மாலினி 22 பாளையம்கோட்டை விமர்சனம்

‘அறுத்துபுடுறேன் அறுத்து…’ என்கிற படுபாதக திட்டத்தோடு படம் எடுத்து தியேட்டருக்கு வருகிற ரசிகர்களை உயிர்வதை செய்யும் படங்களை அனுபவித்த அன்பு உள்ளங்களுக்கு, ஒரு நிஜமான அறுப்பு படம்தான் இந்த மாலினி ஸோ அண் ஸோ. ஆனால் இவர்கள் சொல்ல வந்தது அந்த ‘அறுப்பு’ அல்ல. வேறொன்று! பெண்கள் கத்தியெடுப்பது காய்கறி நறுக்க மட்டுமே என்று நினைத்து வந்த ஆணாதிக்க சிந்தனையாளர்களுக்கு, வேறொன்றையும் அறுக்க முடியும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இப்படி ஊருக்கு நாலு அறுப்பு நடந்தால் அதற்கான பெருமை இவர்களையே சாரும்.

சரி படம் எப்படி? சற்றே முன்பாதியில் பிளேடு வைக்கிறார்கள். பின் பாதி ஷார்ப்.

நர்ஸாக வேலை பார்க்கும் நித்யாமேனனுக்கு வெளிநாட்டுக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை. பாஸ்போர்ட் ஆபிசில் வேலை பார்க்கும் கிரிஷ்ஷை அடிக்கடி சந்திக்கிறார். அது காதலாகிறது. இருவரும் ஒரு வீட்டில் தங்குகிற அளவுக்கு அது முற்றுகிறது. நல்ல குடும்பத்து பெண்களே அஞ்சி அஞ்சி வாழ்கிற நேரம் காலமிது. நித்யாவோ கிரிஷுடன் சேர்ந்து சரக்கடிக்கிற அளவுக்கு ஜெல்லாகிறார். விடுவாரா கிரிஷ்? இந்தா சாப்டுக்கோ என்று தனது மேலதிகாரி நரேஷுக்கும் நித்யாவை சப்ளை செய்ய நினைக்கிறார். தான் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து நரேஷை வீட்டுக்கு அனுப்புகிறார். போன இடத்தில் புலி, மான் மீது பாய்ந்து வன்புணர்ச்சி நடக்க, அதற்கப்புறம் ஒரே குய்யோ முறையோவாகிறார் நித்யா. இது ஒருமுறை நிகழ்ந்தால் கூட பரவாயில்லை. மன்னிப்பு கேட்கிறேன் பேர்வழி என்று பொக்கேவோடு வருகிறவர் மீண்டும் ஒருமுறை பாய, நைந்து போகிறார் நித்யா. இனிமே இங்கே இருக்க வேண்டாம் என்று காதலனுடன் கோவை கிளம்பும் அவரை வழியில் நைசாக போதைப்பொருள் போலிசிடம் சிக்க வைத்துவிட்டு எஸ்கேப் ஆகிறார் க்ரிஷ். பாளையங்கோட்டை ஜெயிலுக்கு போகும் நித்யா, பரோலில் திரும்பி வந்து பழி தீர்ப்பதுதான் கதை.

விதை இருந்தால்தானே விவசாயம்? கிடங்கையே அழிக்கிறேன் என்று கத்தி எடுக்கும் நித்யா, போட்டுத்தள்ளும் பிரதேசம்தான் படத்தின் ஹைலைட். அதுவும் க்ரிஷ்ஷின் பார்ட்டை அறுத்து தையல் போட்டு மருந்தும் கொடுத்து, இனி நீ ஆம்பிளையா நடந்துக்க முடியுமான்னு யோசி. அதுதான் உனக்கு நான் தர்ற தண்டனை என்று நடையை கட்டுகிறாரே… அப்ளாஸ் அள்ளுகிறது தியேட்டரில்.

இந்த கேரக்டரில் நித்யாவை விட்டால் நடிக்க ஆளேது என்கிற அளவுக்கு பர்பாமென்ஸ் பின்னி எடுக்கிறது அவரது முகத்தில். குழந்தை முகத்தோடு அவர் கிரிஷ்ஷை நம்புவதும், அதே முகம் பாறையாக இறுகி பழிவாங்க துடிப்பதுமாக தன் அகன்ற கண்களை வெள்ளித்திரையாக்கி விருந்து படைக்கிறார் நித்யாமேனன். இவரும் க்ரிஷ்ஷோடு சேர்ந்து குடிக்கும்போதுதான், ‘தேவைதான் இவளுக்கெல்லாம்’ என்கிற மனநிலை வருகிறது ரசிகனுக்கு. அதை தவிர்த்திருக்கலாமே டைரக்டர் ஸ்ரீப்ரியா?

புதுமுகம் கிரிஷ்ஷுக்கு மிக அற்புதமாக வருகிறது நடிப்பு. எவ்வித அலட்டலும் இல்லை. நிறைவாக நடித்திருக்கிறார். கண்களில் மின்னல் போல வந்துவிட்டு போகும் கல்மிஷம்தான் இவரது ஸ்பெஷலும் கூட. கொஞ்சம் கொஞ்சமாக நம்ப வைத்து கழுத்தறுக்கும் அவரது கேரக்டரை கூட நித்யா போலீசில் சிக்குகிற நேரத்தில் அவிழ்த்திருந்தால் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்குமோ?

வில்லன் நரேஷின் நடிப்பு அப்பட்டமான சைக்கோவாகவே மாற்றிவிடுகிறது அவரை. நித்யாவை பலவந்தமாக அவர் அடைகிற காட்சியில் நல்லவேளை… ஆபாசமில்லை. ஐயோ பாவ பார்வைதான் ஏற்படுகிறது. படத்திற்கு பலமும் அதுவேதான். சில காட்சிகளே வந்தாலும் கோட்டா சீனிவாசராவ் அவருக்கான கோட்டாவை நிறைவு செய்கிறார். முதன் முறையாக அவரை நல்லவராக பார்க்கும்போது, ‘அடப்பாவிகளா… இந்த பசுமாட்டையா இத்தனை காலம் ஜல்லிக்கட்ல இறக்கிவிட்டு வேடிக்கை பார்த்தீங்க?’ என்று கதற தோன்றுகிறது.

சிறையில் பெண் கைதிகள் படும்பாட்டை பார்த்தால் ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லையென்றே தோன்றுகிறது. கொஞ்ச நேரமே வந்தாலும் சிறையிலிருக்கும் அந்த பெண் கைதி மனதில் நிற்கிறார்.

மிக சொற்பமான நடிகர்களை வைத்து படம் பண்ணியிருக்கிறார் ஸ்ரீப்ரியா. காட்சிகளுக்கான மெனக்கடலும் கூட சொற்பமாகவே தெரிவதுதான் மைனஸ். நித்யாவுக்கும் க்ரிஷ்ஷுக்குமான காதல் போர்ஷனில் ஒரு இளமை திருவிழாவே நடத்தியிருக்கலாமே? இதெல்லாம் சேர்ந்துதான் முன்பாதியை சொதப்புகிறது. ஆனால் பழிவாங்கும் கேம் ஸ்டார்ட் ஆனதும், படத்தில் சுவாரஸ்யங்களும் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது.

வசனங்களை ஸ்ரீப்ரியா எழுதியிருக்கிறார். ரோட்ல பொம்பளைங்க வர்றாங்கன்னு கூட பார்க்காம ஒண்ணுக்கு போற நீங்கள்ளாம் திருந்தணும்டா என்றெல்லாம் வசனம் எழுதியிருக்கிறார். அதற்கெல்லாம் அறுக்க ஆரம்பித்தால், நாடு தாங்காதும்மா. ப்ளீஸ்…

ஒளிப்பதிவு அழகு. அரையிருட்டில் அது இன்னும் அழகு. சபாஷ் மனோஜ்பிள்ளை. பாடல்களில் கோட்டை விட்டிருக்கும் இசையமைப்பாளர் அரவிந்த் ஷங்கர், பின்னணி இசையில் மிரள வைக்கிறார்.

ஜாலி தேடும் மாலினிகளும் சரி, மாலினி தேடும் ஜாலிபர்களும் சரி, ஒரே நேரத்தில் உணர வேண்டிய படம்.

ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. Snake says

    isn’t this copy of movie hard candy ?

    http://www.youtube.com/watch?v=a-C2H4ipxz0

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘ நமீதா சீஸன் ஓவர், இனி நான்தான் நமீதா! ’ புகைச்சலை கிளப்பும் கிளாமர் குயின் நித்யா!

வானத்தில் சிரிக்கிற நட்சத்திரம் சட்டை பாக்கெட்டில் விழுந்த மாதிரி எப்பவாவது சில கவர்ச்சி அழகிகள் கோடம்பாக்கம் என்கிற சட்டை பாக்கெட்டில் விழுவார்கள். ‘சிலுக்குக்கு முன் சிலுக்குக்கு பின்’...

Close