ராவண தேசம் – விமர்சனம்
உலகமே கவனித்துக் கொண்டிருக்கும் ஒரு நாட்டின் கதையை, …ந்தா இருக்கும் சாஸ்திரி பவனுக்கு கொண்டு செல்வதற்குள் நாக்கில் பிளாஸ்திரியோடும் வசமான மாவுக்கட்டோடும் திரும்பி வருகிற இயக்குனர்களைதான் இதுவரை கண்டிருக்கிறது தமிழ்சினிமா. அப்படிப்பட்ட சென்‘சார்கள்’ நிறைந்திருக்கும் நாட்டில் இலங்கை தமிழர்களின் அவஸ்தையை, அவசரத்தை இஸ்திரி பெட்டியின் அடிப்பகுதியை கொண்டு சுட சுட முகத்தில் தேய்த்து சொல்வதற்கு ஒரு படம் வந்திருக்கிறதே… ஆச்சர்யம்தான். அதைவிட ஆச்சர்யம்… இந்த படத்திற்கு சென்சார் அனுமதி கிடைத்ததுதான். இதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளத் தக்கவைதானா? அவற்றில் புதைந்து கிடக்கும் நிஜத்தின் அளவு நியாயமானதுதானா? போன்ற கேள்விகளுக்குள் போனால், வைகோ நெடுமாறன்களின் அனல் மூச்சுக்கு ஆளாகி ஸ்பாட்டிலேயே பஸ்பமாகிவிடுவார் இப்படத்தின் டைரக்டர் அஜெய் நுத்தகி.
அண்டை மண்ணான இலங்கையில் வாழும் கட்டுமஸ்தான இளைஞன்தான் ஹீரோ அஜெய். (இவர்தான் படத்தின் இயக்குனரும்) இலங்கை ராணுவத்தின் கொடூர பிடியில் சிக்கி தவிக்கும் பல அப்பாவி மக்களை கள்ளப் படகின் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிற வேலை இவருக்கு. அதே நேரத்தில் இன்னொரு முக்கியமான வேலையும் இருக்கிறது இவருக்கு. அது காதல். அதே மண்ணை சேர்ந்த ஜெனிபர் இந்த அஜெய்யை காதலிக்க, ஒருமுறை இலங்கை ராணுவத்திடம் ஜோடியாக சிக்கிக் கொள்கிறார்கள் இருவரும். நல்லவேளையாக சேதாரமில்லாமல் அனுப்பி வைக்கப்படுகிறார் ஜெனிபர். ஆனால் ஒரு தமிழனை நாயினும் கேவலமாக எத்தித் தள்ளும் இலங்கை ராணுவத்தின் கொடூர கோபத்தை காட்டி பதற வைக்கிறார் அஜெய்.
திடீரென ஈழ தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டுகளை வீசுகிறது. கொல்கிறது. பதுங்கு குழி, பரிதாபமான மரணங்கள் என்று சிதைந்து கிடக்கும் ஏரியாவில் பிரபாகரன் என்ட்ரியாகி, மீண்டும் அந்த கிராமத்தை மீட்டெடுத்து புலிக்கொடியை பறக்கவிடுகிறார். (இந்த காட்சியில் நம்மையறியாமல் நரம்புகள் புடைத்துக் கொள்ள, அது வெறும் கைதட்டல்களுக்கு மட்டுமே பயன்படுகிறது) இலங்கையிலிருந்து தப்பி இந்தியா வரத்துடிக்கும் அகதிகளை புலிகள் தடுப்பதாக காட்டுகிறார் இயக்குனர். ‘உலகம் பார்க்குது உலகம் பார்க்குது என்று எங்களை பலி கொடுத்துக் கொண்டேயிருக்கீங்க. இங்கு இருக்கிற உயிர்கள் எல்லாம் போன பிறகு இந்த உலகம் யாரை பார்க்கும்?’ என்றெல்லாம் பிரபாகரனிடம் கேள்வி கேட்கிறார் அஜெய். அதை தொடர்ந்து ஒரு அபத்தமான கனவு கண்டு தவிக்கும் அவர், இனி இந்த நாட்டில் இருந்தால் நம்மை தப்பிக்க விட மாட்டார்கள் என்கிற முடிவெடுக்கிறார். அவரும், அவரது காதலியும், வேறு சில அண்டை அயலார் சொந்த பந்தங்களுமாக சுமார் ஐந்தாறு பேர் படகில் தப்பி இந்தியா வர முயல்வது செகண்ட் ஆஃப்.
முதல் பாதியை விட இந்த இரண்டாம் பாதியில்தான் பதற்றம் அதிகம். ஒரு படகு, பிரமாண்டமான கடல், உள்ளே நாலைந்து நபர்கள் இம்மூன்றையும் வைத்துக் கொண்டு சுமார் அரை மணி நேரத்தை கொட்டாவியில்லாமல் கடத்துவதே சிரமம். ஆனால் பின்பகுதியான அந்த ஒரு மணி நேரமும் வினாடியில் கடந்து போகிறது. அந்தளவுக்கு காட்சிகளில் சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் அஜெய். கடைசிநேரத்தில் இவர்களுடன் சேர்ந்து கொள்ளும் அந்த சுயநல புரோக்கர், உள்ளூர் தமிழன், உலக தமிழன் உள்ளிட்ட அத்தனை தமிழனின் அவதாரமாகவும் அடையாளமாகவும் இருக்கிறான். சமீபகாலங்களில் அதிகமாக விவாதிக்கப்படும் குறியீட்டின் குறியீடு இவன்கள்தானோ என்னவோ?
அலைவீசும் கடல். அதில் நிலைகொள்ளா உயிர்கள் என இந்த இரண்டாம் பகுதிக்குள் நம்மை கட்டிப்போடுகிற இயக்குனர் நொடிக்கொரு முறை கண்கலங்க வைக்கிற சோகங்களும் உண்டு. அகதிகள் என்று நாம் சொல்லும் யாரும் இவ்வளவு பேரவஸ்தை பட்டுதான் இந்தியாவுக்கு வந்தார்களா என்ற அதி அத்தியாவசியமான கேள்வியை நமது மனதிற்குள் ஏற்படுத்துகிறார் இயக்குனர். நட்ட நடுக்கடலில் எல்லைகளை தாண்டுகிறோமா, இல்லையா? கடல் இங்கே ,கரை எங்கே என்கிற போராட்டத்திற்கு விடிவு காலம்தான் எப்போது? இப்படி ஏராளமான கேள்விகளை எழுப்பி படத்தை முடிக்கிறார் அஜெய் நுத்தகி.
உங்களோட பெண்கள், குழந்தைகள் யார் மேலயாவது நாங்க கையை வச்சுருக்கோமா? அவங்களை துன்புறுத்தியிருக்கிறோமா? என்று பிரபாகரன் கேரக்டரை பேசவைத்து புலிகளின் பேராண்மையை வெளிப்படுத்துகிற டைரக்டர், இந்தியா உதவி செய்ய வந்தபோது அதை சரியாக புரிந்து கொள்ளாமல் போனது என் உடன்பிறப்புகள்தான் என்று கூறுகிறாரே, அங்கே புரிந்து கொள்ள முடிகிறது இப்படத்திற்கு சென்சார் அனுமதி எப்படி வந்ததென்று.
சரியோ, தவறோ, தமிழனின் வேதனையை சொல்ல ஒரு தெலுங்கர் முன்வந்ததற்காக பாராட்டலாம். படம் முடிந்து வெளியே வரும் யாவருக்கும் தோன்றுகிற எண்ணம் இதுவாகதான் இருக்க முடியும்.
கடல் தப்பி வந்தவர்களுக்கு வணக்கம். கடல் கொண்டு போனவர்களுக்கு அஞ்சலி!
-ஆர்.எஸ்.அந்தணன்