வருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம்

பந்தியில டீயை வச்சான். பக்கத்திலேயே நோயை வச்சான்ங்கிற மாதிரி, இந்த படத்தை பாராட்டுவதா, பழிப்பதா என்றே தெரியவில்லை. ‘எல்லாரையும் வயிறு குலுங்க வைக்கணும். அதுதான் எங்க நோக்கம்’ என்ற முடிவோடு இறங்கியிருக்கிறார் டைரக்டர் பொன்ராம். பாராட்டப்பட வேண்டிய முயற்சிதான். ஆனால் ஆடியன்ஸ் சிரிப்பதற்காகவாவது டைம் கொடுக்க வேண்டுமல்லவா? வசவசவென பேசிக் கொண்டேயிருக்கிறார்கள் யாராவது யாருடனாவது. போதாத குறைக்கு பின்னணி இசை வேறு. அதுவும் இவர்களுடன் சேர்ந்து சேர்ந்து பேசுகிறதா, ‘கொஞ்சம் அமைதி இருந்தா கொடுங்களேன்’ என்று கேன்டீனில் தேட வேண்டியிருக்கிறது.

அக்மார்க் சிவகார்த்திகேயன் பிராண்ட் படம். (பின்ன எதுக்கு அவரை வச்சு எடுக்கணுமாம்,வுடுங்கப்பா…) பொதுநலவாதியாக இருக்கிற இவர் தனது செல்போனிலிருந்து ஒரு ‘ரிங்’கில் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லி அலற வைக்கிறார் ஊரை. இப்படி மணல் மாபியாக்களை கூட பிடித்துக் கொடுக்கிற இவரை க்ளைமாக்சில் வந்து அவர்கள் தாக்க வேண்டுமே. அப்படியெல்லாம் ஓல்டு மாவை பேக்கிங் செய்யாமல் விட்டதற்காகவே ஆயிரம் நன்றிக்கு ஆளாகிறார் டைரக்டர். கதையிலும் ஒரு புதுமையில்லாமல் இரண்டரை மணி நேரம் அமர வைக்கிற அளவுக்கு தனி ஆவர்த்தன திறமையும் இருக்கிறது இவருக்கு.

வில்லன் சத்யராஜுக்கு காதல் என்றாலே பிடிக்காது. அப்படியென்றால் அவரது மகள் யாருடனாவது ஓடிப்போக வேண்டுமே? ஓடுகிறார். ஊரே சேர்ந்து கவலைப்பட, கையிலிருக்கிற நாட்டுத்துப்பாக்கி மூலம் இருவரையும் கொன்று போட்டுவிட்டு வீடு திரும்புகிறார். ‘கவுரவத்திற்காக பெற்ற மகளையே சுட்டுக் கொன்றவரே…’ என்கிற கோஷத்தோடு ஊருக்குள் என்ட்ரியாகும் சத்யராஜ், உள்ளபடியே அப்படி செய்தாரா? க்ளமாக்ஸ் அதேதான்.

சிவகார்த்திகேயனின் சம்பளம் ரெண்டு மூணாவுதோ, நாலாவுதோ? அது அவரது அதிர்ஷ்டம். ஆனால் அவரால் வயிறு புண்ணாவுது. ஒரு ஊரையே சமாளிக்கிற அவரது வாய், அவ்வப்போது வீசும் தத்துவங்கள் தனி அந்தஸ்துக்குரியவை. மணல் அள்ளக் கூடாது போன்ற பொதுநல போஸ்(டர்)களுக்கும் தயாராகியிருக்கிறார் இப்படத்தில். சத்யராஜ் போன்ற சீனியர் நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் போது எப்படியிருந்தாலும் தடுமாறும் ஜுனியர்கள் மத்தியில், மடை திறந்த வெள்ளம் போல மனுஷன் துள்ளி விளையாடியிருப்பதையும் தனி கண்களோடு கவனிக்க வேண்டும்.

சத்யராஜின் கெட்டப்பே தனி என்கிறளவுக்கு இருக்கிறது அவரது லுக். முதலில் இறுக்கமாகவும் முறைப்பாகவும் நடமாடும் அவர், கடைசியில் காமெடி பீஸ் ஆகப்போவதை நம்மால் யூகிக்கவே முடியவில்லை. பட்… அந்த காமெடி பீஸ் சத்யராஜை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லையே! எதற்கெடுத்தாலும் துப்பாக்கியை எடுக்கும் இவரிடமிருந்து அந்த துப்பாக்கியை லவட்டும் சிவகார்த்திகேயன், அதை வைத்துக் கொண்டு பண்ணும் அலம்பல்களை ரசிக்கலாம். ஆனால், அது வெடிக்கிற சப்தத்தை வைத்துக்கொண்டே சிவகார்த்திகேயனை லபக்கியிருக்கலாமே ஐயா.

வடிவேலுவுக்கு போக வேண்டிய பிரசாதங்கள் எல்லாமே திசை திரும்பி யார் யாருக்கோ போகிறது. இந்த படத்தில் சூரி. அப்படியே வடிவேலுவையே இமிடேட் செய்திருக்கிறார். சொந்தக்கால்ல நிக்க பழகுங்க பிரதர்.

கதாநாயகி ஸ்ரீதிவ்யா. பளிச் முகம். பப்ளி நடிப்பு என்று ஆரம்பமே அமர்க்களம். இனி கொஞ்ச நாளைக்கு இவரில்லாமல் கிசுகிசுக்களோ, சினிமா பத்திரிகைகளோ இயங்க முடியாத நிலை வரலாம். இப்பவே கர்சீப் போட்டு காத்திருங்க புரடியூசர்ஸ்…

ஊர்ல நாலு பேரு நாலு பேருன்னு சொல்வோமில்ல. அது இவங்கதான் என்று டைரக்டர் காட்டுகிற அந்த நால்வரும் நச். அதுவும் காதல் தண்டபாணி பேச ஆரம்பித்தாலே கைதட்டல் விழுகிறது தியேட்டரில்.

ஒருகல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி படங்களின் இயக்குனர் ராஜேஷ்தான் இப்படத்திற்கும் டயலாக். எங்கேயோ இடிக்குதே பாஸ்… ஒரு காட்சியில் (மட்டும்) பிரமிக்க வைக்கிறார் இயக்குனர் பொன்ராம். கிராமபுறங்களில் கிணற்றில் விழும் மாடுகளை எப்படி மீட்கிறார்கள் என்பதை அவ்வளவு லைவ்வாக வேறெந்த படங்களும் காட்டியதில்லை.

படத்தின் பாடல்களை தனக்கு இணையான ‘வெயிட்டோடு’ தந்திருக்கிறார் டி.இமான். ஊதா கலரு ரிப்பன்… இந்த வருடத்தின் டாப்டென்னில் ஒன்றாகும் வாய்ப்பு நிறைய நிறைய… அப்படியே பின்னணி இசையிலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்க இமான். ட்ரம் உருட்டுற சப்தத்தால் ENT கிளினிக்குகள் நிறைகிறதாமே?

வருத்தப்படாத வாலிபர்களால் ஏற்பட்ட வருத்தத்தை போக்க என்னவாவது செய்ங்க சிவகார்த்திகேயன்…

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினி இந்தியாவுல என்னவா இருக்காரு? -தாய்லாந்து இளைஞனின் சந்தேகம்

சுமார் நாலைந்து வருடத்திற்கு முன்பு சினிமா டிஸ்கஷனில் லெக்பீசை கடித்துக் கொண்டே ஸாங் லொகேஷனுக்கு இடம் சுட்டி பொருள் விளக்க முற்படும் இயக்குனர்கள், ‘பாங்காக்ல ரெண்டு பாட்டு...

Close