மறுமுனை / விமர்சனம்

இன்டர்வெல் வரைக்கும் கூட என்ன சொல்ல வருகிறோம் என்பதையே தீர்மானிக்க முடியாமல் வெட்டியாக அளக்கும் பல இயக்குனர்கள், ‘ஆமா… கதைன்னு ஒண்ணு சொல்லனுமில்ல?’ என்று சுதாரித்துக் கொண்டு திரும்பி வருவதற்குள் பாதி ஆடியன்ஸ் கேட்டீனில் ஆறிப் போன டீக்கு ஆளாய் பறப்பார்கள். நல்லவேளை, இந்த படத்திற்கு அப்படியொரு சங்கடம் இல்லை. முதல் காட்சியிலேயே கதை ஓப்பன் ஆகிவிடுகிறது. அதற்காகவே அறிமுக இயக்குனர் மாரீஷ் குமாருக்கு ஒரு மனம் திறந்த வெல்கம்.

ஒரு காதல் ஜோடி தற்கொலை பாறையிலிருந்து படு படு பாதாளத்தில் குதிக்கிறது. கதாநாயகி கீழே விழ, அவளுடன் விழவேண்டிய ஹீரோ மட்டும் விழாமல் தப்பிப்பதோடு, இருவரும் சேர்ந்து எழுதிய தற்கொலை நியாயக் கடிதத்தை வாயில் போட்டு அப்படியே மென்று கொண்டே திரும்புகையில், தியேட்டரில் அக்கடா என்று சாய்ந்த தோள்கள் அத்தனையும் சடக்கென்று நிமிர்கிறது. அட… படம் சூடு பிடிச்சிருச்சு…

யார்றா அவன்? ஏன் ஒவ்வொருத்தரா தேடி தேடி கொல்றான்? என்கிற கேள்வியோடு படம் ஓடுகிற திசையிலெல்லாம் ரசிகனும் ஓட, ஏதாவது புதுசா சொல்லணுமில்ல? ஆனால் அந்த இடத்தில்தான் டைரக்டர் பழைய பஞ்சாங்கத்தை லேசாக புரட்டி பழைய நெடியோடு ஒரு கதையை சொல்லி முடிக்கிறார். அந்தஸ்து காரணமாக பிரிகிற காதல் ஜோடி தற்கொலை முடிவொடு ஸ்கில் ஸ்டேஷனுக்கு கிளம்புகிறது. சாகுற இடத்திலாவது நிம்மதியாக விடுகிறதா சொசைட்டி? அங்கும் சில சமூக விரோதிகள் மூக்கை நுழைத்து, அந்த இளம் காதல் ஜோடியில் பெண்ணை மட்டும் தாறுமாறாக யூஸ் பண்ணுகிறார்கள். நான் போறேன். அத்தனை பேரையும் போட்டு தள்ளிட்டு வா என்கிறாள் ஹீரோயின். அவள் ஆசையை ஹீரோ நிறைவேற்றினாரா என்பது மிச்சம் மீதி விறுவிறுப்பு.

புதுமுகம் மாருதிக்கு அப்பாவியாக நடிக்க தெரிந்தளவுக்கு அல்டிமேட் கொடூரனாகவும் நடிக்க தெரிகிறது. தமிழ்சினிமாவில் ஹீரோக்கள் பஞ்சத்தையும் போக்குவார் என்று நம்ப வைக்கிறது அந்த நடிப்பு. காதலியின் அப்பாவான சேரன்ராஜ் அந்த ஏரியாவிலேயே பெரிய பணக்காரர், ஒண்ணாம் நம்பர் ரவுடி என்று தெரிந்த பின், மாருதியை மன்னிப்பு கேட்க அழைத்துப் போகிறார் அப்பா எம்.எஸ்.பாஸ்கர். தாம் வேண்டுமென்றே அலைகழிக்கப்படுகிறோம் என்பதை அறிந்த ஹீரோ, வெகு சவடாலாக சேரன் ராஜிடம் பேசிவிட்டு அகலும் அந்த காட்சியில் உணர்ச்சிவசப்படுகிறது தியேட்டர். அதற்காக வானத்தை கூரையாக வளைப்பான் ஹீரோ என்கிற தப்பான கான்சப்டுக்குள் நுழையாமல் அவனை அடிவாங்க விடும் திரைக்கதைக்கு ஒரு பொக்கேவே கொடுக்கலாம். இதுதான் இயக்குனர்கள் சறுக்குகிற இடமும் கூட.

கதாநாயகி மிருதுளா பாஸ்கர், மாருதியை காதலிக்க வலுவான காரணங்கள் எதுமில்லை என்றாலும், அப்பா சேரன் ராஜிடம் நடுங்குகிற காட்சிகள் பரிதாபத்திற்குரியவை. குளோஸ் அப்பில் சகிக்க முடியாத பர்பாமென்ஸ்?

எத்தனையோ கனவுகளோடு மகனை வளர்த்து அவன் இப்படி காதலில் விழுந்து கனவை சிதைக்கிறானே என்கிற வருத்தமும், துயரமும் மேலிட, முழு கேரக்டர் ரோலில் விளையாடியிருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். ஒரு நகைச்சுவை நடிகருக்கு இப்படியொரு சுமையை தலையில் ஏற்றிய தைரியத்திற்காக இயக்குனரை நொந்து கொள்வதா? ஏற்றுக் கொண்ட எம்.எஸ்.பாஸ்கரை நொந்து கொள்வதா?

சேரன்ராஜ் ஊரில் பெரிய மனுஷர் என்பதற்காக பெற்ற பெண்ணிடமே ஜெயில் வார்டன் போல நடந்து கொள்வது எரிச்சலோ எரிச்சல். ஆனால் அவ்வளவு பெரிய சிடுமூஞ்சியே கூட மகளின் இழப்பு பொறுக்காமல் தவிக்கிறான் என்பதை ஒரு ஷாட்டில் உணர்த்திவிட்டு போகிறார் டைரக்டர். ஒரு தியேட்டரை வலுக்கட்டாயமாக பறித்து, அதே தியேட்டருக்கு தனது மகள் வேறொருவனுடன் வந்திருக்கிறாள் என்பதை அறிந்து வேவு பார்க்கும் இந்த கேரக்டர், ஓநாயை போல உதறலெடுக்க விடுகிறது.

நான் கடவுள் ராஜேந்திரன், ராஜசிம்மன் ஆகிய வில்லன்கள் சொசைட்டியில் நல்லவங்களே இல்லையாப்பா… என்கிற புலம்பலுக்கு வழி செய்கிறார்கள்.

இதுபோன்ற த்ரில்லர்களுக்கு பின்னணி இசைதான் பொக்கிஷம். அதை திறமையாக கையாண்டிருக்கிறார் தாஜ்நுர். சில இடங்களில் இரைச்சல் அதிகமிருந்தாலும், மனசை அதிர வைக்கிற பின்னணி இசைதான் காட்சிகளுக்கு கான்கிரீட் பலம் சேர்க்கிறது. சத்யதேவின் இசையில் சில பாடல்களை முணுமுணுக்கலாம்.

பெரும்பாலானவை இருட்டு காட்சிகள்தான். முறையான லைட்டிங்குகளால் மிரள வைக்கிறார் ஒளிப்பதிவாளர் புன்னகை வெங்கடேஷ்.

இளசுகளின் அவசரக் காதல் எதிர்காலத்தையே காவு கேட்கும் என்பதைதான் இரண்டரை மணி நேர ட்யூஷனாக எடுத்திருக்கிறார் மாரீஷ் குமார். இன்னும் கொஞ்சம் மெனக்கட்டிருந்தால் மறுமுனையின் கூர்மை அலட்சியமாக கடந்து போகிறவர்களையும் லேசாக கிழித்து தன் இருப்பை சொல்லியிருக்கும்.

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இந்த முறையும் விட மாட்டாங்க போலிருக்கே?

எங்கே போய் மூக்கை நுழைச்சாலும், அங்கேயும் ஒரு முட்டு சந்து இருக்கே என்று நொந்து கொள்வார் போலிருக்கிறது விஜய். கடந்த சில வருடங்களாகவே அவரை சீண்டிக் கொண்டேயிருக்கிறார்கள்...

Close