ரஜினி இந்தியாவுல என்னவா இருக்காரு? -தாய்லாந்து இளைஞனின் சந்தேகம்
சுமார் நாலைந்து வருடத்திற்கு முன்பு சினிமா டிஸ்கஷனில் லெக்பீசை கடித்துக் கொண்டே ஸாங் லொகேஷனுக்கு இடம் சுட்டி பொருள் விளக்க முற்படும் இயக்குனர்கள், ‘பாங்காக்ல ரெண்டு பாட்டு எடுத்துடலாம்’ என்பார்கள் அசால்ட்டாக. குத்து படத்தில் ரம்யாவின் ஒரு காலை பற்றி சிம்பு கடற்கரை மணலில் இழுத்துக் கொண்டே செல்வாரே, அது பாங்காக் அருகிலிருக்கும் புக்கட் தீவு கடற்கரைதான். ஒருகாலத்தில் அப்படியொரு கிரேஸ் அந்த நாட்டுக்கு.
ஆனால் அந்த மாவு கோலத்திலெல்லாம் மண்ணை வாரி இறைத்துவிட்டார் கே.வி.ஆனந்த். துருக்கி, டர்க்கி என்று எங்கெங்கோ திரிந்து உலக மேப்புகளை கிழித்து கந்தலாக்கி அதிலிருந்து அழகான லொக்கேஷன்களை ரசிகர்களுக்கு விருந்தளிக்க, இப்போது ராஜ்கிரண் எலும்பை கடிப்பதற்கு கூட தென்னாப்பிரிக்காவின் மாட்டுத் தொடை தேவைப்படுகிற அளவுக்கு விதவிதமான லொக்கேஷன்களை தேடுகிறார்கள் ரசிகர்களும்.
அதுபோகட்டும்… ஆனால் இப்பவும் பாங்காக்குக்கு ஒரு தனி அந்தஸ்து இருக்கதான் செய்கிறது. இல்லையென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினி அங்கே போய் பத்து நாட்கள் தங்குவாரா?
பாங்காக்கில் இயங்கி வரும் தனியார் டூரிசம் ஒன்றில் நமது ஊரை சேர்ந்த ராம் அதிகாரியாக இருக்கிறார் என்று சொன்னேன் அல்லவா? அவர் சூப்பர் ஸ்டாரின் ரசிகர். ரஜினியை திரையில் பார்த்தாலே மூன்று வேளை சாப்பாடு முடிஞ்சு போச்சு என்கிற அளவுக்கு நிம்மதியாகிற மனுஷன். ரஜினியே நேரில் வந்து, ‘ராம்… என் நம்பரை குறிச்சுக்கங்க’ என்றால் எப்படியிருக்கும்? இருந்தது அவருக்கு! அதை அவர் வாயாலேயே கேட்பதுதான் சுகம்.
ஒருநாள் எங்க எம்.டி என்னை அழைத்தார். இந்தியாவிலேயிருந்து முக்கியமான விஐபி ஒருத்தர் வர்றார். அவர் ரொம்ப ரொம்ப முக்கியமானவர் என்பதால் அவரை ரிசீவ் பண்ண கீழே வேலை பார்க்கிற நபர்களை அனுப்ப முடியாது. அதனால் நாளைக்கு விடியற்காலை மூணு மணிக்கெல்லாம் ஏர்போர்ட் போயிடுங்க. இமிகிரேஷன்ல அவரை ரொம்ப நேரம் காக்க வைக்க மாட்டாங்க. சட்டுன்னு ஸ்பெஷல் கேட் வழியா வெளியே அழைச்சுட்டு வந்துருங்க என்றார்.
இந்தியாவிலேர்ந்தா… யாரா இருக்கும்? மனசுக்குள் ஆர்வமும் வியப்பும் ஒரு சேர, ‘யாரு சார் அவரு?’ என்றேன். ம்ஹும். அதையெல்லாம் கேட்காதீங்க. பட்… பார்த்தா நீங்க ஆச்சர்யப்படுவீங்க என்று இன்னொரு வாக்கியத்தை அவர் சேர்க்க, அங்குதான் இன்னும் ஆர்வமானேன். அமிதாப்பச்சனா இருக்குமோ, ராகுல் காந்தியா இருக்குமோ? ம்ஹூம்… இருக்காது. ஏன்னா அவர் வந்தால் தாய்லாந்து அரசு அதிகாரிகளும் ராணுவமும் போலீசும் அல்லவா வரவேற்க போகும். நாம் ஏன் போகணும்.
ஒருவேளை சல்மான்கான்… ஷாரூக்கான்? மனசு தாறுமாறாக கணக்குப் போட்டது. பின் உறங்கி முன்னாலேயே எழும் பத்தினன் ஆகி விடியற்காலை இரண்டு மணிக்கே ஏர்போர்ட்டில் நின்றேன். என்னுடன் வந்த உதவியாளர்கள் இருவருமே தாய்லாந்து இளைஞர்கள். ‘ஏன் சார் உங்களை அனுப்பியிருக்காங்க’ என்றர்கள். ‘இந்தியாவிலேர்ந்து யாரோ பெரிய விஐபி வர்றாராம்’ என்றேன்.
அறுபது நிமிடம் என்னை தவிக்க விட்டு ஃபிளைட் வந்து இறங்கியது. ஒரு பத்து நிமிடம் ஆகவில்லை. தொலைவில் வெள்ளை ஜிப்பா, வெள்ளை பேண்ட், ஒரே ஒரு ஹேன்ட் பேக் சகிதம் விறுவிறுவென ஒரு உருவம் வர, அதன் நடையும், வேகமும் எனக்குள் பளிச்சென்று மின்னலை பாய்ச்சியது. தலைவா…ஆ…. என்று கூச்சல் போடவில்லை. அவ்வளவுதான். நான் பத்து ஸ்டெப் ஓடிச் செல்வதற்குள் அவர் பதினைந்து ஸ்டெப்புகள் வைத்தார். வேகம்… வேகம்… அவ்வளவு அதிகாலையிலும் உற்சாகத்தை பிழியும் வேகம்.
‘சார்… ஐ யம் ராம். ஃபிரம் ஸோ அண் ஸோ டூரிசம்’ என்று கையை நீட்டினேன். என்னை இதற்காகதான் காத்திருந்தாயா பாலகுமாராவாக்கி உடம்பெல்லாம் மின்னல் தாக்க வைத்தார் சூப்பர் ஸ்டார். பளிச்சென்ற புன்னகையோடு ‘ஐ ஆம் ரஜினி’ என்றார் என்னிடம் கைகுலுக்கிக் கொண்டே. இப்படியொரு அதிர்ஷ்டம் என் வாழ்வில் வரும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை.
லக்கேஜ் வர சில நிமிடங்கள் பிடித்தது. அதற்குள் அந்த நீண்ட தளத்தின் மூலையில் போய் நின்று கொண்டோம் இருவரும். நான் அவரையே பார்த்துக் கொண்டிருக்க, எதையாவது பேசுடா… பேசு. இந்த சந்தர்ப்பம் இனி ஒரு முறை உன் வாழ்வில் நிகழுமா என்று என் உள் மனசு வார்த்தைகளை ரேஸ் குதிரை வேகத்தில் தயார் பண்ணிக் கொண்டிருந்தது. ஒரு நிமிடம் நான் ரிகர்சல் பார்ப்பதற்குள் அது நிகழ்ந்தது.
சுமார் இருபதுக்கும் மேற்பட்ட ஜப்பான் இளைஞர்களும், இளைஞிகளும் வேறொரு பிளைட்டில் வந்திறங்கி இமிகிரேஷனை முடித்துவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் ரஜினியை பார்த்துவிட்டு தனது நண்பர்களிடம் ஏதோ சொல்ல, திமுதிமுவென ஓடிவந்தார்கள் அவர்கள். அவ்வளவு விடியற்காலை நேரத்தில் அவர்களிடம் சிரித்த முகத்தோடு பேச ஆரம்பித்துவிட்டார் அவர். ஷேக் ஹேன்ட், போட்டோ, ஆட்டோகிராஃப் என்று அவரை நகரவே விடவில்லை அவர்கள்.
அவரை பாதுகாப்பாக கூட்டிச் செல்ல வேண்டுமே என்கிற கவலை எனக்கு. நல்லவேளையாக லக்கேஜ்கள் வந்து சேர, ‘சார்… புறப்படலாம்’ என்றேன் கூட்டத்தை விலக்கிக் கொண்டு. எமது டூரிசம் அலுவலகத்தில் விஐபிகளை வரவேற்பதற்காகவே இறக்குமதி செய்யப்பட்ட அந்த விலையுயர்ந்த கார் வழுக்கிக் கொண்டு பறந்தது.
பக்கத்தில் நான் கால காலமாக திரையில் ஏங்கி ரசித்த ரஜினி. நானும் அவரும் சுமார் இருபது நிமிட பயணத்தை மேற்கொள்ளப் போகிறோம். யார்கிட்டயாவது சொன்னா நம்புவாங்களா? என் இரு பிள்ளைகள் நம்புவாங்களா முதலில். எனக்கு நானே வியந்து கொண்டிருக்க, தாய்லாந்து இளைஞன் என் கனவை கலைத்தான். தாய் லாங்குவேஜில் அவன் கேட்டது ரஜினிக்கு புரிய வாய்ப்பில்லை. ‘இவர்தான் நீங்க சொன்ன விஐபியா? இந்தியவுல இவரு என்னவா இருக்காரு’ என்றான்.
நானும் தாய் லாங்குவேஜிலேயே பதில் சொன்னேன். ‘அவர் நினைச்சிருந்தா என்ன வேணும்னாலும் ஆகியிருக்கலாம்’ என்று. அதற்கு மேலும் அவரை வைத்துக் கொண்டு தாய் லாங்குவேஜில் பேசுவது சரியல்ல என்பதால் அவன் கேட்ட கேள்வியை மட்டும் நான் அவருக்கு தமிழில் சொல்லிவிட்டு அவர் முகத்தையே பார்த்தேன். நான் என்ன பதில் சொன்னேன் என்பதை அவரிடம் சொல்ல வேண்டாம் என்று பட்டது எனக்கு.
சட்டென தாய் இளைஞனிடம் கை குலுக்கினார் ரஜினி. அவனுடைய பெயரை கேட்டார். குடும்பம் பற்றி கேட்டார். அதற்குள் அவர் தங்க வேண்டிய ஓட்டல் வந்து சேர, ‘அட ஆண்டவனே’ என்றானேன் நான். இறங்கும்போது எதுவா இருந்தாலும் கூப்பிடுங்க சார் என்று நான் சொல்ல, ‘உங்க நம்பரை கொடுங்க’ என்றார். ‘அப்படியே என் நம்பரையும் குறிச்சுக்கங்க’ என்று தனது பர்சனல் மொபைல் எண்ணையும் கொடுத்தார் என்னிடம்.
அதற்கப்புறம் பத்து நாட்கள் ரஜினி அந்த பிரமாண்ட ஓட்டல் வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டதையும், அதிகாலை நேரத்தில் மொட்டை மாடி வெளிச்சத்தில் தியானம் செய்ததையும் கண்ணார பார்க்கிற பாக்கியம் எனக்கு கிடைத்ததே… அந்த ஒரு விஷயத்துக்காகவே நான் தாய்லாந்தை விட்டு கிளம்புவதாக இல்லை என்றார் ராம்.
சூப்பர் ஸ்டார் வந்ததால் இப்படி… பவர் ஸ்டார் வந்தால் என்னாவார் நம்ம ராம்? ச்சும்மா கிறுகிறுங்குதுல்ல…
-ஆர்.எஸ்.அந்தணன்