மின்னாமலே மின்னும் நட்சத்திரங்கள்! “ரஜினி என்ற மகா மனிதர்….”

எல்லா மக்களுக்கும் சினிமா பார்க்க வேண்டுமென்பது லட்சியமில்லை. ஆனால் எல்லா சினிமாவுக்கும் மக்கள் பார்க்க வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கிறது. லோ பட்ஜெட் படங்களில் துவங்கி, மெகா பட்ஜெட் படங்கள், மினிமம் பட்ஜெட் படங்கள் என்று ரக வாரியாக உருவாகும் படங்களில் நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள். ஆக்ஷன் இருக்கிறது. ஆட்டம் இருக்கிறது. முகம் தெரிந்த எல்லாரையும் பூமாலை போட்டு கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். முகம் காட்ட விரும்பாத, அல்லது அதற்கு அவசியமில்லாத இயக்குனர்களையும், எடிட்டர்களையும், இசையமைப்பாளர்களையும், ஆர்ட் டைரக்டர்களையும் அடையாளம் காட்ட இங்கே ஏராளமான மீடியாக்கள் இருக்கிறது. இவர்களின் உதவியோடு புகழ் வெளிச்சத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொருவரும்.

ஆனால் சினிமா முடிகிறபோது ரோலிங் டைட்டிலில் ஒடி மறைவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறது இங்கே. சினிமாவை இவர்களை விட யாரும் அதிகமாக நேசித்திருப்பார்களா என்பதே சந்தேகமாக இருக்கும் இவர்களின் கதையை கேட்டால்! ஆச்சர்யம் என்னவென்றால் நாமெல்லாம் கொண்டாடுகிறோமே சினிமா… அந்த சினிமா முதுகெலும்பில் முக்கால்வாசி பார்ட் இவர்கள்தான். உதாரணத்திற்கு ஒரு விஷயத்திலிருந்து இந்த உண்மையை துவங்கலாம்.

‘புரடக்ஷன் மேனஜரை வரச்சொல்லு….’ டைரக்டரின் இந்த குரலுக்கு கட்டிய மனைவியை போல ஓடி வந்து நிற்பார் அவர். ‘நாளைக்கு காலையில பிரசவ வார்டுல ஷுட்டிங். பிறந்த குழந்தை ஒண்ணு வேணும். அது பிறந்து ரெண்டு நாள் ஆகியிருந்தா கூட பரவாயில்ல. அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்’. அதோடு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவார் டைரக்டர். கேப்டன் ஆப் த ஷிப் என்பதால் எல்லா முடிவுகளும் இவர் தலையில்தான்.

மறுநாள் படப்பிடிப்பு தளத்தில் இவர் கேட்ட குழந்தை இருந்தாக வேண்டும். இல்லையென்றால் இந்த தொழிலுக்கே தகுதியில்லாதவர் ஆகிவிடுவார் அந்த புரடக்ஷன் மேனேஜர். குழந்தைக்கு அவர் எங்கே போவார்? அதற்காகதான் இங்கே ‘ஆர்கனைசர்கள்’ என்று சொல்லப்படும் எல்லாம் வல்ல ஆட்கள் இருக்கிறார்கள். சினிமாவில் எல்லா பிரிவிலும் இந்த ஆர்கனைசர்கள் என்பவர்கள் இருக்கிறார்கள். தயாரிப்பு நிர்வாகி இவரை அழைத்து, ‘நாளைக்கு காலை படப்பிடிப்புக்கு பிறந்த குழந்தை ஒண்ணு வேணும்ப்பா. அது பிறந்து ரெண்டு நாள் ஆகியிருந்தா கூட பரவாயில்லை’ என்று டைரக்டர் சொன்னதையே கிளிப்பிள்ளை போல ஒப்பிப்பார்.

அதற்கப்புறம் விடிய விடிய அலைந்து குழந்தையை கொண்டுவர வேண்டியது இந்த ஆர்கனைசரின் வேலை! இவர்களை ‘ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் ஆர்கனைசர்கள்’ என்கிறார்கள் சினிமாவில். இருபது வருடங்களாக இந்த வேலையை செய்து வரும் ரமணபாபு என்ன சொல்கிறார்? ‘எங்க ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் யூனியனில் ஆயிரக்கணக்கானவர்கள் உறுப்பினர்களா இருக்காங்க. படங்களில் காட்டப்படுகிற கூட்டம் அவ்வளவும் இவர்கள்தான். இதில் குழந்தையில் ஆரம்பித்து எண்பது வயது பெரியவர்கள் வரைக்கும் அடக்கம். எங்களை கூப்பிட்டு நாளைக்கு காலேஜ்ல ஷுட்டிங். படிக்கிற பசங்களா வேணும் என்று கூறிவிடுவார் டைரக்டர். எத்தனை பேர் தேவைப்படும் என்றும் கூறிவிடுவார்.

அதற்கேற்றார் போல ஆட்களை பொறுக்கிக் கொண்டு வருவதுதான் என் வேலை என்கிறார் ரமணபாபு. அதுவே ஆஸ்பிடல் செட்டப் என்றால், நோயாளிகள் போல ஆட்களை கொண்டு வருவதும் இவர்களது பொறுப்புதான். இருபத்திரெண்டு வருஷமா இந்த தொழிலில் இருக்கேன். நான் செய்த சாதனைன்னா, ஷங்கர் சாரோட இந்தியனுக்கு ஐயாயிரம் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் வேணும்னு கேட்டுட்டாங்க. மற்ற மற்ற ஆர்கனைசர்கள் உதவியோடு அவ்வளவு பேரையும் கொண்டு வந்து நிறுத்தினேன். ஆனால் இன்றைய தொழில் நுட்பம் வளர வளர நாங்கதான் பட்டினி கிடக்க வேண்டியிருக்கு. அதே ஷங்கர் சார் படத்துக்கு இப்போ ஐயாயிரம் பேர் தேவைப்பட்டால் கிராபிக்சில் அந்த கூட்டத்தை கொண்டு வந்துவிட முடிகிறதே, என்ன செய்ய என்று வேதனைப்படுகிறார் ரமணபாபு.

வெளியூருக்கு ஷுட்டிங் போறவங்க அந்த கிராமத்துல இருக்கிற மக்களையே நடிக்க வைச்சுடுறாங்க. இந்த தொழிலையே நம்பியிருக்கிற நாங்க எப்படி வாழ்வது? அட்லீஸ்ட், எங்களில் கொஞ்சம் பேரையாவது கூட்டிட்டு போகலாமே என்கிற இவருக்கு இன்னொரு வேதனை. முன்னெல்லாம் டைட்டிலில் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் உதவி என்று எங்கள் பெயர் படம் ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே வரும். இப்போது யாரும் பார்க்காதளவுக்கு படம் முடிந்து கடைசியில் ஓடி மறைந்துவிடுகிறது. எங்களுக்கு பழைய மரியாதையை கொடுத்தால் நன்றாக இருக்குமே என்கிறார்.

காஸ்ட்யூம் ஆர்கனைசர் முருகனின் அனுபவங்களை கேட்க கேட்க பிரமிப்பாக இருக்கிறது. சுமார் 32 வருடங்களாக இந்த தொழிலில் இருக்கிறார் இவர். ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா என்று எல்லா நடிகர்களின் படங்களிலும் பணியாற்றியிருக்கும் இவர் தற்போது வடிவேலுவின் புஜபல தெனாலிராமன் படத்திற்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு படத்திற்கு இவரை போன்ற காஸ்ட்யூம் ஆர்கனைசர்களின் பங்கு எப்படி?

சந்திரமுகி படத்துக்காக என்னை காஸ்ட்யூமரா வேலை பார்க்க கூப்பிட்டாங்க. ரஜினி சாருக்கு மும்பையில இருந்து டிரஸ் வந்துருச்சு. அதையெல்லாம் பார்த்தவர், ‘எனக்கு துணி எடுத்து தைச்சுருங்களேன்’ என்று கூறிவிட்டார். என்னை அழைத்து ரஜினிக்கு அளவெடுக்க சொன்னார்கள். துணியை வாங்கும் பொறுப்பும் எனக்குதான். சண்டைக்காட்சிகளுக்கு தேவைப்படும் துணியை மட்டும் இரண்டு செட் தைத்து வைத்துக் கொள்வது என்னுடைய வழக்கம். டைரக்டரிடம் கேட்டு அதை மட்டும் இரண்டு செட் தைத்து வைத்துக் கொண்டேன். என் விதி பெங்களூர் படப்பிடிப்பில் கை கொட்டி சிரித்தது.

ஒரு மீன் தொட்டியை ரஜினி சார் உடைப்பது போல காட்சி. கண்ணாடி தொட்டியை அவரை விட்டு உடைக்க சொல்வது ஆபத்து என்பதால் டூப் போட்டுக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார் டைரக்டர். ஒரு செட் துணியை ரஜினி சார் அணிந்து கொண்டிருக்கிறார். டூப்புக்கு இன்னொரு செட் வேண்டுமே, நான் திண்டாடி திக்குமுக்காட என்னையே கவனித்துக் கொண்டிருந்த ரஜினி சார், ‘என்னங்க குழப்பம்’ என்றார். நான் தயங்கி தயங்கி விஷயத்தை சொல்ல, அதுக்கென்ன? நான் கழட்டி தர்றேன். அவரை போட்டுகிட்டு நடிக்க சொல்லுங்க என்றார்.

அந்த ஷாட் முடிந்ததும் மீண்டும் அதே துணியை போட்டுக் கொள்ள வேண்டும். துவைத்து அயர்ன் செய்து தரக்கூட அவகாசம் இல்லை. நான் கவலையோடு அவரை பார்க்க, அதெல்லாம் ஒண்ணும் இல்ல அண்ணே. அவரு போட்டுட்டு கொடுக்கட்டும். நான் போட்டுக்குறேன் என்றார் சர்வ சாதாரணமாக.

இதை போலவே இன்னொரு சம்பவமும் நடந்தது. வடிவேலண்ணன் நடித்த இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்திற்கும் நான் காஸ்ட்யூம் ஆர்கனைசர். அவருக்கு ராஜ அலங்கார உடைகளை மட்டுமல்ல, அவர் அணிந்திருக்கும் அணிகலன்களையும் நானே வடிவமைத்து வைத்திருந்தேன். எதற்கு இரண்டு செட் என்று ஒரு செட் மட்டும் செய்து வைத்திருந்தேன். படப்பிடிப்பு முடிந்த ஒவ்வொரு நாளும் அந்த நகைகளை வடிவேலண்ணன் ஓய்வெடுக்கும் கேரவேனிலேயே வைத்து விடுவோம். கொடுமை என்னவென்றால், நடுவில் ஒரு நாள் ஷுட்டிங் நடக்கவில்லை. அன்றைய தினம் கேரவேன் சும்மாதானே இருக்கிறது. அதை வேறொரு கம்பெனிக்கு அனுப்பலாம் என்று நினைத்தவர்கள், அதிலிருந்த நகைகளை பெட்டியோடு இறக்கி கீழே வைத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த நேரம் பார்த்து ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்கு வந்த இன்னொரு வேன், இந்த நகைப்பெட்டியில் ஏறி இறங்கிவிட்டது. இந்த சம்பவம் நடக்கும் போது இரவு எட்டு மணி. மொத்த நகையும் நசுங்கிவிட்டதாக தகவல் வர, அலறி அடித்துக் கொண்டு ஏவிஎம்முக்கு ஓடினேன். கண்ணீரே வந்துவிட்டது எனக்கு. இனி தாமதிப்பதில் பிரயோஜனம் இல்லை. அவ்வளவு நகைகளையும் அள்ளிக் கொண்டு பாரிமுனைக்கு ஓடினேன். அங்கு விடிய விடிய அதே போல நகைகளை செய்யும் வேலையை செய்யும்படி ஊழியர்களை உசுப்பிவிட்டேன். காலையில் எட்டு மணிக்கு வடிவேலண்ணன் படப்பிடிப்புக்கு வருவார். நான் ஏழு மணிக்கெல்லாம் அதே நகைகளோடு வந்து விட்டேன். படம் வெளியாகிற வரைக்கும் இந்த தகவல் யாருக்குமே தெரியாது. வேதனை என்னவென்றால், அந்த நகைகளை மீண்டும் தயாரிப்பதற்கு ஆன செலவு என்னுடைய சொந்த செலவு என்றார் காஸ்ட்யூமர் முருகன்.

தாயினும் சாலப் பரிந்து… என்றொரு வார்த்தை வருகிறது இலக்கியத்தில். அப்படி தாயினும் சால பரிகிறவர்கள் புரடக்ஷன் ஆர்கனைசர்கள். எவ்வளவு கடிந்து கொண்டாலும் இவர்களுக்கு கோபம் வராது. வெளியூர் படப்பிடிப்புகளில் இவர்களின் தாயுள்ளத்தை நன்றாகவே அறிந்து கொள்ளலாம். நமது ஊர் ஸ்டைல் உணவே கிடைக்காத நாடுகளுக்கு போனால் கூட, இவர்கள் கொண்டு போன அடுப்பை மூட்ட வைத்து மூன்று வேளையும் வயிறார கவனித்து விடுவார்கள். இதெல்லாம் கூட பிரச்சனையில்லை. சன் ரைஸ் ஷாட்டுக்காக வைக்கப்படும் ஷுட்டிங் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

மூன்று மணிக்கே எழுந்து அவ்வளவு பேருக்கும் டீ போட்டு வைத்துக் கொண்டு எழுப்புவார்கள். காலையில் எழுப்பினால் கோபம் வரும் என்கிற நடிகர்களை கூட இவர்கள் எழுப்புகிற பாங்கு இருக்கிறதே, அது பூபாள ராகத்திற்கு ஒப்பானது. ஐஸ்கட்டி பொழியும் ஊட்டியாக இருந்தாலும் இவர்களுக்கு பணி முக்கியமே தவிர ‘பனி’ முக்கியமாக இருக்காது. அப்படி ஒரு ஆர்கனைசர்தான் எஸ்.ஜெயராமன்.

மம்முட்டிக்கு மீன் குழம்பு பிடிக்கும். மோகன்லாலுக்கு கோதுமை மாவு புட்டு புடிக்கும். அஜீத் உடம்பை இளைக்க வைக்க லெமனுடன் தேன் கலந்து கேட்பார். ஆறு மாதங்களுக்கு அசைவம் சாப்பிடுவார். பிறகு ஆறு மாதங்களுக்கு வெறும் காய் கறிகள்தான் உணவு என்று நடிகர்களின் மெனுவை மனப்பாடமாக வைத்திருக்கிறார் ஜெயராமன். உடம்பை கூலாக வைத்திருப்பதற்காக மம்முட்டியும் மோகன்லாலும் வாத்து முட்டை சாப்பிடுவார்களாம். சொல்லாமலே அதையெல்லாம் செய்து தட்டில் அடுக்கி வைக்கிற மகராசன் இவர். இவரைப் போன்றவர்கள் தங்கள் பணியை சரியாக கவனிக்க வில்லை என்றால் நடிகர்கள் மூட் அவுட் ஆகி அன்றைய ஷுட்டிங்கே கூட தடை படுகிற அளவுக்கு அவஸ்தையெல்லாம் நடந்திருக்கிறது. யார் யார் அப்படி செய்தாங்கன்னு மட்டும் கேட்காதீங்க என்கிறார் ஜெயராமன்.

டான்ஸ் ஆர்கனைசரான கங்காதரனின் பணிகள் கிட்டதட்ட ஆம்புலன்ஸ் சேவை மாதிரி. பாடல் காட்சிகளில் ஆடுவதற்கு நடனக் கலைஞர்களை அனுப்பி வைக்கும் பணி இவருடையது. இரவு எட்டு மணி, பத்து மணிக்கெல்லாம் இவருக்கு போன் பண்ணுகிற டான்ஸ் மாஸ்டர்கள். நாளைக்கு ஒரு குத்து சாங் இருக்கு. கேள்ஸ் பாய்ஸ் இருபது பேர் வேணும் என்பார்களாம். குத்து டான்ஸ் என்றால் அதற்கேற்ற உடலமைப்பு கொண்டவர்களாக இவர் தேடியெடுத்து தர வேண்டும். அதுவே கோவிலுக்குள் நடக்கும் பாடல் என்றால் அதற்கேற்ற முக அமைப்புள்ளவர்களை அனுப்பி வைப்பாராம்.

சில நேரங்களில் வெளிநாட்டில் பாடல் காட்சி எடுத்திருப்பாங்க. குரூப்ல ஆடியது வெள்ளைக்காரங்களா இருக்கும். அதுல ஏதாவது ஒரு வரியை மட்டும் இங்க எடுக்கிற சூழ்நிலை வந்திருக்கும். திடீர்னு போன் பண்ணி ஐம்பது வெள்ளைக்காரங்க வேணும்னு சொல்வாங்க. மகாபலிபுரம், பாண்டிச்சேரின்னு அலைஞ்சு திரிஞ்சு விடியறதுக்குள்ளே கொண்டு வந்து இறக்குவேன். ஓடிகிட்டே இருக்கறதுதான் எங்க வேலை என்கிறார் கங்காதரன் கூலாக. இவரது இத்தனை வருட தொழிலில் இவர் ஆச்சர்யப்படுவது டைரக்டர் ஷங்கரைதான்.

அவர் மட்டும்தான் பாடல் காட்சிகளுக்கு யாரை ஆட வைக்கறதுன்னு முதலிலேயே நேரில் அழைத்து வரச்சொல்லி பார்ப்பார். திருப்தியா இருந்தால் மட்டும்தான் அவங்களை ஆட அனுமதிப்பார். மற்ற இயக்குனர்கள் அப்படியில்லை. டான்ஸ் மாஸ்டருக்கு ஓ.கே என்றால் எனக்கும் ஒ.கே என்று கூறிவிடுவார்கள். ஷங்கர் சாரின் முதல் படத்திலும் நான் பணியாற்றியிருக்கேன். அப்பவும் சரி, இப்பவும் சரி. அந்த விஷயத்துல அவர் மாறவே இல்லை என்கிறார் கங்காதரன்.

படமெல்லாம் முடிந்தபின் டப்பிங் என்றொரு கடைசி கட்டம் இருக்கிறதே, அங்கும் இருக்கிறார்கள் ஆர்கனைசர்கள். படத்தை போட்டு காண்பிக்கிற இயக்குனர்களும் இருக்கிறார்கள். ஹீரோ, ஹீரோயின், க்ரவுட் வாய்ஸ்சுக்கு ஆள் வேணும். பாருங்க என்று ஒரு விபரத்தையும் தராமல் சொல்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எப்படி சொன்னாலும் புது புது குரல்களை தேடி கொண்டு வருவதை ஆர்வமாக செய்கிற வேலைதான் இவர்களுக்கு. படத்தில் ஒரு காய்கறி வியாபாரி கூவிப் கொண்டே போகிற காட்சி என்று வைத்துக் கொள்ளுங்கள். அது படத்தில் ஒரு நிமிடம் கூட வராத சீன்தானே என்று இல்லாமல், கோயம்பேடு மார்க்கெட்டுக்கே போய் நிஜ வியாபாரியை அழைத்து வந்து பேச வைக்கிற அளவுக்கு அக்கறையோடு இந்த தொழிலை கவனிக்கிறார்கள் பல ஆர்கனைசர்கள்.

பத்தாண்டுகளுக்கு மேலாக டப்பிங் ஆர்கனைசராக இருக்கும் விஜயலட்சுமி, அண்மையில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்களுக்கு டப்பிங் ஆர்கனைசர். எந்த நடிகையும் போன் பண்ணி என் கேரக்டருக்கு நல்ல குரலை செலக்ட் பண்ணுனீங்க என்று சொல்லியதில்லை. ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நாயகி ஸ்ரீதிவ்யா எனக்கு போன் பண்ணி சொன்னார். இந்த குரலுக்காக நான் மூன்று ஆர்ட்டிஸ்டுகளை பேச வச்சு கடைசியாதான் திருப்தி ஆனேன். அவர் போன் பண்ணிய பிறகு அந்த கஷ்டம் பறந்தே போச்சு என்றார் விஜயலட்சுமி.

இரவு எட்டு மணிக்கு போன் பண்ணி நாளைக்கு காலையில ஷுட்டிங் வச்சுக்கலாமா என்றால் கூட, ‘அதுக்கென்ன சார். ஏற்பாடு பண்ணிட்டாப் போச்சு’ என்கிற தயாரிப்பு நிர்வாகிகளை எந்த ரசிகருக்கும் தெரியாது. அவர்கள் படுகிற கஷ்டங்களும் வெளியில் தெரிவதில்லை. இப்படி ஒரு சினிமாவை திரைக்கு கொண்டுவர உதவுகிற டிசைனர்கள், பத்திரிகை தொடர்பாளர்கள், தினசரிகளில் சினிமா விளம்பரத்தை கடனுக்கு வெளியிட்டுவிட்டு பின்பு படம் ஓடிய பின்பு பணம் வாங்கிக் கொள்கிற தாராள மனசுக்காரர்கள் என்று இந்த கட்டுரையை தொடர இன்னும் எண்ணற்ற ஆர்கனைசர்கள் இருக்கிறார்கள் இங்கே.

இவர்களும் நட்சத்திரங்கள்தான். மின்னாமலே மின்னும் நட்சத்திரங்கள்!

-இந்து தமிழ் நாளிதழின் தீபாவளி மலரில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிய கட்டுரை

3 Comments
 1. மணிகண்டன் says

  நாலுக்கு நாள் அழகு கூடிகொண்டே போய்கிறது தமிழ்சினிமா இணையதளம். இந்த இணையத்தில் பணிபுரியும் நண்பர்கள் அண்ணன்களுக்கு பெரிய அளவில் இந்த இணையதளம் வெற்றியடைய வாழ்த்துக்கள்..

 2. ரமணன் says

  முகம் தெரியாத முழுநேர தியாகிகளான இவர்களை பற்றி யாரும் இத்துணை விரிவாக எழுதியதில்லை. நல்ல கட்டுரை. வெளிச்சத்திற்கு பின்னிருக்கும் இருட்டில் ஒளிவரும் இந்த மின்மினிபூச்சிகளை அறிமுகபடுத்த ஒரு தொடரை துவக்குங்களேன்.
  ரமணன்

 3. Kalinga says

  Rajiniye Theivam.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
என்ன எழவெடுத்த காதல்டா இது? -கமலே வியந்த புதிய படம்!

ஒரு மேடையில் பாலசந்தரையும், பாரதிராஜாவையும் வைத்துக் கொண்டே இன்னொரு புது டைரக்டரை பார்த்து ‘இவர் வருங்கால பாலசந்தர்’ என்றும் ‘வருங்கால பாரதிராஜா’ என்றும் பாராட்டினால் எப்படியிருக்கும்? ஒருவேளை...

Close