொலைவில் இருந்து கொண்டே ஒவ்வொரு முறை அவர் தப்பிக்கும்போது ஒரு ‘அப்பாடா’வுக்கு ஆளாகிறோம். ஓவியாவுக்கும் இவருக்குமான காதலில் உப்பும் இல்லை, உரைப்பும் இல்லை. இருவரும் சேர வேண்டும் என்கிற ஆசையும் வரவில்லை நமக்கு. ஆனாலும் இந்த படத்தில் காதல் என்கிற ஒன்று இல்லை என்றால் அந்த இரண்டரை மணி நேர முழுப்படமும் ரசிகர்களுக்கு ரத்தாபிஷேகமாக இருந்திருக்கும்.
படத்தில் எல்லாரையும் வெகுவாக கவர்வது விஜி சந்திரசேகரின் மகனான நடித்திருக்கும் அந்த இளைஞர்தான். இவரிடம் என்னவொரு துள்ளல்! (தமிழ்சினிமாவில் நல்ல இடம் காத்திருக்கு பிரதர்) செய்முறை கிடைக்கும் என்பதற்காகவே ஏதாவது பண்ணிவிட்டு சிறைக்கு போய்விடுகிறார். வாயை திறந்தாலே அது வம்பில்தான் முடிகிறது. ஒரு தங்க சங்கிலி செய்முறைக்காக இவர் பேசுகிற பேச்சுக்கு சென்‘சார்களின்’ காதெல்லாம் கூட பஞ்சடைத்திருக்கும். பல இடங்களில் மியூட்.
மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கும் படத்தில் ஆரம்பத்தில் வரும் அந்த எழவுப்பாடல் சடக்கென முடிந்துவிடும் என நினைத்தால், அதில்தான் கதையை கோர்த்து சொல்கிறார் இயக்குனர். புது டச்!
ராகுல் தர்மனின் ஒளிப்பதிவு அந்த திகில் நேரங்களை பதற பதற பந்தி வைக்கிறது. இசையும் பின்னணி இசையும் ரஹநந்தன். செய்முறையில் ஒரு குறையும் இல்லை.
க்ளைமாக்ஸ் மட்டுமல்ல, அதற்கு முன்பாக வரும் ஹீரோவின் அம்மா மரணமும் கூட உணர்த்துவதென்ன? ஒரு குறிப்பிட்ட சாதியை பெருமைப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு இயக்குனர் கதை எழுதியிருந்தாலும், நம்பி வந்தவங்களுக்கு விஷம் வைப்பார்கள். மறைந்திருந்து கொல்வார்கள் என்றெல்லாம் அந்த சாதியை அவர் இழிவு படுத்துவதாகவே படுகிறது.
ஜாதி யானைகளை பட்டினி போட வேண்டிய தருணம் இது. இந்த இயக்குனரோ விருந்தே வைத்திருக்கிறார். சமூகத்திற்கே அஜீரண கோளாறை ஏற்படுத்திய டைரக்டர் விக்ரம் சுகுமார், அடுத்த படத்திலாவது உரிய மருந்தோடு வரட்டும்!
-ஆர்.எஸ்.அந்தணன்
like
arumai…
some more detailed opinion is here – http://kanavuthirutan.blogspot.in/2013/12/blog-post_3936.html