மரியான் – விமர்சனம்
கடலோர கதைகளை கண்டம் துண்டமாக சிதைக்கிற வியாதி அண்மைக்காலமாகவே பெருகி வருகிறது தமிழ்சினிமாவில். கடல், டேவிட் என்று மூச்சு வாங்கி உட்கார்ந்து மூணு மாசம் முடியல. அதற்குள் இன்னொரு ‘முடியல…’
கடலோரத்தில் பிழைப்பு நடத்தும் மீனவர்களில் மரியான் மட்டும் டிபரன்ட்! எல்லாரும் வலையோடு கடலுக்கு போனால் இவர் மட்டும் ‘சுளுக்கி’யோடு செல்கிறார். கடலுக்கு அடியில் சப்பணமிட்டு அமர்ந்து ஒரு கொக்கு போல தவமிருந்து கடல் சுறாவை அந்த சுளுக்கியால் கொத்திக் கொண்டு மேலே வருகிறார். கடல்ல அவ்ளோ பெரிய கப்பலே மிதக்கும்போது அந்த கப்பலில் பறக்கும் கொடியின் வெயிட் கூட இல்லாத இவரால் மட்டும் எப்படி சப்பணம் போட்டு உட்கார முடிகிறது? விடுங்கய்யா… ஒரு ஹீரோவுக்கு இப்படியொரு பில்டப் கூட இல்லேன்னா எப்படி?
கடல் சுறாவை வேட்டையாட தெரிந்த மரியானுக்கு காதல் மட்டும் செய்யவே தெரியவில்லை. இவரை விரட்டி விரட்டி நேசிக்கும் பனி மலரை எட்டி மிதிக்காத குறையாக விரட்டுகிறார். இவ்வளவு பெரிய கடுப்பு ராசாவான இவரை ஒரு பொன்மொழி அப்படியே திருப்பிப் போடுகிறது. அது?
‘பொம்பள வாசம் இருக்கிறவனாலதான் வாழ்க்கையில சாதிச்சுகிட்டே இருக்க முடியும்’ போகிற ‘போட்’டில் இவர் நேசிக்கும் பார்வதியின் அப்பனே இப்படியொரு பொன்மொழியை உதிர்க்க, அதே ஊரிலிருக்கும் ஒரே ஒரு அழகான பார்வதி மீது காதல் கொள்கிறார் தனுஷ். விதி வில்லன் ரூபத்தில் வருகிறது. ‘வாங்கிய கடனுக்கு பொண்ணை கொடு. இல்லேன்னா பணத்தைக் கொடு’ என்று கழுத்தில் கத்தி வைக்காத குறையாக அவன் மிரட்ட, வார்த்தைக்கு வார்த்தை ‘ஆத்தா…’ என்று ஆசையோடு நேசிக்கும் கடலையே இழந்துவிட்டு வெளிநாட்டுக்கு கிளம்புகிறார் தனுஷ்.
ஏஜென்ட்டிடம் வாங்கிய பணத்தில் பார்வதியின் கடனை அடைத்துவிட்டுதான் இந்த பயணம். ரெண்டே வருஷத்தில் சொந்த ஊருக்கு திரும்புகிற நேரம், சூடான் தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார். இவர் பேசும் பாஷை அவர்களுக்கு புரியாமல் அவர்கள் பேசும் பாஷை இவருக்கு புரியாமல் ஒரு விலங்கை போல அவதிப்படும் தனுஷ் எப்படி அவர்களிடமிருந்து தப்பித்தார்? மொத்த ரீல்களையும் நத்தையின் முதுகில் ஏற்றிவிட்டு நம்மையும் காத்திருக்க வைக்கிறார் டைரக்டர் பரத் பாலா. அப்பாடா… எப்படியோ படம் முடிந்தது.
யாராலும் வெல்ல முடியாத கடல் சுறாவாக நடிப்பில் முழுமையடைந்திருக்கிறார் தனுஷ். காட்சிகள் சொதப்பலாக இருந்தால், பாவம்… இவரென்ன செய்வாராம்? ஏகப்பட்ட குளோஸ் அப்புகள்! எல்லாவற்றிலும் மூக்கு நுனி, காது நுனி கூட நடித்திருக்கிறது. இவரைப்போல நடிகர்கள் இல்லையென்றால் குளோஸ் அப் லென்சுகளில் பாசி பிடித்திருக்கும் இந்நேரம்! உசிரே போவப் போவுது. இனியென்ன…? என்கிற அலட்சியத்தில் கற்பனையில் விருந்து சாப்பிடுகிற காட்சியெல்லாம் அற்புதமான சித்தரிப்புதான். அதற்காக அவரது இல்யூஷனில் எவ்வித சொல்யூஷனும் இல்லாமல் புலி வருவதெல்லாம் பேத்தல் சாமி. (இது நிஜமா, கற்பனையா என்று ரசிகர்களையும் குழப்புகிறார் பரத் பாலா)
தீவிரவாதிகளை இவ்வளவு அரைவேக்காட்டுத் தனமாக வேறெந்த சினிமாவும் காட்டியதில்லை. தீபாவளி பொம்மை துப்பாக்கி போல சிலவற்றை வைத்துக் கொண்டு வெற்று வானத்தை சுட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் குழந்தைகளும், கொழுப்பெடுத்த குமரிகளும் கூட இருக்கிறார்கள். ஜைஞ்யா ஜிக்காவென்றெல்லாம் ஆடுகிறார்கள். அப்புறம் சட்டென சீரியஸ் ஆகிவிடுகிறார்கள். ஓவ்வ்…
பார்வதிமேனனின் ஓவர் ஆக்டிங் ஆங்காங்கே இடித்தாலும், வெளிநாட்டிலிருந்து போன் வரும் என்று அதன் அருகிலேயே அவர் படுத்திருக்கிற காட்சியும், ஒரு ரிங்குக்கே பதறியெழுந்து துடிப்பதும் நெகிழ வைக்கும் காட்சிகள். தனுஷ் திரும்பி வந்துவிட்டதாக அவர் உணர்கிற காட்சியில், ஒருவேளை மனப்பிறழ்வுக்கு ஆளாகிவிட்டாரோ என்றும் தோன்றுகிறது. சே..சே… அப்படியிருக்காது என்றும் தோன்றுகிறது. படத்தில் வரும் பாதிக் காட்சிகள் ‘ரசிகர்களே புரிந்து கொள்ளட்டும்’ லெவலில் இருப்பதுதான் கஷ்டம்.
அந்த வட்டிக்கார வில்லன், ‘ஐயோ பாவம். அவனும் நம்ம ஊரு புள்ளதானே?’ என்று தனுஷுக்காக இரக்கப்படுகிற மாதிரி ஒரு காட்சி வருகிறது. அதோடு அவனை விட்டிருந்தால் ஒரு சராசரி காட்சியை தவிர்த்த புண்ணியமாவது கிட்டியிருக்கும்?
பார்வதிக்கு அப்பாவாக நடித்திருப்பவர் ஃபேமஸ் மலையாள ஆர்ட்டிஸ்ட் என்றார்கள். கறந்த பாலில் கறிவேப்பிலையை கிள்ளிப் போட்ட மாதிரி என்னவோ கடைசிவரைக்கும் ஒட்டவேயில்லை இவர்.
ஏற்கனவே துயரம். இதில் காமெடி ஜெகன் வேறு… ஹம்ம்ம்! கமலா காமேஷ் இப்பேதெல்லாம் நடிப்பதில்லை என்கிற ரசிகர்களின் சந்தோஷத்தை கெடுப்பதற்காகவே நுழைத்திருக்கிறார்கள் அவரது வாரிசை. உமா ரியாஸ்கான் வருகிற காட்சிகள் எல்லாம் ‘சீன் எப்படா முடியும்’ என்றே தோண வைக்கிறது.
படத்தில் சொல்றதுக்கு ஒண்ணுமேயில்லையா? ஏனில்லை… ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான பாடல்களும் அதை படமாக்கிய விதத்தையும் ரசித்துக் கொண்டேயிருக்கலாம். அதுமட்டுமல்ல, மார்க் கோனிக்ஸ் என்ற வெளிநாட்டுக் காரரின் ஒளிப்பதிவில் எல்லா காட்சிகளும் வரைந்து வைத்த மாதிரி அப்படியொரு அழகு.
பாலைவனத்தின் மணல் மேட்டிற்கு பக்கத்திலேயே பசுமையான கடல்! கிராபிக்ஸ் நிபுணர்களும் தங்கள் பங்குக்கு அதிசயத்தை நிகழ்த்துகிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள் அவரவர் வேலையை அவரவர் சிறப்பாக பார்க்க, கேப்டன் ஆஃப்த ஷிப்புதான் கப்பலை லைட் ஹவுசில் மோதி உடைத்திருக்கிறார்.
கப்பலும் போச்சு. கலங்கரை விளக்கும் போச்சு!
-ஆர்.எஸ்.அந்தணன்