மூடர் கூடம் – சினிமா விமர்சனம்

தமிழ்சினிமா என்கிற கலைக்கூடம், மூடர் கூடமாகி விட்டதே என்கிற முணுமுணுப்பு சப்தம் சற்று பலமாகவே கேட்க துவங்கியிருக்கிற காலகட்டம் இது. இந்த மூடர் கூடத்தை கலைக்கூடமாக்குகிறேன் பார்… என்று சவால் விட்டு கிளம்பியிருக்கிறாரோ என்று பிரமிக்க வைக்கிறார் இப்பட இயக்குனர் நவீன். நல்ல சினிமா, கெட்ட சினிமா என்று மட்டுமே சொல்லத் தெரிந்த ரசிகனை, மாற்று சினிமா, நவீன சினிமா, பொழுதுபோக்கு சினிமா, பிளாக் சினிமா, யூ ட்யூப் சினிமா என்றெல்லாம் பேச வைத்துவிட்டது சுற்றுசூழல். எது எப்படியோ….? மூடர் கூடம் முக்கியமான சினிமா!

அதிகபட்ச நேரம் நான்கு சுவரை கூட தாண்டாமல் ஒரே இடத்தில் படம் நகர்கிறது. ஆனால் அலுத்து சலித்து ‘அடப்போங்கடா’ என்று சபிக்கணுமே, ம்ஹும். எவர் வாயிலும் ஈ நுழைகிற அளவுக்கு சந்து பலமாக விரிந்து கிடக்கிறது. கதையில் வரும் குட்டி குட்டி பிளாஷ்பேக்குகள் நம்மையறியாமல் அட போட வைக்கிறது. மேக்கிங் மேக்கிங்னு சொல்றாங்களே, அது இதானா பாஸ்…?

சமுதாயத்தில் பசியிடம் மட்டுமே பிஸியாக பிரண்ட்ஷிப் வைத்திருக்கும் நான்கு பேர் ஓரிடத்தில் கூடுகிறார்கள். அந்த திருத்தலம் எது? வேறென்ன… ’லாக்கப்’தான்! பணம் சம்பாதிக்க நான் ஒரு வழி சொல்றேன் என்று நால்வரில் ஒருவன் வழிகாட்ட, அரைகுறை மூடர்களான இவர்கள் திருடப் போகிறார்கள் ஓரிடத்தில். போகிற இடத்தில் நடப்பதுதான் முழு படமும். இதில் காதல் இருக்கிறது. வன்மம் இருக்கிறது. பழிவாங்கல் இருக்கிறது. அப்பாவித்தனம் இருக்கிறது. கசப்பு இருக்கிறது. இனிப்பு இருக்கிறது. சில இடங்களில் கொடூரமான கொட்டாவியும் இருக்கிறது. பட்… இந்த படத்தை ஓட வைச்சுருங்க பாஸ். அப்படி ஓடுச்சுன்னா இந்திய சினிமா ஹன்ட்ரட் இயர்ஸை கிராஸ் பண்ணிருச்சு என்று பெருமைப்படலாம். ஓடலேன்னா….? நாசமா போச்சு நமது நுறு வருஷ கவுரவம்!

ராஜாஜ், நவீன், குபேரன், சென்ட்ராயன் என்கிற நால்வரும்தான் அந்த மூடர்கள். இதில் நவீன்தான் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். ‘அதனால் மொத்த டூயட்டும் எனக்குதான்டீய்…’ என்கிற வெறித்தனம் காட்டாமல் கதைக்கான நேர்மையோடு செயல்பட்டிருக்கிறார். அடிக்கடி மார்க்சீய கொள்கையை முழங்குகிறபோது மட்டும், யோசிங்கடா ஜனங்களே… என்கிற முகபாவம் அவருக்குள். அந்த மாங்கா மேட்டர் அருமை தலைவா. ஒரு டைரக்டராக இவர் பல இடங்களில் கைதட்ட வைத்தாலும், தன்னிடம் இங்கிலீஷ் பேசும் ஒருவனிடம் சென்ட்ராயன் கேட்கிற ஒரு கேள்வி, யம்மாடி…. இனிமே எவனாவது வாயை விவேகானந்தா இன்ஸ்டியூட்டா பயன்படுத்துவானுங்கங்கிறீங்க? சூடும், சுவையும், நேர்மையும் கலந்த டயலாக்ஸ் ஒவ்வொன்றும்.

சென்ட்ராயனுக்கு குளோஸ் அப்பே வைக்க முடியாத முகம்தான். ஆனால் அதற்குள் ஒரு ஜிம்கெரி ஒளிந்திருப்பதை காண முடிகிறது. ரெண்டாயிரம் ரூபாய் பனியன் கிழிகிற அளவுக்கு ஒருவனை அடித்துப் போட்டுவிட்டு, பின்பு தனது சட்டையை கழற்றி கொடுக்கிற போது நெகிழ வைக்கிற சென்ட்ராயன், அப்படியே ஓவியா வந்து அணைத்துக் கொள்ளும்போது ஒரு பார்வை பார்க்கிறாரே, தியேட்டர் கிழி கிழி…

நான்லாம் பெரிய தில்லாலங்கடியாக்கும்… என்கிற தெனாவட்டோடு உள்ளே வந்து செம அடிவாங்கி அலறும் அந்த நார்த் மெட்ராஸ் ரவுடியையெல்லாம் எங்கேயிருந்து பிடித்தாரோ, எல்லா புகழும் நவீனுக்கே. இந்த வறண்ட கூட்டத்தில் சற்றே பளபளப்பாக தெரிகிறார் வெள்ளை. (ராஜாஜ்) அட்வான்ஸ்கள் குவியுதே என்பதற்காக அடிச்சு பிடிச்சு அலையாதீங்க, நல்ல காலம் பொறக்குது, வெயிட்! இவருக்கான பிளாஷ்பேக்கில் லேசாக முகம் காட்டுகிற அந்த அழகிக்கும் வாய்ப்புகள் குவியக்கூடும்.

ஓவியா, அனுபமா, ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட பலரையும் தலைகீழாக நிற்க வைத்திருக்கிறார்கள். ஐயோ பாவம். எவ்வளவு சிரமப்பட்டார்களோ?

ஒரு படத்தில் பாடல் வரப்போகிறது என்பதை மிக நுணுக்கமாக அறிந்து அதற்கு முன்பாகவே இடத்தை காலி பண்ணிவிட்டு கான்ட்டீனை நோக்கும் ரசிகர்கள், இப்படத்தில் யோசிக்காத இடங்களில் வரும் பாடல்களை கேட்டு திடுக்கிடுவது அழகு. அதுவும் ட்யூன்கள் ஒவ்வொன்றுமே புரட்சி. பாரதியார் பாடல் ஒன்றுக்கு இசையமைப்பாளர் போட்டிருக்கும் ட்யூன், சத்தியமாக கற்பனை கூட செய்ய முடியாதது. அந்த நிலா நிலா பாடலும் அப்படியே. பின்னணி இசையிலும் நிறைய மெனக்கெட்டிருக்கிறார். பியூட்டிபுல் பியூச்சர் இருக்கு நடராஜன் சங்கரன்.

பிளாஷ்பேக் ஒன்றில் இடம் பெற்றிருக்கும் சித்திரக்கதையை உருவாக்கிய தொழில்நுட்ப நிறுவனம் எதுவோ, அதற்கு நமது முழு பாராட்டுகள்.

கதையை நாடகம் போல சொல்ல முடியும். நாடகத்தை கதை போல சொல்ல முடியும். நவீன் கதை சொல்லியிருக்கிற ஸ்டைல் இருக்கிறதே… அது, பார்த்து கேட்டு பழகிய கதைதாண்டா…
என்கிற அலட்சியத்தை மறக்கடித்து, மூளையை மூடர் கூடமாக்கிவிடுகிறது. அதுதான் இந்த படத்தின் வெற்றியும் கூட!

-ஆர்.எஸ்.அந்தணன்

 

2 Comments
 1. admin says

  · · Unfollow Post · Share · Promote
  Muthu Ramalingam, Ravithambi Ponnan, Senthilkumar Palanivel and 11 others like this.

  King Viswa
  King Viswa’s photo.
  4 hours ago · Like

  Mohan Raj Enna sonningannu conpeesa irukku ji
  3 hours ago via mobile · Like

  Ravithambi Ponnan மூடர் கூடத்திற்கு அறிவுபூர்வமான விமர்சனம்.
  2 hours ago · Like

  Karthick Murali Good One sir… MaaMaram Maanga thing yosikka vendiya onnu…
  about an hour ago · Like

  Ravithambi Ponnan பிளாஷ்பேக்கில் லேசாக முகம் காட்டுகிற அந்த அழகியைத்தான் படத்தின் இயக்குனர் நவீன் கரம்பிடித்திருக்கிறார்…
  about an hour ago · Like

 2. admin says

  Inian Devimani
  8:59 AM (2 hours ago)

  to me
  தூக்கத்தை கலைத்து வேட்டைக்கு கிளம்புகிறது ‘சிங்கம்’ நல்ல பகுப்பாய்வு விமர்சனம்..,

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
டைரக்டர் ஷங்கரின் கதையை ‘கெடுக்க’ பார்க்கிறார் அர்ஜுன்?

புரட்டிப்போடாத தோசையைக் கூட ‘ஆப்பம்’ என்று கூறி அகமகிழ்வான் தமிழன். அப்படிப்பட்ட ஆப்பத்தையே ஏப்பம் விடுகிற அளவுக்கு அவற்றை சிங்கிள் ஷாட்டில் முழுங்குகிற அசகாய சூரர்கள் பெருகிவிட்ட...

Close