‘முதல் ஷோ என் ரசிகர்களுக்குதான்…’ – அஜீத் உத்தரவால் சினிமாக்காரர்களுக்கான சிறப்பு காட்சி ரத்து!
நடிகர் நடிகைகளுக்காக இன்று ஏற்பாடு செய்திருந்த ‘ஆரம்பம்’ படத்தின் முன்னோட்ட காட்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் நமக்கும் அழைப்பு வரும் என்று காத்திருந்த பலருக்கும் இதனால் சரியான ஏமாற்றம். பொதுவாகவே சக நடிகர் நடிக்கும் ஒரு படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது, ‘வௌங்கிரும்….’ என்று சாபம் கொடுத்துவிட்டு வருவதுதான் பலரது வாடிக்கை. ஆனால் அஜீத்தை பொருத்தவரை இந்த ‘வாடிக்கையாளர்கள்’ கூட பாசிட்டிவ்வாக பேசுவார்கள். ஆனாலும்… இந்த ஷோ ரத்து செய்யப்பட்டதற்கு பின்புலமாக கூறப்படுவது எது?
வேறென்ன… அஜீத்தின் அன்பு கட்டளைதான். வீரம் படப்பிடிப்புக்காக வெளியூரிலிருக்கும் அவருக்கு விஷயம் சொல்லப்பட்டதாம். அதிர்ச்சியடைந்த அவர், என் படத்தை முதலில் என் ரசிகர்கள் பார்க்கணும்னுதான் விரும்புறேன். விடியற்காலை நாலு மணி ஷோவிற்கு முன்பு ஒரு ஷோ இருந்தால், அது என் ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு நான் செய்கிற நம்பிக்கை துரோகம். அதனால் அதற்கு முந்தைய ஷோ, யாருக்காக ஏற்பாடு செய்திருந்தாலும் ப்ளீஸ்… கேன்சல் பண்ணிடுங்க என்றாராம்.
இந்த அதிரடி உத்தரவு பிரிவியூ ஏற்பாட்டாளர்களுக்கு உடனடியாக போய் சேர, ஆரம்பம் படத்தின் ப்ரிமியர் ஷோ அதகளமாக நிறுத்தப்பட்டுள்ளது. வயிறெரியும் நடிகர் நடிகைகள் டிக்கெட் முன்பதிவாளரையோ, தியேட்டர் மேனேஜரையோ பார்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.