வனவிலங்கு பூங்காவில் புலிகளுக்கு எதிரே நடனமாடிய கல்லூரி மாணவர்
குவாலியரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் இன்ஜினியரிங் மாணவர் ஒருவர் புலி உறைவிடத்தில் சுவரேறிக் குதித்து நடனமாடிய காட்சி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவரும் யசோனந்தன் கவுசிக் என்ற அந்த மாணவர், வனவிலங்கு பூங்காவுக்கு சென்று, அங்குள்ள புலி உறைவிடத்தின் 20 அடி உயர மதில் சுவரை தாண்டி உள்ளே குதித்ததுடன் தனது மேலாடையை கழற்றிவிட்டு ஆட்டம் போட்டார்.
அப்போது அந்த இடத்தில் இரு புலிகள் இருந்துள்ளன. இரு புலிகளும் மாணவரை பார்த்தவுடன் மிரண்டு போனது. அதில் ஒரு புலி அதிகமாக மிரண்டு தனது குகைக்குள் ஓடி பதுங்கிய நிலையில், அம்மாணவர் குகை வாயிலுக்கு சென்று அந்த புலியை வம்புக்கு இழுத்த காட்சி மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தை நேரில் பார்த்து கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பூங்கா ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து மாணவரை எவ்வித காயமுமின்றி காப்பாற்றினர். எனினும் அவன் மீது தற்கொலை முயற்சி வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர்.