மௌனியின் பேரன்பு – பாலுமகேந்திராவின் பேட்டியிலிருந்து…
மௌனிகாவும் என் மனைவி தான்! பாலுமகேந்திராவின் ஒப்புதல் வாக்குமூலம்
அமரர் ஆகிவிட்டார் பாலுமகேந்திரா. அவரது உடலின் அருகிலேயே சுற்றிக் கொண்டிருந்திருக்கும் அவரது ஆன்மா. ஆனால் அந்த ஆன்மா சற்றே பதறக்கூடிய ஒரு தர்மசங்கடமான நிலை நேற்று ஏற்பட்டது. அவரது வாயாலேயே தனது துணைவி என்று அங்கீகரிக்கப்பட்ட மவுனிகாவை மருத்துவமனையில் அவரது உடலை பார்க்க சிலர் அனுமதிக்கவில்லை. இதன் பின்னணியில் சில இயக்குனர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் பாலுமகேந்திராவின் வலைதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரை ஒன்றை http://balumahendras.blogspot.in/2011/10/blog-post_14.html மீண்டும் படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அது நமது வாசகர்களுக்காக-
(Aug 31 2004)
நாலைந்து வாரங்களுக்கு முன்னால், ‘பாலுமகேந்திராவுக்கு மாரடைப்பு’ என்ற செய்தியைப் பார்த்தவர்கள் ஒரு கணம் அதிர்ந்துபோயிருப்பார்கள். என்ன நடந்தது?
ஜூலை 15_ம் தேதி அதிகாலை, கட்டிலில் இருந்து எழுந்தேன். தரையில் காலை ஊன்றி ஒரு அடிகூட எடுத்து வைக்கவில்லை… பிடுங்கி எறியப்பட்டதுபோல் சுவரில் மோதி அப்படியே விழுந்தேன். என் இடது கால், உடம்பின் கனம் தாங்காமல் துவண்டு சுருண்டது. எழுந்திருக்க முயற்சி செய்தேன். ம்ஹ¨ம்… முடியவில்லை. கை, கால்களை அசைக்கமுடியவில்லை. ‘அடடா… என்னவோ பிரச்னை என்று புரிந்துவிட்டது. உடனே என் மனைவி அகிலா ஓடிவந்தார். என்உதவியாளர் செந்திலும் உடன்வர, பதினைந்து நிமிஷத்தில் விஜயா மருத்துவமனையில் இருந்தேன். எனக்கு ஏற்பட்டது மாரடைப்பு அல்ல… ஸ்ட்ரோக்! மூளைக்கு ரத்தம் கொண்டுசெல்லும் குழாயில் லேசாக அடைப்பு ஏற்பட்டதால் உண்டான ஸ்ட்ரோக்.
அது ஒரு கனாக் காலம் படப்பிடிப்புக்கு தனுஷ் தேதிகளை ஒதுக்கித் தராததால் மன உளைச்சல் ஏற்பட்டு, அதனால் மாரடைப்பு வந்தது என்று வந்த செய்தியில் துளியும் உண்மை கிடையாது. தனுஷ§டன் பணிபுரிவது சந்தோஷமான விஷயம்.
என் மன உளைச்சலுக்கான காரணங்கள் வேறு. எனது ஜூலி கணபதி படம் தேசிய விருதுக்கு அனுப்பப்படவில்லை என்ற செய்தி அறிந்ததும் அதிர்ந்துபோனேன். படப்பெட்டியை வாங்கி போட்டிப் படிவங்களை நிரப்பி, நானே அதை அனுப்பியிருக்க வேண்டும். சரிதாவுக்குக் கிடைத்திருக்கவேண்டிய தேசிய விருது என் கவனக்குறைவு காரணமாகக் கிடைக்காமல் போய்விட்டதே என்று வருத்தமாகிவிட்டது.
அடுத்து, எனது சம்பளப் பாக்கியில் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தருவதாகச் சொல்லியிருந்த தயாரிப்பாளரால், ஏனோ தரமுடியவில்லை. பாவம், அவருக்கு அவருடைய பிரச்னைகள். அதே நேரத் தில் நான் பணம் தரவேண்டிய ஒருவர், நான் வேலை செய்துகொண்டிருந்த இடத்திற்கே வந்து பலர் முன்னிலையில் என்னை அவமரியாதையாகப் பேசிச் சென்றார். அதுவும் மனஉளைச்சலுக்கான காரணம். பிறகு, எனது மருத்துவச் செலவுகளை மகன் ஷங்கியும், எனது துணைவி மௌனிகாவும் கவனித்துக் கொண்டார்கள்.
”மௌனிகா உங்கள் துணைவியா?
ஆமாம். மௌனிகாவும் என் மனைவி தான். இந்த இடத்தில் மௌனியைப் பற்றியும், எனக்கும் அவளுக்குமான உறவு பற்றியும் நான் கொஞ்சம் விரிவாகப் பேசவேண்டியிருக்கிறது. user posted image
மௌனிக்கும் எனக்குமான உறவு ஒரு நடிகைக்கும், டைரக்டருக்குமான படுக்கையறை சம்பந்தப்பட்ட உறவு என்றுதான் பலர் நினைப்பார்கள். ஆனால், உண்மை அதுவல்ல! ஏறக் குறைய இருபது வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த உறவு அது. இனியும் எதையும் நான் மறைப்பதற்கில்லை.
ரொம்பவும் உடைந்துபோன ஒரு தருணத்தில், நான் உங்ககூடவே இருந்திரட்டுமா? என்று கண்கலங்கி நின்ற, அந்த சின்னப் பெண்ணுக்குப் புரியும்படி புத்திமதி சொல்லி, அந்த உறவை நான் முளையிலேயே கிள்ளிப் போட்டிருக்க வேண்டும். ஏனோ, அதை நான் செய்யவில்லை.
அந்த அபலைப் பெண்ணின் கேள்விக்குப் பின்னே இருந்த வேதனை, அவமானம், வலி அனைத்தையும் நான் அறிவேன். புத்திபூர்வ மாக வாழாமல், உணர்வு பூர்வமாக மட்டுமே வாழத் தெரிந்த என்னை அது வெகுவாகப் பாதித்தது. அதன் விளைவுதான் எனக்கும் மௌனிக்குமான உறவு.
சினிமாவையும், இலக்கியத்தையும் அசுர வெறியோடு நேசிக்கும் எனக்கு, என் வாழ்க்கைத் துணையும் சினிமாவோடும், இலக்கியத் தோடும் சம்பந்தப் பட்டவளாக, என் அலைவரிசையில் இருப்பவளாக வேண்டும் என்று ஒரு பேராசை. இது அபத்தமான ஆசை, முட்டாள்தனமான எதிர்பார்ப்பு என்பதும் எனக்குத் தெரியும். அபத்தங்களும் முட்டாள் தனமும் நிறைந்ததுதான் என் வாழ்க்கை. ஏகப்பட்ட குழப்பங்கள் நிறைந்த என் வாழ்க்கையில் நேர்த்தியாக நான் வைத்திருக்கும் ஒரே விஷயம் சினிமாதான்.
இந்த உறவை ஆரம்பிப் பதற்கு முன், என் அகிலா வைப் பற்றி நான் யோசித்திருக்கவேண்டும். இந்த உறவு எவ்வளவு தூரம் அவளைப் புண்படுத்தும், வேதனைக்குள்ளாக்கும் என்றெல்லாம் எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். வாழ்க்கையை அந்தந்த நொடிகளாகவே இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிற எனக்கு என் அகிலாவின் துக்கத்தை நினைத்துப் பார்க்க அப்போது தோன்றவில்லை. உள்ளும் புறமும் அழகானவள் அகிலா. எனக்கு மனைவியாக வந்தபோது, அவளுக்குப் பதினெட்டு வயது. சரியாகப் புடவை கட்டக்கூடத் தெரியாத வெகுளிப்பெண். அகிலாவைப் போன்ற பத்தினிப் பெண்கள் | பரிசுத்தவதிகள் | புராணகாலத்தில்தான் இருந்திருக்கிறார்கள். இந்த யுகத்தில் பிறந்திருக்க வேண்டிய பெண்ணல்ல அகிலா. என்னைப் போன்ற ஒரு பித்தனுக்கு வாழ்க்கைப்பட்டிருக்க வேண்டியவள் அல்ல. கனவுகளைத் துரத்தியபடி சதா ஓடிக்கொண்டு இருக்கும் நாடோடி நான். எனக்கு மனைவியாக வந்ததுதான் அகிலாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய துரதிர்ஷ்டம்.
மனைவியைத்தவிர மற்றொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க் காத, மனசால்கூட நினைக்காத ஒரு நல்ல ஆண்மகனுக்கு வாழ்க்கைப்பட்டிருக்க வேண்டியவள் அகிலா. என்னை மாதிரி ஒரு கோணங்கிக்கு வாழ்க்கைப் பட்டது அவள் விதி. இந்தப் பத்தினிக்கு வலிகளையும் காயங்களையும் தவிர, வேறு என்ன தந்தேன் என்று நினைக்கும்போது எங்காவது கண்காணாமல் போய்விடத் தோன்றுகிறது!
user posted image அகிலாவுடன்.. மௌனிகாவுடன்..
”இவ்வளவு வேதனைப்படுகிற நீங்கள் ஏன் உங்கள் வாழ்வை இத்தனைச் சிக்கலாக்கிக் கொண்டீர்கள்?”
”காரணம் மௌனியின் பேரன்புதான். ‘நீங்க எனக்குத் தாலி கட்டவேண்டாம். உங்க காசு, பணம், சினிமா எதுவும் எனக்கு வேண்டாம். உங்கள் மூலமாக ஒரு குழந்தைகூட வேண்டாம். நீங்கள் என்னருகில் இருங்கள். அது போதும்!’ என்று சொல்லும் ஒரு ஆத்மாவை நான் எப்படி உதறித் தள்ளுவது? தன் இளமைக் காலத்தை எனக்காக, என்னுடன் பகிர்ந்துகொண்ட வளை எப்படி உதற? என் உறவு காரணமாகப் பழிச்சொல், அவமானம் அடைந்தவள் அவள். நான் வேலை இன்றி இருந்த மாதங்களில், தான் மட்டும் மாங்கு மாங்கென்று உழைத்து, பொருளாதார ரீதியாகவும் என்னைத் தாங்கிப் பிடித்தவள். இந்த செவ்வாய்கூட எனக்காக மாங்காடு அம்மன் கோயிலுக்கு வீட்டிலிருந்தே நடந்து போய், அங்கப்பிரதட்சணம் செய்திருக் கிறாள். ஒரு பெண்ணின் பூரணமான அன்பையும் அழுத்தமான பக்தியையும் உணர்ந்தவர்களால் எங்கள் உறவைப் புரிந்துகொள்ள முடியும்.
இருபது வருடங்கள், தன்னுடைய எல்லாவற்றையும் எனக்காக அர்ப்பணித்துவிட்டு இப்போது 35 வயதாகும் மௌனியை எப்படி நான் தூக்கிப் போடுவது? அதேசமயம், என்அகிலாவை நான் எந்தக் காலத்திலும் எவளுக்காகவும் விட்டு விலகியவன் அல்ல. அவளை நான் ஆத்மார்த்தமாக, ஆழமாக நேசிக்கிறேன். என்றாவது ஒரு நாள், என் நெஞ்சில் நிறைந்து வழியும் அன்பை, பொங்கிப் பிரவாகமெடுக்கும் பாசத்தை அகிலா புரிந்துகொண்டால் எனது இறுதி மூச்சு நிம்மதியாகப் பிரியும்!
”மௌனிகாவுக்கும் உங்களுக்குமான உறவில், உங்கள் மகன் ஷங்கியின் நிலை என்ன?”
”ஷங்கி என் சிநேகிதன். என்னை அணுஅணுவாகப் புரிந்தவன். மௌனி மீது கோபப்படவோ அவளை அவமரியாதை செய்யவோ அவனால் இயலாது. அன்பும் கருணையும் மென்மையும் கொண்ட கம்பீரமான ஆண் ஷங்கி. எனக்கும் மௌனிக்குமான உறவை அவன் அங்கீகரிக்கிறானா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நிச்சயமாக அவன் அதை முழுவதுமாகப் புரிந்துகொண்டு இருக்கிறான். என்னை என் பலங்களோடும் பலவீனங்களோடும் நேசிப்பவன் ஷங்கி.’
”மௌனிகாவைத் திருமணம் செய்துகொண்டீர்களா?”
”என் சுகதுக்கங்களில் பங்கு கொண்டு நல்ல துணையாக, நல்ல சிநேகிதியாக, சமயங்களில் தாயாகக்கூட என்னைப் பாதுகாக்கிற பெண்ணை சினிமா வட்டாரத்தில், ‘பாலுமகேந்திரா வெச்சுகிட்டிருக்கிற பொண்ணு’ என்று கொச்சையாகக் குறிப்பிடுவதை என்னால் சகிக்க முடியவில்லை. அதனால் 98|ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அவளுடன் நான் அடிக்கடி செல்லும் ஒரு சிவன் கோயிலில் வைத்துத் தாலி கட்டினேன்.
மௌனி கழுத்தில் இருப்பது நான் கட்டிய தாலிதான். ஒரு குழந்தை பெற்றுக் கொண்டால் பிற்காலத்தில் என் குடும்பத்தில் அதனால் பிரச்னைகள் வருமோ என்ற ஒரே காரணத்துக்காக, தாயாகவேண்டும் என்ற ஆசையைக் கூடத் தவிர்த்தவள் அவள்.’
”மருத்துவமனையில் இருந்த நாட்கள் எப்படியிருந்தன?”
என்னையும், என் சினிமாவையும் நேசிக்கிறவர்கள் வந்திருந்தார்கள். பாரதிராஜா, மணிரத்னம், பாலசந்தர், செல்வராகவன், தனுஷ்… இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். மணிரத்னம் எனக்கே தெரியாமல் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு செக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.
”உங்கள் சிஷ்யன் பாலா வந்திருந்தாராமே?”
‘நான் அட்மிட் ஆன முதல் நாளே வந்தாராம் பாலா. இன்டென்சிவ் கேர் ரூமில் இருந்ததால் பார்க்கமுடியவில்லை. மூன்றாவது நாள் மீண்டும் வந்தார். என் கால்களைத் தொட்டு வணங்கினார். என் நெற்றியில் முத்தம் தந்தார். என்னை அள்ளி அணைத்துக்கொண்டு என் காதருகில், Ôநீங்க சிங்கம் சார். சீக்கிரமா எழுந்து நடமாட ஆரம்பிச்சிருவீங்கÕ என்றார். நான் கண்ணீரில் கரைந்தேன். வார்த்தைகள் இன்றி நின்ற அந்தக் கணத்தை அப்படியே சொல்ல இயலாது. கடினம். என் அருகிலேயே வைத்து, நான் சினிமா சொல்லிக் கொடுத்து வளர்த்த பிள்ளையல்லவா பாலா!’
”உங்கள் இருவருக்குமான மனபேதங்கள் மறைந்தனவா?”
‘Forgive and you shall be forgiven’ என்ற இயேசுபிரானின் வார்த்தைகளில் அசையாத நம்பிக்கையுள்ளவன் நான். பாலா, தன் மனைவியுடன் வந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். நான்தான் Ôமுழுமையாகக் குணம் அடைந்த பிறகு பார்க்கலாம்Õ என்று சொல்லித் தள்ளிப் போட்டிருக்கிறேன். நிஜமாகச் சொன்னால் சரியான காரணம் அதுவல்ல.
ஆசி வாங்க வரும்போது பாலாவுக்குப் பரிசாகத் தர மிக உயர்ந்த துணிமணிகள் எடுக்கவேண்டும், அந்தப் பெண் ணுக்கும் நல்ல பட்டுச்சேலை தரவேண்டும் என்பது என் விருப்பம். அதற்குப் போதிய பணம் இப்போது என்னிடம் இல்லை. பணம் வந்ததும் பாலாவுக்குச் சொல்லி அனுப்ப வேண்டும்.
என்னைப் போல அல்லாது ஒரு நல்ல கணவனாகவும், நல்ல தகப்பனாகவும், நல்ல மனிதனாகவும் பாலா திகழ இறைவனைப் பிரார்த் திக்கிறேன்.
என் மகன் பாலா, தமிழுக்கு மூன்று நல்ல படங்களைத் தந்திருப்பதும் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக மதிக்கப்படுவதும் என் சினிமா வாழ்வில் நான் சந்தோஷப்படுகிற விஷயம்!
வாக்குமூலம்
இனி மௌனிகாவின் பேட்டி-
நான் திருமதி பாலுமகேந்திரா அல்ல!
என்னை திருமதி பாலுமகேந்திரா என்று அழைக்காதீர்கள் என்கிறார் மௌனிகா.
ஏன் அப்படி?
பாலுமகேந்திரா எனக்குத் தாலி கட்டியிருப்பதும் அவரோடு பல வருடங்களாக நான் குடும்பம் நடத்தி வருவதும் உண்மைதான். ஆனால், திருமதி பாலுமகேந்திரா என்று என்னைக் குறிப்பிட்டால், அகிலாம்மா எவ்வளவு வேதனைப்படுவார் என்பதை என்னால் பூரணமாக உணர முடிகிறது.
முதலில் பாலுமகேந்திரா என்ற பெயரைப் பற்றி பலருக்குத் தெரியாத ஒரு விஷயத்தை இங்கு சொல்லியாக வேண்டும். அவரது தகப்பனார் பெயர் பாலநாதன். நண்பர்களாலும் உறவினர்களாலும் அவர் ÔபாலுÕ என்று அழைக்கப்பட்டு வந்தார். ஆக, பாலுமகேந்திரா என்ற பெயரில் அவருடைய தகப்பனாரது பெயரும் சேர்ந்திருக்கிறது. எனவே, பாலுமகேந்திரா என்ற பெயர் ஒரு தனி நபரின் பெயரல்ல. அது பாலுமகேந்திராவைத் தலைவராகக்கொண்ட அவரது நேரடிக் குடும்பத் தைச் சேர்ந்த அவருடைய முதல் மனைவி அகிலாம்மா, மகன் ஷங்கி, பேரன் ஷிறேயாஸ், மருமகள் ரேகா ஆகியோரது குடும்பப் பெயர்.
ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடக்க முடியாத ஆவலை இயற்கை ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் அழுத்தமாகவே வைத்திருக்கிறது | இனவிருத்தி வேண்டி. அந்த ஆசையும் அதற்கான வயசும் வளர்த்து ஆளாக்குவதற்கான சம்பாத்தியமும் ஆரோக்கியமும் எனக்கிருந்தும் குழந்தை வேண்டாம் என்று நான் முடிவு செய்தது, பிற்காலத்தில் அவரது குடும்பத்தில் இதனால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்று நான் கருதிய தன் காரணமாக மட்டும்தான். அவர் மூலம் எனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அந்தப் பையனுக்கோ பெண்ணுக்கோ நிச்சயமாக பாலுமகேந்திரா என்ற பெயர் சொந்தமாகி இருந்திருக்கும். காரணம், அந்தக் குழந்தை அவரது ரத்தம் என்பதால்!
பாலுமகேந்திரா, எனக்குத் தாலி கட்டியதை எங்கள் அன்புக்குரிய பத்திரிகையான விகடன் மூலம் முதன்முதலாக பகிரங்கப்படுத்தியதே, எனக்கும் அவருக்குமிடையே இருந்து வருகிற ஆத்மார்த்தமான உறவுக்கு, அவர் கொடுத்த சமூக அங்கீகாரம்.
எனக்கும் அவருக்குமான உறவில், எந்த எதிர்பார்ப்புகளும் எனக்கும் இல்லை. அவருக்கும் இல்லை. இனி இருக்கப்போவதும் இல்லை. நான் அவரை அவருக்காக மட்டுமே நேசிக்கிறேன். அவரும் அப்படித்தான்.
எனவேதான் அகிலாம்மாவின் முகவரி யாகவும் அடையாளமாகவும் இருக்கும் திருமதி பாலுமகேந்திரா என்ற பெய ரால் நான் குறிப்பிடப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. பாலுமகேந்திரா இருக்கும்போது மட்டுமல்ல, அவரது மறைவுக்குப் பின்பும்கூட, திருமதி பாலுமகேந்திரா என்றால் அது அகிலாம்மாவைத்தான் குறிக்கும்.
என்னை பாலுமகேந்திராவின் துணைவி என்றோ அல்லது திருமதி மௌனிகா என்றோ குறிப்பிடுங்கள்.
மனைவி என்பதும் துணைவி என்பதும் ஒரே ஸ்தானத்தைக் குறிக்கும் வார்த்தைகள்தான். இருப்பினும் ஒரு ஆண், இரண்டு சம்சாரங்களுடன் வாழும்போது, பிரித்தறிதல் வேண்டி, மூத்த சம்சாரத்தை மனைவி என்றும் இளைய சம்சாரத்தை துணைவி என் றும் குறிப்பிடுதல் அவசியமாகிறது.
இப்போது எனது பிரார்த்தனையெல்லாம், இந்த மனிதர் மறுபடியும் ஆஸ்பத்திரி அது இது என்று போகாமல், ஆரோக்கியமாக அவருக்குப் பிடித்த சினிமாவைச் செய்துகொண்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே. இந்த வரத்தை இறைவன் நிச்சயம் எனக்குத் தருவார்! என்று தனது கருவிழிகள் கலங்கச் சொல்கிறார் மௌனிகா
-ஆனந்தவிகடன் இதழுக்காக பேட்டியெடுத்தவர் நா.கதிர்வேலன்
திருமணமாகி மனைவியுடன்வாழும் ஒரு கணவனை இன்னொருபெண் மனமுவந்து மணம்புரிந்துகொள்வதும்,
அதேபோல் கனவனுடன்வாழும் ஒரு மனைவியை இன்னொரு ஆண் மணம்புரிந்துகொள்வதும்,
ஒன்றேதானா, அல்லது வேறுவேறா?
ஒன்றென்றால், ஏன் பெண்கள் அப்படி இருவேறாண்களைமணப்பதில்லை?
வேறென்றால், அந்த வேற்றுமை எந்தக்காரணத்தால்வந்தது?
யாராவதொரு ஆண் ஒரு மணமானபெண்ணைப்பார்த்து, ‘ நான் உன்னுடனே இருந்துவிடுகிறேன்!’ என்றால், அவனுடைய மனவுளைச்சலிலிருந்து அவனை காப்பாற்றும்பொருட்டு அவள் அவனை ஏற்றுக்கொள்ளமுடியுமா?
இரண்டாவதாக ஒரு மனைவியை ஏற்பவர்கள் முதல்மனைவியையும் முழுமையாய் நேசிப்பதாய்ச்சொல்வது எத்துணைப்பெரியபொய்!
இதேபோல் ஒரு மனைவியால் சொல்லமுடியுமா, அப்படி சொல்லிவிட்டால் அதை அவளுடைய முதற்கணவன் அதை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ளத்தான்செய்வானா?
யாராவதொரு ஆண் ஒரு மணமானபெண்ணைப்பார்த்து, ‘ நான் உன்னுடனே இருந்துவிடுகிறேன்!’ என்றால், அவனுடைய மனவுளைச்சலிலிருந்து அவனை காப்பாற்றும்பொருட்டு அவள் அவனை ஏற்றுக்கொள்ளமுடியுமா??????????
Wonderful and non materialistic relationship between the two. I don’t understand how Bala reacted childishly at post death of Balu Mahendra. Bala is a poor character.