லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் மறைவு – திரையுலகம், அரசியல் உலகம் கண்ணீர் அஞ்சலி

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 86.

எஸ்.எஸ்.ஆர். என்று ரசிகர்களால் அன்போடு அழைக் கப்படும் எஸ்.எஸ். ராஜேந்திரன், 1928 ம் ஆண்டு பிறந்தவர். தனது 15 வது வயதில் நாடகங் களில் நாயகனாக நடிக்கத் தொடங் கினார். ‘பைத்தியக்காரன்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ்த்திரைக்கு அறிமுக மானபோது அவருக்கு வயது 20. அதன்பின் 1952ம் ஆண்டில் வெளிவந்த ‘பராசக்தி’ திரைப்படம் தமிழ்த் திரையில் இவருக்கு பெரிய அடையா ளத்தை கொடுத்தது. சி.என் அண்ணாதுரையின் ‘எதையும் தாங்கும் தெய்வம்’, கருணாநிதியின் அவன் பித்தனா, பூம்புகார் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். முரசொலிமாறன் வசனத்தில் வெளிவந்த ‘ராஜா ராணி’ படத்தில் எஸ்.எஸ்.ஆரின் நடிப்பு எல்லாராலும் பாராட்டப்பட்டது.

மதுரை சேடப்பட்டியில் பிறந்தவர். 80க்கும் மேலான திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சிம்பு நடிப்பில் வெளிவந்த ‘தம்’ படத்தில் நடித்திருக்கிறார். தனது திரைப்படங்களில் திராவிட இயக்க கருத்துக்களை கொண்ட வசனங்களை பேசி நடித்ததால், ரசிகர்கள் அவரை ‘லட்சிய நடிகர்’ என்று அழைத்தனர். தனது கொள்கைக்கு ஒவ்வாத கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தவர். சிவாஜிகணேசனைப்போல வசன உச்சரிப்பில் தனி முத்திரை பதித்த நடிகராக திகழ்ந்தவர்.

‘ரத்தக் கண்ணீர்’, ‘ரங்கூன் ராதா’, ‘சிவகங்கைச் சீமை’, ‘பூம்புகார்’, ‘மறக்க முடியுமா’, ‘பார் மகளே பார்’, ‘குங்குமம்’, ‘பச்சை விளக்கு’, கைகொடுத்த தெய்வம், சாரதா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். 1957ம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘முதலாளி’ திரைப்படம் தேசிய விருது பெற்றது.

எஸ்.எஸ்.ஆர். சில ஆண்டுகள் திமுகவிலும் அதன்பின் அதிமுக விலும் இருந்து வந்தார்.

முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி வசனங் களில் வெளிவந்த படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரு டனும் நடித்திருக்கிறார். 62ம் ஆண்டு தேனி தொகுதியில் திமுக சார்பில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். அதேபோல 1980ம் ஆண்டு அதிமுக சார்பில் ஆண்டிபட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். 70 முதல் 76 ம் ஆண்டு வரையிலும் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக எஸ்.எஸ்.ஆர். நுரையீரல் தொற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து, அவரை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில், நேற்று காலை 10.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. அதன் பின்னர் அவரது உடல் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. எஸ்.எஸ்.ஆருக்கு பங்கஜம்மாள், சி.ஆர்.விஜயகுமாரி, தாமரைச்செல்வி ஆகிய மூன்று மனைவிகள். இவர்களில் பங்கஜம்மாள் தற்போது உயிருடன் இல்லை. இறுதி நாட்களில் மூன்றாவது மனைவி தாமரைச்செல்வி மற்றும் பிள்ளைகளுடன் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை வீட்டில் வசித்து வந்தார். இறுதி அஞ்சலிக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த எஸ்.எஸ்.ஆரின் உடலுக்கு திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு சென்னை பெசன்ட் நகருக்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அங்கு மாலை 5.45 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது.

தலைவர்கள் அஞ்சலி

சென்னை ஆழ்வார்ப் பேட்டை யில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடலுக்கு நேற்று திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன், பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அரசு சார்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அஞ்சலி செலுத்தினார்.

மனோரமா, விஜயகுமாரி கதறல்

திரைத்துறையினர் சார்பில் நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், சிவக்குமார், கவிஞர் வைரமுத்து, பிரபு, ஏவிஎம் சரவணன், எஸ்.பி.முத்துராமன். நடிகர் செந்தில், சச்சு, கே.பாக்யராஜ், இயக்குநர் சங்கத்தலைவர் விக்ரமன், விஜயகுமார், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். உடல்நலம் சரியில்லாத நிலையிலும் அஞ்சலி செலுத்த வந்த நடிகை மனோரமா, எஸ்.எஸ்.ஆரின் உடலைப் பார்த்து கதறி அழுதார். எஸ்.எஸ்.ஆரின் முதல் மனைவி பங்கஜம்மாள் குடும் பத்தினர், இரண்டாவது மனை வியும், நடிகையுமான விஜயகுமாரி கண்ணீர் பொங்க இறுதி சடங்கில் கலந்துகொண்டனர்.

எஸ்.எஸ்.ராஜேந்திரன் மறை வை ஒட்டி நேற்று அரை நாள் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

நன்றி – தி இந்து நாளிதழ்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நாற்பது வயசாச்சு… அதனால? இயக்குனரை அலற விட்ட விஜய்!

சிம்புதேவன் இயக்கத்திற்கு அப்புறம் விஜய் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கப் போவது யார்? இந்த கேள்விக்கு அதிகாரபூர்வமாக விடை வராவிட்டாலும், அரசல் புரசலாக விடை தெரிந்துவிட்டது. ‘ராஜா ராணி’...

Close