ரஜினி, கமல், அஜீத் விஜய் ஆப்சென்ட்…! குய்யோ…முறையோ…கூச்சல்… குழப்பம்…. நடிகர் சங்க பொதுக்குழுவில் நடந்தது என்ன? -வெளிவராத எக்ஸ்குளூசிவ் தகவல்கள்

கதர் சட்டைக்கும் கஞ்சிக்கும் இருக்கிற தொடர்புதான் சரத்குமாருக்கும் நடிகர் சங்கத்திற்கும்! அவர் செயலாளராக இருந்தபோதும் சரி, தலைவராக இருக்கிற போதும் சரி. அந்த ‘மொட மொட’ப்பை குறைய விட்டதேயில்லை.

ராகுவும் கேதுவும் சேர்ந்து கொண்டு நடிகர் சங்கத்தை வளைத்துவிட்டதை போலவும், வாலை நீ பிடி… தலையை நான் பிடிக்கிறேன் என்று அரவங்களை அகற்றி துயரங்களை துடைக்க முன் வந்தது போலவும் நடந்து கொண்டனர் சூர்யா, விஷால், கார்த்தி, ஜீவா உள்ளிட்ட இளம் நடிகர்கள். கனல் கண்ணன்கள், ஸ்டன்ட் சிவாக்கள், ஆக்ஷன் பிரகாஷ்கள் இல்லாமலே ஒரு ஆக்ஷன் கோதாவுக்கு இவர்கள் தயாராக, ஆட்டத்திற்கு நாள் குறித்தது சங்கம்.

அதன்படி நியூமராலஜியில் ஆகவே ஆகாத நம்பரான 18 ந் தேதி காமராஜ் அரங்கத்தில் பொதுக்குழுவுக்கு நாள் குறித்தார்கள் நடிகர் சங்க நிர்வாகிகள். நேற்று காலையில் இருந்தே நிருபர்களும் ஏதோ ஒரு ஆக்ஷன் சினிமா பார்க்கிற ஆர்வத்தோடு காத்திருக்க, நீங்க அங்க வந்து காத்திருக்க வேண்டாம். தீர்மானங்களை நாங்க வாசிக்கிறோம். அப்ப நீங்க வந்தா போதும் என்று கூறப்பட்டது நிருபர்களுக்கு. இருந்தாலும் கண், காது, மூக்கு உள்ளிட்ட சர்வ லேசர் கருவிகளையும் அங்கே நுழைத்துவிட்டு காத்திருந்தார்கள் நிருபர்கள்.

உள்ளே என்ன நடந்தது? நியூ தமிழ்சினிமா.காம் மட்டுமே தருகிற எக்ஸ்க்ளூசிவ் தகவல் இது.

காலையில் இருந்தே சூர்யா, கார்த்தி, விஷால், ஜீவா,
ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட எதிர்கோஷ்டிகள், தி.நகரிலிருக்கும் பிரபல ஓட்டல் ஒன்றில் ரூம் போட்டு டிஸ்கஷன் செய்து கொண்டிருந்தார்கள். நடிகர் சங்கத்தில் மோதல் வந்தால் எப்படி சமாளிப்பது? நமது கருத்தை யார் யார் எப்படி எப்படி முன் வைப்பது? போன்ற அதி அவசியமான விவாதங்கள் அங்கு நடந்தது. உடையில் கூட ஒற்றுமை வேண்டும் என்பதற்காக வெள்ளை சட்டை, நீலக்கலர் ஜீன்ஸ் சகிதம் அவர்கள் காமராஜ் ஹாலுக்கு வந்திறங்க, களைகட்டியது ஏரியா.

‘வாங்கடி ஷாக் தர்றோம்’ என்பது மாதிரி ஏகப்பட்ட கேமிராக்களை இறக்கியிருந்தது சரத்குமார், ராதாரவி வட்டாரம். இங்கு நடக்கும் எல்லா நிகழ்வுகளும் படம் பிடிக்கப் படுகிறது. அதனால் ஆத்திரமாக பேசுகிறவர்கள், கை உயர்த்துகிறவர்கள் யாராக இருந்தாலும் கேமிரா இருப்பதை மனதில் வைத்துக் கொண்டு பேசவும் என்று கூறிவிட்டுதான் நிகழ்ச்சியை துவங்கினார்கள்.

சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட குமரிமுத்துவுக்கு ஆதரவாக முதலில் குரல் எழுப்பப்பட்டது. தான் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும், ஆவேச கண்களோடு அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தார் குமரிமுத்து. அடிக்கடி கத்திக் கொண்டே கோபத்துடன் அவர் வெளியே ஓடிவருவதும், பின் உள்ளே ஓடுவதுமாக இருந்தார். அவரை சங்கத்திலிருந்து நீக்கியது தவறு என்று கூறியதால் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. சரி, அவரை நீக்கியது தவறு என்பவர்கள் எழுந்து நில்லுங்க…என்றார் ராதாரவி.

சிவகுமார், சூர்யா, விஷால் உள்ளிட்ட சுமார் 40 பேர் மட்டும் எழுந்து நின்றார்கள். நீக்கியது சரின்னு சொல்றவங்க எழுந்து நில்லுங்க என்று மீண்டும் ராதாரவி கூற, சேலம் நாமக்கல் பகுதியிலிருந்து தனி பேருந்துகளில் கூட்டத்திற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான நாடக நடிகர்கள் எழுந்து நின்றார்கள். பார்த்தீங்களா, அவருக்கு ஆதரவு இல்லே. நான் என்ன செய்யறது? என்றார் ராதாரவி. கடைசியில் நடிகர் சிவகுமார் குமரிமுத்துவை பற்றி மிக நெகிழ்ச்சியாக பேச ஆரம்பித்தார். அவரது அப்பாதான் நடிகர் திலகம் சிவாஜியை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு சினிமா கம்பெனியாக ஏறி இறங்கி வாய்ப்பு கேட்டவர். அவரது மகனான குமரிமுத்துவை சங்கத்திலிருந்து நீக்கியது நாகரிகமல்ல, என்று சிவகுமார் கூறியவுடன் மனமிரங்கிய சங்க தரப்பு, கோர்ட்ல அவர் போட்டிருக்கிற கேசை வாபஸ் வாங்க சொல்லுங்க. மீண்டும் சங்கத்தில் சேர்த்துக் கொள்கிறோம் என்றது. அவர் பிரச்சனை முடிவுக்கு வந்ததும் சங்கத்தில் கையிருப்பு பணம் பற்றிய பிரச்சனையை துவங்கியது விஷால் கோஷ்டி. (விஜயகாந்த் சங்கத்தை விட்டு விலகும்போது சுமார் ஏழு கோடி ரூபாயை சங்க கணக்கில் வைத்திருந்ததாக கூறப்பட்டது. அது குறித்துதான் விவாதம் துவங்கியது)

இப்படியெல்லாம் கேட்பார்கள் என்று தெரிந்தே தயாராக வைத்திருந்த ஒரு வீடியோ காட்சியை திரையில் ஓட விட்டார் ராதாரவி. அதில் விஜயகாந்த் சங்கத்தை சரத்குமாரிடம் ஒப்படைக்கிற காட்சி ஒளிர்ந்தது. கையிருப்பு பணம் ஒன்றரை கோடியையும் சங்கத்தில் ஒப்படைக்கிறேன் என்று அவர் பேசியது அப்படியே ஒளிபரப்பாக அந்த பிரச்சனையையும் மிக ஈஸியாக முடிவுக்கு கொண்டு வந்தார்கள் ராதாரவியும் சரத்குமாரும்.

இதுபோலவே கணக்கு வழக்கு தொடர்பான அத்தனை கேள்விகளுக்கும் விரல் நுனியில் ஆதாரத்தை வைத்திருந்த இருவரும் சட்டு சட்டென எடுத்துப்போட சைலன்ட் ஆனார்கள் விஷால் கோஷ்டியினர்.

நடுநடுவே பேசிய ராதாரவி வழக்கம்போல பிரஸ்சை வம்புக்கு இழுத்தார். என்னை ஒருத்தன் பேட்டியெடுக்க வந்தான். எப்படியிருந்த நடிகர் சங்கத்தை சுடுகாடு போல ஆக்கிட்டீங்களேன்னான். நான் உன்னை உதைப்பேண்டா என்றேன். உடனே நான் உங்க மேல போலீஸ்ல புகார் கொடுப்பேன்னு சொன்னான். கொடுறா… போலீஸ் ஸ்டேஷன் எனக்கு சின்ன வீடு மாதிரின்னு நான் சொன்னேன் என்றார் ராதாரவி. இப்படி கரடுமுரடாக பேசினாலும் அவர் சொன்ன சில விஷயங்களை கேட்டு ஆஃப் ஆனது விஷால் தலைமையிலான எதிர்கோஷ்டி.

எந்த நாடக நடிகர் செத்தாலும் நான்தான் கிளம்பி போறேன். அவங்க குடும்பத்துக்கு ஒண்ணுன்னா நான்தான் சேலம் நாமக்கல்னு சுத்தறேன். நீங்கள்ளாம் பிஸியா நடிச்சுட்டு இருக்கீங்க. யாராவது ஷுட்டிங்கை விட்டுட்டு போங்களேன் பார்ப்போம்… என்று அவர் சொல்ல சொல்ல நாடக நடிகர்கள் பக்கத்திலிருந்து செம க்ளாப்ஸ்.

எல்லா பிரச்சனைகளும் கூச்சல் குழப்பங்களும் முடிந்ததும் மேடையில் ஏறினார் நடிகை ராதிகா. ‘இதுக்காகதான் நான் அப்பவே இந்த மாதிரி பதவியெல்லாம் நமக்கு வேணாம்னு சொன்னேன். ஆனால் நீங்கதான் கேட்கல. இப்போ இங்க உங்களை பற்றி இவ்வளவு பேர் தப்பா பேசுறதை கேட்கும்போது மனசு கஷ்டமா இருக்கு’ என்று கண்ணீர் வடித்தார். ‘அவரோட மனைவியா சொல்லல… நடிகர் சங்க உறுப்பினரா சொல்றேன். அவர் நல்லவர்’ என்று ராதிகா தேம்பியதை சற்று கவலையோடு கவனித்தார்கள் அத்தனை பேரும்.

நாங்க இருக்கோம் என்று விஷால் குரூப் ஆதரவு கேட்கும்போது நம்பிக்கையளித்த ரஜினி கமல் இருவருமே இந்த கூட்டத்திற்கு வரவில்லை. எப்பவுமே நடிகர் சங்கத்தில் ஒரு பிரச்சனை என்றால் தலையை காட்டுகிற வழக்கம் இல்லை அஜீத்திற்கு. அதனால் இப்பவும் வராதது பற்றி யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் வருங்கால நடிகர் சங்க தலைவராக விஜய் கூட வரக்கூடும் என்று எதிர்பார்த்திருந்த இளைய தலைமுறைக்கு ஷாக். அவரும் வரவில்லை.

பெரும் எதிர்பார்ப்போடு உள்ளே போன சூர்யா உள்ளிட்ட இளம் தலைமுறைக்கு ஒரே ஒரு ஆறுதல். ‘வருகிற தேர்தலில் நாங்க யாரும் நிக்க மாட்டோம்யா… வாங்க, இளைய தலைமுறை எல்லாரும் வாங்க. வந்து செய்ங்க. நாங்க வேணாம்னா சொல்லப் போறோம்’ என்றார் ராதாரவி.

ஓட்டுப்போட தகுதியிருக்கிற நாடக நடிகர்கள் 1500 பேரும் ராதாரவி பக்கம் இருக்கும்போது, புதியவர்களுக்கு என்ட்ரி கேட் திறக்குமா? நடிகர் சங்கத்திற்கு தேர்தல் வரும்போதுதான் அது பளிச்சென்று தெரியும்…

-ஆர்.எஸ்.அந்தணன்
www.newtamilcinema.in

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பத்திரிகையில் வந்த செய்தி… -நடிகை சமந்தா அப்செட்!

குடும்ப குத்துவிளக்குகள் என்று கொஞ்சம் பேரை மனதில் வைத்திருப்பார்கள் ரசிகர்கள். அவர்களை பற்றி விரும்ப தகாத செய்திகள் வந்தால், அவ்வளவுதான்... நேரடியாக சம்பந்தப்பட்ட நடிகை வீட்டுக்கே படையெடுக்கிற...

Close