வாயை கொடுத்து வயிற்றை புண்ணாக்கிக் கொண்ட மாதிரி… -பாண்டியநாடு ஆடியோ விழாவில் அலம்பல்

‘சுட்டக்கதை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ஜெனிவாவில் நடத்தினார் அப்படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். ‘அதனால் விளைந்த பயன் யாது யாது யாது?’ என்று கே.பி.சுந்தராம்பாள் குரலில் ஒரு தனிப்பாடலே பாடலாம். அந்தளவுக்கு நொந்து போயிருக்கிறார் ரவீந்தர். படத்தை வாங்கிய வேந்தர் மூவிஸ், சுட்டக்கதையை நஷ்டக்கதையாக்குகிற அளவுக்கு நாள் கடத்திக் கொண்டே போனதுதான் மிச்சம்.

அதனால் போணியாகிற சரக்கை எந்த ஊரில் ரிலீஸ் செய்தாலென்ன என்று முடிவுக்கு வந்திருக்கலாம், விஷால் தனது ‘பாண்டிய நாடு’ படத்தின் சிங்கிள் டிராக் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னையின் புகழ் பெற்ற லயோலா கல்லுரி வளாகத்தில் நடத்தி முடித்தார். வேடிக்கை என்னவென்றால், இது இதற்காக மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியல்ல என்பதுதான்.

அந்த கல்லுரியின் முன்னாள் மாணவர் என்ற முறையில் இவரை ஒரு விழாவுக்கு தலைமை தாங்க அழைத்தார்களாம் நிர்வாகத்தினர். அப்படியே என்னோட பாடல் வெளியீட்டு விழாவையும் அங்கே வச்சுக்குறேன் என்றாராம் விஷால். இது நடக்கணும்னா அதுவும் நடக்கறது தப்பில்லே என்று கருதிய நிர்வாகம், ஓ.கே என்றதாம். அப்படிதான் லயோலா கல்லுரிக்கு போனது பாண்டிய நாடு ஆடியோ டிராக்.

அங்கே விஷால் பேசியது என்ன? அதுதான் வாயை கொடுத்து வயிற்றை புண்ணாக்கிக் கொண்ட கதை. நான் இந்த காலேஜ்ல படிக்கும்போது நல்லா கட் அடிச்சுட்டு கௌம்பிடுவேன். முதல் ரெண்டு வருஷம் அப்படிதான் சுத்தினேன் என்று விஷால் சொல்ல சொல்ல, முகமெல்லாம் வெளிறிப்போனார்களாம் பேராசிரியர்கள்.

சாமியார் மடமா இருந்தாலும் அங்குபோய் சரக்கை பற்றி பேசுவதே சிலருக்கு பொழுதுபோக்கு. ஹ்ம்ம்ம்ம்…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தார் ஊசி போடுதேடா தமிழ்…? -அலுத்துக் கொள்ளும் ஹீரோக்கள்!

நான் தமிழன்டா என்று சினிமா திரையில் மார் தட்டும் நம்ம ஊர் சினிமா ஹீரோக்கள் சிலரிடம் ஒரு தமிழ் பேப்பரை கொடுத்தால் அலங்க மலங்க ஓடுவார்கள். ஏனென்றால்...

Close